Press "Enter" to skip to content

சீனா Vs அமெரிக்கா: பலூன்கள், செயற்கைக்கோள்கள், பறக்கும் சாதனங்கள் நம்மை உளவு பார்க்கின்றனவா?

  • பெட்ரா சிவிக்
  • பிபிசி உலக சேவை

பட மூலாதாரம், Getty Images

சுமார் ஒரு வார காலத்தில், அமெரிக்க வான் பரப்பில் பறந்த நான்கு ‘பொருட்களை’ அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் முதலாவது உளவு பலூன் என்று கூறப்பட்டது. ஆனால் பிற மூன்று என்ன என்பது தெரியவில்லை. அவை நம்மை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட சாதனங்களா?

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான பில்லிங்க்ஸ் உள்ள மக்கள், வானில் ஏதோ வெள்ளை நிறத்தில் பெரிய வட்டத்தை பார்த்து ஆச்சரியமடைந்தனர். பின்னர் அது சீன உளவு பலூன் என்று சொல்லப்பட்டது. அதேபோல வானில் தென்பட்ட மூன்று ‘பொருட்களை’ அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

ஆனால் அவை என்ன என்பது குறித்து தெளிவாக சொல்லப்படவில்லை. என அது என்ன என்ற ஊகங்கள் சமீப நாட்களில் அதிகரித்துள்ளது.

மிஷிகனில் ஹுரான் ஏரிக்கு மேல் அமெரிக்க – கனடா எல்லையில் ஒரு சாதனம் வீழ்த்தப்பட்டது. இதனை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் “எண்கோண அமைப்பில் உள்ள ஒன்று” என்று தெரிவித்தனர்.

“வாயுக்கள் நிறைந்த பலூன்” அல்லது “ஒருவகை உந்துவிசை அமைப்பு” 6 ஆயிரத்து 100 மீட்டர் உயரத்தில் பறந்தது. அது விமானப் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்திருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தப் பொருட்கள் ஏதேனும் அந்நியப் பொருளாக இருக்கலாமா என்று கேட்டதற்கு இந்த தருணத்தில் நான் எதையும் நிராகரிக்கவில்லை என அமெரிக்க வடக்கு கமாண்ட் கமாண்டர் ஜெனரல் க்ளென் வேன்ஹெர்க் தெரிவித்தார்.

அதேபோல வேன்ஹெர்க் தற்போதைய நிலையில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த ‘மர்மப் பொருள்’ என்ன?

அமெரிக்கா மற்றும் கனடா மீது பறந்த பிறகு சுட்டு வீழ்த்தப்பட்ட ‘பொருட்களின்’ எச்சங்களை அதிகாரிகள் கைப்பற்றி வருகின்றனர். அவை எங்கிருந்து வந்தன? அவற்றின் நோக்கம் என்ன என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.

சந்தேகத்திற்குரிய சீன பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு எடுத்த புகைப்படம்

பட மூலாதாரம், Reuters

“இந்த பொருட்களால் ஏதேனும் தரவுகள் சேகரிக்கப்பட்டனவா என்றும், அதை மீட்க முடியுமா என்றும் அமெரிக்கர்கள் தற்போது ஆராய்ந்து கொண்டிருக்கலாம்,” என பிராட்ஃபோட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் பாதுகாப்புத் துறை பேராசிரியர் கிறிஸ்டோஃப் ப்ளாத் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெள்ளியன்று அலாஸ்காவிலும், சனிக்கிழமையன்று வட மேற்கு கனடாவில் உள்ள யூகானிலும், ‘இரு பொருட்கள்’ சுட்டு வீழ்த்தப்பட்டன. அதேபோல ஞாயிறன்று மிஷிகனில் ‘ஒரு பொருள்’ சுட்டு வீழ்த்தப்பட்டது. இவை மூன்றும் உளவு பார்த்தலுக்காக பயன்படுத்தப்பட்டனவா என்பது தெரியவில்லை.

இந்த பொருட்கள் பலூனைப் போல இல்லை. இவை மிகவும் சிறியதாக உள்ளன. உடைந்த பாகங்களை கண்டறியும் வரை எதையும் தெளிவாக கூற இயலாது என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு பலூன் என்று சொல்வது, ஜனவரி 28ஆம் தேதி அலாஸ்காவின் அலூஷியன் தீவுக்கு மேல் கண்டறிந்த சீன உளவு பலூனைதான். அது எஃப் – 22 போர் விமானத்தால் பிப்ரவரி 4ஆம் தேதியன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

அது சீனாவிலிருந்து வந்தது என்றும், முக்கியமான வலைத்தளங்களை கண்காணிக்க அது பயன்படுத்தப்பட்டது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

உளவு பார்க்க பலூன்களை பயன்படுத்துவது ஏன்? அது எவ்வாறு தகவல்களை சேகரிக்கிறது?

சந்தேகத்திற்குரிய சீன பலூன், பிப்ரவரி மாதம் 2022

பட மூலாதாரம், Getty Images

“இதற்கு முன்பும் இவ்வாறு நடந்துள்ளது. டிரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், அமெரிக்க வான்பரப்பில் மூன்று பலூன்கள் கண்டறியப்பட்டன. ஆனால் அது அமெரிக்க வான் பரப்பைவிட்டுச் செல்லும் வரை யாருக்கும் தெரியவில்லை” என்கிறார் ஆய்வாளர் ஜூலியானா சூயஸ்.

சந்தேகத்திற்குரிய அந்த சீன பலூன் பல நாட்களுக்கு அமெரிக்காவின் வான் பரப்பில் பறந்து கொண்டிருந்தது. அதன்பின் கனடாவின் வான்பரப்பில் நுழைந்து, அமெரிக்காவின் மேற்கத்திய மாகாணமான மான்டனாவின் வான்பரப்பில் நுழைந்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கே அணு ஆயுதத் தலம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பலூனில் மூன்று பேருந்துகளின் அளவு கொண்ட கொண்டாலாக்கள் (கூடை போன்ற அமைப்பு) இருந்தன என்றும், அதன் எடை ஒரு டன்னுக்கு மேல் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது. அதில் பல்வேறு ஆன்டனாக்கள் பொருத்தப்பட்டிருந்தன என்றும் பல்வேறு உளவுத் தகவலை சேகரிக்கும் சென்சார்களுக்கான ஆற்றலை வழங்க சூரிய தகடுகள் அதில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

பலூன்கள் தற்போது மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து பலூன்கள் உளவு பார்த்தல் பணிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரஞ்சுப் புரட்சிக் காலத்திலிருந்து பலூன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்கிறார் சூயஸ்.

இருப்பினும் தற்போது பயன்படுத்தப்படும் பலூன்களுக்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட பலூன்களுக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

“இன்று பலூன்களில் ஹைட்ரஜனுக்கு பதிலாக ஹீலியம் பயன்படுத்தப்படுகிறது. அது பகலில் விரிகிறது. இரவில் உயரச் சென்று காற்று வெளியேற்றப்படுகிறது. ஹீலியம் இருக்கும் வரை பலூன்கள் மிதந்து கொண்டு இருக்கும்” என விளக்குகிறார் சூயஸ்.

இம்மாதிரியான உளவு பலூன்களில், ரேடார் அல்லது தகவல்களை சேகரிக்கும் வசதி கொண்ட உபகரணங்கள், புகைப்படங்களை எடுக்க ஒளிக்கருவிகள் (ஒளிக்கருவி (கேமரா)க்கள்) ஆகியவை இருக்கும்.

பலூன்கள் எவ்வளவு தூரத்தில் உள்ளதோ அவ்வளவு தூரம் நீங்கள் படங்களை பார்த்து கொள்ளலாம். ஆனால் செயற்கைக்கோள்கள் பலூன்களைக் காட்டிலும் உயரத்தில் இருக்ககூடியவை. நீங்கள் எத்தனை குறைந்த தூரத்திலிருந்து புகைப்படங்களை எடுக்கிறீர்களோ அத்தனை தெளிவாக நீங்கள் பார்த்து கொள்ளலாம்.

உளவு சேகரிக்கப் பயன்படுத்தப்படும் பிற சாதனங்கள் என்னென்ன?

அமெரிக்க தரவுகளின்படி, சீனா 300 செயற்கைக்கோளுடன் விரிவான உளவு அமைப்பை கொண்டுள்ளது. ஆனால் சீன உளவு அமைப்பின் வலிமை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாகத்தான் உள்ளது. ஆனால் பலூன்கள் சில நேரங்களில் அதிக பலனளிக்கும் என சூயஸ் தெரிவிக்கிறார்.

“பலூன்களுக்கு அதிக செலவு தேவையில்லை. அதை விரைவில் நிறுவ முடியும். செயற்கைக்கோள்கள் கணிக்கப்படும் சுற்று வட்டப் பாதையிலேயே சுழலும். அதேபோல ஒரு நாளில் ஒரே இடத்தில் பல முறை சுற்றி வரும். ஒரு இடத்தில் நிகழும் மாற்றங்களைக் கண்டறியும் அளவுக்கு நீண்ட காலத்திற்கு அந்த பகுதியை ஆராய முடியாது.” என்கிறார் சூயஸ்

அதேபோல செயற்கைக்கோள்களும் இதற்கு முன்னர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.

“ஆனால் நாடுகள் தங்களின் செயற்கைக்கோள்களை மட்டுமே சுட்டு வீழ்த்தியுள்ளன. சீனா அதனின் ஒரு செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்தியுள்ளது. ரஷ்யாவும் அவ்வாறு செய்துள்ளது. அதேபோல இதுவரை எந்த ஒரு நாடும் பிற நாட்டின் செயற்கைக்கோளைச் சுட்டு வீழ்த்தவில்லை” என்கிறார் அவர்.

அதேபோல உளவு பார்க்கும் பணியில் தற்போது ட்ரோன்களும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் சூயஸ்.

“ஆனால் பனிப்போர் காலத்தின் தொடக்கத்தில் அமெரிக்கா தீயணைப்பு விமானங்களை உளவு விமானங்களாகப் பயன்படுத்தியது. சோவியத் ஒன்றியம் அதை சுட்டு வீழ்த்த நன்றாகப் பழகும் வரை அதைப் பயன்படுத்தியது” என்கிறா ப்ளத்.

அதேபோல உளவு பார்த்தலில் பனிப்போர் காலம் புதிய நடைமுறைகளை கொண்டுவந்தது.

“உளவு பார்க்கும் விமானங்கள் அந்த பிராந்தியங்களின் வரைமுறையை மீறுவதாகக் கருதப்பட்டது. மறுபுறம் கண்காணிப்பு செயற்கைக்கோள்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.” என்கிறார் ப்ளத்.

“ஆனால் உளவு பார்க்க பறக்கும் சாதனங்களை பயன்படுத்துவது என்பது புரிந்து கொள்ள சற்று கடினம்தான்” என்கிறார்.

இதில் சில விஷயங்களுக்கு அனுமதி உண்டு சில விஷயங்களுக்கு அனுமதி இல்லை. வெளிநாட்டு பலூன்களுக்கு பொதுவாக அமெரிக்கா அனுமதி அளிப்பதில்லை. இருப்பினும் உளவு விமானங்கள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன என்கிறார் ப்ளாத்.

“அமெரிக்காவே உளவு பார்க்க பல விமானங்களை பயன்படுத்துகிறது. அது பிற நாடுகளின் எல்லையை ஒட்டி பறக்கும். விமானங்கள் தரையிறக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. அமெரிக்க விமானம் ஒன்று சீனாவால் தரையிறக்கப்பட்டது. அது ஒரு ராஜீய சம்பவமாக கருதப்பட்டது. புஷ் ஆட்சிக் காலத்தில் இந்த சம்பவம் நடந்தேறியது” என்கிறார் ப்ளாத்.

இதன் விளைவுகள் என்ன?

சீன பலூன் தரையிறக்கப்பட்டப்பின்

பட மூலாதாரம், Reuters

மூன்று பறக்கும் சாதனங்கள் தரையிறக்கப்பட்டபின் அமெரிக்கா ராணுவ எச்சரிக்கையுடன் உள்ளது.

முதல் பலூன் சம்பவம் நடந்த பிறகு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆன்டனி பிளின்கன் சீனாவுக்கான தனது பயணத்தை ரத்து செய்தார்.

ஆனால் அது உளவு பலூன் இல்லை என்றும், வானிலையைக் கண்காணிக்கும் கருவி என்றும் சீனா கூறியது.

கடந்த வருடத்தில் 10க்கும் மேற்பட்ட பலூன்களை சீன வான் பரப்பில் அமெரிக்கா பறக்கவிட்டதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்களன்று தெரிவித்திருந்தது.

சுட்டு வீழ்த்தப்பட்ட மூன்று ‘பொருட்கள்’ என்ன என்று அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

“அந்த சாதனங்கள் விமானத்திற்கு இடையூறு விளைவிப்பதால் அவை வீழ்த்தப்பட்டிருக்கலாம்,” என்கிறார் ப்ளாத்

இருப்பினும் இந்த பலூன் சம்பவம் புதிய நடைமுறைகளுக்கு வித்திடலாம் என ப்ளாத் தெரிவிக்கிறார்.

“இந்த பிரச்னைக்கு தீர்வு காணவே அமெரிக்கா விரும்பும். இம்மாதிரியாக உளவு பலூன்களை அனுமதிக்காத வண்ணம் சில ஒப்பந்தங்கள் கொண்டு வரப்படும். வானிலையை கண்காணிக்கும் ஏதேனும் பலூன்கள் இருந்தால் அது அமெரிக்காவின் வான்பரப்பில் நுழைந்தவுடன் தகவல் வழங்க வேண்டும் என்று கோரப்படும்” என்கிறார் ப்ளாத்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »