Press "Enter" to skip to content

கைபேசி இல்லாமல் தொடர் வண்டியில் 10 மணிநேரம் – பைடனின் ரகசிய பயணம் சாத்தியமானது எப்படி?

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் யுக்ரேனுக்கு ஒரு துணிச்சலான பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தினந்தோறும் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க் களத்திற்கு சென்ற ஜோ பைடனின் இந்த பயணம் நவீன காலத்தில் ‘அபூர்வமானது’ என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்பு இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் என போர் நடக்கும் பகுதிகளுக்கு அமெரிக்க அதிபர்கள் சென்றபோது பலமான அமெரிக்க ராணுவ ஆதரவுடன் சென்றனர்.

போலாந்தில் ஜோ பைடன் இருந்தபோது அவர் யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்வார் எனப் பத்திரிகையாளர்கள் ஊகித்திருந்தபோதும், பைடனின் பயணம் பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலாந்தில் யுக்ரேன் மக்கள், அமெரிக்காவின் ஆதரவு குறித்து உரையாற்றியிருந்தார் பைடன் ஆனால் அவரின் பேச்சைக்காட்டிலும் சைரன் சத்தத்திற்கு மத்தியில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அருகில் அவர் இருந்தது வலுவான பல செய்திகளை சொல்கிறது.

“அது ஒரு ஆபத்தான பயணம் ஆனால் தனது கடமைகளைத் தீவிரமாக எடுத்து கொள்பவர் பைடன் என்பதை இந்த பயணம் காட்டுகிறது,” என வெள்ளை மாளிகையின் செய்தி இயக்குநர் கேட் பெடிங்ஃபீல்ட் தெரிவித்தார்.

கைபேசிகள் இல்லை

திங்களன்று மாலை அமெரிக்காவிலிருந்து போலாந்து தலைநகரான வார்சாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் பைடன். பயணத்தின்போது அவரின் திட்டம் என்ன என்பதில் இரு இடங்களில் நீண்ட நேரத்திற்கு எதுவும் குறிப்பிடாமல் இருந்தால் அவர் யுக்ரேனுக்கு செல்லலாம் என் சந்தேகங்கள் எழுந்தன.

வெள்ளை மாளிகையில் தினந்தோறும் நடைபெறும் பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது இதுகுறித்து தொடர் கேள்விகள் எழுப்பப்பட்டாலும் யுக்ரேன் அதிபருடன் எந்த சந்திப்பும் இல்லை என்றும் வார்சாவை தவிர எங்கும் செல்ல திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கீயவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஒரு மாத காலமாக திட்டமிடப்பட்டு வந்தாலும் வெள்ளியன்றுதான் இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்பட்டது.

இந்த பயணத்தில் பைடனுடன் ஒரு சிறிய குழு மட்டுமே சென்றது. ஒரு மருத்துவக் குழு மற்றும் சில பாதுகாப்பு அதிகாரிகள்.

இரண்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே அதிபருடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் பயணமும் ரகசியமாக வைக்கப்பட்டது. அவர்களின் கைபேசிகள் எடுத்து கொள்ளப்பட்டது. பைடன் கீவ்விற்கு வந்த பிறகு தான் அதுகுறித்து அவர்கள் செய்தி வெளியிட அனுமதிக்கப்பட்டது.

பைடன் கீயவ்விற்கு செல்வதற்கு சற்று முன்புதான் இந்த பயணம் குறித்து ரஷ்யாவுக்கு தெரிவிக்கப்பட்டது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுவிலன் தெரிவித்தார்.

“தாக்குதல் நடைபெறுவதை தடுப்பதற்கான நோக்கத்தில் எங்களின் செய்தி ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் அது எத்தகைய செய்தி, அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பதை விளக்க இயலாது” என அவர் தெரிவித்தார்.

பைடன் மற்றும் செலன்ஸ்கி

10 மணிநேர தொடர் வண்டிபயணம்

கீவ்விற்கு செல்ல பத்து மணிநேர தொடர் வண்டிபயணத்தை மேற்கொண்டார் அதிபர் பைடன். அவர் யுக்ரேனில் எளிதாக செல்லக்கூடிய பிற இடங்களுக்கு சென்றிருக்கலாம் ஆனால் அவர் கீவ்விற்கு செல்ல திட்டமிட்டார். இதன்மூலம் யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவுக்கு உள்ள உறுதி குறித்து ரஷ்யாவுக்கு காட்டப்படுகிறது.

பைடனின் ஊடக செயலர் கரின் ஜேன் பியரி, “பைடன் எப்போதெல்லாம் உரையாற்றுகிறாரோ அது அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவருக்கும் தான்,” என தெரிவித்துள்ளார்.

மேலும், “குடியரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர் எத்தனை நாட்களுக்கு அமெரிக்கா யுக்ரேனுக்கு ஆதரவு வழங்கும் எனக் கேட்டதற்கான பதில் இது,” என அவர் தெரிவித்தார்.

பைடன் பேசியது என்ன?

யுக்ரேனிய குடிமக்களைப் பாராட்டிய ஜோ பைடன், ராணுவ பயிற்சியில் எந்த அனுபவமும் இல்லாமல் இந்த மக்கள் அற்புதமாகப் போராடியதாகக் கூறினார்.”யுக்ரேனியர்களை மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுகிறேன். சாதாரண மற்றும் கடின உழைப்பாளியாக அவர்கள் திகழ்கிறார்கள். ஒருபோதும் ராணுவ பயிற்சி பெறவில்லை. ஆனாலும் களத்தில் அவர்கள் முன்னோக்கிச் சென்று போராடிய விதம் சிறந்த வீரத்திற்கு குறைவானது அல்ல. இப்போது உலகம் முழுவதும் அவர்களை அறிந்துள்ளது,” என்று பைடன் கூறினார்.

யுக்ரேனிய அதிபரை சந்தித்த பிறகு அவரும் ஜோ பைடனும் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றி வெளியிட்ட கூட்டறிக்கையில், “ஜனநாயக உலகம்” இந்த “போரில்” வெற்றி பெற வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

யுக்ரேனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று பைடன் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »