Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ‘வயிற்றிலிருக்கும் எனது குழந்தைக்காக போராடினேன்’ – கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்டவர்களின் கதை

அன்னா காலின்ஸன்
பிபிசி (சுகாதாரப் பிரிவு)

பிரிட்டனில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 2000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களும் அதிகம்.

சிலருக்கு லேசான அறிகுறிகள் இருக்கலாம் அல்லது அறிகுறிகளே இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு மருத்துவமனைக்கு செல்வதை தவிர வேறு வழியில்லாமல் இருக்கலாம். கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று பேரிடம் பேசினோம். அவர்கள் மூவருமே வாழ்வில் வெவ்வேறு கட்டத்தில் இருப்பவர்கள். கோவிட் 19ஆல் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

‘வயிற்றில் இருக்கும் எனது குழந்தைக்காக போராடினேன்’

கரேன் மேன்னரிங் ஆறுமாத கர்ப்பிணியாக இருந்தார். அது அவருக்கு நான்காவது குழந்தை. 39 வயதாகும் கரேனுக்கு மார்ச் இரண்டாம் வாரம் இருமலும் காய்ச்சலும் இருந்தது ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வர மருத்துவ ஊழியர்கள் சற்று அஞ்சினர். ஆனால் 11ஆம் நாள் அது அனைத்தும் மாறியது.

“நான் 999 எண்ணை அழைத்தேன் (அவசர உதவி எண்) என்னால் மூச்சு விடமுடியவில்லை. நான் 999ஐ அழைத்தவுடன் எனது வீட்டின் முன் சிறிது நேரத்தில் அவசர ஊர்தி வந்தது,” என்று விவரிக்கிறார் கேன். 

“என்னால் சுவாசிக்க முடியவில்லை. எனவே அவர்கள் எனக்கு செயற்கை சுவாசம் வழங்கினார்கள்,” என்கிறார் கேன்.

கரேனுக்கு கோவிட் 19 இருப்பது உறுதியானது. அவரின் இரண்டு நுரையீரலிலும் நிமோனியா இருந்தது. மருத்துவமனையில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“என்னை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை,” என்கிறார் அவர். அது மிகவும் இருண்ட நாட்கள்; தனிமையில் இருந்தேன். இரண்டு மூன்று நாட்களுக்கு படுக்கையிலேதான் இருந்தேன். என்னால் கழிவறைக்குக் கூட செல்ல முடியவில்லை. மெத்தையின் போர்வையை மாற்ற வேண்டும் என்றால், என்னை அவர்கள் திருப்ப வேண்டும்,”

” நான் மூச்சிவிட சிரமப்பட்டேன். நான் உதவி கோருவேன். செவிலியர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு என்னிடம் வரும் வரை நான் காத்திருப்பேன். என்னை அமைதிப் படுத்த எனது குடும்பத்தார் என்னிடம் தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பர். நான் உயிரிழந்துவிடுவேன் என அஞ்சினேன். எனது குடும்பத்தினரும் எந்த மோசமான நிலைக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். நான் மூச்சுவிட ஒவ்வொரு நொடியும் சிரமப்பட்டேன். என்னுடைய வாழ்க்கைகாக மட்டுமல்ல எனது வயிற்றிலிருக்கும் குழந்தையின் வாழ்க்கைக்கும் சேர்த்து போராடினேன்.” என்கிறார்.

“மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தவுடன் என் முகத்தில் பட்ட ஈரக் காற்றை என்னால் இன்னும் மறக்க முடியாது,”

“நானும் எனது கணவரும் காரில் ஜன்னலை திறந்து கொண்டு முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு வீடு வரை வந்தோம். அந்த காற்று மிகவும் அற்புதமாக இருந்தது. நான் திடீரென சின்ன சின்ன விஷயங்களை பாராட்ட தொடங்கினேன்.” என்கிறார் கரேன்.

தான் பணிபுரியும் அழகு நிலையத்தில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்கிறார் கரேன் ஆனால் அவருக்கு உறுதியாக தெரியவில்லை. அதேபோல் இந்த வைரஸ் தொற்று தனது குடும்பத்தில் யாருக்கும் வராமல் போனது எவ்வாறு என்பது அவருக்கு தெரியவில்லை.

தனக்கு கோவிட் 19 தொற்று எளிதாக ஏற்படும் என ஜெசி க்ளார்கிற்கு தெரிந்திருந்தது. ஏனென்றால் அவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருந்தது. மேலும் ஒரு வருடத்துக்கு முன்பு அவரின் ஒரு சீறுநீரகத்தை நீக்கிவிட்டனர். அவருக்கு 26 வயது. தனக்கு தொடர்ந்து இருமல் வந்தபோதும், மூச்சுவிட சிரமப்பட்டபோதும் மிகவும் கவலையடைந்தார் ஜெஸி. சில நாட்களில் அவரால் நடக்கவும் முடியவில்லை.

மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் ஜெஸி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

“எனது நெஞ்சு எலும்புகளிலும், முதுகிலும், வயிற்றிலும் பெரும் வலி இருந்தது.” என்று விளக்குகிறார் ஜெஸி. என்னை யாரோ அடித்தது போல நான் உணர்ந்தேன்,” என்கிறார் ஜெஸி.

அதற்கு இரண்டு நாட்களுக்கு பிறகு, போரிஸ் ஜான்சன் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்த பிறகு ஜெஸியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த டாம். அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் உடனடியாக பிரிக்கப்பட்டனர்.

“எனக்கு தனியாக இருக்க பயமாக இருந்தது; யாராவது எனக்கு உதவி செய்ய வேண்டும் என எண்ணினேன்” என்கிறார் ஜெஸி. எனக்கு பச்சை நிற மாஸ்க் வழங்கப்பட்டது. அதில் மூக்கு பகுதியை சுற்றி ஏதோ வித்தியாசமாக இருந்தது; கோவிட் 19 பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டேன். அங்கு ஒவ்வொரு மெத்தைக்கும் இடையில் தடுப்பு சுவர் இருந்தது. எனக்கு கோவிட் 19க்கான சோதனை செய்யப்படவில்லை.

அனைவருக்கும் சோதனை செய்ய முடியாது என எனது மருத்துவர் கூறினார். ஆனால் எனக்கு இருக்கும் என புரிந்து கொள்வது பாதுகாப்பானது என்றார். எனக்கு ஏற்படும் வலி எனது நுரையீரல்கள் வீங்குவதால் வருகிறது. என்றும் வலி நிவாரணிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்'” என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்பு எனக்கு மூச்சுவிடுவதில் சிக்கல் இருந்ததில்லை. நீங்கள் மூச்சுவிடுவதை நிறுத்திவிடுவீர்களா அல்லது இது வைரஸ் தொற்றால் ஏற்படும் அறிகுறியா என்பதை புரிந்து கொள்ள முடியாமல் அச்சம் ஏற்பட்டது. ஜெஸி மருத்துவமனையில் ஆறு மணி நேரம் இருந்தார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஜெஸிக்காக டாம் ஆறு மணி நேரம் கார் பார்க்கிங்கில் காத்திருந்தார். 

ஐந்து நாட்களுக்கு பிறகு ஜெஸி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜெஸியால் தற்போது நடக்க முடியவில்லை. மேலும் அவர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தூங்குகிறார். சில நேரங்களில் இருமுகிறார். ஆனால் சுவாசிப்பதில் சிரமம் இல்லை.

“இளைஞர்கள் சிலர், தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது என நினைக்கின்றனர். ஆனால் தற்போது பலரும் கொரோனா வைரஸை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளனர்; என் வயதுடையவர்களை இந்த கொரோனா தொற்று தாக்காது என சில செய்திகள் உண்டு ஆனால் அது அப்படியல்ல.”

மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டேன்

கொரோனா வைரஸ் தனது நுரையீரலை தாக்கி மூச்சு விடுவதை சிரமமாக்குவதை தான் உணர்ந்ததாக ஸ்டீவர்ட் பாய்ல் தெரிவிக்கிறார். 

சில வாரங்களுக்கு முன் தேவாலய கூட்டத்தில் தான் கலந்து கொண்டபோதுதான் தனக்கு தொற்று ஏற்பட்டது என்று அவர் உறுதியாக கூறுகிறார். “வியாழனன்று நடைபெற்ற தேவாலயக் கூட்டத்தில் நாங்கள் தனித்துதான் இருந்தோம் ஆனால் ஞாயிறன்று அங்கு வந்த பலருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன,” என்கிறார் ஸ்டீவர்ட்.

கடந்த பத்து நாட்களாக அந்த 64 வயது முதியவரின் உடல்நலம் குன்றி வருகிறது. 

“அது முதலில் லேசான அறிகுறியாகதான் இருந்தது. அதன் பிறகு நான் படி ஏறும் போதேல்லாம் எனக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டது. அதன் பிறகு என்னால் உடற் பயிற்சி செய்யக்கூட முடியவில்லை. அந்த வைரஸ் எனது நுரையீரலை தாக்கியது. அதன்பின் அதனை எதிர்த்து போராடுவதற்கான வலிமையை நான் இழந்துவிட்டேன்,” என்கிறார் ஸ்டீவர்ட்.

ஸ்டீவர்டின் குடும்பம் 111 என்ற எண்ணை அழைத்தனர்.  அதன்பின் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

“அது ஒரு திரைப்படத்தில் வருவது போல இருந்தது. என்னை வீல் சேரில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர். அங்கு பல சோதனைகள் செய்யப்பட்டன. எனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக அவர்கள் யூகித்து எனக்கு செயற்கை சுவாசம் கொடுத்தனர். நான் ஒரு இருட்டறையில் இருந்தேன். எனது வாழ்வு முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால், நான் வாழ வேண்டும் என உறுதியாக இருந்தேன். எனது நுரையீரலில் நடக்கும் போராட்டம் எனக்கு புரிந்தது. அதிலிருந்து நான் வெளியே வர எனது முழு பலமும் தேவைப்பட்டது. செயற்கை சுவாசம் எனக்கு ஒரு ஆற்றலை கொடுத்தது. என் எச் எஸ் சிறப்பாக செயல்படுகிறது. அவர்கள் நீங்கள் வைரஸை எதிர்த்து போராட உதவி செய்வார்கள். உங்களை காப்பாற்ற மருந்தோ அல்லது எந்தவித மேஜிக்கும் நடக்காது. அது முழுக்க முழுக்க உங்கள் திறனை பொருத்தது.

சனிக்கிழமையன்று, ஸ்டீவர்ட் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். தற்போது அவர் தனது நுரையீரலுக்கு உதவவும், தொண்டையை மீட்டெடுக்கவும் நிறைய தண்ணீர் குடித்து வருகிறார்.

ஸ்டீவர்ட்டின் தேவாலய நண்பர்கள் அவர் மீண்டு வர ‘ஜூம்’ ஆப் மூலம் பாடல்களை பாடுகின்றனர்.

“அந்த பாடலை எனக்கு பலம் அளிப்பதற்காக பாடினார்கள். ஆனால் மீண்டும் எனது குரலை நான் மீட்டெடுக்க பல நாட்கள் ஆகலாம் என்கிறார் ஸ்டீவர்ட்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »