Press "Enter" to skip to content

மலேசிய அரசியல்: அன்வார் கட்சியின் அதிருப்தி தலைவர் தாக்கப்பட்டார்

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்திருப்பது அன்வார் இப்ராகிம் ஆதரவாளர்களுக்கு சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்களில் ஒருதரப்பினர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இன்று இரவு பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

‘மலேசியாவைக் காப்பாற்றுங்கள்’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்தப் பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அன்வார் ஆதரவாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் அன்வார் தலைமையிலான பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் டியான் சுவா இன்று சிலரால் தாக்கப்பட்டார். இவர் அன்வாருக்கு எதிராக செயல்பட்ட அஸ்மின் அலியின் ஆதரவாளர் ஆவார். எனினும் கட்சியை விட்டு இன்னும் நீக்கப்படவில்லை.

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த 10 எம்பிக்களுடன் அஸ்மின் அலி கட்சியில் இருந்து வெளியேறியதும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு முடிவுக்கு வர ஒரு காரணமானது. இதனால் அஸ்மின் அலி தரப்பினர் மீது அன்வார் ஆதரவாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் டியான் சுவா இன்று காலை பிகேஆர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் கூட்டத்தின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.

அப்போது கட்சி அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த பலர், அவரை நோக்கி, ‘துரோகி’ என குரல் எழுப்பினர். மேலும் சிலர் அவரது கன்னத்தில் அறைந்து, முகத்தில் குத்தி, தலையில் அடித்து தாக்குதல் நடத்தினர். சிலர் தண்ணீர் பாட்டில்களை அவர் மீது வீசியெறிந்தனர்.

இதனால் கோபமடைந்த டியான் சுவா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அவரது காரில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ஒருவேளை தாக்கியவர்கள் பிகேஆர் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றால் நிச்சயம் நடவடிக்கை பாயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »