Press "Enter" to skip to content

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: ‘ராணுவத்தை அனுப்புவேன்’ என்ற டிரம்பின் அறிவிப்பு சாத்தியமா?

ஜேக் ஹார்டன்
பிபிசி ரியாலிட்டி செக்

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணத்தை தொடர்ந்து அந்நாடு முழுவதும் பரவிய போராட்டங்களை அடுத்து, போராட்டங்கள் நடக்கும் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்பப்போவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.

போராட்டங்கள் நடைபெறும் மாகாணங்கள் மற்றும் நகரங்களில் சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்களால் பிரச்சனையை தீர்க்க முடியாவிட்டால், தான் ராணுவத்தை அனுப்ப தயாராக உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய சூழலில் போராட்டங்களை கட்டுப்படுத்த துருப்புகளை பயன்படுத்துவதை தான் ஆதரிக்கப்போவதில்லை என்று அமெரிக்காவின் பாதுகாப்பு செயலரான மார்க் எஸ்பெர் குறிப்பிட்டார்.

தங்களின் அனுமதி இல்லாமல் படைத் துருப்புகளை மாகாணங்களுக்கு அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா என சில மாகாண ஆளுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளதும் தற்போது கவனம் பெறுகிறது.

துருப்புகளை பாதுகாப்பு பணிக்கு அழைக்க அதிபருக்கு அதிகாரம் உண்டா?

சுருக்கமாக இதற்கு பதில் கூறுவதென்றால், சில சந்தர்ப்பங்களில் அவரால் அனுப்ப இயலும் என்றே கூற வேண்டும்.

ஏற்கனவே, அமெரிக்க ராணுவத்தின் ரிசர்வ் பிரிவாக கருதப்படும் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த பல ஆயிரம் துருப்புகள் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் உள்ளனர்.

தேசிய பாதுகாப்பு படை பிரிவினர் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மாகாணங்களில் போராட்டங்களை கட்டுப்படுத்தும் பணியில் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாகாணங்கள் அல்லது நகரங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இவர்கள் இப்பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில முக்கிய சூழல்கள் மற்றும் சந்தர்ப்பங்களை குறிப்பிட்டு, மாகாண அரசின் ஒப்புதல் இன்றி கூட வாஷிங்டன் டிசி-யில் இருந்து செயல்படும் அதிபருக்கு இத்தகைய அதிகாரம் அளிக்கும் வகையில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு சட்டத்தை அமெரிக்க அரசு இயற்றியது.

குறிப்பிட்ட ஒரு மாகாணத்தில் குடிமக்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் நிலவினாலோ அல்லது அங்கு அமெரிக்க சட்டங்களை கடைபிடிக்க முடியாத சூழல் இருந்தாலோ, அப்போது அந்த மாகாணத்துக்கு ராணுவத்தை அனுப்புவதற்கு குறிப்பிட்ட மாகாண ஆளுநரின் ஒப்புதலை அதிபர் பெற வேண்டிய அவசியமில்லை என்று இந்த கிளர்ச்சி தடுப்பு சட்டம் கூறுகிறது.

அமெரிக்க அதிபருக்கு அதிகாரமளிக்கும் இந்த சட்டம் கடந்த 1807-இல் இயற்றப்பட்டது.

அதேவேளையில் 1878-இல் பிறப்பிக்கப்பட்ட மற்றொரு சட்டம், அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்ற) அவையின் ஒப்புதலை பெற்ற பின்னர் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளுக்கு ராணுவத்தை அழைக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால், இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய சட்ட விவகார நிபுணர் ஒருவர், உள்நாட்டு பாதுகாப்பு பணிகளுக்கு ராணுவத்தை பயன்படுத்த மேற்கூறிய கிளர்ச்சி தடுப்பு சட்டமே அதிபருக்கு போதுமான அதிகாரம் அளிக்கிறது என்று கூறினார்.

நடப்பு சூழலில், மாகாண அரசுகளின் ஒப்புதலை கேட்காமல் ராணுவத்தை அங்கு பணியில் அமர்த்துவது தொடர்பாக சட்ட ரீதியான வாய்ப்புகள் அதிபருக்கு உண்டு என பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

டிரம்பின் அறிவிப்புக்கு ஆதரவு உள்ளதா?

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியரான ராபர்ட் செஸ்னே இது குறித்து கூறுகையில், ”இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அதிபரின் தீர்மானமான முடிவு தான், மாகாண ஆளுநர் அவருக்கு வேண்டுகோள் விடுக்கவேண்டும் என்பது தேவையல்ல” என்று குறிப்பிட்டார்.

ஆனால், போராட்டம் நடக்கும் மாகாணங்களுக்கு ராணுவத்தை ராணுவத்தை அனுப்பப்போவதாக அதிபர் டிரம்ப் கூறியது தொடர்பாக அவரது அரசின் பாதுகாப்பு செயலரே கேள்வி எழுப்பியுள்ளது மிகவும் கவனிக்கத்தக்க அம்சம்.

”அமைதியை நிலைநாட்ட, அமெரிக்க சட்டங்கள் காப்பாற்றப்பட ராணுவத்தை பயன்படுத்தும் வாய்ப்பு வேறு வழி எதுவும் சூழலில், எடுக்கப்படும் கடைசி வாய்ப்பாகும். மிகவும் அவசியமான சூழல்களில் இவ்வாறான முடிவு எடுக்கப்படும்” என்று அமெரிக்க பாதுகாப்பு செயலரான மார்க் எஸ்பெர் தெரிவித்துள்ளார்.

”தற்போது நாம் அவ்வாறான சூழலில் இல்லை” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கு முன்பு இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது எப்போது?

அமெரிக்க காங்கிரஸ் அவை தொடர்பான ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின்படி, கடந்த காலங்களில் கிளர்ச்சி தடுப்பு சட்டம் பல டஜன் முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால், கிட்டத்தட்ட கடந்த 3 தசாப்தங்களில் இது பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறுகிறது.

கடைசியாக கடந்த 1992-ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலசில் ஏற்பட்ட இன ரீதியிலான கலவரங்களை அடக்க அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெச் டபுள்யூ புஷ்ஷால் ராணுவம் அழைக்கப்பட்டது.

அதேவேளையில், அமெரிக்காவில் சமூக உரிமைகள் தொடர்பான போராட்டங்கள் நடந்து வந்த 1950 மற்றும் 1960களில், மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையும் மீறி மூன்று வெவ்வேறு அதிபர்கள் இந்த சட்டத்தை பிறப்பித்தனர்.

1957-இல் ஆர்கான்சாவில், வெள்ளை மற்றும் கறுப்பின குழந்தைகள் படிக்கும் பள்ளியொன்றில் நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அழைத்த அதிபர் ட்வய்ட் ஐஸன்ஹாவரின் முடிவுக்கு அப்போது பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.

1960களுக்கு பிறகு இந்த சட்டம் பயன்படுத்தப்படுவது மிகவும் அரிதாகிவிட்டது.

2006-இல் பலத்த சேதத்தை ஏற்படுத்திய காத்ரீனா சூறாவளியின் பாதிப்பை திறன்பட தடுக்க ராணுவ உதவியை நாடும் முடிவை சட்டத் திருத்தமாக அமெரிக்க காங்கிரஸ் அவை முன்மொழிந்தது. ஆனால், சில மாகாண ஆளுநர்களின் எதிர்ப்பையடுத்து இந்த சட்டத்திருத்தம் திரும்பப் பெறப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »