Press "Enter" to skip to content

கமலா ஹாரிஸ் போன்று அமெரிக்காவை திரும்பிப் பார்க்க வைத்த சில தமிழர்கள்

பட மூலாதாரம், Michael Cohen / Getty

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாகியுள்ளது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண், அமெரிக்க தேர்தல் களத்தில் இருப்பது குறித்து பலரும் கமலா ஹாரிஸை பாராட்டி வருவதோடு, பெருமையும் கொள்கின்றனர்.

கமலா ஹாரிஸை போன்று வேறு சில தமிழர்களும், அமெரிக்காவில் சக்திவாய்ந்த இடத்தில், அதிகாரம் மிக்கவர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.

அதில் ஒரு சில நபர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

மிண்டி கேலிங்

அமெரிக்காவின் புகழ்பெற்ற நடிகை, காமெடியன் மற்றும் திரை எழுத்தாளரான மிண்டி கேலிங் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

மிண்டி கேலிங்

பட மூலாதாரம், Lars Niki / Getty

இவரது முழுப்பெயர் வேர மிண்டி சொக்கலிங்கம். மிகவும் பிரபலமான அமெரிக்க தொடரான The Office-ல் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கிய மிண்டி, தொடர்ந்து திரை எழுத்தாளர், காமெடியன், பின்னணி குரல் கொடுப்பவர், தயாரிப்பாளர் போன்ற பல பரிமாணங்கள் எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

அவர் எழுதிய Why Not Me என்ற நகைச்சுவை கட்டுரைகள் அடங்கிய புத்தகத்திற்கு 2015ஆம் ஆண்டில் Reader’s Choice Awards விருதை மிண்டி கேலிங் பெற்றார்.

இது போன்று அவர் படைப்புகளுக்காக, மேலும் பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

மிண்டியின் தந்தை ஆவு சொக்கலிங்கம், சென்னையை சேர்ந்தவர். தாய் வங்கதேசத்தை சேர்ந்த மருத்துவர்.

இருவரும் நைஜீரியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும்போது சந்தித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் 1979ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

அமெரிக்காவில் நிற பாகுபாடு குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே மிண்டி பேசியுள்ளார். நிற பாகுபாட்டால் தாம் அடைந்த துன்பங்களையும் வெளிப்படையாக மிண்டி கேலிங் பகிர்ந்தார்.

தெற்காசிய கலாசாரத்தை, குறிப்பாக தமிழ் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் இவர் உருவாக்கிய “Never Have I Ever” என்ற நெட்பிளிக்ஸ் தொடர், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மிகச்சிறந்த வரவேற்ப்பைப் பெற்றது.

அத்தொடரில், ஒரு தமிழ் குடும்பம் அமெரிக்காவில் வாழ்வது குறித்தும், அங்குள்ள கலாசாரத்தை ஏற்று முழுமையாக வாழ முடியாமல், தமிழ் கலாசாரத்தை அந்த நாட்டில் முழுமையாக பின்பற்ற முடியாமலும் தவிக்கும் இளம்பெண் குறித்து மிண்டி கேலிங் பேசியிருப்பார்.

அமெரிக்க கேளிக்கைத்துறையில் ஒரு முக்கிய இடம் மிண்டி கேலிங்கிற்கு இருக்கிறது.

எம். நைட் ஷாமலன்

எம். நைட் ஷாமலன்

பட மூலாதாரம், Jason LaVeris

“1999ல் The Sixth Sense” என்ற “த்ரில்லர் படம்” மூலம் ஹாலிவுட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் எம். நைட் ஷாமலன் புதுச்சேரியை சேர்ந்தவர்.

இவரது தாய் ஜெயலக்ஷமி ஷாமலன் தமிழை தாய் மொழியாக கொண்டவர். தந்தை கேரளாவை சேர்ந்த மருத்துவர்.

ஷாமலனுக்கு ஆறு வயது இருக்கும்போது, இவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

ஒகின் பீனிக்ஸ் நடிப்பில் 2002ல் இவர் எழுதி இயக்கிய “Signs” என்ற த்ரில்லர் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து பல விருதுகளை பெற்றது.

இதன் மூலம் ஹாலிவுட்டின் அதிக ஊதியம் பெற்ற எழுத்தாளரானார் ஷாமலன்.

Signs திரைப்படத்தை எழுத இவருக்கு டிஸ்னி நிறுவனம் 5 மில்லயன் டாலர்கள் வழங்கியது.

The Sixth Sense (1999), Unbreakable (2000), மற்றும் Signs (2002), ஆகிய இவரது 3 அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படங்களும் உலகளவில் 1.3 பில்லியன் டாலர்கள் ஈட்டியது.

The Village, Lady In Winter, After Earth உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள ஹாலிவுட்டில் உலகில் தனக்கென அழுத்தமான தனி இடம் பிடித்திருக்கிறார்.

பத்ம லக்ஷ்மி

அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர், செயல்பாட்டாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளரான பத்ம பார்வதி லக்ஷ்மி சென்னையை பூர்வீகமாகக் கொண்டவர்.

பத்ம லக்ஷ்மி

பட மூலாதாரம், Noel Vasquez / Getty

நடுத்தர தமிழ் குடும்பத்தில் பிறந்த பத்ம லக்ஷ்மியின் தாய் ஒரு செவிலியர். பத்ம லக்ஷ்மி தனது நான்கு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

மாடலிங் மற்றும் நடிகையாக இருந்து தனது படிப்புக்கான கடனை அடைத்த இவர், சமையலுக்கான ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளராவார்.

“Top Chef” என்ற அந்த நிகழ்ச்சி, அமெரிக்காவில் புகழ்பெற்ற பிரைம்டைம் எம்மி விருதை பெற்றுள்ளது. சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ற பிரிவில் பத்ம லக்ஷ்மி 2009ஆம் ஆண்டு எம்மி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்.

“Easy Exotic: A Model’s Low Fat Recipes From Around the World” உள்ளிட்ட நான்கு சமையல் புத்தகங்களை இவர் எழுதியுள்ளார்.

அமெரிக்காவின் சிறந்த சமையல் கலை நிபுணர்களில் ஒருவராக திகழும் பத்ம லக்ஷ்மி, எப்படி சமைக்க வேண்டும் என்பதையும், சமையல் மீதான காதல் வளர்ந்ததற்குக் காரணம் தனது பாட்டிதான் எனவும் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார்.

சிறுவயதில் விடுமுறையின்போது, அமெரிக்காவில் இருந்து சென்னை வரும்போதெல்லாம் தனது பாட்டியுடன் அதிக நேரம் அவர் செலவிட்டதாக பத்ம லக்ஷ்மி குறிப்பிட்டிருந்தார்.

தற்போது துணை அதிபர் பதவிக்கு போட்டி போடும் கமலா ஹாரிசும், பத்ம லக்ஷ்மி இருவருமே சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பத்ம லக்ஷ்மி, “கமலா ஹாரிஸின் தாத்தா பாட்டியின் வீடும், எங்கள் வீடும் பெசன்ட் நகரில் மிக அருகில் இருந்தது என்பது இப்போதுதான் எனக்கு தெரியவந்துள்ளது. அப்படி என்றால் நாங்கள் ஏதோ ஒரு நேரத்தில் பொருட்கள் வாங்க ஒரே கடைக்கு சென்றிருப்போம். எங்கள் தாத்தாக்கள் எலியாட்ஸ் கடற்கரையில் ஒன்றாக அமர்ந்து இரவு பேசியிருப்பார்கள். நாங்கள் இருவருமே தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டவர்கள். அவர்கள் இருவருமே மருத்துவத்துறையில் இருந்தார்கள். அப்போது நாம் சந்தித்துக் கொள்ளவில்லை என்றாலும், பழைய புகைப்படங்களை பார்க்கும்போது என் கண்களில் நீர் வழிகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2015ஆம் ஆண்டு பொறுப்பேற்றார் தமிழகத்தை சுந்தர் பிச்சை.

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம், Stephanie Keith/Getty

சென்னையை பிறப்பிடமாகக் கொண்ட அவர், கரக்பூரிலுள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்றார்.

அங்கு எம்.எஸ் பட்டம் பெற்ற பின்னர், உலகப் புகழ்பெற்ற வார்ட்டன் பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பள்ளியில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.

2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன.

கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளில் சுந்தர் பிச்சையின் பங்களிப்பு இருந்துவந்தது.

அந்நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்த லாரி பேஜ், செர்ஜி ப்ரின் போன்றவர்கள் நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பொறுப்புகளை சுந்தர் பிச்சையிடம் அளித்து வந்தனர்.

தொடர்ந்து, 2015ல் அதிகாரபூர்வமாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் பதவியேற்றார்.அமெரிக்க தொழில்நுட்பத்துறையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்பதவியில் உள்ள சத்யா நாதெல்லாவுக்குப் பிறகு, மற்றொரு இந்தியரான சுந்தர் பிச்சை இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரி ஆவார்.

2015ல் அவர் கூகுளின் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், தன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டின.

இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »