Press "Enter" to skip to content

கிம் ஜாங்-உன் எச்சரிக்கை: ‘கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்), “பாவி” சூறாவளியை எதிர்கொள்ள தயாராகுங்கள்’

பட மூலாதாரம், Reuters

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் “பாவி” சூறாவளி ஆகியவற்றால் ஏற்படக்கூடும் அபாயங்களை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் தனது கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதுவரை வடகொரியாவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் வைரஸ் பரவல் ஏற்பட்டால் அது அங்கு பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த வார இறுதியில் பாவி என்று பெயரிடப்பட்டுள்ள சூறாவளி வடகொரியாவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புகை பிடித்தவாறே பொலீட்புரோ கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை அன்று பேசிய அதிபர் கிம் ஜாங் உன், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அதிகாரிகள் எடுத்த முயற்சியில் “சில குறைபாடுகள்” இருப்பதாக தெரிவித்தார் என அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இது குறித்த மேலதிக தகவல்கள் எதும் வெளியிடப்படவில்லை.

வடகொரியாவில் இதுவரை எந்த தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாடு கூறி வந்தாலும் வல்லுநர்களுக்கு இது தொடர்பாக சந்தேகம் நீடித்து வருகிறது.

கொரோனா பாதிக்கப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபரொருவர் கண்டறியப்பட்டதும், தென்கொரிய எல்லை அருகேயுள்ள நகரம் ஒன்றில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஆனால், தொற்று பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் அந்நாடு வெளியிடவில்லை.

கிம்மின் உடல்நலம் குறித்த வதந்திகள் மற்றும் அவர் தனது சகோதரியான கிம் யோ ஜோங்கிற்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்தார் போன்ற செய்திகள் வெளியான நிலையில், கட்சிக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுள்ளார்.

கொரோனா வைரஸ், பாவி சூறாவளியை எதிர்கொள்ள தயாராக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எச்சரிக்கை

பட மூலாதாரம், Reuters

லாரா பிக்கர், பிபிசி செய்தியாளர், சோல் என்ன கூறுகிறார்?

சர்வதேச ஊடகங்கள் எல்லாம் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்த செய்திகளில் கவனம் செலுத்துகின்றன. ஆனால், அதைவிட பெரிய கவலைகள் அங்கு இருக்கின்றன. அங்குள்ள 25 மில்லியன் மக்கள் நலமாக இருக்கிறார்களா என்ற கேள்வி இருக்கிறது.

இந்தாண்டு ஏற்கனவே நீண்டகால பருவமழையை கண்டுள்ள அந்நாட்டில், தற்போது சூறாவளி ஏற்பட்டால் அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தம்.

ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை அங்கு பெரு வெள்ளத்தை ஏற்படுத்தி உள்ளது.

சூறாவளியால் 200-300 மிமி மழை பெய்யலாம் என பிபிசியின் வெதர் பிரிவு கணித்துள்ளது. அந்நாட்டின் அறுவடை காலம் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கிறது.

உணவு பாதுகாப்பின்மையால் 10 மில்லியன் மக்கள் வட கொரியாவில் பாதிக்கப்படுவதாக ஐ.நா கூறுகிறது. அதாவது அவர்கள் அறுவடையை நம்பி மட்டுமே இருக்கிறார்கள். பயிர்கள் சேதமாவது உணவு பற்றாற்குறையை ஏற்படுத்தலாம்.

கொரோனா தொற்று பாதிப்பே இல்லை என்று கூறிய கட்டத்தில் இருந்து, வைரஸ் தாக்கத்தை குறைக்க உயர்மட்ட கூட்டம் நடத்தும் நிலையில் அந்நாடு இருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் எல்லைகளை மூடிய வட கொரியாவில் தொற்று பாதிப்பு இருக்கிறதா, கட்டுப்பாட்டில் இருக்கிறதா குறித்து நமக்கு இதுவரை எதுவும் தெரியவில்லை.

2020ஆண்டு செயல்பாட்டுக்கு வரவிருந்த ஒரு பெரும் பொருளாதார திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கடந்த வாரம் ஒப்புக்கொண்ட அதிபர் கிம், புதிய திட்டம் ஒன்றை தீட்ட உள்ளதாக தெரிவித்தார்.

வட கொரியாவின் மிகப்பெரிய பயனாளி மற்றும் நட்பு நாடான சீனாவுடனான வர்த்தகம் ஜூலை மாதத்தில் 20 சதவீதம் குறைந்ததாக சீனாவின் சுங்க தரவுகள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எல்லைகள் மூடப்பட்டதால், அது முக்கிய விநியோகங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு தூதரக பணியாளர்கள் மற்றும் பெரும்பாலான அரசு சாரா நிறுவனங்களும் கொரோனா காலத்தின் கடுமையான கட்டுப்பாடுகளால் வட கொரியாவில் இருந்து வெளியேறிவிட்டதாக என்கே நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகிற்கே 2020 என்பது மோசமான நாடாக அமைந்துவிட்டது. ஆனால் வட கொரியாவில் பேரழிவை ஏற்படுத்துவதற்கான ஆற்றல் கொரோனா வைரஸிற்கு இருக்கிறது. ஆனால், அதனை கவனித்து உதவ அந்நாட்டில் ஒருசில அமைப்புகளே தற்போது இருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »