Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது, நாடே முடங்குகிறதா? Corona Global Live Latest Updates

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜீனியாவில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது செவ்வாயன்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து தற்போது அமெரிக்காவில் உள்ள மொத்தம் 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது.

நியூயார்க் நகரம் முழுவதும் முடக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 6000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 105 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

உலகளவில் மொத்தம் 2 லட்சம் மக்கள் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 8000 பேர் இறந்துள்ளனர்.

மாகாணங்களின் ஆளுநர்கள் கேட்டுக்கொண்டால், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிய கள மருத்துவமனைகள் அமைக்க ராணுவம் அனுப்பப்படும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “வேண்டுமானால் தேசத்தையே முடக்கலாம். ஆனால், அது தேவைப்படாது என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

எல்லைகளை மூடும் ஐரோப்பிய ஒன்றியம்

கொரானா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக வெளிநாட்டவர்கள் நுழைய 30 நாள் தடையை விதித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 26 நாடுகளோடு, ஐஸ்லாந்து, லெச்டென்ஸ்டீன், நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இது பொருந்தும்.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தொடர்ந்து அதிகரித்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரானா வைரஸால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஐரோப்பா. உலகளவில் 7,500 ஐரோப்பியர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா – சில முக்கிய நிகழ்வுகள்

  • கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் யாரேனும் வெளியே சென்றால், அவர்கள் எதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தார்கள் என்ற காரணத்தோடு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பிரான்ஸில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,730ஆக உயர்ந்துள்ளது. 175 பேர் இறந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 7 சதவீதம் பேர் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
  • பிரிட்டனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது.

How to wash your hands properly? | கொரோனா | Covid-19 | Corona

  • ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-ல் இருந்து 11,178 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை அடுத்து இந்த வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடு ஸ்பெயின்.
  • சீனாவை அடுத்து அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது இத்தாலியில்தான். அங்கு 31,500 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2,150ஆக இருந்த பலி எண்ணிக்கை செவ்வாயன்று 2,503ஆக உயர்ந்தது. இத்தாலி நாடு முழுவதும் இதனால் முடக்கப்பட்டுள்ளது.
  • சீனா, இத்தாலியை தொடர்ந்து மூன்றாவதாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு இரான். 16,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 988 பேர் இறந்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள தரவுகளைவிட பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
  • இரானில் கொரோனா தொற்று பரவுதலை கட்டுப்படுத்த அரசியல் கைதிகள் உள்பட 85,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  • உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவரும் நிலையில், செவ்வாயன்று சீனாவில் ஒரே ஒரு நபருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பரவியிருக்கிறது தெரிய வந்துள்ளது.
  • பிலிபைன்ஸ நாடு அதன் பங்குச்சந்தையை காலவரையின்றி மூடியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »