Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): பரஸ்பரம் குற்றம்சாட்டும் சீனா மற்றும் அமெரிக்கா தரப்புகள் – எது உண்மை?

ஷயான் மற்றும் ஓல்கா
பிபிசி மானிடரிங்

கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, இந்த வைரஸ் எங்கு உருவானது, இது எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கும் என்பது பற்றிய யூகங்கள் மற்றும் சதித்திட்டம் என்ற ரீதியிலான குற்றச்சாட்டுகள் ஆன்லைனில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் சீனாவின் “கோழைத்தனமான உயிரி ஆயுதத் திட்டம்” என்றொரு தகவலும் சமூக ஊடகங்களில் பரவியது. கனடா – சீன உளவுக் குழு ஒன்று கொரோனா வைரஸை வுஹானுக்கு அனுப்பியது என்ற ஆதாரமற்ற தகவலும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் மனிதர்களால் பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்பட்டது தான் என்ற குற்றச்சாட்டு முகநூல், ட்விட்டர் தளங்களில் பரவி வருகிறது. ரஷியாவின் அரசு தொலைக்காட்சிச் சேனலிலும் கூட இது இடம் பிடித்துள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்று தொடங்கி சில மாதங்களாகிவிட்ட நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறையவில்லை என்பது மட்டுமின்றி, சீனா மற்றும் அமெரிக்காவில் சில அரசு அதிகாரிகள், மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் உறுதி செய்யப்படாத புதிய புகார்களை முன்வைத்துள்ளனர்.

`சந்தேகங்கள்’

ஆதாரம் எதுவும் இல்லாமல், கோவிட்-19 நோய்த்தொற்று அமெரிக்காவில் உருவாகி இருக்கும் என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

அமெரிக்க ராணுவம் தான் இந்த வைரஸை வுஹானுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்று மார்ச் 12 ஆம் தேதி ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

அதற்கு ஒரு நாள் கழித்து, Global Research இணையதளத்தில் “அமெரிக்காவில் இருந்து வைரஸ் பரவியதற்கான கூடுதல் ஆதாரம்” என்ற தலைப்பிட்ட கட்டுரையை அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதைப் படித்து, பகிர வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். பிறகு அந்த கட்டுரை நீக்கப்பட்டுவிட்டது.

சீனாவின் குளோபல் டைம்ஸ் என்ற தினசரி பத்திரிகையும் ஜாவோவின் கருத்துகளைப் பிரதிபலித்துள்ளது. அந்தத் ராஜீய அதிகாரி கூறியிருப்பது “அவருடைய தனிப்பட்ட கருத்து” என்று கூறியுள்ள நிலையில், அவருடைய கருத்துகள் “சீன மக்களால் எழுப்பப்படும் அதே போன்ற சந்தேகங்களை ஒத்ததாக உள்ளன” என்று அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

ஜாவோவின் கருத்துகளை உலகின் பல பகுதிகளில் உள்ள சீன தூதரகங்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் பெரிதுபடுத்தியுள்ளனர்.

ஜாவோ வெளிப்படையாகப் பேசக் கூடியவர்; குறிப்பாக சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிடுபவர் என்று அறியப்பட்டவராக இருக்கும் நிலையில், சீனாவின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட நிலையை அவர் எடுக்கும்போது, அது நாட்டின் தலைமையின் கருத்தாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பிபிசி மானிட்டரிங் பிரிவின் சீன பகுதி நிபுணர் கெர்ரி ஆலென் கூறியுள்ளார்.

கனடாவில் 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Global Research இணையதளம் உலகமயமாக்கலின் ஆராய்ச்சி குறித்த மையத்தின் இணையதளமாகும். அமெரிக்காவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் PolitiFact இணையதளத்தின் கருத்தின்படி, Global Research என்ற அந்த இணையதளம் “9/11, தடுப்பூசிகள் மற்றும் உலக வெப்பமாதல் போன்ற விஷயங்களில் தவறான கோட்பாடுகளை முன்வைக்கும் தளமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாவோ ட்விட்டரில் குறிப்பிட்டிருந்த கட்டுரையை வழக்கமாக இந்த செய்தித்தளத்துக்கு கட்டுரைகள் எழுதும் லேர்ரி ரோமனோஃப் என்பவர் எழுதியிருந்தார். சீனாவில் இருந்து இந்த வைரஸ் உருவாகவில்லை என்று தனது முந்தைய கட்டுரையின் இறுதி பகுதியை மீண்டும் ரோமனோஃப் இதில் வலியுறுத்தி இருந்தார். இப்போது அது நீக்கப்பட்டுவிட்டது.

ஆனால் தனது கட்டுரையில் அவர் மேற்கோள் காட்டியிருந்த சீன ஆராய்ச்சிகள் மற்றும் `சயின்ஸ்’ சஞ்சிகையின் கட்டுரைகளில் இதுபற்றிய கேள்வியே இடம் பெறவில்லை. மாறாக வுஹானில் உள்ள விலங்குகள் சந்தையில் தான் புதிய கொரோனா வைரஸ் உருவாகி இருக்கும் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று மட்டுமே அவற்றில் கூறப்பட்டுள்ளது.

“புதிய கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தோன்றியிருக்கலாம் என்று” ஜப்பான் மற்றும் தைவான் விஞ்ஞானிகள் உறுதியாகச் சொல்கிறார்கள் என்றும் ரோமனோஃப் தனது கட்டுரையில் கூறியிருந்தார்.

ஆனால் பிப்ரவரியில் ஜப்பானிய தொலைக்காட்சி செய்தியின் அடிப்படையில் (இப்போது மூடப்பட்டுவிட்டது) அவர் அந்த முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. மருந்தியல் துறை பேராசிரியராக இருந்து அரசியல்வாதியாக மாறிய, சீன ஆதரவு அரசியல்வாதியாக இருக்கும் ஒருவர் தைவான் தொலைக்காட்சியில் வெளியிட்ட தகவலின் அடிப்படையிலும் அவர் கட்டுரையை எழுதியிருக்கிறார். மேலும் அவரை “உயர் அந்தஸ்தில் உள்ள நச்சுயிரியல் துறை நிபுணர்” என்றும் தவறாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மேரிலாண்ட்டில் டெட்ரிக் கோட்டையில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் கிருமி ஆய்வகத்தில் இந்த வைரஸ் முதலில் உருவானது – என்று ஆதாரம் இல்லாத – தகவலையும் திரு. ரோமனோஃப் கூறியிருந்தார். “கிருமிகள் தவறுதலாக வெளியில் பரவுவதைத் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால்” கடந்த ஆண்டு அந்த வளாகம் “முழுமையாக மூடப்பட்டு விட்டது” என்பதால், “இதில் ஆச்சர்யம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை” என்றும் அவர் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில், அந்த சமயத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டிருந்தபடி, அந்த மையம் மூடப்படவில்லை. ஆராய்ச்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. “அபாயகரமான உயிரிகள் எதுவும் ஆய்வகத்தில் இருந்து தவறுதலாகப் பரவிடவில்லை” என்று அதன் பெண் செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார்.

சீனாவுக்கு உட்பட்டது

திரு. ரோமனோஃப் தன்னை “ஓய்வு பெற்ற ஆலோசகர் மற்றும் தொழிலதிபர்” என்றும் “ஷாங்காய் ஃபுடான் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக இருப்பதாகவும், எம்.பி.ஏ. வகுப்புகளில் சர்வதேச விவகாரங்கள் பற்றி பாடம் நடத்துவதாகவும்” கூறிக் கொண்டுள்ளார்.

அந்தப் பல்கலைக்கழகத்தில் இரண்டு எம்.பி.ஏ. துறைகளின் அதிகாரிகளுக்கும் திரு. ரோமனோஃபை தெரிந்திருக்கவில்லை என்று The Wall Street Journal கூறியுள்ளது.

Global Research -க்கு அடிக்கடி எழுதும் அவருடைய கட்டுரைகள் பெரும்பாலும் அமெரிக்காவை விமர்சிப்பதாகவும், சீனாவை ஆதரிப்பதாகவும் இருக்கும். 1989ல் சீனாவில் தியானென்மன் சதுக்கத்தில் நடந்த போராட்டத்தையும் “அமெரிக்காவின் தூண்டுதலில் நடைபெற்ற புரட்சி” என்று தான் அவர் எழுதியிருந்தார். கேள்விக்குரிய பல விஷயங்கள் உள்ள நிலையில், இந்த மாதம் podcast-க்கு பேட்டியளித்த அவர், ஆரம்ப நிலைகளில் கோவிட்-19 “சீனாவுக்கு உள்பட்டதாக” மட்டுமே இருந்தது, மற்ற பகுதிகளில் மக்களுக்குப் பரவவில்லை என்று கூறியுள்ளார்.

இப்போது அவருடைய கருத்தை அறிய பிபிசி நியூஸ் முயற்சி மேற்கொண்டது, ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை.

`தற்செயலாக வெளியாகியிருக்கும்’

அமெரிக்காவில் இருந்து தான் வைரஸ் பரவியிருக்கும் என்று சீன அரசும், ஊடகங்களும் கூறி வருவது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோவிட்-19 ஒரு “சீன வைரஸ்” என்று கூறினார். “பொய்த் தகவல்களை” பரப்புவதை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்துக்கு (WHO) நிதி அளிப்பதை நிறுத்தப் போவதாக சமீபத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அந்த நிறுவனம் “சீனாவுக்கு ஆதரவாக” இருக்கிறது என்று அவர் குற்றஞ்சாட்டினார். ஐ.நா. அமைப்புக்கு நிதியை நிறுத்துவதற்கு இது “சரியான நேரம் அல்ல” என்று உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் கூறியுள்ளார்.

ஆனால் இந்த வைரஸ் எங்கே உருவானது என்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் கருத்தாளர்கள் பலரும் ஆதாரம் இல்லாத தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் “வுஹானில் ஆய்வகத்தில் இருந்து தவறுதலாக வெளியேறி இருக்கலாம்” என்ற ஒரு கட்டுரையை Fox News-ன் செய்தித் தொகுப்பாளர் டாக்கர் கார்ல்சன் மேற்கோள் காட்டியுள்ளார்.

குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் டாம் காட்டன், டெட் குரூஸ் ஆகியோரும் இதே கருத்தைக் கூறியுள்ளனர்.

“அச்சுக்கு முந்தைய” அல்லது தொடக்க நிலை வரைவு என்ற வகையில் அந்த ஆய்வுக் கட்டுரை பிப்ரவரி தொடக்கத்தில் வெளியானது. குவாங்ஜாவோவில் உள்ள தெற்கு சீன தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போட்டாவோ ஜியாவோ, லெய் ஜியாவோ என்ற இரண்டு சீன ஆராய்ச்சியாளர்கள் அதை எழுதி இருந்தனர். ஆனால் முறைப்படி அந்தத் தகவல்கள் விவாதித்து முடிவு செய்யப்படவில்லை. “அந்த உயிர்க் கொல்லி கொரோனா வைரஸ் அநேகமாக வுஹானில் இருந்து வெளியாகி இருக்கலாம்” என்று அந்த ஆய்வு நிறைவடைகிறது.

ஆனால், அதன் பிறகு அந்த ஆய்வுக் கட்டுரை திரும்பப் பெறப்பட்டது என்று Wall Street Journal-டம் திரு. ஜியாவோ கூறியுள்ளார். “அந்த வைரஸ் எங்கே உருவாகி இருக்கலாம் என்ற யூகங்கள் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் எழுந்திருக்கலாம் என்றும், அதற்கு நேரடி ஆதாரங்கள் எதுவும் இல்லை” என்றும் அவர் சொன்னதாக அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

வுஹானில் உள்ள நச்சுயிரியல் ஆராய்ச்சி நிலையத்துக்கு 2018ல் பல முறை சென்று வந்த அமெரிக்க தூரகத்தைச் சேர்ந்த இரண்டு அறிவியல் பிரதிநிதிகள் “வவ்வால்களிடம் இருந்து உருவாகும் கொரோனா வைரஸ் பற்றி ஆபத்தான ஆராய்ச்சி நடந்து வரும் அந்த ஆய்வகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான வகையில் இல்லை” என்று ஏப்ரல் மத்தியில் வாஷிங்டனுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பியதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

எபோலா நோய்த் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் செயல்பாடுகளை வழிநடத்திய ஜெரேமி கோனின்டிக் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆய்வகத்தில் இருந்து வெளியானதா என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்: “ஆய்வகம் தான் காரணமாக இருக்கும் என்பதை அறிவியல் மறுக்கவில்லை. ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »