Press "Enter" to skip to content

டொனால்ட் டிரம்ப் சர்ச்சை பேச்சு: ‘கமலா ஹாரிஸுக்கு துணை அதிபராகும் தகுதியில்லை என்று கூறுகின்றனர்’

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கருப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவி வகிப்பதற்கு ‘தகுதியற்றவர்’ என்று தான் கேள்விப்பட்டுள்ளதாக விமர்சகர்களால் இனவெறி கொண்டதாகக் கண்டிக்கப்படும் ஒரு சட்டக் கோட்பாட்டை மேற்கோள்காட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தாய்க்கும், ஜமைக்காவை சேர்ந்த தந்தைக்கும் 1964ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி கலிஃபோர்னியாவில் பிறந்தவர் கமலா.

ஆனால், அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், அந்த நாட்டின் அரசமைப்பு சட்டப்படி, கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு தகுதியானவராக இல்லாமல் இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் ஈஸ்ட்மேன், “அமெரிக்காவில் பிறந்த குடிமகனைத் தவிர வேறு எந்த நபரும் அதிபர் பதவிக்கு தகுதி பெறமாட்டார்கள் என்று அமெரிக்க அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போன்று, அதிகார எல்லைக்குட்பட்டு அமெரிக்காவில் பிறக்கும் அனைவரும் குடிமக்களே என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

அதாவது, கமலா ஹாரிஸ் பிறக்கும்போது அவரது பெற்றோர்கள் அமெரிக்காவில் மாணவர்களுக்கான விசாவில் இருந்திருந்தால், அவரது பிறப்பு அமெரிக்காவின் அதிகார எல்லைக்குட்பட்டதாக இல்லாமல் இருக்கலாம் என்று பேராசிரியர் ஈஸ்ட்மேன் வாதிடுகிறார்.

முன்னதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறந்தவர் இல்லை என்று டிரம்ப் பல ஆண்டுகளாகப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளார்.

என்ன சொன்னார் டிரம்ப்?

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

வியாழக்கிழமை அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று மிகவும் திறமை வாய்ந்த வழக்கறிஞர் ஒருவர் கட்டுரையொன்று எழுதியுள்ளதாக நான் இன்று அறிந்தேன்” என்று கூறினார்.

“அது சரியான கருத்தா என்று எனக்கு தெரியாது. ஆனால், அவரை துணை குடியரசுத் தலைவருக்கான வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் இதுகுறித்து ஜனநாயக கட்சியினர் பரிசோதித்து இருப்பார்கள் என்று கருதுகிறேன். எனினும், அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை என்பதால் அவருக்கு போட்டியிட தகுதியில்லை என்று கூறப்படுவதால் இதுவொரு தீவிரமான விவகாரம்.”

இதையடுத்து விளக்கம் அளித்த இதுதொடர்பான கேள்வியை எழுப்பிய செய்தியாளர், கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்தது குறித்து யாரும் கேள்வியெழுப்பவில்லை என்றும், அவர் பிறந்த சமயத்தில் அவர்களது பெற்றோரின் வசிப்புரிமை குறித்தே கேள்வி எழுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

எனினும், இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய அமெரிக்க அரசமைப்பு சட்ட வல்லுநர்கள் இந்த வாதம் தேவையற்றது என்று தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »