Press "Enter" to skip to content

டெல்லியில் குடியரசு தினம்: தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியார் முதல் ஒளவையார் வரை – சிறப்பம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் 74வது குடியரசு தின கொண்டாட்டம் புதன்கிழமை காலை 10.30 மணிக்கு டெல்லியில் உள்ள கர்தவ்ய பாதையில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக எகிப்திய அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி கலந்து கொள்கிறார்.

கடந்த ஆண்டு கொண்டாட்டங்களின் அடிப்படையில், 75ஆம் ஆண்டு சுதந்திர தினமான ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ நிகழ்வின் அங்கமாக இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

முன்னதாக, சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி 23ஆம் தேதி ஒரு வார கால கொண்டாட்டங்கள் தொடங்கியது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடன விழாவான ‘ஆதி ஷௌர்யா – பர்வ பராக்ரம்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வுகள் தியாகிகள் தினமான ஜனவரி 30 அன்று முடிவடையும்.

இந்த நிகழ்வுகளுக்கு இடையில்தான் இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டு ஊர்தியில் என்ன சிறப்பு?

டெல்லியில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டின் சார்பில் இந்த ஆண்டு பங்கேற்கும் அலங்கார ஊர்தி, சங்க காலம் தொட்டு சமூக வளர்ச்சி, மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனை இயற்றிய ஒளவையார், கிழக்கிந்திய நிறுவனம்க்கு எதிராக தீரத்துடன் போரிட்ட வீர மங்கை வேலுநாச்சியார் ஆகியோரின் உருவங்கள் அலங்கார ஊர்தியின் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.

மையப்பகுதியில் கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி, பரத நாட்டிய கலைஞர் பாலசரஸ்வதி, அந்தக்காலத்திலேயே மருத்துவர்களாக இருந்த மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்த அம்மையார், 105 வயதிலும் வேளாண் துறையில் சாதித்து வரும் பாப்பம்மாள் ஆகியோரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

ஊர்தியின் பின்பகுதியில் சோழப்பேரரசர் கட்டிய தஞ்சாவூர் பிகதீஸ்வரர் கோவிலின் மாதிரி வடிவம் நிறுவப்பட்டுள்ளது. அலங்கார ஊர்தியுடன் கொம்பு மேளம், நாதஸ்வரம், தவில் வாசித்தபடி இசைக்கலைஞர்கள் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத வகையில், தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. ஆனால், பாதுகாப்புத்துறை தேர்வுக்குழுவின் பரிந்துரைகளின்படி அலங்கார ஊர்தியின் அம்சங்கள் இல்லாததால் அந்த வாகனம் இறுதித் தேர்வில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை அங்கீகரிக்காமல் தேர்வுக்குழு அலைக்கழித்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரம், சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இடம்பெற்றுள்ளது.

மிடுக்குடன் அணிவகுக்கும் வீரர்கள்

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

காலை 10.30 மணி அளவில் தொடங்கும் குடியரசு தின அணிவகுப்பு, நாட்டின் வளர்ந்து வரும் உள்நாட்டு திறன்கள், பெண் சக்தி மற்றும் ‘புதிய இந்தியா’ உருவாவதை சித்தரிக்கும் ராணுவ வலிமை மற்றும் கலாசார பன்முகத்தன்மை ஆகியவற்றின் தனித்துவ கலவையாக இருக்கும் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியரசு தின நாளில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையுடன் அணிவகுப்பு விழா தொடங்கும்.

அந்த நினைவிடத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு பிரதமர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார். இதையடுத்து பிரதமர் மற்றும் பிற முக்கியஸ்தர்கள், கர்தவ்யா பாதையில் உள்ள நிகழ்ச்சி மேடைக்கு செல்வார்கள்.

அங்கு சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் வந்த பிறகு, குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ கர்தவ்ய பாதைக்கு வருகை தருவார். அவரை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர், முப்படை தளபதிகள் வரவேற்பர். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி கர்தவ் பாதையில் தேசிய கொடி ஏற்றப்படும். அந்த நேரத்தில் 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்படும்.

தேசிய மூவர்ண கொடி ஏற்றப்படும் நேரத்தில் இந்திய ராணுவத்தின் 105ஆம் உலங்கூர்தி பிரிவைச் சேர்ந்த நான்கு எம்ஐ-17 1வி/வி5 ரக உலங்கூர்திகள் கர்தவ்யா பாதையில் இருக்கும் பார்வையாளர்கள் மீது மலர்களைப் பொழியும்.

இதையடுத்து குடியரசு தலைவர் வணக்கம் செலுத்தியவுடன் கர்தவ்ய பாதை அணிவகுப்புக்கு பொறுப்பு வகிக்கும் தளபதியும் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவருமான லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் தலைமையில் அணிவகுப்பு நடத்தப்படும். அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் மேஜர் ஜெனரல் பவ்னிஷ் குமார் அணிவகுப்பை வழிநடத்துவார்.


தீரச் செயல் புரிந்தவர்களுக்கான உயரிய விருதுகளான பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, பரம் வீர் சக்ரா பெற்றவர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்கின்றனர்.

எகிப்திய குழு

குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

கர்தவ்யா பாதையில் அணிவகுத்து செல்லும் எகிப்திய ராணுவ வீரர்கள் குழுவை அந்நாட்டின் ராணுவ கர்னல் மஹ்மூத் முகமது அப்தெல் ஃபத்தாஹ் எல் கரசாவி வழிநடத்த அப்படையின் ஒருங்கிணைந்த இசைக்குழு அணிவகுப்பில் செல்லும். அந்நாட்டுக் குழுவில் 144 வீரர்கள் இடம்பெற்றிருப்பர்.

இந்திய ராணுவ குழுக்கள்

61ஆம் குதிரைப்படைப் பிரிவின் முதல் குழு கேப்டன் ரைசாடா ஷௌர்யா பாலி தலைமையில் அணிவகுப்பில் செல்லும்.

இந்திய ராணுவத்தின் குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்பில் செல்ல, அதைத்தொடர்ந்து ஒன்பது சீருடை வீரர்களின் ஆறு அணிவகுப்புக் குழுக்கள் மற்றும் ராணுவ விமானப் படையின் மேம்பட்ட இலகு ரக உலங்கூர்திகள் (ALH) குழுவினர் அடுத்தடுத்து அணிவகுப்பில் இடம்பெறுவர்.

இந்திய ராணுவத்தின் பிரதான போர் தளவாடங்களில் முக்கியமானவை ஆன அர்ஜுன் டாங்கி, நாக் ஏவுகணை அமைப்பு (NAMIS), பிஎம்பி-2 காலாட்படை போர் வாகனம், விரைவு எதிர்வினை வாகனம், கே-9 வஜ்ரா-கண்காணிக்கப்பட்ட சுய-இயக்க ஹோவிட்சர் துப்பாக்கி இயந்திரம், பிரமோஸ் ஏவுகணை, 10 மீட்டர் குறுகிய தூர பாலம், மொபைல் மைக் மொபைல் நெட்வொர்க் மையம் மற்றும் ஆகாஷ் (புதிய தலைமுறை உபகரணங்கள்) ஆகியவை அணிவகுப்பில் செல்லும்.


தரைப்படைப் பிரிவில் சிறப்புப்படைப்பிரிவு, பஞ்சாப் படைப்பிரிவு, மராத்தா லைட், டோக்ரா, பிகார் மற்றும் கூர்க்கா படைப்பிரிவுகள் உட்பட மொத்தம் ஆறு அணிவகுப்புக் குழுக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுப்பில் செல்வர்.

டெல்லி குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆண்டு அணிவகுப்பின் மற்றொரு சிறப்பம்சமாக, ‘இந்தியாவின் அமிர்த காலம் – படைவீரர்களுக்கு சமர்ப்பணம்’ என்ற கருப்பொருளுடன் முன்னாள் படை வீரர்களின் புதிய அலங்கார ஊர்தி இடம்பெறும். கடந்த 75 ஆண்டுகளில் படைவீரர்களின் பங்களிப்புகள் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் முயற்சிகள் பற்றிய ஒரு பார்வையை பிரதிபலிக்கும் வகையில் இந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய கடற்படைக் குழு

டெல்லி குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

இதைத்தொடர்ந்து இந்திய கடற்படை சார்பில் லெப்டினன்ட் கமாண்டர் திஷா அம்ரித் தலைமையிலான 144 இளம் வீரர்கள் அணிவகுத்துச் செல்வர்.

இந்த குழுவில் முதல் முறையாக மூன்று பெண்கள் மற்றும் ஆறு அக்னிவீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, ‘இந்திய கடற்படை – நம்பகமான, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்கால ஆதாரம்’ என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்ட கடற்படை தளவாடங்கள் அணிவகுத்துச் செல்லும்.

இந்திய கடற்படையின் பல பரிமாண திறன்கள், பெண் சக்தி மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட கடற்படை தளவாடங்கள் அலங்கார ஊர்தியில் செல்லும்.

கடலோர கண்காணிப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் சிறிய ரக டோர்னியர் விமானத்தின் பெண்கள் விமானக் குழுவினர் கடந்த ஆண்டு மேற்கொண்ட கண்காணிப்புப் பணியை விளக்கம் காட்சி கடற்படை அலங்கார ஊர்தியில் இடம்பெறும்.

கடல் கமாண்டோக்களைப் பயன்படுத்தும் துருவ் ஹெலிகாப்டருடன் புதிய உள்நாட்டு நீலகிரி கிளாஸ் கப்பலின் மாதிரி அலங்கார ஊர்தியில் நிறுவப்பட்டிருக்கும். பக்கவாட்டில், உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் மாதிரிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இந்திய விமானப்படை குழு

டெல்லி குடியரசு தினம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய விமானப்படையின் 144 விமான வீரர்கள் மற்றும் நான்கு அதிகாரிகள், ஸ்குவாட்ரன் லீடர் சிந்து ரே தலைமையில் அணிவகுப்பில் செல்வர்.

இதைத்தொடர்ந்து இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, இந்திய கடலோர காவல் படை, டெல்லி காவல்துறை, தேசிய மாணவர் படை, தேசிய சேவை திட்ட தன்னார்வலர்கள் ஆகியோரின் அணிவகுப்பு இடம்பெறும்.

இவர்களைத் தொடர்ந்து, தீரம், கலை, கலாசாரம், விளையாட்டு ஆகி துறைகளில் தன்னலம் கருதாது சாதித்த மற்றும் பிரதமரின் ராஷ்ட்ரிய பால விருதுகள் பெற்ற பதினோரு பேர் திறந்தவெளி ஜீப்பில் அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்படுவர்.

இது தவிர 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், ஆறு மத்திய அரசுத்துறைகள் ஆகியவற்றின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான அலங்கார ஊர்தி இடம்பெறுகிறது.

இந்த 23 அலங்கார ஊர்திகளுக்குப் பின்னால் 497 கலைஞர்கள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும். இந்த கலைஞர்கள் பெண் சக்தியை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் பரத பாவனைகளை கர்தவ்ய பாதையில் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

இதைத்தொடர்ந்து இந்திய ராணுவத்தின் துணிச்சல் மிகுந்த மோட்டார் சாகச குழுவினர் வியப்பூட்டும் சாகசங்களையும் நடமாடும் வாகனத்தில் யோகா கலையிலும் ஈடுபட்டு பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவர்.

நிகழ்ச்சின் நிறைவாக கர்தவ்ய பாதை வான் பகுதியில் இந்திய விமானப்படையினஅ 45 விமானங்கள் வான் சாகசத்தில் ஈடுபடும். ரஃபால், மிக்-29, சூ-30 எம்கே1 ஜாக்குவார், சி130, சி-17, டோர்னியர், டகோட்டா, எல்சிஹெச் பிரச்சாண்ட், அப்பாச்சே, சாரங், ஏஇடபிள்யு அண்ட் சி ரக விமானங்கள், உலங்கூர்திகள் வானில் பறக்கும்போது வெவ்வேறு வடிவங்களில் துல்லியமாக பறந்து தங்களுடைய திறன்களை பறைசாற்றும்.

கடைசி நிகழ்வாக ரஃபால் போர் விமானம், வான் பகுதியில் தாழப்பறந்து மேலெழும்பி சாகசத்தில் ஈடுபடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »