Press "Enter" to skip to content

கொரோனா: தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்ட முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர்

கொரோனா தொற்று சிக்கல் உலகம் முழுவதிலும், மலேசியாவிலும் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொண்டார்.

புதிதாக 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மார்ச் 19ஆம் தேதி மாலை நிலவரப்படி, மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 900ஆக அதிகரித்துள்ளது.

இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சர் டாக்டர் அதம் பாபா தெரிவித்துள்ளார்.

தற்போது கோவிட்-19 நோயாளிகள் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற 16 ஆயிரம் பேரில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. புரூனேவை சேர்ந்த ஒருவர் நோய்த் தொற்றுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார் என்றும், அவர் மூலமாகவே பலருக்கு வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த 16 ஆயிரம் பேரில் இன்னும் 4 ஆயிரம் பேர் அடையாளம் காணப்படவில்லை. அவர்கள் தாமாக முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என மலேசிய சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இவர்களில் 2 ஆயிரம் ரோஹிஞ்ஜா அகதிகளும் அடங்குவர் என்று கூறப்படுகிறது.

60 விழுக்காட்டினர் மட்டுமே கட்டுப்பாடுகளை பின்பற்றுகின்றனர்

மலேசியாவில் பொது நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் இந்நடவடிக்கைக்கு ஒத்துழைக்காவிட்டால் ராணுவத்தை களமிறக்க வேண்டிய நிலை ஏற்படும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் கட்டுப்படவில்லை என்றால் பொது நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு காலம் நீட்டிக்கப்படலாம் என்று பிரதமர் முகிதீன் யாசின் கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மலேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், தற்போது 60 விழுக்காடு மக்கள் மட்டுமே பொது நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என அரசு விரும்புவதாகவும், எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் காவல்துறையினர் பொது நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மக்கள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்து வருகின்றனர். எனவே இதுவரை ராணுவத்தை இப்பணிக்காக அழைக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறியுள்ளார். காவல்துறை மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடு முழுவதும் போலிசார் 504 இடங்களில் சாலைத்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், அப்போது 6,135 வாகனங்களை சோதித்ததாகவும் குறிப்பிட்ட அமைச்சர், தற்போது வரை கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு போலிசார் அறிவுரை மட்டுமே கூறி வருவதாக தெரிவித்தார்.

எனினும் பொது மக்கள் ஒத்துழைக்காவிட்டால் அடுத்து வரும் நாட்களில் போலிசார் சட்டப்படி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றார் அவர்.

கைது நடவடிக்கையும் கூட சாத்தியம்: கோத்தகினபாலு போலீசார் எச்சரிக்கை

வீட்டிலேயே இருப்பது நல்லது என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், இதை அலட்சியப்படுத்துவோர் கைதாக நேரிடலாம் என மலேசியாவின் கோத்தகினபாலு பகுதி காவல்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

தற்போது போலிசார் ரோந்து செல்வதை இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாகவும், சாலைத் தடுப்புகள் வழக்கத்தைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தகினபாலு வட்டாரத்தில் போலிசார் ரோந்து சென்ற போது பல்வேறு வணிக வளாகங்களில் அலுவலகங்கள் திறந்திருப்பதைக் காண முடிந்தது என்று சுட்டிக்காட்டிய காவல்துறை தலைவர், இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், அந்த வளாகங்கள் மூடப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இந்த விஷயத்தில் போலிசார் எந்தவித தயக்கமும் காட்ட மாட்டார்கள் என்றும், கைது நடவடிக்கை கூட சாத்தியம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மகாதீர்: நான் வெளியே செல்லவோ, மக்களை சந்திக்கவோ கூடாது

இதற்கிடையே, மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்துப் பேசியதை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

95 வயதான மகாதீரை, அண்மையில் பண்டார் குச்சிங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரான டாக்டர் கெல்வின் ஈ லீ வுயென் சந்தித்துப் பேசினார். அப்போது மகாதீருடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில் மார்ச் 17ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட டாக்டர் கெல்வின், தமக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதாக குறிப்பிட்டிருந்தார். தமக்கு மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து நோய்த் தொற்று ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டாக்டர் கெல்வினை சந்தித்ததை அடுத்து தம்மை தனிமைப் படுத்திக் கொண்டதாக மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

தனிமைப் படுத்திக் கொண்டது தொடர்பான தமது அனுபவங்களை அவர் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

“தனிமைப் படுத்திக் கொள்ளும்போது முக்கியமான கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது அவசியம். 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவதன் மூலம் பிறருக்கு வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க இயலும். அதனால் தான் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நான் வெளியில் செல்லவோ பொது மக்களைச் சந்திக்கவோ கூடாது. நான் மற்றவர்களுடனும், பிறர் என்னுடனும் கைகுலுக்க இயலாது. எனினும் இந்தக் கட்டுப்பாடுகள் எனக்கு கடுமையானதாக இல்லை,” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »