Press "Enter" to skip to content

ராகுலை எதிர்க்கட்சிகளின் முகமாக ‘பாரத் ஜோடோ’ மாற்றியுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை ஜனவரி 30 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முடிவடைந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பல மாநிலங்கள் வழியாக சுமார் 3,750 கிலோ மீட்டர்கள் நடந்து சென்று இந்த யாத்திரையை முடித்துள்ளார்.

பாரத் ஜோடோ யாத்திரையை தேர்தல் அரசியலுடன் இணைத்துப் பார்க்கக் கூடாது என்று ராகுல் காந்தியும், காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷும் கூறி வருகின்றனர்.

ராகுல் காந்தி ராஜஸ்தானில் இருந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், பாரத் ஜோடோ யாத்திரை என்பது ‘தேர்தலில் வெற்றி’ அல்லது ‘தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள்’ யாத்திரை அல்ல என்று கூறியிருந்தார்.

முதலில் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸுக்கு தொடர்ந்து இரண்டு முறையும் சுமார் 50 இடங்களே கிடைத்தபோது, ​​நரேந்திர மோதியின் அரசுக்கு கிட்டத்தட்ட எதிர்ப்பு முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறப்பட்டது.

மோதி, அமித் ஷா உட்பட பல பெரிய பாஜக தலைவர்கள் இந்தியாவை ‘காங்கிரஸ் முக்த்'(காங்கிரஸ் இல்லாமல்) ஆக்குவதுதான் தங்கள் நோக்கம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

காங்கிரஸின் செயல்பாடு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அது முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்பதன் உண்மையான அர்த்தம் ‘எதிர்க்கட்சி இல்லாத இந்தியா’ என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் முகமாகிறாரா ராகுல்?

பட மூலாதாரம், Getty Images

ராகுல் காந்தியோ அல்லது மற்ற காங்கிரஸ் தலைவர்களோ இதை அரசியலுடன் தொடர்புடையது அல்ல என்று அழைக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் இந்திய அரசியல் உண்மையில் எதிர்ப்பற்றதாக உள்ளதா? அப்படியானால், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக நிலைநிறுத்துவதில் பாரத் ஜோடோ யாத்திரை ஓரளவு வெற்றி பெற்றுள்ளதா?

இது தொடர்பான இன்னொரு முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த யாத்திரையின் மூலம் இந்திய மக்களுக்கு என்ன செய்தியைக் கொடுக்க விரும்புகிறார் ராகுல் காந்தி? அதில் எந்த அளவுக்கு அவர் வெற்றி பெற்றிருக்கிறார்?

இரண்டு கேள்விகளும் மிக முக்கியமானவை. ஆனால் முதலில் எதிர்க்கட்சிகளின் அரசியல் பற்றி பேசலாம்.

“எதிர்க்கட்சித் தலைவராக தன்னை நிலைநிறுத்துவதற்காக இந்த யாத்திரையை மேற்கொள்கிறேன் என்று ராகுல் காந்தி கூட ஒருபோதும் கூறவில்லை” என்று ஐக்கிய ஜனதா தளத்தின் பொதுச்செயலரும் முன்னாள் மாநிலங்களவை எம்பியுமான கே.சி.தியாகி கூறினார்.

“பாரத் ஜோடோ யாத்திரை ஒரு கலாச்சார மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியாகும். அதில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பது இந்த யாத்திரை நல்ல நோக்கங்களுக்காக செய்யப்படுகிறது என்பதைக் காட்டுகிறது” என்று தியாகி கூறுகிறார்.

காங்கிரஸ் இல்லாமல் எந்த முன்னணியும் சாத்தியமில்லை

“2014 மற்றும் 2019 தேர்தல்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மிகக் குறைந்த ஸ்கோருடன் உள்ளது. அது எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறத் தவறிவிட்டது. எனவே காங்கிரஸை ஒன்றிணைத்து கட்சிக்கு புத்துயிர் அளிக்க  அதை பொதுமக்களுடன் இணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. ராகுல் காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்” என்று கே.சி. தியாகி கூறினார்.

“காங்கிரஸ் கட்சி இல்லாமல் எந்த அரசியல் முன்னணியும் உருவாக்க முடியாது என்பதில் தனது கட்சியின் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது” என்று கே.சி.தியாகி கூறுகிறார்.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து பிகாரில் ஆட்சி அமைத்த பிறகு, சோனியா காந்தியை சந்திக்க நிதீஷ்குமார் டெல்லி வந்தபோது, ​​அவருக்கு சிறப்பு முக்கியத்துவம் எதுவும் கொடுக்கவில்லை.

​​”நாங்கள் ஏமாற்றம் அடையவில்லை. சோனியா காந்தியை நிதீஷ்குமார் சந்தித்தபோது, ​​காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கவிருந்தது. குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருந்தது. ஆகவே பின்னர் சந்தித்து பேச வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இதுவரை காங்கிரஸிடம் இருந்து அத்தகைய யோசனை எதுவும் வரவில்லை. எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக அவர்கள் எந்த முயற்சியையும் எடுப்பதற்கான அறிகுறிகளும் இல்லை,” என்று தியாகி குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் முகமாகிறாரா ராகுல்?

பட மூலாதாரம், ANI

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை என்று அவர் கருதுகிறார். ஆனால் பாஜகவை தோற்கடிக்க நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் எதிர்க்கட்சி கூட்டணியில் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் அவர். காலம்தான் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் என்று அவர் கூறுகிறார்.

1977-ஐ உதாரணம் காட்டிய அவர், ”அப்போது கிட்டத்தட்ட எல்லாத் தலைவர்களும் சிறையில் இருந்ததால் அவர்களுக்குள் எந்தப் பேச்சுவார்த்தையும் சாத்தியமாக இருக்கவில்லை. ஜனசங்கம் யாருடனும் இணைய தயாராக இல்லை. சமாஜ்வாதி கட்சியும் வித்தியாசமான பாதையை பின்பற்றியது. ஜே.பி.யும் கட்சியை உருவாக்க விரும்பவில்லை. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய மாற்று விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அனைவரையும் ஒன்றிணைக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தினர். இந்திரா காந்தியின் காங்கிரஸ் 1977 தேர்தலில் தோல்வியடைந்தது,” என்று குறிப்பிட்டார்.

“நாட்டின் சமூக கட்டமைப்பை, மதச்சார்பற்ற பாரம்பரியத்தை வலுப்படுத்த விரும்பும் கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஒற்றுமைக்காக ஒன்றிணையும் என்று நம்புகிறேன்,”என்று தியாகி குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிக் கூட்டணி பற்றிய பேச்சு அவசரத்தனமானது”

எந்த ஒரு பொதுத் தேர்தலிலும் உத்தரப்பிரதேசம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் 80 எம்.பி.க்கள் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு தேர்தல்களில் (2014 மற்றும் 2019) பாஜகவின் அபார வெற்றிக்கு உ.பி.யில் அக்கட்சியின் செயல்பாடும் ஒரு காரணம். இரண்டு முறையும் பாஜக 60 இடங்களுக்கு மேல் வென்றது (2014ல் 71 இடங்களைப் பெற்றது).

அதனால் தான் பாஜகவை நிறுத்த வேண்டும் என்றால் உ.பி.யில் அதை தடுக்க வேண்டும். ஆனால் தற்போது அங்கும் எதிர்ப்பு சிதறி கிடக்கிறது.

பாரத் ஜோடோ யாத்திரை வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு பெரிய முயற்சி என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கன்ஷ்யாம் திவாரி கூறுகிறார். “இது ராகுல் காந்தியின் தலைமையை உருவாக்குகிறது, பலப்படுத்துகிறது. ஆனால் 2024 பற்றி இப்போதே பேசுவது சற்று அவசரத்தனமாக உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

2023ல் சுமார் பன்னிரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் (கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்) காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

2024 பொதுத் தேர்தலில் காங்கிரஸின் பங்கு என்னவாக இருக்கும் என்பது இந்த மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸின் செயல்திறனைப் பொருத்தது என்று சமாஜ்வாதி கட்சியின் செய்திதொடர்பாளர் கூறினார்.

உத்திர பிரதேசம் குறித்துப் பேசிய கன்ஷியாம் திவாரி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி முழு பலத்துடன் பா.ஜ.கவை எதிர்த்து போராட தயாராகி வருகிறது என்றார்.

“எதிர்க்கட்சிகளின் எந்தவொரு கூட்டு முயற்சியையும் சமாஜ்வாதி கட்சி முற்றிலுமாக நிராகரிப்பதில்லை. ஆனால் எதிர்க்கட்சி கூட்டணி பற்றி இப்போதே கூறுவது அவசரத்தனமானது,” என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகளின் முகமாகிறாரா ராகுல்?

பட மூலாதாரம், @INC

‘காங்கிரஸைத் தவிர வேறு எதுபற்றியும் ஏன் சிந்திக்க முடியாது?’

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தெலங்கானா உருவாக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கேசிஆரின் டிஆர்எஸ் காங்கிரஸுடன் இணையும் என்று தோன்றியது. டிஆர்எஸ், காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளராக மாறியது மட்டுமல்லாமல், கேசிஆர் தனது தேசிய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக தனது கட்சியின் பெயரை பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று மாற்றியிருப்பதுதான் இன்றைய நிலை.

தனது பாரத் ஜோடோ யாத்திரை அரசியல் யாத்திரை அல்ல என்று ராகுல் காந்தி கூறினாலும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அரசியல் அறிக்கைகளை  வெளியிட்டது மட்டுமின்றி அந்த கட்சிகளை பாஜகவின் பி அணி என்றும் அவர் கூறியுள்ளார் என்று பிஆர்எஸ் செய்தி தொடர்பாளர் கிரிஷங்க் மன்னே கூறினார்.

“பாரத் ஜோடோ யாத்திரை முற்றிலும் அரசியல் ரீதியிலானது.  ராகுல் காந்தியின் இமேஜை உயர்த்துவதற்காக செய்யப்படுகிறது. இந்த நாட்டிற்கு கொடுக்க அவரிடம் வலுவான செய்தி எதுவும் இல்லை,” என்று கிரிஷங்க் மன்னே குறிப்பிட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் 2024 தேர்தலைக் கருத்தில் கொண்டு BRS இன் வியூகம் என்ன என்பது குறித்து பதிலளித்த கிரிஷங்க் மன்னே, ”2014 இல் அவர் (மோதி) அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மோதிக்கு சவால் விடுவோம். அதில்தான் இப்போது எங்கள் கவனம் உள்ளது. இந்த வாக்குறுதிகளில் இருந்து அவர் கடந்த எட்டு, ஒன்பது ஆண்டுகளாக ஓடி வருகிறார்,” என்று கூறினார்.

காங்கிரஸைப் பற்றி மிகத் தெளிவாகக் கூறிய அவர், “காங்கிரஸைத் தவிர வேறு எது பற்றியும் எங்களால் ஏன் சிந்திக்க முடியாது? காங்கிரஸ் இன்று 40-50 இடங்களில் மட்டுமே உள்ளது. எல்லா மாநிலங்களும் (காங்கிரஸ் அல்லாத மற்றும் பாஜக அல்லாத) அதன் இடங்களில் வலிமையாக இருக்கிறது. முதல்வர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காங்கிரஸுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?” என்று அவர் வினவினார்.  

எதிர்க்கட்சிகளின் முகமாகிறாரா ராகுல்?

பட மூலாதாரம், BHARAT JODO/ FB

“ராகுல் இப்போதும் எதிர்க்கட்சிகளின் முகமாக இல்லை”

”இந்த யாத்திரைக்கு முன்பு பாஜகவோ அல்லது பல அரசியல் ஆய்வாளர்களோ ராகுல் காந்தியை லேசாக எடுத்துக்கொண்டு பல தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர். ஆனால் இப்போது ராகுல் காந்தியை அவ்வளவு எளிதாக விமர்சிக்க முடியாது,” என்று காங்கிரஸ் அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ஸ்மிதா குப்தா கூறினார்.

இந்த யாத்திரைக்குப் பிறகு காங்கிரஸின் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக ராகுல் காந்தி மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு, நன்கு அறியப்பட்ட எதிர்க்கட்சித் தலைவராக முன்னேறியுள்ளார் என்று ஸ்மிதா குப்தா குறிப்பிட்டார்.

“ராகுல் காந்தி தன்னை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நிரூபித்துள்ளார். ஆனால் இப்போதும் ராகுல் காந்தியை ‘எதிர்க்கட்சியின் முகம்’ என்று அழைக்க முடியாது,” என்றார் அவர்.

பாஜகவை தோற்கடிப்பதே அவர்களின் முதல் நோக்கமாக இருந்தால், காங்கிரஸுடன் கைகோர்க்குமாறு கேசிஆர், மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களிடம் சென்று விளக்குவது காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பு என்று அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் முகமாகிறாரா ராகுல்?

பட மூலாதாரம், Getty Images

‘ராகுல் காந்தி நம்பிக்கை அரசியல் செய்கிறார்’

ஆனால், பிரபல சமூகவியலாளர் சிவ விஸ்வநாதன், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகக் கருதுகிறார்.

ராகுல் காந்தியின் யாத்திரை இந்தியாவின் ஒரு வகையான தேடல் என்று சிவ விஸ்வநாதன் கூறுகிறார். ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் அதை மாறுபட்டதாக ஆக்கவில்லை, ராகுலின் யாத்திரையின் சிறப்பு, அதில் பங்கேற்ற அரசியல் சாராதவர்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் இந்த யாத்திரையில் ​​சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஊர்மிளா மடோன்கர், ஸ்வரா பாஸ்கர், பூஜா பட், ரியா சென் மற்றும் ஆனந்த் பட்வர்தன் ஆகியோர் திரையுலகில் இருந்து இணைந்தனர். இதில் சமூக ஆர்வலர் அருணா ராய் கலந்து கொண்டார். தெலங்கானாவில் ரோஹித் வெமுலாவின் தாயார் யாத்திரையில் கலந்துகொண்டார்.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். இசை பிரமுகர்கர் டிஎம் கிருஷ்ணா, நகைச்சுவை நடிகர் குணால் காம்ரா, கணேஷ் தேவி மற்றும் மைய கட்டுப்பாட்டு வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் ஆகியோர் யாத்திரையில் பங்கேற்றனர்.

யாத்திரையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி தேர்தல் பற்றி மட்டுமே நினைத்திருக்க வேண்டும், ஆனால் யாத்திரையுடன் அவரது கருத்து மாறியது என்று சிவ விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆரம்ப கட்டத்தில் ராகுல் காந்தி தனது உரைகளில் பாஜகவை மட்டுமே குறிவைத்தார். ஆனால் அவர் மக்களை சந்தித்த போது ​​​​இந்த நேரத்தில் இந்தியாவுக்கு ஒரு புதிய வகையான அரசியல் தேவை என்பதை உணர்ந்தார் என்று அவர் கூறினார்.

ராகுல் காந்தி இதையெல்லாம் சிந்தித்து செய்யவில்லை. ஆனாலும் இதன் பெருமை ராகுல் காந்திக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிவ விஸ்வநாதன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் முகமாகிறாரா ராகுல்?

பட மூலாதாரம், FB/RAHUL GANDHI

ராகுலால் புரிந்து கொள்ள முடியவில்லையா?

ஆனால் ராகுல் காந்தி தனது செய்தியை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றாரா என்பது பற்றி கருத்துத்தெரிவித்த சிவ விஸ்வநாதன்,”ராகுல் காந்தியின் செய்தி மெதுவாக மக்களை சென்றடைகிறது. ஆனால் இந்த பயணத்தின் கதாநாயகன் ராகுல் காந்தி என்று நான் நினைக்கவில்லை. யாத்திரையில் கலந்து கொண்ட இந்தியர்கள்தான் அதன் கதாநாயகன். இன்றைய காலகட்டத்தில் கட்சி அரசியல் ’காலியானது’ என்று ராகுல் காந்தியிடம் அவர்கள் கூறினார்கள்,” என்று குறிப்பிட்டார்.

ஆனால், மக்களை நம்பிக்கை மோசம் செய்யும் வரலாறு காங்கிரஸிடம் உள்ளதால், அது பழைய நிலைக்குத் திரும்பும் அபாயம் இருப்பதாக சிவ விஸ்வநாதன் எச்சரிக்கிறார்.

“ராகுல் காந்தி சிவில் சமூகத்துடன் அரசியல் செய்ய விரும்பினால் அவர் காங்கிரஸ் கட்சியை ஒரு புதிய வழியில் சீர்திருத்த வேண்டும். எதிர்காலத்தில் ஒரு புதிய அரசியல் கட்சியை நாம் பெற முடியும். இங்கு சிவில் சமூக மக்கள் அவருக்கு உதவலாம். அது நடந்தால் அது ஒரு அதிசயமாக இருக்கும்,”என்றார் அவர்.

ஷரத் பவார் மற்றும் நிதிஷ் குமார் போன்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூட அதிகாரத்தைப் பெறவும் தங்களை வலுப்படுத்தவும் மட்டுமே விரும்புகின்றனர். ஆனால் ராகுல் காந்தி அரசியல்வாதிகளுக்கு அதிகாரம் அளிப்பது பற்றிப் பேசாமல் மக்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றிப்பேசும் முதல் தலைவராகிவிட்டார் என்று சிவ விஸ்வநாதன் கூறுகிறார்.

யாத்திரையின் போது என்ன நடக்கிறது என்பது ராகுல் காந்திக்கு கூட முழுமையாகப் புரியவில்லை. ஆனால் அவர் செய்திருப்பது தேர்தல் அரசியலில் இருந்து விலகி புதிய இந்தியாவின் கனவைக் காட்டுகிறது. ஆனால் சில நேரங்களில் கனவுகள் உடைந்து போகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

ராகுல் காந்தி நம்பிக்கை அரசியலை செய்கிறார். ஆனால் அதை வெற்றிபெறச் செய்ய சிந்தனை அரசியல் தேவை என்கிறார் சிவ விஸ்வநாதன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »