Press "Enter" to skip to content

வட மாநில தொழிலாளர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் பட்டறை தொழில் இயங்க முடியாதா? – கள நிலவரம்

தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களை மையப்படுத்தி சமீபத்தில் எழுந்த பொய் செய்திகள் தொடர்பான சர்ச்சைகளின் எதிர்வினை அனைத்து துறைகளிலும் உணரப்படுகின்றன. கோவையின் முகமாக திகழும் ஃபவுண்டரி (Foundry) பட்டறை துறையிலும் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

கோவையின் தொழில் வளர்ச்சியில் பங்கு

தமிழ்நாட்டின் உற்பத்தி தலைநகரமாக அறியப்படுவது கோவை மாவட்டம். சென்னைக்கு அடுத்தபடியாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் கோவை இருந்து வருகிறது. பொறியியல் உற்பத்தி, பம்பு செட், ஆலை, ஜவுளி துறைக்கு நிகராக ஃபவுண்டரி துறையும் கோவையின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டின் பிரதான துறைகளான ஜவுளி, கட்டுமானம் போலவே ஃபவுண்டரி துறையிலும் வட மாநில தொழிலாளர்களின் பங்கு கனிசமாக உள்ளது. ஆனால் அவர்களை வேலைக்கு அமர்த்துவது, அவர்களின் ஊதியம் தொடர்பாக பரவும் செய்திகளில் உண்மை இல்லை என அத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கோவையில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிலைகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஃபவுண்டரி தொழிலகங்கள் கோவையில் இயங்கி வருகின்றன. பம்பு செட், ஆட்டோ மொபைல், வேளாண் இயந்திரங்கள் போன்றவற்றின் பாகங்கள் மற்றும் உதிரி பாகங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமில்லாமல் ஏற்றுமதியிலும் ஃபவுண்டரி துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

வடமாநில தொழிலாளர்களின் பங்களிப்பு

வட மாநில தொழிலாளர்கள்

கோவையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘அம்மாருண்’ என்கிற ஃபவுண்டரி தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார் விஸ்வநாதன். ஃபவுண்டரி துறையின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பில் வட மாநிலத்தவர் அதிகரித்த போக்கை பிபிசி தமிழிடம் விளக்குகிறார் விஸ்வநாதன்.

“ஃபவுண்டரி துறையில் 40% வட மாநில தொழிலாளர்கள் உள்ளனர். கோவையில் ஃபவுண்டரி தொழிற்சாலைகள் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் வேலை குறைவாக இருக்கும், வேலை தேடுபவர்கள் அதிகமாக இருப்பார்கள்.

அதனால் அனைவருக்கும் வேலை கிடைக்காது. தொழில் வளர்ச்சி பெருக பெருக இந்த நிலை தலைகீழாக மாறியது. ஃபவுண்டரி துறை கடந்த 15, 20 ஆண்டுகளில்தான் புதிய உச்சத்தை எட்டியது. தொழிற்சாலைகள் அதிகரிக்க, உள்ளூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறை அதிகரித்தது.

அப்போது தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வேலை பார்த்தார்கள். தொழிற்சாலைகள் அதிகரிக்க வேலைவாய்ப்பும் பெருகிறது.

அதிக ஆட்கள் தேவைப்பட்டதால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப பிற மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வர வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக பிகார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வேலைக்கு வந்தார்கள்.

ஒரு காலத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் சென்றதால் அங்கு கட்டுமான தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டைச் சேர்தவர்கள் கேரளா சென்று வேலை செய்தார்கள்.

இத்தகைய இடப்பெயர்வுகள் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்று தான். வட மாநிலத்தவர்கள் வருவதால் இங்குள்ளவர்களுக்கு வேலை இல்லை எனச் சொல்வது முற்றிலும் தவறு. இங்கு வேலைக்கு ஆட்கள் இல்லை என்பதால் வட மாநிலத்தவர்கள் வருகிறார்கள்,” என்றார்.

என்ன சொல்கிறார்கள்?

வட மாநில தொழிலாளர்கள்

வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலும் 10 ஆம் வகுப்பு வரை பள்ளி படிப்பை முடித்தவர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்பவர்கள், திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் அவர்களின் குடும்பங்கள் சொந்த ஊர்களில் உள்ளன. பெரும்பாலான தொழிலாளர்கள் தனியாகதான் நிறுவனங்கள் வழங்கும் குடியிருப்புகள் அல்லது கூட்டாக வாடகைக்கு வீடுகள் போன்றவற்றில் வசித்து வருகின்றனர்.

ஒடிசாவைச் சேர்ந்த நிரஞ்சன் கடந்த 10 வருடங்களாக கோவையில் வசித்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நான் 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். அதற்கு மேல் படிப்பதற்கு வசதியில்லை. படித்து முடித்ததும் அப்பா உடன் இரண்டு ஆண்டுகள் விவசாய வேலை செய்து வந்தேன். ஆனால் அதில் வருமானமே இல்லை. அதனால்தான் வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வந்தேன்.

எங்கள் ஊரில் 100 பேரில் 10 பேருக்குதான் வேலை கிடைக்கும். அதுவும் அரசு அல்லது ஒப்பந்த வேலைகள்தான் கிடைக்கும். மீதமுள்ள 90 பேருக்கு வேலை இருக்காது. விவசாயத்தில் வருமானம் இருக்காது, கடந்த சில வருடங்களாக நஷ்டம்தான். தமிழ்நாட்டில் உள்ளதைப் போன்ற தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாம் எங்கள் ஊரில் கிடையாது.

தமிழ்நாட்டிற்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் குடும்பம் சொந்த ஊரில் தான் வசித்து வருகிறது. சம்பளத்தில் என் செலவுக்குப் போக மீதமுள்ளதை வீட்டிற்கு அனுப்பி வைப்பேன். அவர்கள் அங்கும், நான் இங்கும் சந்தோஷமாகதான் இருக்கிறோம்.

தமிழ் பேசுபவர்கள், இந்தி பேசுபவர்கள் என அனைவரும் ஒன்றாக வேலை செய்து வருகிறோம். இங்கு ஒரு பிரச்சனையுல் இல்லை. ஹெல்பராக வந்துதான் முதலில் வேலைக்குச் சேர்ந்தேன். தற்போது வேலை கற்றுக் கொண்டு மெஷின் ஆப்பரேட்டராக உள்ளேன்” என்றார்.

கடந்த 16 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருபவர் சுஷாந்த். பிபிசி தமிழிடம் பேசியவர், ”என் சொந்த மாநிலம் ஒடிசா. நான் 10 ஆம் வகுப்பு வரைதான் படித்தேன். எங்கள் ஊரில் விவசாயத்தை விட்டால் வேறு வேலை இருக்காது. அதுவும் மூன்று மாதத்திற்கு மட்டுமே விவசாயத்தில் வேலை இருக்கும், ஊதியம் முறையாக கிடைக்காது. அதனால்தான் என்னைப் போன்ற ஒடிசாவைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வேலை தேடி வருகிறார்கள்.

நான் 16 ஆண்டுகளாக கோவையில் வேலை செய்து வருகிறேன். என் மனைவி, குழந்தைகள் அனைவரும் சொந்த ஊரில் தான் உள்ளனர். வருமானத்தை தவறாமல் குடும்பத்திற்கு அனுப்பிவிடுவேன். தமிழ்நாட்டில் வேலை செய்வது நன்றாக உள்ளது. இங்கேயே செட்டில் ஆகிவிட்டேன்” என்றார்.

ஊதிய வேறுபாடு இருக்கிறதா?

வட மாநில தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

வட மாநில தொழிலாளர்கள் – உள்ளூர் தொழிலாளர்கள் இடையே ஊதிய வேறுபாடு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகச் சொல்கிறார் விஸ்வநாதன்.

மேலும் விவரித்தவர், “புதிதாக வேலைக்கு வரும் வட மாநில தொழிலாளர்கள் ஜூனியராக இருப்பார்கள். ஏற்கெனவே இங்கு பணிபுரிபவர்கள் சீனியராக இருப்பார்கள். அப்போது ஊதிய வேறுபாடு இருக்கவே செய்யும். அதுதான் குறைவான ஊதியம் கொடுக்கப்பதாக சித்தரிக்கப்படுகிறது.

உதவியாளராகத்தான் அவர்கள் பணியைத் தொடங்குவார்கள். ஃபவுண்டரி துறை பல நிலைகளைக் கொண்டது. இதன் வேலை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள சிறிது காலம் எடுக்கும். கொஞ்சம் கொஞ்சமாக வேலை கற்று ஒரே நிலை என வருகின்றபோது ஊதிய வேறுபாடு இருக்காது. எங்கள் நிறுவனத்திலும் வட மாநிலத்தவர்கள் நிரந்தர தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

வழக்கமாக ஹோலி பண்டிகைக்கு அவர்கள் ஊருக்குச் செல்வது வழக்கம். அப்போது உற்பத்தி கொஞ்சம் மந்தமாகும். சமீபத்திய சர்ச்சைகளால் ஒரு தரப்பினர் அச்சத்தில் சொந்த ஊருக்குச் சென்றது உண்மைதான்.

ஆனால் அவர்களும் திரும்பி வருவதாகவே எங்களிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் வட மாநிலத்தவர்கள் முழுமையாகச் சென்றுவிட்டால் எங்கள் துறை உட்பட பல துறைகள் இயங்க முடியாது என்பது 100% உண்மை,” என்றார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »