Press "Enter" to skip to content

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை: செல்பேசி செயலிகளை அழிக்கும் இந்தியர்கள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தவறியதற்காக சீனாவின் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள், தற்போது எல்லைப்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அந்த நாடு மீதான தங்களது எதிர்ப்பை திறன்பேசிகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை கடந்த சில வாரங்களில் பூதாகரமாகி வருகிறது. சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் அதாவது லடாக்கில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் ஆயிரக்கணக்கான சீன துருப்புகள் நுழைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்திய மக்களிடையே முன்னெப்போதுமில்லாத வகையில், வாட்சாப் உள்ளிட்ட குறுஞ்செய்தி செயலிகள் வாயிலாக சீன எதிர்ப்பு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

சீன பொருட்களை புறக்கணிக்க அழைப்பு

குறிப்பாக, ‘சீனாவை சேர்ந்த அல்லது சீன நிறுவனங்களோடு கூட்டு வைத்துள்ள நிறுவனங்களுக்கு சொந்தமான செயலிகளை திறன்பேசியிலிருந்து நீக்குங்கள்’ என்று அந்த பகிர்வுகள் வலியுறுத்துகின்றன.

மேலும், ட்விட்டரில் தினந்தினம் ட்ரெண்டாகி வரும் “BoycottChina”, “BoycottChineseApp” மற்றும் “BoycottChineseProducts” உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் இந்திய மக்களிடையே நிலவி வரும் சீன எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பவர்கள் அவ்வப்போது சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், தற்போது லட்சக்கணக்கான மக்கள் சீன திறன்பேசி செயலிகளை தங்களது அலைபேசிகளிருந்து நீக்குவது முற்றிலும் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பயன்பாட்டாளர்களின் திறன்பேசியில் உள்ள சீன செயலிகளை மட்டும் நீக்குவதாக கூறப்பட்ட “Remove China Apps” என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

ஆனால், கூகுளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு மாறாக இந்த செயலி செயல்பட்டதால் ஜூன் 3ஆம் தேதி இது கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டிக்டாக், பப்ஜி மொபைல், ஷேர்ஐடி, செண்டர், காம் ஸ்கேனர், பியூட்டி பிளஸ், க்ளாஷ் ஆஃப் கிளான்ஸ், லைக் மற்றும் யுசி பிரௌசர் உள்ளிட்டவை மக்களின் சீன எதிர்ப்பு மனநிலையால் இலக்கு வைக்கப்பட்ட சில செயலிகளாகும்.

டிக்டாக் செயலியை இந்தியர்கள் தங்களது திறன்பேசியில் இருந்து நீக்கினால் அதன் உரிமையாளரான சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று வாட்சாப் பயனாளர்களிடையே பரவிய செய்தி இதன் வீரியத்தை அதிகரித்துவிட்டது.

சீனாவுக்கு பாதிப்பு ஏற்படுமா?

இந்தியாவை சேர்ந்த பெரும் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்புகளுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக மற்றும் முதலீடு சார்ந்த விடயங்களில் பிணைப்பு அதிகமாக உள்ளது.

எனவே, சீனாவுக்கு எதிரான இந்திய மக்களின் இதுபோன்ற எதிர்ப்பலைகள் நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது கடினமே.

இந்தியாவில் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் 2.34 பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக இந்திய அரசின் தரவுத்தளம் கூறும் நிலையில், மும்பையை சேர்ந்த தனியார் சந்தை மதிப்பீட்டு நிறுவனமோ இதன் மதிப்பு நான்கு பில்லியன் டாலர்களை கடந்துவிட்டதாக கூறுகிறது.

எனவே, சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட திறன்பேசி செயலிகளை நீக்கும் இந்திய மக்களின் செயல்பாடு உண்மையில் எத்தனை காலத்திற்கு நீடிக்கும், அதனால் ஏற்படும் தாக்கம் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »