Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் ஒரே நாளில் 28 பேர் பாதிப்பு, முகக்கவசம் வாங்கத் துடிக்கும் மக்கள்

மலேசியாவில் கொரோனா கிருமியின் தாக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 6) ஒரே நாளில் மட்டும் புதிதாக 28 பேருக்கு இக்கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கைந்து தினங்களாக கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மலேசிய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்ட 28 புதிய நபர்களையும் சேர்த்து மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது என மலேசிய சுகாதார அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 65 பேர் மலேசியர்கள் என்றும், 15 பேர் சீனக் குடிமக்கள் என்றும், அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் அடங்குவர் என்று அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் 956 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

“இவர்களில் 258 பேர் 26ஆவது நோயாளியாக அடையாளம் காணப்பட்டவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் ஆவர். இவர்களுள் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 70 பேருக்கு பாதிப்பில்லை என்றாலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். 170 பேரின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை,” என்று சுகாதார அமைச்சின் பொதுச் செயலர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

எனினும் மலேசியாவில் கிருமித் தொற்று பாதிப்பு கட்டுக்குள் தான் இருக்கிறது என்றும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களைப் பற்றிய விவரங்கள் தெரிய வந்தால் அதை உடனுக்குடன் அரசாங்கத்துடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“கொரோனா கிருமி இன, மத, அரசியல் எல்லைகளை மதிக்காது”

இதற்கிடையே, கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தை அனைவரும் இணைந்து நடத்த வேண்டும் என்று மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சர்களான டாக்டர் சுல்கிஃப்ளி அஹமத்தும், டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் தெரிவித்துள்ளனர்.

‘கோவிட்-19’ நோயானது இனம், மதம், அரசியல் எல்லைகளுக்கு எந்த வகையிலும் மரியாதை கொடுக்காது என்றும் இருவரும் எச்சரித்துள்ளனர்.

“கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நம்மையெல்லாம் உடல் ரீதியாகப் பிரித்து வைக்கலாம். எனினும் இந்தக் காலகட்டத்தில் நாம் அனைவரும் நாட்டின் நலன் கருதி ஒற்றுமையாகவும், துரித கதியிலும் இணைந்து செயல்பட வேண்டும்.

“சீனாவில் ‘கோவிட்-19’ தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப் பட்டிருந்தாலும், மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் இப்போதுதான் அக்கிருமி உள்நாட்டிலேயே பரவுவது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கிருமித் தொற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மலேசிய சுகாதார அமைச்சு மிகுந்த நிபுணத்துவத்துடன் மேற்கொண்டுள்ளது பாராட்டுக்குரியது,” என்று முன்னாள் சுகாதார அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கோவிட்-19’ பாதிப்பு பெரிய அளவில் பரவும் பட்சத்தில், அதை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள், அத்தகைய தருணத்தில் ஒட்டுமொத்த மலேசியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள பல்வேறு தன்னார்வலர்களும், அவர்கள் சார்ந்த அமைப்புகளும், தொண்டூழிய அமைப்புகளும் கொரோனாவை எதிர்க்கும் மலேசிய அரசின் நடவடிக்கைகளில் இணைந்து செயல்பட முன்வந்துள்ளன.

மீண்டும் முகக்கவசங்கள் வாங்கத் துடிக்கும் மலேசிய மக்கள்

இதற்கிடையே, மலேசியாவில் முகக்கவசத்துக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மலேசியாவில் புதிதாக ‘கோவிட்-19’ நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

11 நாட்கள் பாதிப்பு குறைந்திருந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து மெல்ல விடுபட்டு வந்தனர். இதனால் முகக்கவசம் அணிபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்குள் ‘கோவிட்-19’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்திருப்பதை அடுத்து மக்கள் மீண்டும் முகக்கவசங்களை வாங்குவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

பொது மக்களுக்குத் தேவையான அளவு முகக்கவசங்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மலேசிய உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவித்திருந்தது.

இதையடுத்து தினந்தோறும் நான்கு லட்சம் முகக்கவசங்கள் சந்தைக்கு வருவதாக செய்தி வெளியானது. எனினும் தற்போது கொரோனா கிருமியின் தாக்கம் மலேசியாவில் வலுவடைந்து வருவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து பொதுமக்கள் மீண்டும் முகக்கவசங்களை வாங்கிக் குவிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »