Press "Enter" to skip to content

“அம்மாவுக்கும் ஒரு துணை வேண்டும் அல்லவா!” – தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

“அவர்களுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த என் மகன்கள் என்னிடம் வந்து எனக்கு மறுமணம் செய்து வைக்கவா என்று கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

அதேநேரத்தில், கணவரை இழந்த எத்தனையோ பெண்கள் தனி ஆளாக தன் பிள்ளைகளை வளர்த்து வரும் இந்தச் சமூகத்தில் யாருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை என் மகன்களுக்குத் தோன்றியதை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது,” என்கிறார் செல்வி.

கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவருடைய அம்மாதான் செல்வி. பாஸ்கர், அவரது தம்பி விவேக் இருவரும் தங்களது தந்தையை இளம் வயதிலேயே இழந்தவர்கள். 2009ஆம் ஆண்டில் அவர்களது தந்தை உயிரிழக்கும்போது பாஸ்கர், வேலூரில் பொறியியல் துறையில் முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். விவேக் 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

“அப்போதெல்லாம் மறுமணம் குறித்து எங்களுக்குச் சிந்தனையே இருந்ததில்லை. எங்கள் ஊரில், சொந்த பந்தங்களில் கணவரை இழந்து, தனியாகக் குழந்தைகளை வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாரும் அவர்கள் அப்படி தனியாக இருப்பதைப் பெருமையாகப் பேசுவதைப் பார்த்து, நாங்களும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால், நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது நான் படித்த பள்ளியில் பணியாற்றிய ஓர் ஆசிரியரை வழக்கம்போல் ஊருக்குப் போனபோது சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது அவர்தான் அம்மாவின் மறுமணம் குறித்துப் பேச்சு எடுத்தார்.

‘உங்க அம்மா இத்தனை நாளா தனியா கஷ்டப்படுறாங்களே, அவங்களுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சு வெக்கலாமில்ல’ என்று அவர் கேட்டார்,” என்று கூறும் பாஸ்கர், அந்த ஆசிரியர் அதைப் பற்றிப் பேசிய காலகட்டத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலேயே தான் இல்லை என்கிறார்.

அதனாலேயே இப்படி ஒரு பேச்சு வந்தது என்று தனது அம்மாவிடம் பேசாத பாஸ்கர், அந்த ஆசிரியரிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டார்.

விளையாட்டாகத் தொடங்கிய மறுமணப் பேச்சு

அதற்குப் பிறகு நீண்டகாலம் அதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த பாஸ்கர், கல்லூரி முடித்து, வேலை, வெளியுலகம் என வந்துவிட்டார். அந்த நேரத்தில் அவருடைய புத்தக வாசிப்பு பழக்கமும் அதன்மூலம் கிடைக்கும் பழக்கங்களும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கொண்டே சென்றுள்ளது.

அப்போது வாசிப்பு மூலம் அறிமுகமான பல நண்பர்கள் இதே விஷயத்தைப் பற்றிப் பேசுவதைப் பார்த்துள்ளார். பெரியாரின் மறுமணம் குறித்த எழுத்துகள், கலைஞருடைய எழுத்துகளை வாசிப்பது, அதுகுறித்து விவாதிப்பது எனத் தொடர்ந்துகொண்டிருந்த பாஸ்கர் ஒரு கட்டத்தில், “நம் வீட்டிலும் அம்மா கணவரை இழந்து தனியாக இருக்கிறாரே, அவருக்கு ஏன் மறுமணம் செய்து வைக்கக்கூடாது?” எனச் சிந்தித்துள்ளார்.

அண்ணனின் வழியையே பின்பற்றி நடந்துகொண்டிருந்ததால் அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இன்றிச் சம்மதித்ததாக அவரது தம்பி விவேக் கூறினார். இருவரும் அவர்களது அம்மாவிடம் இதுபற்றிப் பேசியுள்ளார்கள்.

அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

“எங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த அம்மாவுக்கு தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் உள்ளது, அவருக்கும் தேவைகள் உள்ளன என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், அம்மாவிடம் இதை எப்படிப் பேசுவது என்ற தயக்கம் இருந்தது.

ஆகையால் விளையாட்டாகப் பேசுவதைப் போலவே இந்தப் பேச்சைத் தொடங்கினோம். எனக்கு திருமணம் வயது ஆகிவிட்டது எனக் கூறி என்னிடம் அம்மா திருமணப் பேச்சை ஒருநாள் எடுத்தார். அப்போது, ‘நீ கல்யாணம் பண்ணாதான் நான் பண்ணுவேன்’ என்றேன்.

‘பிறகு நீண்டகாலமாக தனியாகச் சிரமப்படுகிறாயே, நீ முதலில் திருமணம் செய்துகொள், பிறகு நான் செய்துகொள்கிறேன்’ என்று அம்மாவிடம் அடிக்கடி அதுகுறித்துப் பிறகு பேசத் தொடங்கினேன்,” என்கிறார் பாஸ்கர்.

எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள்

தனது இரு மகன்களும் இந்தப் பேச்சை எடுத்து சில ஆண்டுகள் கழித்தே செல்வி மறுமணம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், அவர்களது உறவுகளில் ஏற்கெனவே இதுபோல் கணவரை இழந்தவர்கள் தனி ஆளாகவே கடைசி வரை இருப்பதும் இத்தகைய நடைமுறையை உறவுகள் ஏற்றுக்கொள்ளாததும் அவர்களுக்கு மறுமணம் செய்வதைச் சவாலாக்கின.

“மூத்த மகன் என்னிடம் இதுகுறித்துப் பேசியபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமணம் ஆகவேண்டிய வயதில் மகன் இருக்கும்போது நான் திருமணம் செய்துகொண்டால் ஊர் என்ன பேசும் என்று அவனைக் கடிந்துகொண்டேன்.

ஆனால், ‘நீங்களும் எத்தனை காலம்தான் தனியாகச் சிரமப்படுவீர்கள், உங்களுக்கு என ஒரு துணை இருந்தால், வெளியூர்களில் வேலை செய்யும் நானும் தம்பியும் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்ற நிம்மதியோடு இருப்போம்.

அதுமட்டுமின்றி உங்களுக்கு என வாழ்க்கை இருக்கிறது. அதை நீங்கள் வாழ்ந்துதான் ஆகணும். இதன்மூலம் உங்களைப் போல் கணவரை இழந்தவர்களுக்கு முன்மாதிரியாக இருங்கள்’ என்று கூறினான்,” என்று கூறும் செல்வி, அதற்குப் பிறகுதான் அதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.

அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

தனிமையில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்ட போதும் யாருமே உறுதுணையாக வந்து நிற்காதபோது, மறுமணம் விஷயத்தில் மட்டும் ஏன் அத்தகையோர் என்ன பேசுவார்கள் எனப் பார்க்க வேண்டும் என்று கூறியதோடு தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தைரியத்தையும் மன உறுதியையும் தனது மகன்கள் வழங்கியதாகக் கூறுகிறார் செல்வி.

அதைத் தொடர்ந்து ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு, மகன்கள் பக்கபலமாக நிற்கும் நம்பிக்கையில் மறுமணம் செய்துகொள்ள செல்வி முடிவெடுத்துள்ளார்.

அம்மாவுக்காக மாப்பிள்ளை தேடிய மகன்கள்

அம்மாவின் சம்மதம் கிடைத்துவிட்டது. அடுத்ததாக அவருக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேட வேண்டும். “வெறுமனே யாராவது மனைவியை இழந்தவரைத் தேடிப்பிடித்து அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்து கடமையை முடிக்க நாங்கள் நினைக்கவில்லை.

அவருக்காகத் தேடும் நபருடன் அவரை சில நாட்களுக்குப் பேசிப் பழகுமாறு கூறினோம். அம்மாவுக்கு சரி எனப்பட்டால் மேற்கொண்டு பேசலாம் என நினைத்தோம். அந்த முயற்சியில் இப்போது மணந்துள்ள அப்பாவை அம்மாவுக்குப் பிடித்ததால் அவர்கள் மறுமணம் செய்துகொண்டார்கள்,” என்கிறார் பாஸ்கர்.

“உன் பிள்ளைகளே கூறினாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு வாழ்க்கைக்கு நீ எப்படி சம்மதிக்கலாம் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். கணவரை இழந்தவர்கள் மறுமணம் செய்துகொள்ள சட்டமே இருக்கும்போது நான் ஏன் பயப்பட வேண்டும்?

பிள்ளைகளுக்குச் சுமையாக இருக்காமல், இறுதிக்காலத்தில் எனக்கென ஒரு துணையைத் தேடிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லையே!

திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை. நட்புறவோடு உறுதுணையாக ஒருவர் உங்களுக்கென இருக்கிறார் என்பதே தனி தைரியத்தை வழங்கும்,” என்கிறார் செல்வி.

“உணர்வுகளை மறைத்துக்கொண்டு வாழ வேண்டாம்”

“என் பிள்ளைகளின் தந்தையை இழந்தபோது, கணவர் இல்லாமல் தனியாக இருப்பதாலேயே பலர் தவறான எண்ணத்தோடு என்னை அணுகியுள்ளார்கள். ஆனால், இனி என்னிடம் யாரும் அப்படிப்பட்ட எண்ணத்தோடு நெருங்கமாட்டார்கள்.

முதல் கணவர் இறந்தபோது, எங்களது வீட்டில் கழிவறை வசதி இருக்கவில்லை. இரவு நேரத்தில் அதற்காக வெளியே செல்லும்போதுகூட மிகவும் தயக்கமாக இருக்கும். ‘இந்த நேரத்துல எங்க போயிட்டு வராளோ’ எனப் பேசுவார்கள்.

கணவர் இல்லாமல் தனியாகத்தானே இருக்கிறாள் என்ற தைரியத்தில் என்னிடம் பலரும் பாலியல்ரீதியாக முயன்று பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பேசியுள்ளார்கள்.

‘உங்களுடைய மனைவியிடமோ பிள்ளையிடமோ உங்கள் நடத்தை பற்றிச் சொல்லட்டுமா?’ எனக் கேட்பேன். தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்,” என்று கூறுகிறார் செல்வி.

“மறுமணம் செய்வதற்கு உனக்கு வந்த தைரியம் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று என்னைவிட மூத்த பெண்கள் பலர் என்னிடம் கூறியுள்ளார்கள். நானும் கணவரை இழந்து தனியாக வாழும் பல இளம் பெண்களுக்கு இதுகுறித்துப் பேசி நம்பிக்கையூட்டி வருகிறேன்,” என்கிறார் செல்வி.

அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

மேலும், “என்னைப் போல் கணவரை இழந்தவர்கள் தைரியமாக முடிவெடுத்து, இன்னொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நான் அனுபவத்தில் சொல்கிறேன், என்னைப் போன்ற பெண்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான உணர்வுகளை மறைத்துக்கொண்டு பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.

அப்படி வாழ்வது மிகவும் கடினம். அத்தகைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஊர் என்ன சொல்லும் என்றே நினைத்துக் கொண்டிருக்காமல் அவரவர் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து முடிவெடுக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன்,” எனக் கூறுகிறார்.

“பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படியான பிரச்னைகள் வரவேண்டும்? கடவுள் ஏன் பெண்களை இப்படிப் படைத்தார் என்று பலமுறை சிந்தித்துள்ளேன். ஆனால், இந்தச் சமூகம்தானே பெண்களுக்கு இந்தப் பிரச்னைகளை உருவாக்குகிறது, கடவுளா உருவாக்கியது என்பதைப் பின்னர் புரிந்துகொண்டேன்.”

மறுமணம் செய்யும்போது செல்வியின் குடும்பத்தார் யாருமே அதில் பங்கேற்கவில்லை. அவரது கணவர் தரப்பில் மட்டுமே சிலர் கலந்துகொண்டுள்ளனர்.

நீண்டகாலத்திற்கு அவர்கள் மொத்தமாக செல்வியின் குடும்பத்தை ஒதுக்கியே வைத்திருந்ததாகவும் இப்போது அவர்கள் இது சரி என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர் என்றும் பாஸ்கர் கூறுகிறார்.

அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்

“அம்மாவுக்காக எத்தனை பிள்ளைகள் இப்படி யோசிப்பார்கள்”

“இரண்டு பிள்ளைகளைத் தனியாக எப்படி வளர்ப்பது என்று குழம்பி நின்றவேளையில் எங்கள் குடும்பத்தில் எனது மாமனார், மாமியார், அம்மா என்று அனைவரையும் கணவர் இறந்த நேரத்தில் அழைத்தேன். ஆனால், யாருமே உதவிக்கு வரவில்லை. பிறகு என் பிள்ளைகளை நானே தனியாக வளர்த்தேன். ஒரு கட்டத்திற்கு மேல், மகன்களும் பகுதிநேர வேலைகள் பல செய்து, சூழ்நிலையைப் புரிந்து நடந்துகொண்டார்கள்.”

இப்படிப் பல சிரமங்களை எதிர்கொண்டு வளர்ந்த செல்வியும் அவரது பிள்ளைகளும் இந்தச் சமூகத்தின் செயல்முறையை அதன்மூலம் நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்கள். அதன் நீட்சியே நூல் வாசிப்பின் மூலம் இத்தகைய எண்ணம் ஏற்பட்டபோது அதை நடைமுறைப்படுத்தும் தைரியத்தையும் வழங்கியதாகக் கூறுகிறார் பாஸ்கர்.

இப்போது ஏழுமலை என்ற விவசாயத் தொழிலாளியை திருமணம் செய்திருக்கும் செல்வி, அவர் தன்னை அன்பாகப் பார்த்துக் கொள்வதாகவும் அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்வதாகவும் புன்னகையுடன் கூறுகிறார்.

“இத்தனை ஆண்டுகளாக நேர்மையாகவே இருந்தாலும் தனியாக இருந்தபோது தவறாகப் பேசினார்கள். ஆனால் இப்போது எதார்த்தமான வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடிகிறது.

“நமது அம்மாவுக்கும் தேவைகள் உள்ளன, அவருக்கும் ஒரு துணை வேண்டும் என்று எத்தனை பிள்ளைகள் யோசிப்பார்கள். என் மகன்களை நினைத்தால் பெருமையாக உள்ளது,” என்று செல்வி கூறும்போது அவருடைய குரலில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »