Press "Enter" to skip to content

ஈரோடு இடைத்தேர்தல்: பணமழை பொழியும் காலம் – பிபிசி கள ஆய்வு

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணம், பொருள் தருகிறார்கள். இதனால், தொகுதியின் பிரச்னைகளைப் பேசுவது பின்னுக்குத் தள்ளப்பட்டு, யார், எவ்வளவு கொடுக்கிறார்கள் என்ற பேச்சே தொகுதி முழுவுதும் ஒலிக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி இறந்த நிலையில், அந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது.

ஆளும் தி.மு.கவும் எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் தேர்தலை மிக முக்கியமானதாகக் கருதுகின்றன. தங்கள் ஆட்சி மீதான மக்களின் தீர்ப்பாக இந்தத் தேர்தல் முடிவை முன்வைக்க விரும்பிய தி.மு.க., எப்படியாவது மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுக்காட்ட விரும்புகிறது.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை, எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுவே கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராகிவிட்ட நிலையில், சமீபத்தில் வந்த நீதிமன்றத் தீர்ப்பும் கட்சியின் தலைமைப் பொறுப்பை எடப்பாடிக்கே அளித்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் தன் தலைமையை நிரூபித்துக்காட்ட விரும்புகிறார் அவர்.

இந்தக் காரணங்களால், எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் சாதாரணமாகக் கடந்துபோயிருக்க வேண்டிய இடைத்தேர்தல் மிக மிக முக்கியமான இடைத்தேர்தலாக மாறிவிட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, அது ஒரு புதிய தொகுதி. 2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது. பிராமண பெரிய அக்ரஹாரம், ஈரோடு, வீரப்பன் சத்திரம் ஆகியவை இந்தத் தொகுதிக்குள் அடங்கியிருக்கின்றன.

தொகுதி உருவாக்கப்பட்ட பிறகு முதன் முதலாக 2011ஆம் ஆண்டில் இந்தத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இந்தத் தொகுதி தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டது. தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் சுமார் 10,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

2016ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரான கே.எஸ். தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருமகன் ஈவெரா 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை சுமார் 2,30,000 வாக்குகள் இருக்கின்றன.

ஈரோடு கிழக்குத் தொகுதியின் பிரச்சனைகள் என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

பெரிதும் நகர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை, குறிப்பிட்டுச் சொல்வது போன்ற பெரிய பிரச்சனைகள் ஏதும் கிடையாது. இந்தத் தொகுதியின் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள், தேர்தலுக்கு முன்பாக முழுமையாகச் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளும் முழுமையாக தீர்க்கப்பட்டிருக்கின்றன. வெகுசிலர் தங்கள் பகுதிக்கு பேருந்து சரியாக வருவதில்லை போன்ற பிரச்சனைகளை சொல்கிறார்கள்.

மற்றபடி, ஈரோடு மாவட்டத்திற்கான பொதுவான பிரச்சனைகளான சாயக் கழிவு பிரச்சனை, தமிழ்நாட்டின் பொதுவான பிரச்சனைகளான மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றையே மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கேற்ப தேர்தல் பிரசாரமும் தமிழ்நாட்டுப் பிரச்சனைகள், தி.மு.க. தந்த வாக்குறுதிகள் ஆகியவற்றைச் சுற்றியே நடக்கிறது. அ.தி.மு.கவின் பிரசாரத்தில், தி.மு.க. அரசு சொன்னபடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பெண்களுக்குத் தருவதாகச் சொன்ன உரிமைத் தொகையைத் தரவில்லை என்பது போன்ற விஷயங்களை முன்வைக்கிறார்கள். தி.மு.கவைப் பொறுத்தவரை, இதுவரை நிறைவேற்றப்பட்ட காலை உணவுத் திட்டம், பெண்களுக்குப் பேருந்து இலவசப் பயணம் போன்றவற்றை முன்னிறுத்திப் பேசுகிறார்கள்.

ஆனால், இவையெல்லாம் தேர்தல் பிரசாரத்தில் பேச வேண்டும் என்பதற்காக பேசப்படுவதுதான். உண்மையான போட்டி வேறு களத்தில் நடக்கிறது.

ஆறாக ஓடும் பணம்

இந்தத் தொகுதிக்குள் சென்று யாரிடம் பேசினாலும், இந்த இடைத்தேர்தலில் பணம் ஆறாக ஓடுவது தெரியும். இலவசமாக வேஷ்டி சேலைகள், வெள்ளி விளக்கு, வெள்ளி கொலுசு, ஒவ்வொரு வாக்காளருக்கும் 3,000 முதல் 5,000 வரையில் பணம், தினசரி வருமானத்திற்கு ஏற்பாடு என பக்கத்துத் தொகுதிகாரர்களை பொறாமைப்பட வைக்கிறார்கள் இந்தத் தொகுதிக்காரர்கள்.

மதிய நேரத்தில் மரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சண்முகம், உற்சாகமாகச் சொல்கிறார். “நானும் என் மனைவியும் காலையிலும் மாலையிலும் கட்சி மன்றங்களில் போய் உட்கார்ந்துவிடுவோம். ஆளுக்கு தினம் ஐநூறு ரூபாய் கிடைக்கும். சாப்பாடும் கொடுத்துவிடுவார்கள். கடந்த பத்து நாட்களில் கிட்டத்தட்ட இதுவே பத்தாயிரம் ரூபாய் வந்துவிட்டது.

இதுபோக, விளக்கு, கொலுசு, பேண்ட், சட்டை எல்லாம் கொடுத்துவிட்டார்கள். ஒரு கட்சி ஆளுக்கு 5 ஆயிரம் கொடுத்துவிட்டது. ஆனால், நான் இந்தக் கட்சியோட கூட்டத்துக்கு ரெகுலரா போவதால், அந்தக் கட்சி தர வேண்டிய பணத்தை தரமாட்டேன் என்கிறார்கள். எப்படியாவது அதை பேசி வாங்க வேண்டும்” என்கிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல் தவிர்த்த பிற இடைத்தேர்தல்களில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியே பெரிதும் வெற்றிபெற்று வந்துள்ளது. அந்த நிலையே இந்தத் தேர்தலிலும் எதிரொலிக்கக்கூடும் என்பதையே சமீபத்தில் வந்த சில கருத்துக் கணிப்புகள் சொல்வதோடு, அரசியல் நோக்கர்களும் அப்படித்தான் கருதுகிறார்கள்.

ஆனால், ஆளும்கட்சி அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்வதாக இல்லை. இதன் காரணமாக, இலவசப் பொருட்கள் வாக்காளர்களை இலக்குவைத்து தரப்படுகின்றன. வெள்ளி விளக்கு, வெள்ளிக் கொலுசு, ஸ்மார்ட் கடிகாரங்கள், ஆடைகள், பணம் என என்னென்ன வாக்காளர்களுக்கு அளிக்க முடியுமோ அத்தனையையும் அளிக்கப்படுகிறது.

இது தவிர இந்தத் தேர்தலில் புதிய முயற்சியாக தேர்தல் பணிமனைகளில் காலை முதல் மாலை வரை ஆட்களை அமரவைத்து, அதற்கு பணம் தருவது பெரிய அளவில் நடக்கிறது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டுமே இதைச் செய்கின்றன. இவற்றை மனிதப் பட்டிகள் என ஊடகங்கள் அழைத்துவருகின்றன.

தி.மு.கவைப் பொறுத்தவரை, பெரும்பாலான அமைச்சர்கள் இந்தத் தொகுதிக்குள்தான் இருக்கிறார்கள். ஒரு நீளமான சாலையை கடந்து செல்லும் பொதுஜனம், குறைந்தது இரண்டு அமைச்சர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

“வெளியிலிருந்து ஆட்களை அழைத்துவருகிறார்கள்”

மு.க.ஸ்டாலின்

“எந்த இடைத் தேர்தல் வந்தாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், இப்படி ஈடுபடுவது இயற்கைதான். அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்களும் பெரிய அளவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்” என்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.

ஆட்களை அடைத்துவைக்கும் மனிதப் பட்டிகள் குறித்துக்கேட்டபோது, “எங்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதி மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். யாரையும் கட்டாயப்படுத்தி கூப்பிடவில்லை. அடைத்துவைக்கவில்லை. சுதந்திரமாக இருக்கிறார்கள். அ.தி.மு.கவின் கூட்டத்திற்கு அவர்கள் போக மாறுக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் வந்தபோது இந்தப் பகுதி மக்கள் அவரோடு வர மறுத்துவிட்டார்கள். அதனால், வெளியிலிருந்து ஆட்களை அழைத்துவருகிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம், எங்களுக்கு வருகிற வாக்காளர்கள் உள்ளூர் வாக்காளர்கள், அவர்களுக்கு வருகிறவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள். நாங்கள் காசு கொடுத்த ஆட்களை அமரவைக்க வேண்டிய அவசியம் இல்லை” என்கிறார் ரகுபதி.

தி.மு.க. கூட்டணியின் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தொகுதிக்குள் பெரியாரின் பேரன் என்ற அறிமுகத்தோடும் மகன் இறந்ததால் ஏற்பட்ட அனுதாபத்தோடும், ஆளும் கட்சியின் அதீதமான ஆதரவோடும் வலம்வருகிறார். சாதாரணமாக செய்தியாளர்களிடம் பேசுகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

அதிமுக கட்சித் தலைமையே நேரடியாக தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டுவதால் அ.தி.மு.க வேட்பாளரான தென்னரசுவும் தெம்புடன்தான் இருக்கிறார். ஆனால், ஊடகங்களைக் கண்டால் சற்றுத் தள்ளியே இருக்கிறார். “நான் ஊடகங்களிடம் பேசுவதில்லை. வேண்டுமானால் பிரசாரத்தில் பேசுவதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்கிறார்.

எளிய முறையில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

இவர்கள் இருவர் தவிர, களத்தில் மிக உற்சாகமாகத் தென்படுவது நாம் தமிழர் கட்சியினர்தான். அதிகாலையிலேயே சாலையின் பல்வேறு பகுதிகளில் பதாகைகளுடன் நின்று எளிய முறையில் வாக்கு கேட்கிறார்கள். அக்கட்சியின் வேட்பாளர் மேனகா, “இரண்டு கட்சிகளும் மக்களை மந்தைகளைப் போல அடைத்துவைத்திருக்கிறார்கள். இதனால் மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்பதே சிரமமாக உள்ளது. ஆனால், மாற்றம் வேண்டும் என நினைப்பவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம்” என்கிறார். இளைஞர்களின் ஆதரவோடு மிக சுறுசுறுப்பாக வாக்கு சேகரித்துவருகிறார் இவர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்தைப் பொறுத்தவரை, நான்கைந்து பேரோடு ஜீப்பில் சுற்றி வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார். மற்ற கட்சிக்காரர்கள் இன்னோவாவில் பறந்துகொண்டிருக்க, தே.மு.தி.கவினர் கட்சிக் கொடிகளோடு, பேருந்துகளில் சென்று வாக்குகளைச் சேகரித்துவருகிறார்கள்.

இந்தப் பிரதான கட்சிகளைத் தவிர, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் இளைஞரான தீபன் சக்ரவர்த்தியும் தொகுதி மக்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறார். இவரது பிரசாரம் முழுக்க முழுக்க டிஜிட்டலில்தான் நடக்கிறது. “ஒரு வாக்காளரைக்கூட நான் நேரில் சந்திக்கவில்லை. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யு டியூப் மூலம்தான் பிரசாரம் செய்கிறேன். மொத்த வரவு செலவுத் திட்டம்டே சில ஆயிரங்கள்தான்” என்கிறார். தனது யு டியூப் சேனலுக்கான விளம்பரமாக இதை அவர் செய்தாலும், சமீபத்தில் அவருக்கு வரும் கமெண்ட்கள், அவருக்கு பெரும் உற்சாகத்தை அளித்திருக்கின்றன.

“தேர்தலில் போட்டியிட்டால் அதை மிக சீரியஸாக செய்ய வேண்டுமென்பதை இந்த கமெண்ட்கள் உணர்த்துகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருநூற்றுச் சொச்சம் வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் அதைவிட நிச்சயம் கூடுதலாகக் கிடைக்குமென கருதுகிறேன்” என்கிறார் தீபன்.

தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான பிப்ரவரி 25ஆம் தேதி சனிக்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் தொகுதிக்குள் வலம்வருவதால் திக்குமுக்காடிப்போனது ஈரோடு தொகுதி. ஈரோடு மாவட்டம் முழுக்கவும் உள்ள ஹோட்டல்கள் நிரம்பி வழிகின்றன. உணவங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இதனால் பெய்யும் பண மழையும் பிரசாரத்தால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெரிசலும் தொகுதி மக்களுக்கு திணறலை ஏற்படுத்தியிருக்கின்றன.

மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலுக்குப் பிறகு, திருமங்கலம் வாய்ப்பாடு என்ற சொற்றொடர் உருவனதைப் போல, இந்தத் தேர்தலுக்குப் பிறகு, “ஈரோடு கிழக்கு ஃபார்முலா” என்ற தொடர் உருவாகலாம். ஆனால், அதுவும் ஜனநாயகத்திற்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »