Press "Enter" to skip to content

இஸ்ரேல் – பாலத்தீனம்: ஓட்டோமான் பேரரசு, யாசர் அராபத், பிரிட்டன் – 100 ஆண்டு வரலாற்றின் முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளைப் பேணுவதற்கான உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. இதனை வரலாற்றுப்பூர்வ உடன்பாடு என்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபு தாபி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், “இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும்” என்று கூறியுள்ளனர்.

“இந்த உடன்பாட்டின் விளைவாக, ஆக்கிரமிப்பு மேற்குக்கரையின் பெரும்பாலான பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் திட்டத்தை இஸ்ரேல் இடைநிறுத்தும்” என்றும் அந்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுநாள்வரை வளைகுடா அரபு நாடுகளுடன் ராஜீய ரீதியிலான உறவை இஸ்ரேல் வளர்த்துக் கொண்டதில்லை.

எனினும், வளைகுடா பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கு தொடர்பான கவலைகள் அதிகரித்து வருவதால், அலுவல்பூர்வமற்ற வகையில் உடன்பாட்டை எட்டியிருக்கும் நாடுகளுக்கு இடையே தொடர்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனைத் துரோகம் என்கிறது பாலத்தீனம். வேறு சில நாடுகளும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.

சரி… இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் என்ன பிரச்சனை?

அரபு நாடுகளால் எழுப்பப்பட்ட கடுமையான ஆட்சேபனைகளுக்கு மத்தியில் உருவான நாடு இஸ்ரேல். பாலத்தீன நிலத்தில் உருவான நாடு அது.

இஸ்ரேல் - பாலத்தீனம்: 100 ஆண்டு பிரச்சனையின் முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், Getty Images

எப்போது என்ன நடந்தது?

1917 முந்தைய காலகட்டம்: புவியியல் ரீதியாக பாலத்தீனம், யூதர்களின் புனித நகரம், இஸ்ரேலியர்களின் நகரம் என அழைக்கப்பட்ட அந்தப் பகுதி துருக்கிய ஓட்டோமான் பேரரசால் ஆளப்பட்டது.

நவம்பர் 1917: முதல் உலகப் போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பால்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1917 நவம்பர் இரண்டாம் தேதியன்று வெளியிட்ட இந்த பிரகடனத்தின்படி, பாலஸ்தீனத்தில் “யூத மக்களுக்கான நாட்டை” நிறுவுவதற்கான தனது ஆதரவைப் பிரிட்டன் அறிவித்தது.

பால்ஃபோர் பிரகடனத்தை அமெரிக்கா ஆதரித்தாலும், அன்றைய அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் அரபு நாட்டு மக்கள் மற்றும் யூதர்களைக் கலந்தாலோசிக்காமல் அமெரிக்கா இது தொடர்பாக எந்தவிதத்திலும் தலையிடாது என்று கூறிவிட்டார்.

டிசம்பர் 1917: பிரிட்டன் படைகள் பாலத்தீனத்தை ஆக்கிரமித்தன. இதன்பின் யூதர்களுக்கும், அரேபியர்களுக்குமான சண்டைகள் அதிகமாகின.

ஜூலை 1922: பால்ஃபோர் பிரகடனத்தை அமல் செய்யும் அதிகாரத்தை பிரிட்டனுக்கு வழங்கியது பன்னாட்டு மன்றம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்).

நவம்பர் 1947: பாலத்தீனத்தை யூத அரசு மற்றும் அரபு அரசு என இரண்டாக பிரிக்க ஐ.நா பரிந்துரைத்தது. யூத தலைமை இதனை ஏற்றது. அரபு தலைமை இதனை நிராகரித்தது. இதன்பின் இரண்டு தரப்புக்கும் இடையேயான வன்முறை அதிகமானது.

மே 1948: பாலத்தீனத்தின் மீதான பிரிட்டனின் உரிமை ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் எனும் தனிநாடு உருவாக்கப்பட்டது.

செப்டம்பர் 1950: 1950 செப்டம்பர் 17அன்று, இஸ்ரேல் இறையாண்மையுள்ள நாடு என்பதை இந்தியா அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. அதன்பிறகு, 1992இல் இஸ்ரேலுடன் ராஜீய உறவுகளை இந்தியா தொடங்கியது.

ஜூன் 1967: மத்திய கிழக்கு யுத்தம் தொடங்கியது. கிழக்கி ஜெரூசலேம், மேற்கு கரை ஆகிய பகுதிகளை ஆக்கிரமித்தது இஸ்ரேல்.

டிசம்பர் 1987 – செப்டம்பர் 1993: இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராக முதல் பாலத்தீனிய எழுச்சி தொடங்கியது.

செப்டம்பர் 1993: ஓஸ்லோ ஒப்பந்தத்தில் பாலத்தீன யாசர் அராபத் – இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ராபின் கையொப்பமிட்டதை அடுத்து அமைதி உண்டானது.

Presentational grey line

யார் இந்த யாசர் அராபத்?

யாசர் அராபத்

பட மூலாதாரம், Getty Images

யாசர் அரபாத்தின் இயற்பெயர், முகமது அப்துல் ரஹ்மான் அப்துல் ரவுப் அராபத் அல்-குத்வா அல்-ஹுசைனி என்பதாகும். 1929-ஆம் ஆண்டு பிறந்தார். எகிப்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தபோதே, அரபாத், அரசியல் மற்றும் சமூக ஆர்வலராகிவிட்டார். 1948-ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலத்தீனத்தை ஆக்கிரமித்ததை அடுத்து நடந்த அரபு-இஸ்ரேல் போரின் போது, அரபாத்தின் தந்தை கொல்லப்பட்டார்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷார் எகிப்தியப் பாலைவனங்களில் கைவிட்ட ஆயுதங்களைத் தேடி எடுத்து, ராணுவப் பயிற்சி மேற்கொண்ட அராபத், பிறகு, எகிப்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று, சூயஸ் கால்வாய்ப் போர் மற்றும் அதற்குப் பிறகு நடந்த அரபு-இஸ்ரேல் போர் ஆகியவற்றில் களத்தில் செயல்பட்டார். இக்கால கட்டத்தில்தான், அதாவது 1958-ஆம் ஆண்டு, அல்-பத்தா என்ற அரசியல் அமைப்பையும் நிறுவினார்.

1967-ஆம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரில் அரபு நாடுகள் தோற்றன, ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஜோர்டான் நாட்டில் கரமே நகரைத் தாக்கிய போது, அதை அராபத்தின் அல்-பத்தா இயக்கம் பாதுகாத்தது.

இதை அடுத்து, அராபத் பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைவராக ஆனார்.

1970-ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டிலிருந்து அராபத்தும் பாலத்தீன விடுதலை இயக்கமும் வெளியேற்றப்பட்டார்கள். ஆனால், லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இக்கால கட்டத்தில், பாலத்தீனப் போராளிகள் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைககளில் ஈடுபட்ட போதும், அரபாத் அவற்றை விவாதிக்க விரும்பவில்லை, மாறாக 1974-ஆம் ஆண்டு, பரபரப்பான சூழ்நிலையில், ஐநா மன்றப் பொதுச்சபையில் நுழைந்து அவர் உரையாற்றினார்.

தம் ஒரு கையில் ஆலிவ் கிளையும், இன்னொருகையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளது. எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும் என்று அராபத் அன்று ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது.

1982-ஆம் ஆண்டு, அப்போது இஸ்ரேலிய ராணுவ அமைச்சராக இருந்த ஷரோன், லெபனானில் இருந்த பாலத்தீன நிலைகள், அகதி முகாம்கள்மீது தாக்குதல் தொடுத்ததை அடுத்து, அராபத், லெபனான் நாட்டிலிருந்து வெளியேறி துனீசியா நாட்டுக்குச் சென்று தஞ்சம் பெற்று வாழ நேர்ந்தது.

இஸ்ரேல் - பாலத்தீனம்: 100 ஆண்டு பிரச்சனையின் முக்கிய தருணங்கள்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், 1987-ஆம் ஆண்டு, இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்த பாலத்தீனப் பகுதிகளில் “இன்டிபாடா” என்ற பெரும் கலகம் வெடித்ததை அடுத்து, பாலத்தீனப் பிரச்னை, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் 1991-ஆம் ஆண்டு நடந்த வளைகுடாப்போரின் போது, அரபாத், இராக் அதிபர் சதாம் ஹூசைனை ஆதரித்ததால், சதாம் ஹூசைனின் தோல்விக்குப் பிறகு அரபாத், இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டி வந்தது.

சமரச உடன்பாடு

1993-ஆம் ஆண்டு, நோர்வே நாட்டின் அனுசரணையின் பேரில் சமரச உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வைத்து இஸ்ரேலியப் பிரதமர் இட்சக் ராபினுடன் அரபாத் கைகுலுக்கினார்.

சமரச உடன்பாட்டின் படி, இஸ்ரேலிய யூத அரசை, பாலத்தீனம் விடுதலை அமைப்பு அங்கீகரித்தது. பாலஸ்தீனர்களுக்கான சுயாட்சி நிர்வாகம் அமைவதை, இஸ்ரேல் ஏற்றது. ஆனால், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகள்,

ஜெரூசலேம் நகரின் எதிர்கால நிலை, பாலத்தீன அகதிகள் நாடு திரும்புவது ஆகிய பிரச்னைகள் கிடப்பில் போடப்பட்டன.

சமரச உடன்பாட்டை அடுத்து, அரபாத், ராபின், இஸ்ரேலிய அமைச்சர் ஷிமோன் பெரஸ், ஆகியோருக்குக் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், சமரச உடன்பாடு, முறையாகச் செயல்படவில்லை.

இஸ்ரேல் முற்றுகை

மேற்குக் கரை ரமல்லா திரும்பி பாலத்தீன நிர்வாக அமைப்புக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த அராபத், பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியது. பாலத்தீனர்களின் போராட்டம் தொடர்ந்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளாக, அராபத்தின் ரமல்லா வளாகத்தை இஸ்ரேல் முற்றுகை இட்டிருந்தது. பாலத்தீனப் பிரச்னைக்குத் தீர்வற்ற நிலைதான் இன்னும் நிலவுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அராபத்தின் உடல்நிலை சீர்குலைந்ததை அடுத்து, அவர் விமானத்தில் பாரீஸ் நகர் வந்து அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

நாடுவிட்டு நாடுசென்ற வாழ்வு

பாலத்தீனர்களின் பிரதான தலைவராக இருந்து வந்த யாசர் அரபாத் மீது, இஸ்ரேலியத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவிர, வேறு பல குற்றச்சாட்டுகளும் இருந்துவந்தன. முக்கியமாக, பாலத்தீன நிர்வாக அமைப்பின் மீது சர்வாதிகாரம், ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அராபத்தின் வாழ்க்கை, பல காலம், நாடுவிட்டு நாடுசென்று வாழ்வதாகவே அமைந்தது. ஜோர்டான், லெபனான் போன்ற நாடுகளில் வாழ்ந்தபோது, பல முறை இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் தீரமிக்க செயல்களில் ஈடுபட்டவர் அராபத் என்கிறார்கள் அவருடன் இருந்த

பாலத்தீனத் தலைவர்கள். 1992-ஆம் ஆண்டு லிபியா நாட்டில் அரபாத் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது, அப்போது பதினைந்து மணி நேர காத்திருப்புக்குப் பின் அராபத் மீட்கப்பட்டார். தம் வாழ்க்கையின் இறுதி மூன்று ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய முற்றுகையில் கழிக்க நேரிட்டதும் முக்கியம்.

யாசர் அராபத், ஒரு தீவிரப் போராளியாக இருந்த போது, தம்முடைய நடமாட்டங்களை ரகசியமாகவே வைத்திருந்தார். 1990-ஆம் ஆண்டு இவருக்குத் திருமணமான செய்தி கூட, ஓராண்டு ரகசியமாகத்தான் இருந்தது. சுஹா என்ற பாலத்தீனப் பெண்ணை அராபத் மணந்திருந்தார்.

இவர்களுக்கு, ஸஹ்வா என்ற மகளும் உண்டு.

Presentational grey line

செப்டம்பர் 2000 -2005: இரண்டாவது பாலத்தீன எழுச்சி உருவாகியது.

நவம்பர் 2004: யாசர் அராபத் பிரான்சில் ராணுவ மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

ஏப்ரல் 2014: இஸ்ரேல் – பாலத்தீன அமைதி பேச்சுவார்த்தை கசப்புடன் முறிந்தது.

டிசம்பர் 2017: ஜெரூசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார் டிரம்ப். இதனை அடுத்து அமெரிக்காவுடனான உறவை முறித்தது பாலத்தீனம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »