Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) : நியூயார்க் நகரத்தை முடக்குவது குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசனை மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நகரத்தை முழுமையாக தனிமைப்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ் தொற்றின் மையமாக நியூயார்க் இருப்பதால், அந்நகரத்தை தனிமைப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், இதில் நியூயார்க்கில் மட்டும் 52,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால், அதிபர் டிரம்பின் இந்த யோசனையை நியூயார்க் ஆளுநர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது ”விபரீதமானது”, ”அமெரிக்காவிற்கு எதிரானது”, ”போர் அறிவிப்பு போன்றது” என்று நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் ஏற்கனவே மக்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஆனால் அந்நகரை முழுமையாக முடக்குவதற்கு ஆளுநர் ஆண்ட்ரு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“நியூயார்க்கிற்கு முழுமையாக தடை விதித்தால், சீனாவின் வுஹான் போல நாம் ஆகிவிடுவோம், இதனால் எந்த பலனும் இல்லை” என்று அவர் கூறினார்.

இதனால் எதிர்பார்க்காத அளவிற்கு பங்கு சந்தை வீழ்ச்சி அடையும், மீள முடியாத அனவிற்கு அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மோதி அரசின் நிதி ஒதுக்கீடு யானைப் பசிக்கு சோளப்பொறியா?

கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 26ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு நிதி தொகுப்பை அறிவித்தது. இது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 21 நாட்களில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமையை மேம்படுத்த உதவும்.

எது எவ்வாறாயினும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி உதவிகள், தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவு என்பதுடன், போதுமானதாகவும் இல்லை. வரவிருக்கும் மாதங்களில் நிதி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிச்சயமாக இது போதுமானதாக இருக்காது. இந்த நிதித் தொகுப்பு ஒதுக்கீடு செய்வதில் அரசு கஞ்சத்தனம் காட்டியுள்ளது.

இந்த நேரத்தில் அரசாங்கத்தின் உதவி யாருக்கு தேவை என்பது முக்கியமானது.

விரிவாகப் படிக்க:கொரோனா பாதிப்புக்கான மோதி அரசின் நிதி யானைப் பசிக்கு சோளப்பொறியா?

கொரோனா வைரஸ் கோடைக் காலம் வந்தால் சாகுமா?

வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் காணாமல் போய்விடும் என்று மக்களில் சிலர் நம்புகின்றனர். ஆனால் பருவகால நோய்த் தொற்றுகளைப் போல தீவிர ஆட்கொல்லி நோய்த் தாக்குதல்கள் இருப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்.

பல தொற்றுநோய்கள் பருவநிலை மாற்ற காலத்தில் உருவாகி அதனுடனேயே மறைந்துவிடுகின்றன. சளி, காய்ச்சல் குளிரான மாதங்களில் வருகிறது, வாந்தியை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் கிருமியைப் போல அது வருகிறது. டைபாய்டு போன்ற மற்ற நோய்கள் வெயில் காலத்தில் அதிகமாகின்றன. வெப்பமான பருவநிலைகளில் தட்டம்மை பாதிப்பு குறைகிறது. வெப்ப மண்டல நாடுகளில் வறண்ட பருவத்தில் அது அதிகரிக்கிறது.

விரிவாகப் படிக்க:கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?

கொரோனா வைரஸுக்கு மத்தியில் பரவிய போலி செய்தி – இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்

இலங்கையிலுள்ள பிரபல சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக வெளியான போலி செய்தி (வதந்தி) காரணமாக, நாட்டிலுள்ள இந்து மக்கள் மத்தியில் மிகுந்த குழப்பகர நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

சிவன் ஆலயமொன்றின் கோபுரம் உடைந்து வீழ்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசியூடாக அதிகாலை 3 மணி முதல் தகவலொன்று பரவ ஆரம்பித்திருந்தது.

நாட்டிலுள்ள சிவன் ஆலயமொன்று உடைந்து வீழ்ந்தால் ஆண்களுக்கு சரியில்லை எனவும், அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் வதந்தி பரவ ஆரம்பித்திருந்தது.

விரிவாகப் படிக்க:கொரோனாவுக்கு மத்தியில் இப்படியும் ஒரு வதந்தி – இலங்கையில் அல்லல்பட்ட ஆண்கள்

கொரோனா: கோவிட்-19 தொற்றுக்கு புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு

இன்று புதிதாக 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்தத எண்ணிக்கை 2,320ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளையயில், கொரோனா வைரஸ் தொற்றுக்காக சிகிச்சை பெற்று முழுமையாகக் குணமடைந்த 61 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் முழுமையாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 320 ஆக உள்ளது.

கோவிட் 19 கிருமித் தொற்று இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய மருந்தை சோதனை முறையில் பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் மலேசியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது.

விரிவாகப் படிக்க:கொரோனா: புதிய மருந்தை சோதனை செய்ய மலேசியா தேர்வு – ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »