Press "Enter" to skip to content

“கோவிலில் யானை வளர்க்கக் கூடாது” – உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவும், எதிர்ப்பும்

பட மூலாதாரம், Getty Images

“மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை உறுதிசெய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்த பிறகு அதற்கு பலரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?

கோவில்கள் மற்றும் தனி நபர்கள் வளர்க்கும் யானைகளை அரசின் மறு வாழ்வு முகாம்களுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இனி வரும் காலங்களில் யானைகளை வாங்க கூடாது என தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் உத்தரவு பிறபிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த முகமது ஷேக் என்பவர் லலிதா என்ற பெண் யானையை வளர்த்து வருகிறார். அந்த யானை மீதான உரிமையை மாற்றக் கோரி 2020ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன்., யானை லலிதாவை வளர்க்கும் பொறுப்பு அவரிடமே தொடர வேண்டும் எனவும், தேவைபட்டால் வனத்துறை அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

தற்போது யானை லலிதாவிற்கு 60 வயதாகிறது. சமீபத்தில் கோவில் விழா ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை லலிதா அங்கேயே மயங்கி விழுந்தது. அதனை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த விஷயத்தை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். லலிதாவை நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதற்கு பிறகு, முந்தைய வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்த நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன், “60 வயதான லலிதாவை ஓய்வு பெற்றதாக அறிவித்து முறையான உணவும், பராமரிப்பும் வழங்க வேண்டும். யானை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தினசரி சிகிச்சையளித்து கண்காணிக்க வேண்டும். லலிதா பூரண குணமடைந்ததும் தமிழ்நாடு அரசு யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு அனுப்பப்படும். சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலர், கோவில்கள் மற்றும் தனிநபர்கள் வளர்க்கும் யானைகளை அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும்” என கூறினார்.

மேலும் தனது உத்தரவில், “மத வழிபாடு சார்ந்தோ, தனி நபர் பயன்பாட்டிற்காகவோ யானைகளை வாங்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை இனி கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், இனி யானைகளை வாங்ககூடாது என்பது குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலர் இணைந்து விவாதித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடவேண்டும்.

தற்போது கோவில்கள் மற்றும் தனியார்கள் வைத்திருக்கும் யானைகளை தமிழ்நாடு அரசு யானைகள் மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர், அறநிலையத்துறை செயலருடன் இணைந்து செயல்படலாம். இனி யானைகளை வாங்க கூடாது என்பது குறித்து அனைத்து கோவில்களுக்கும் அறநிலையத்துறை செயலர் உத்தரவிட வேண்டும்” என்று கூறினார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன்.

யானைகளின் உடல் மற்றும் மன நலனை காக்கும் வகையில் நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்திருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக கோவில்களில் யானைகளை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து திருவிழாக்களிலும் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் இந்த உத்தரவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

யானைகளுக்கு முறையான பராமரிப்பு இல்லை :

யானை, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது குறித்த கருத்தை கேட்பதற்காக, அறநிலையத்துறையின் முன்னாள் உதவி ஆணையர் முத்து பழனியப்பனை பிபிசி தமிழ் தொடர்புக்கொண்டது.

அப்போது பேசிய அவர், “ இந்த தீர்ப்பு நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை, ஆனால் இந்த தீர்ப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. ஏனெனில்,கோவில்களில் யானைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

கோவில்களில் பசுக்கள், யானைகள், ஒட்டகங்கள் போன்ற விலங்குகளை வளர்க்க வேண்டுமென்று கூறுகிறார்கள். கோவில்களில் பசுக்களை வேண்டுமானால் வளர்க்கலாம், ஆனால் பாலைவனத்தில் இருக்கும் ஒட்டகங்களையும், காட்டில் வாழும் யானைகளையும் இங்கே கொண்டு வந்து வளர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது” என்று கேள்வியெழுப்புகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “யானைகளை ஆண்டுதோறும் முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்வார்கள். அதற்காக அந்த யானைகளை வண்டியில் ஏற்றுவார்கள். சில யானைகள் மிரட்சியில் முதலில் வண்டியில் ஏறாது. இரவு முழுவதும் அவைகளை அடித்து துன்புறுத்தி வண்டியில் ஏற்றுவதை என் கண்களால் பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் வார்த்தைகளில் சொல்ல முடியாது. அதைவிட ஒரு யானையை மற்றொரு துணை யானை இல்லாமல், காலம் முழுக்க வைத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுமை” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

”1960 களின் காலகட்டம் வரை கோவில்களில் வளர்க்கப்பட்ட யானைகளின் பராமரிப்பு நன்றாக இருந்தது. யானைகளை வளர்க்கும் முறைகள் நன்றாக இருந்தது. அப்போது யானைகளுக்கு உணவளிப்பதற்காகவே தனி புற்கள் வளர்க்கப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும் சோற்று உருண்டைகளைத்தான் கொடுக்கிறார்கள்” என்றும் குறிப்பிடுகிறார்.

இந்துக்களின் கலாசாரங்களை அழிக்க நினைக்கிறார்கள்:

யானை, இந்து மதம்

பட மூலாதாரம், Getty Images

”கோவில்களில் யானைகளை இனி வாங்கக்கூடாது என்பது குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு மிகவும் வேதனை அளிக்கிறது” என்கிறார் அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில தலைவர் சிவக்குமார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “மன்னர் காலத்திலிருந்து யானைகளை வழிபாட்டு முறைக்கு பயன்படுத்துவது தொடர்ந்து வருகிறது. சாமிகளுக்கு அபிஷேகம் செய்வதிலும், பண்டிகை காலங்களில் சாமிகளுடன் வீதி உலா செல்வதிலும் யானைகள் மிகப்பெரிய பங்கு வகித்து வந்திருக்கிறது. ஆனால் இன்றைய மக்களாட்சியில் இது போன்ற தீர்ப்பு வந்திருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று கூறுகிறார்.

மேலும், “கோவில்களில் யானைகள் தனியாக ஒரே இடத்தில் இருப்பதால் அதனுடைய உடல்நலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். அதற்காகத்தானே அதனை ஆண்டுதோறும் முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே மருத்துவ சிகிச்சை அளிக்கிறார்கள். கோவில்களில் யானைகளுக்கு அளிக்கப்படும் உணவுகளால் யானைகளுக்கு நோய் வருகிறது என்று மற்றொருபுறம் குற்றம் சுமத்துகிறார்கள். யானைகளுக்கு அளிக்கப்படும் உணவு மருத்துவர்களின் ஆலோசனையுடன் தான் கொடுக்கப்படுகிறது என்பது அவர்களுக்கு தெரியாதா. இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அரசுகள்தானே இதை கவனித்துக் கொண்டு இருந்தன.

யானைகள் கோவில்களில் வருமானத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. யானைகளை விநாயகப்பெருமானாக நினைத்து நாங்கள் வழிபட்டு வருகிறோம். அப்படிபட்ட யானைகளை கோவில்களில் வளர்க்க கூடாது என கூறுவது மிகவும் வேதனையளிக்கிறது. அரசுக்கு கட்டுப்பட்ட அறநிலையத்துறை ஆலயங்களில்தானே யானைகள் இருக்கிறது. இந்து மத கலாசாரங்களை அழிப்பதற்காகவே இதுபோன்ற உத்தரவுகள் வருகின்றன. எந்தவொரு மத வழிபாட்டு முறைகளிலும், ஆலய வழிபாட்டு விஷயங்களிலும் அரசாங்கங்கள் தலையிடக்கூடாது என்பது எங்கள் கோரிக்கை. ஆனால் இந்த தீர்ப்பு நடைமுறைக்கு வருவது குறித்து தொடர்ந்து பேச்சுக்கள் எழுந்தால் அகில பாரத இந்து மக்கள் அமைப்பு சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெறும்” என கூறுகிறார்

அந்த காலம் வேறு; இந்த காலம் வேறு :

யானை, இந்து மதம்

”கோவில்களில் யானைகள் இருக்க வேண்டும் என இந்துக்கள் விரும்பினால் போதாது, முதலில் இந்த கோவில்களில் இருப்பதற்கு யானைகளுக்கு விருப்பம் இருக்குமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “யானை ஒரு வனவிலங்கு என்பதை நாம் உணர வேண்டும். அதற்கு வேர்வை சுரப்பிகள் கிடையாது. காடுகளிலியே வெயில் ஏற துவங்கினால் அது நிழலுக்கு சென்று ஒதுங்கி விடும். இப்படியிருக்கையில் அதனை அதே முறையில்தான் நாம் கோவில்களிலும் பராமரிக்கிறோமா என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அதேபோல யானைகளின் பாதங்கள் மிகவும் மென்மையானது. நீண்ட நேரம் அதனை சிமெண்ட் தரைகளிலோ, தார் சாலைகளிலோ நிறுத்துவது அதனுடைய கால்களில் புண்களை ஏற்படுத்துவதோடு, அதனுடைய கால்களை பலவீனமாக்கிவிடும்.

அதேபோல் யானை என்பது ஒரு சமூக விலங்கு. எப்போதும் கூட்டத்தோடு வாழ பழகிய ஒரு விலங்கை, கோவில்களில் கொண்டு வந்து தனியாக நிறுத்துவதே அதற்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரும் கொடுமை. அதுவே அதற்கு உளவியல் ரீதியாக பல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல் மருத்துவர்களின் ஆலோசனைகளுடன் உணவு வழங்கப்பட்டு வந்தாலும், முகாம்களில் உள்ள யானைகளுக்கு வழங்கப்படும் உணவு என்பது வேறு, கோவில் யானைகளுக்கு வழங்கப்படும் உணவு என்பது வேறு. முகாம்களில் உள்ள யானைகள் தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் இருக்கின்றன. ஆனால் கோவில் யானைகளுக்கு அப்படியான மருத்துவ கண்காணிப்பு கிடையாது.

காலம்காலமாக யானைகளை போர்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்றாலும், அன்றைய காலம் என்பது வேறு, இன்றைய காலம் என்பது வேறு என்பதை நாம் உணர வேண்டும்.

யானைகள் ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர்கள் நடக்க கூடிய விலங்கு. அவற்றை ஒரே இடத்தில் நிற்க வைப்பதே தவறு. இன்று கோவில்களில் இருக்கும் பெரும்பாலான யானைகளுக்கு காசநோயும், சர்க்கரை நோயும் இருக்கிறது.

யானை ஒரு மிகப்பெரிய உயிர். அதனை இப்படியெல்லாம் நாம் துன்புறுத்த வேண்டுமா என்பதை நாம் ஆழமுடன் சிந்திக்க வேண்டும்.

இதை ஒரு மதம் சார்ந்த விஷயமாக பார்க்காமல், அனைவராலும் நேசிக்கப்படும் ஒரு உயிரினத்தின் நலன் சார்ந்த விஷயமாக பார்க்க வேண்டும்.கடவுளாக நினைக்கும் ஒரு உயிரை இவ்வளவு துன்புறுத்தல்களுடன் கோவில்களில் வைத்திருக்க வேண்டுமா என்பதை அறம் சார்ந்து சிந்திக்க வேண்டும்” என்கிறார் ஓசை காளிதாஸ்.

அதேபோல்,”ஆகம விதிகளின்படிதான் கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகிறது என்கிறார்கள். அதே ஆகம விதிகளின்படிதான் தேவதாசி முறை இருக்கிறது என்றார்கள் அதனை நாம் மீறவில்லையா. அதே ஆகம விதிகளின்படிதான் குறிப்பிட்ட சாதியினர் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றார்கள், அதனை நாம் மீறவில்லையா. எனவே ஆகமவிதிகள் என்று கூறப்படும் எதுவுமே நிரந்தரமானது கிடையாது. காலத்திற்கு ஏற்றாற் போல் அறிவியல் ரீதியாக சிந்திக்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார் ஓசை காளிதாஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »