Press "Enter" to skip to content

அம்ரித்பால் சிங் மீது பஞ்சாப் காவல்துறை நடவடிக்கை, பஞ்சாப் முழுவதும் இணையசேவை முடக்கம்

பட மூலாதாரம், Getty Images

‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கை பிடிக்க பஞ்சாப் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, ஜலந்தர், ஷாகோட் ஆகிய பகுதிகளில் காவல் துறை குழுக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணி வரையிலான காலத்துக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் துப்பாக்கிகள், வாள்களுடன் அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் பஞ்சாப் காவல் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, ஒரு கைதியை விடுதலை செய்ய வலியுறுத்திய சம்பவம் இந்தியா முழுவதிலும் அதிர்வலையை கிளப்பியது.

இந்த சம்பவத்தை அடுத்து, அம்ரித்பால் சிங் குறித்தும், காலிஸ்தான் பிரிவினை கோரிக்கை தொடர்பாகவும் விவாதங்கள் சூடுபிடித்தன.

இந்நிலையில், பஞ்சாப் காவல்துறை அம்ரித்பால் சிங் மீது பெரும் நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது தவிர, பஞ்சாப் காவல்துறையிடமிருந்து எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை என்று பிடிஐ தெரிவித்துள்ளது.

“ஜலந்தரின் மிஹாத்பூர் கிராமத்தில் அம்ரித்பாலின் வாகனத் தொடர் தடுக்கப்பட்டது. அம்ரித்பால் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும், ஆனால் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது,” என்று கூறியுள்ளது பிடிஐ.

பஞ்சாப் அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அம்ரித்பால் சிங் மீதான காவல்துறை நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் ரவ்னீத் பிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

காலிஸ்தானை உருவாக்க இளைஞர்கள் ஆயுதம் எடுக்கவேண்டும் என்று கூறினார். தற்போது அவர் பின்வாங்குகிறார். சீக்கிய மதத்தை புகழ்ந்துகொண்டிருந்த ஒருவர் தற்போது ஓடி ஒளிகிறார் என்று அவர் கூறியிருந்தார்.

“தாமதமாக எடுக்கப்பட்டாலும், பஞ்சாப் காவல்துறையின் நடவடிக்கையை வரவேற்கிறேன்” என்று காங்கிரஸ் தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா ட்வீட் செய்துள்ளார்.

“அனைத்து பஞ்சாபியர்களும் அமைதி காக்கவேண்டும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வாடிங் , குருவின் உண்மையான சீடர்களான சீக்கியர்கள் ஓடி ஒளிவதில்லை என்று குறிப்பிட்டார். அழுத்தத்துக்கு நடுவே பஞ்சாப் காவல்துறை தன் வேலையைச் செய்கிறது. பஞ்சாபியர் அனைவரும் அமைதி காக்கவேண்டும்,” என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »