Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): மலேசியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் சீராக அதிகரித்து வரும் நிலையில், மலேசியாவில் அத்தொற்றில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது அரசுக்கும் மக்களுக்கும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 91 பேர் சிகிச்சைக்குப் பின்னர் கொரோனா கிருமித் தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மலேசிய சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

நேற்று ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் புதிய உச்சத்தை தொட்ட மலேசியா இன்று ஒரே நாளில் குணமடைந்தோரின் எண்ணிக்கையிலும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இதுவரை குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 479 என்றும், இது நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளில் 18.2 விழுக்காடு என்றும் சுட்டிக்காட்டினார்.

156 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டன்ர்; பலி எண்ணிக்கை 37 ஆனது

மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 156 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, 2,626.

சிகிச்சை பெற்று வரும் மொத்த நோயாளிகளில் 94 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 62 பேருக்கு செயற்கை சுவாச உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 57 மற்றும் 46 வயதுடைய இரு பெண்களும், 47 வயது ஆடவரும் சிகிச்சை பலனின்றி பலியானதாக டாக்டர் நூர் ஹிஷாம்தெரிவித்தார். இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென அடையாளம் காணப்பட்டுள்ள மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 3994 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

“சுகாதார அமைச்சகத்தின் பயிற்சி மையங்களை தனிமைப்படுத்தும் தற்காலிக மருத்துவ மையங்களாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு மேலும் பல இடங்களை அடையாளம் கண்டு வருகிறோம்.

“சுகாதார அமைச்சகத்தின் பயிற்சி மையங்கள் மூலம் கூடுதலாக 1,937 படுக்கைகளை அமைக்க முடியும். முன்பு கொரோனா கிருமித் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 57ஆக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 13 மையங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கிருமித் தொற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் 26இல் இருந்து தற்போது 38ஆக அதிகரித்துள்ளது. இவற்றுள் 7 மருத்துவமனைகளில் கொரோனா கிருமித் தொற்றுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்” என்று டாக்டர் நூர் ஹிஷாம்தெரிவித்தார்.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீண்டும் நீட்டிக்கப்படுமா?

மலேசியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை ஏப்ரல் 14ஆம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படுமா என்பது பொதுமக்கள் ஒழுங்குடன் நடந்துகொள்வதைப் பொறுத்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் பொது ஆணையர் நூர் ஹிஷாம்தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 நோய்த் தொற்றானது ஒரு சங்கிலித் தொடர் போன்று பரவும் தன்மை கொண்டது. எனவே, அந்தச் சங்கிலித் தொடரைத் துண்டிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகவே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் வீட்டிலேயே இருந்தால்தான் இந்த முயற்சி சாத்தியமாகும்.

“இதன்மூலம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் அடையாளம் கண்டு சந்தேக நபர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தி, தனிமைப்படுத்த முடியும். இதன்மூலம் நோய்ப் பரவல் தடுக்கப்படும். எனவே அடுத்த இரண்டு வாரங்களுக்கு நான், நீங்கள் என அனைவருமே சமூக ஒழுங்குடனும் அக்கறையுடனும் செயல்பட்டால் அரசின் எண்ணம் நிறைவேறும்,” என்றார் டாக்டர் நூர் இஷான்.

பிற நாடுகளில் நடந்திருப்பதைப் போன்று திடீரென நோய்த் தொற்று அதிவேகமாகப் பரவும் வாய்ப்புகள் உண்டு என்று குறிப்பிட்ட அவர், அச்சமயம் ஒரே நாளில் 1000 பேருக்குக்கூட நோய்த் தொற்று உறுதி செய்யப்படலாம் என்றார்.

இதுவரை மலேசியாவில் அத்தகைய நிலை ஏற்படவில்லை என்றும் அதிகபட்சமாக 150 முதல் 200 பேர் வரை மட்டுமே அடையாளம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதே அளவில் நீடிக்கும் பட்சத்தில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இந்தளவு நோய் கட்டுப்பட்டு இருப்பதற்கு அரசு விதித்த பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும், சுகாதாரா அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தான் முக்கியக் காரணம்.

“ஒருவேளை அதிவேகமாக நோய்த் தொற்று பரவும் பட்சத்தில் அதையும் எதிர்கொள்ளத் தயார். அனைத்து மருத்துவமனைகளிலும் அதிக எண்ணிக்கையிலான படுக்கைகளும் தற்காலிக மருத்துவமனைகளும் தயாராகவே உள்ளன,” என்றார் நூர் இஷாம்.

சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதமே உயிரிழப்புக்கு முக்கிய காரணம்

மலேசியாவில் சிகிச்சை பெறுவதில் ஏற்படும் தாமதம் காரணமாகவே கொரோனா கிருமித் தொற்றால் பெரும்பாலானோர் உயிரிழக்க நேரிடுகிறது என சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் மேலும் கூறினார். கோவித் 19 நோயைப்பொறுத்தவரை அதன் பாதிப்புகளை 5 கட்டங்களாகப் பிரிக்கலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் எந்தவிதமான அறிகுறிகளும் வெளிப்படுத்தாதது முதற்கட்டம். லேசான அறிகுறிகளுடன் காணப்படுவது இரண்டாவது கட்டம். மூன்றாவது கட்டத்தில் நிமோனியா போன்ற பாதிப்புடன் நோயாளி காணப்படுவர் என்றாலும் இச்சமயம் செயற்கை சுவாச உதவி தேவைப்படாது.

ஆனால் நான்காவது கட்டத்தில் நோயாளிக்கு பிராணவாயு தேவைப்படும் என்பதுடன் அது தொடர்பான சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும். ஐந்தாவது கடைசி கட்டத்தில் பாதிக்கப்பட்டவரால் இயல்பாக சுவாசிக்க முடியாது. அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் என்று டாக்டர் நூர் இஷாம் விவரித்துள்ளார்.

“பெரும்பாலான நோயாளிகள் மூன்றாம் கட்டத்தின் கடைசி தருணத்தில்தான் சிகிச்சைக்காக வருகிறார்கள். நான்காம் கட்டத்தில் இருந்து ஐந்தாம் கட்ட அபாய நிலைக்கு செல்ல குறுகிய காலமே தேவைப்படும். அதனால் உயிர்களைக் காப்பாற்றுவது மருத்துவர்களுக்குக் கடினமான பணியாக இருக்கும். குறிப்பாக வயதானவர்களுக்கு கிருமித் தொற்றானது வெகு விரைவில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்,” என்று நூர் இஷாம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »