Press "Enter" to skip to content

பிழைப்பு தேடி சென்ற தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கதை – 1970களில் மும்பையில் என்ன நடந்தது?

  • எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
  • பதவி, பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images

“லுங்கி ஹடாவ், புங்கி பஜாவ்“

“ஸாலா மதாராஸி ஹட்டாவ்“

1970களில் மும்பையில் வேலைக்காகக் குடிபெயர்ந்த தமிழர்களை விரட்டியடிக்க சிவசேனா முன்வைத்த முழக்கங்கள் இவை. இந்த மராட்டிய வாக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தால் அவை மோசமான அர்த்தத்தைக் கொண்டிருக்கும்.

பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலைக்காக தமிழ்நாட்டுக்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம், சமீபத்தில் பரப்பப்பட்ட வதந்தியால் பேசுபொருளாகியுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து கடந்த சில காலமாக தமிழகத்தில் பரப்பப்படும் வெறுப்புப் பேச்சுகளைப் போலவே, மகாராஷ்டிராவில் 1970களில் தமிழர்களுக்கு எதிராகவு போராட்டங்களும் வன்முறைகளும் நடைபெற்றன.

அந்த வன்முறைகளைத் தொடர்ந்து தமிழகத்திற்குத் திரும்பி வந்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மகிழ்நன் ” இப்போது நடந்துகொண்டிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகள் மற்றும் சர்ச்சைகள் மிகவும் தவறானது,” என்று பிபிசியிடம் கூறினார்.

‘மராட்டி மானோஸ்’

பால் தாக்கரே, சிவசேனா கட்சியை உருவாக்கியபோது அவர் முன்வைத்த முதன்மை முழக்கம் ‘மராட்டி மானோஸ்’ (Marathi Manoos) தான். இதன் பொருள் ‘மண்ணின் மைந்தர்கள்’.

வேலைவாய்ப்புகளில், தென்னிந்தியர்களைவிட மகாராஷ்டிரா மாநிலத்தின் மைந்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அரசியல் களத்தில் இறங்கிய பால் தாக்கரே இதற்காகப் பல போராட்டங்களை நடத்தினார். இதையொட்டி சில வன்முறைகளும் நடந்தன.

சிவசேனா என்ற அமைப்பின் அடிநாதமாக இந்த ‘மராட்டி மானோஸ்’ என்ற முழக்கம் இருந்தது. 1966ஆம் ஆண்டு அந்தக் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து, இன்று வரை பல்வேறு கட்டங்களில் இந்த முழக்கம் மும்பையிலும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலும் ஒலிக்கிறது.

மராட்டிய மக்களுக்காக அரசியல் களம் கண்ட பால் தாக்கரேவின் அரசியல் பயணம் அவரது தந்தையின் பயணத்தின் ஒரு நீட்சியாகவே இருந்தது.

சம்யுக்த மகாராஷ்டிரா

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Getty Images

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு வந்த காலம். 1950களில் மும்பை(அன்றைய பம்பாய்) தங்களுக்கு வேண்டும் என்று குஜராத்தும் மகாராஷ்டிராவும் போட்டியிட்டன.

அப்போது இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தி போராட்டத்தை முன்னெடுத்த ‘சம்யுக்த மகாராஷ்டிரா’ (ஒருங்கிணைந்த மகாராஷ்டிரா) இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் கேஷவ் தாக்கரேவும் ஒருவர். இவர் பிரபோதன்கர் தாக்கரே என்ற பெயரால் பிரபலமாக அடையாளம் காணப்பட்டார்.

இவரது மகன்தான் சிவசேனா அமைப்பின் நிறுவனரான பால் தாக்கரே.

இது மட்டுமின்றி பிராமணர் அல்லாதோர் சங்கத்தின் நிர்வாகியாக ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் உள்ளிட்டோருடன் பால் தாக்கரேவின் தந்தை பிரபோதன்கர் பணியாற்றியுள்ளார்.

இந்த அமைப்பு மூடநம்பிக்கை, வரதட்சணை கொடுமைகளுக்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

வரதட்சணை வாங்கும் நபரின் வீட்டுக்கு முன்பாகச் சென்று கழுதையைக் கட்டி வைத்து போராடுவது எனப் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார் பால் தாக்கரேவின் தந்தை.

மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது மும்பையில் உள்ள பிராமணர்கள் தாக்கப்பட்டனர். பிரபோதன்கர் தங்கியிருந்த பகுதிக்கு போராட்டகாரார்கள் வந்தபோது அவர்களிடம், “நான் இருக்கும் இடத்தில் எப்படி பிராமணர்கள் இருக்க முடியும்? நான் அவர்களை ஏற்கெனவே விரட்டி அடித்துவிட்டேன்,” என்று தெரிவித்தார்.

ஒரு கூட்டத்தில் இதைக் குறிப்பிட்டுப் பேசிய பால் தாக்கரே, அன்று எனது தந்தை பொய் சொல்லி பிராமணர்களைக் காப்பாற்றினார். என் தந்தை பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகத்தான் போராடினார். தனிப்பட்ட பிராமணர்களுக்கு அவர் விரோதி அல்ல,” என்று குறிப்பிட்டார்.

இதுபோன்ற அரசியல் பின்னணியில் இருந்து வந்தவர்தான் பால் தாக்கரே.

மர்மிக் இதழின் பிறப்பு

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Shivsena.org

அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட்டான (கேலிச் சித்திரம் வரையும் ஓவியக் கலைஞர்) பால் தாக்கரே, Free Press Journal என்ற ஆங்கில நாளிதழில் அரசியல் கேலிச் சித்திரம் வரையும் வேலையில் இருக்கிறார். புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்டான ஆர்.கே.லட்சுமணன் உடன் இந்தப் பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார் தாக்கரே.

1950களின் பிற்பகுதியில், தனது பத்திரிகை ஆசிரியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனது வேலையை உதறி விடுகிறார் அவர்.

மும்பையை மகாராஷ்டிராவின் ஓர் அங்கமாக ஆக்காமல், யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற தனது நாளிதழிலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த வேலையைவிட்டு வெளியேறினார்.

பிறகு சொந்தமாக வார இதழ் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டு, தனது சகோதரருடன் சேர்ந்து ‘மர்மிக்’ (marmik) என்ற வார இதழை 1960ஆம் ஆண்டில் தாக்கரே தொடங்கினார்.

மகாராஷ்டிராவின் பிரச்னைகளை கேலிச் சித்திரமாக வரைந்து அந்த இதழில் வெளியிட்டு வந்தார். தொடக்கத்தில் அந்த இதழுக்குப் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

மர்மிக் இதழின் ‘வெளிநபர்கள்’ பரப்புரை

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Shivsena.org

1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மர்மிக் இதழின் கோணத்தை மாற்றியமைக்க உந்துதலாக இருந்தது.

அந்த கணக்கெடுப்பில் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில், மராட்டியர்கள் 41% பேரும், பிற மாநிலத்தவர்கள் 59% பேரும் இருப்பது தெரிய வந்தது.

அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் சுமார் 8% இருப்பது தெரிய வந்தது.

அப்போது தனது வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் மூலம் கிடைத்த பட்டியலை பால் தாக்கரே தனது மர்மிக் இதழில் வெளியிடுகிறார்.

அந்தப் பட்டியலில், மும்பை நகரத்தில் புதிதாக வேலைக்கு சேர்பவர்களில் மராட்டியர்கள் எவ்வளவு பேர், பிற மாநிலத்தவர் எவ்வளவு பேர் என்ற விவரம் இருந்தது.

மத்திய தர வர்க்கம்(Working Class) அதிகமுள்ள மும்பையின் பல அலுவலகங்கள், ஆலைகளில் 70% பணிகளில் தென்னிந்திய மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவை சேர்ந்தவர்கள் இருப்பதாக மர்மிக் கட்டுரை எழுதியது.

மும்பை மண்ணின் மைந்தர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளை ‘வெளிநபர்கள்’ (outsiders) எடுத்துக் கொள்வதாக பால் தாக்கரே குற்றம் சுமத்தி கேலிச் சித்திரங்களை வரைந்தார்.

தலைவலியான கம்யூனிஸ்ட் கட்சி

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Getty Images

1970களின் பிற்பகுதிகளில் இந்தியா முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. இந்த நிலைமை மும்பையிலும் எதிரொலித்தது.

ஆனால் அதேநேரத்தில் கூலி உயர்வு உள்ளிட்ட தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி போராடி வந்தது.

மும்பையைச் சுற்றி ஏராளமாக இருந்த ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களை ஒருங்கிணைத்து கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை முன்னெடுத்தது.

“தொழிலாளர் நலன் சார்ந்து கம்யூனிஸ்ட் கட்சி இயங்கி வருவது ஆலை முதலாளிகளுக்கு தலைவலியாக இருந்தது. இதை மடைமாற்ற பால் தாக்கரேவை ஆலை முதலாளிகள் பயன்படுத்திக் கொண்டனர்.

மராட்டியர்களுக்கு மும்பையில் வேலை கிடைக்கவில்லை என்ற கோரிக்கையுடன் செயல்பட்டு வந்த பால் தாக்கரே இதை கையில் எடுத்துக் கொண்டு மராட்டி மானோஸ் என்ற முழக்கத்தை முன்வைத்தார்” என்று மும்பையில் வளர்ந்தவரும், பத்திரிகையாளருமான மகிழ்நன் தெரிவித்தார்.

வேலையில் சேரும் தென்னிந்தியர்களின் பட்டியலை பால் தாக்கரே தனது இதழில் தொடர்ந்து வெளியிட்டு, “உனக்கு வேலை கிடைக்காமல் இருப்பதற்கு மதராஸி தான் காரணம்” என்று மராட்டியர்களை நோக்கி எழுதுகிறார்.

“லாபத்திற்காக குறைந்த கூலிக்கு வருபவர்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்துகின்றனர். அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்,” என்று கம்யூனிஸ்ட்கள் எதிர் பிரசாரம் செய்தனர்.

கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களுக்கு சென்று தாக்கரேவும் கூட்டம் நடத்தினார்.

அந்த கூட்டங்களில், “மராட்டியர்கள் உணர்வுடன் இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட்கள் தொழிலாளர்கள் என்று கூறி உங்களை சுரண்டுகின்றனர். நீ மராட்டி என்ற உணர்வே இல்லாமல் போக செய்கின்றனர்.

ஆலைகளில் முக்கிய பொறுப்புகளில் மராட்டியர்கள் இல்லாதவர்கள் பணியில் இருக்கிறார்கள். கீழ் மட்ட பணிகளில் மராட்டியர்களை பணியமர்த்துகின்றனர்” என்று தாக்கரே பரப்புரைகளை மேற்கொண்டதாக மகிழ்நன் கூறினார்.

ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வீரியத்தை குறைக்க அவருக்கு இது போதுமானதாக இல்லை.

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், communistpartyofindia.com

மதராஸிகளை விரட்டுவோம் என்ற முழக்கத்துடன் சிவசேனா இயங்கி வந்தாலும், ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் விஷயத்தில் அவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் எதிரிகளாக இருந்தனர்.

1967ஆம் ஆண்டு தனது மர்மிக் இதழில் கம்யூனிஸ்ட்களை ஒழிப்பது தான் தனது லட்சியம் என்று வெளிப்படையாக தாக்கரே அறிவித்தார்.

சிவசேனா ஆதரவாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் அவ்வபோது மோதலில் ஈடுபட்டு, அவர்களின் கட்சி அலுவலகங்களை உடைத்து நொறுக்கினர்.

இந்த வன்முறையின் நீட்சியாக 1970ஆம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், தொழிற்சங்க தலைவருமான கிருஷ்ணா தேசாய் என்பவர் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிவசேனாவின் ஆதரவாளர்கள். பால் தாக்கரே தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டார் என்று குற்றச்சாட்டை கம்யூனிஸ்ட்கள் முன்வைத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பால் தாக்கரே, “தேசாய் எனது போட்டியாளர், எதிரி அல்ல. அவரின் மரணத்தின் மூலம் எங்களுக்கு இடையே இருந்த போட்டி முடிவுக்கு வந்துள்ளது,” என்று தெரிவித்தார்.

மராட்டியர்களை நோக்கி தீவிர பரப்புரை

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Getty Images

வேலையில்லாமல் இருக்கும் மராட்டியர்களை ஒன்று திரட்ட பல கட்டுரைகளையும், கேலிச் சித்திரங்களையும் பால் தாக்கரே வரைந்தார்.

அதில் மிக முக்கியமான ஒன்று, ‘வாச்சா அனி தண்டா பஸா‘. ‘வாச்சா‘ என்றால் வாசி, ‘பஸா‘ என்றால் அமைதியாக அமரு என்று பொருள்.

“உனது வேலையை மதராஸி பறிக்கிறான். நீ வாசித்து விட்டு அமைதியாக இரு, உனக்கு தான் ரோஷம் இல்லையே என்ற பொருளில் இந்த தலைப்பின் கீழ் கேலிச் சித்திரங்களையும், மும்பையில் உய பதவிகளில் சேரும் பிற மாநிலத்தவர்களின் பட்டியலையும் பால் தாக்கரே தொடர்ச்சியாக வெளியிட்டார்” என்று மகிழ்நன் குறிப்பிட்டார்.

இதற்கு மும்பையில் வாழ்ந்த மராட்டி மக்கள் மத்தியில் ஆதரவு ஆலை எழுந்தது.

அதனால் ‘வாச்சா அனி உட்டா’ என்ற பரப்புரையை தொடங்கினார். இதன் பொருள் ‘வாசித்து, விழித்துக்கொள்’ என்பதாகும்.

அது மட்டுமின்றி, வேலையில்லாமல் தவித்த சில மராட்டியர்களுக்கு ஆலைகளில் பியூன், உதவியாளர் உள்ளிட்ட பணிகளை தனது நட்பு வட்டாரம் மூலம் பெற்றுத் தருகிறார் பால் தாக்கரே.

இதன்மூலம் மராட்டி மக்களின் கவனத்தையும், நம்பிக்கையையும் தாக்கரே பெறுகிறார்.

சிவசேனா உதயம்

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Getty Images

தனது வார இதழில் வெளியான ஒரு தலைப்பு, மும்பையில் உள்ள மத்திய தர வர்க்க மராட்டியர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது.

‘கல்ச்சா மதராஸி தோடயாச் டிவ்சாத் துபாசி’ (Kaalcha Madrashi, thodyach divsat tupashi) என்பது அந்த தலைப்பு. நேற்று வந்த மதராஸி சீக்கிரமாக பணக்காரன் ஆகிறான் என்பது இதன் பொருள்.

இது போன்ற தென்னிந்தியர்களுக்கு எதிரான கட்டுரைகளால் அவரது இதழுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மர்மிக் இதழின் மூலம் கிடைத்த ஆதரவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நினைத்தார் பால் தாக்கரே.

1966ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியான அவரது மர்மிக் இதழில் ஒரு முக்கிய செய்தியை பால் தாக்கரே அறிவித்தார்.

அதில், “நாங்கள் விரைவில் சிவசேனா தொடங்கி, யண்டு குண்டுவை தாக்குவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

‘யண்டு குண்டு’ என்பது தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் பேசும் தென்னிந்திய மக்களின் மொழியின் ஒலி, யண்டு குண்டு(yandu-gundus) என்பதை ஒத்து ஒலிக்கிறது என்று மராட்டிய மக்கள் குறிப்பிடுவர்.

மர்மிக் இதழில் அறிவித்தது போலவே, 1966ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி சிவசேனாவை தொடங்கினார் பால் தாக்கரே.

வன்முறைக்குள்ளான உடுப்பி உணவகம்

சிவசேனா தொடங்கப்பட்ட பிறகு, 1966ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி மும்பையின் தாதர் சிவாஜி பூங்காவில் அந்த அமைப்பின் முதல் பேரணிக்கு தாக்கரே அழைப்பு விடுத்திருந்தார்.

“சொந்த ஊரில் ‘வெளிநபர்களால்’ அவமானப்படும் சுயமரியாதைமிக்க ஒவ்வொரு மராட்டியனும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும்” என்று தாக்கரே தனது பத்திரிகையின் மூலம் அறைகூவல் விடுத்திருந்தார்.

அந்தப் பேரணிக்கு எதிர்பாராத எண்ணிக்கையில் மும்பையின் நடுத்தர வர்க்கத்தினர் திரண்டு வந்திருந்தனர்.

“மும்பையின் தண்ணீர், மின்சாரம், நிலத்தை பயன்படுத்தும் ஆலைகளும், அலுவலகங்களும் மதராஸிகளுக்கு வேலையை கொடுக்கிறது. மராட்டிய மண்ணின் மைந்தர்கள் புறக்கணிக்கப்படுகிறார். நமது மண்ணில் நமக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை மதராஸிகள் தட்டி பறிக்கிறார்கள்,” என்று அந்த கூட்டத்தில் வீரியமிக்க உரையை பால் தாக்கரே நிகழ்த்தினார்.

அந்த கூட்டம் முடிந்து திரும்பும் வழியில், மும்பையில் இருந்த உடுப்பி ஹோட்டலை சிவசேனாவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.

அது முதல் அடிக்கடி தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் தாக்கப்படுவது நடந்தது. பல இடங்களில் தென்னிந்தியர்களின் உணவகங்கள், நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

“லுங்கி அணிந்து கருப்பு தோலுடன் இருக்கும் நபர்களை அடித்து விரட்டுங்கள்” என்று பல இடங்களில் சிவசேனாவின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

‘ஐயர்’, ‘கணபதி’,’ஷெட்டி’ என்ற பெயர் கொண்ட நபர்கள் தென்னிந்தியர்களாகக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

மும்பையின் பல இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள், பாதுகாப்பு கருதி ஒரே பகுதிக்கு குடிபெயர்ந்து அருகருகே குழுக்களாக வாழத் தொடங்கினர்.

மும்பையில் தமிழர்கள் வாழும் தாராவியும், பால் தாக்கரே வசித்த பாந்த்ரா பகுதியும் அருகருகே இருப்பதால் அடிக்கடி இரண்டு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும்.

தென்னிந்திய மக்கள் மீது தாக்குதல் அதிகமாக நடக்கத் தொடங்கியதையடுத்து தமிழக மக்கள் தரப்பிலும் எதிர்த் தாக்குதலும் அரங்கேறியது.

1970களின் முற்பகுதியில், பிற்பகுதியில் இப்படி சிறியதும் பெரியதுமாக பல வன்முறைகள் நடந்தன.

தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்குச் சென்ற வரதா பாய் என்ற வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான், திரவியம் நாடார் ஆகியோர் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதலை நடத்தியதாக மகிழ்நன் தெரிவித்தார்.

“சிவசேனை அமைப்பின் ஆதரவாளர்களுடன் வரதராஜ முதலியாரின் ஆதரவாளர்களுக்கு அடிக்கடி கைகலப்பு ஏற்படும். இது தொடர்பாக மும்பையில் அப்போது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதுகளும் அரங்கேறின.

ஓரிரு முறை இந்த கைகலப்பு இரண்டு தரப்பினரும் ஆயுதங்கள் கொண்டு மோதும் சண்டையாகவும் மாறியதுண்டு.”

இதில் பலர் கொல்லப்பட்டனர். பிழைப்பு தேடி மும்பைக்கு குடிபெயர்ந்த பல தமிழர்கள் இந்த வன்முறைக்குப் பயந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

இதுமட்டுமின்றி வரதா பாய், திரவியம் நாடார் ஆகியோர், மும்பையில் தமிழ் மக்களுக்காக தமிழர் பேரவை ஒன்றைத் தொடங்கினர்.

இந்த அமைப்பு மூலமாக தமிழர்கள் நலன் சார்ந்து பள்ளி, கோயில் திருவிழா, மருத்துவ உதவி எனப் பல உதவிகள் மேற்கொள்ளப்பட்டது.

புலம் பெயர் தமிழர்களின் நிலை

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிரா மட்டுமல்லாது, பல இடங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் தாக்கப்படுவதும், அவர்களின் தொழில் முடக்கப்படுவதும் வரலாறு நெடுகிலும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.

காவிரி நதி நீர் பிரச்னையில் கன்னட சலுவாலியா என்ற அமைப்பினரால் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். கர்நாடகத்திற்குள் நுழையும் தமிழ்நாட்டு வாகனங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

இதேபோல மியான்மர்(அன்றைய பர்மா), இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பிழைப்புத் தேடித் தமிழர்கள் சென்ற போது ஏற்பட்ட பிரச்னைகளின் காரணமாக அவர்கள் அங்கிருந்து ஒரு நாளில் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள்

வடமாநில தொழிலாளர்கள், மும்பை

பட மூலாதாரம், Getty Images

1990களில் மும்பையில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறையால் அந்நகரத்தை விட்டு தமிழ்நாட்டுக்கு குடும்பத்துடன் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான மகிழ்நன் திரும்பினார்.

“வடமாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்புப் பேச்சு மிகவும் தவறானது. 50 வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் இருந்த மக்கள் வேலைக்காக மும்பைக்கு குடிபெயர்ந்தனர்.

அன்று மும்பைக்கு கூலிக்காகச் சென்ற தமிழர்களின் அடுத்த தலைமுறையினரின், தொழில் திறனைப் பெருக்கி (Skilled Labour) சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர். அதனால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வேலையாட்கள் தேவையை நிரப்ப வட மாநிலங்களில் இருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் வந்துள்ளனர். அவர்களும் தமிழர்களைப் போல பொருளாதார ரீதியாக முன்னேற இன்னும் சில காலங்கள் ஆகும்.

வடமாநில தொழிலாளர்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் நிலவும் வெறுப்புப் பேச்சுகளுக்கு இங்குள்ள சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தான் காரணம்.

குறைந்த கூலிக்கு வேலையாட்கள் கிடைப்பதாலும், புலம் பெயர் தொழிலாளர்களைச் சுரண்டினால் கேள்வி கேட்க யாரும் வர மாட்டார்கள் என்பதாலும் இந்தப் பிரச்னை நடக்கிறது.

தமிழர்களாக இருந்தாலும், வேறு மாநில புலம் பெயர் தொழிலாளர்களாக இருந்தாலும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கை தான் இந்த விவகாரத்தில் முதன்மையாக எழ வேண்டும்,” என பிபிசியிடம் பேசிய மகிழ்நன் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »