Press "Enter" to skip to content

“சொல்வதற்கு நிறைய உள்ளன, ஆனால் பேசும் மனநிலையில் இல்லை” – திருச்சி சிவா எம்.பி

திருச்சியில் தமது சொந்த வீடு, திமுகவைச் சேர்ந்த சிலரால் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச மறுத்த அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, “பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுகவினருள் ஒரு பிரிவினர் அமைச்சர் நேருவின் அணியிலும் மற்றொரு தரப்பினர் திருச்சி சிவா தரப்பிலும் இருந்து கொண்டு செயல்படுவதாக கூறப்படுகிறது.

நேற்று காலை திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள புதிய இறகு மைதானத்தை திறப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சியினர் மைதானத்திற்கு சென்றனர். ஆனால் அந்த மைதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தவர் எம்பி சிவா என்பதால் அவர் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு தேர் முன்பாக கருப்புக்கொடி காட்டினர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி வந்த திமுகவினர் சிவாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனைவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீடு புகுந்து கார்,எந்திர இருசக்கரக்கலன் (பைக்) மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இதையடுத்து கருப்பு கொடியை காட்டிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது திமுகவின் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ் மற்றும் சிலர் அங்கு தாக்குதல் நடத்தியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்நது திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும்,மாமன்ற உறுப்பினருமான முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளரரும் மாமன்ற உறுப்பினருமான ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது திருச்சி சிவா அவரது வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்த சிலர் கல் வீச்சில் காயம் அடைந்தனர். இந்த நிலையில், ஊர் திரும்பிய திருச்சி சிவா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு

அப்போது பேசிய அவர்,” நாடாளுமன்ற குழுவுடன் பஹ்ரைன் சென்றிருந்த நேரத்தில் என் வீட்டை சிலர் தாக்கிய தகவலை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் வாயிலாகவும் அறிந்தேன்.

நடந்த சம்பவம் குறித்து எதையும் பேசும் மனநிலையில் நான் இல்லை. கடந்த காலங்களில் கூட நான் இத்தகைய பல சோதனைகளை சந்தித்தேன். அப்போது கூட யாரிடமும் நான் புகார் சொன்னதில்லை. தனி மனித இயக்கத்தை விட கட்சி பெரியது என கருதுபவன் நான்.

நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் எனது குடும்பத்தினரும் மன வேதனை அடைந்துள்ளனர். வீட்டில் வேலை செய்து வந்த 65 வயது பெண்மணி கூட காயம் அடைந்துள்ளார். நான் இதுவரை மனச்சோர்வில் இருப்பதாக சொன்னதில்லை. ஆனால் இப்போது அப்படித்தான் இருக்கிறேன்” என்றார் திருச்சி சிவா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »