Press "Enter" to skip to content

அலெக்ஸே நவால்னிக்கு விஷம் தரப்பட்டது – ஆதாரம் இருப்பதாக ஜெர்மனி அரசு தகவல்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸே நவால்னிக்கு, நோவிசோக் எனப்படும் நச்சு ரசாயனம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, நச்சுயியல் பரிசோதனை முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது.

கடந்த மாதம் ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் விமான பயணத்தின்போது மயங்கிய நிலைக்கு சென்ற நவால்னி, கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, அங்கிருந்து ஜெர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருப்பது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடைய உத்தரவின்பேரிலேயே அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நவால்னியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது தங்களுடைய மருத்துவ ஆய்வில் நவால்னிக்கு நோவிசோக் ரக ரசாயன விஷம் கொடுக்கப்பட்டது நிரூபணமானதால், அது குறித்து ரஷ்யா விளக்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமது நாட்டின் மூத்த அமைச்சர்களுடன் ஜெர்மனி ஆட்சித்துறைத் தலைவர் ஏங்கலா மெர்க்கல் இன்று ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அவர்களுடன் பேசி முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“அலெக்லே நவால்னி, ரஷ்யாவில் ரசாயன நச்சு வேதிப்பொருள் விஷத்துக்கு ஆளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது சங்கடமான தகவல்” என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

நவால்னி

பட மூலாதாரம், GETTY IMAGES/ Maja Hitij

இந்த நிலையில், ஜெர்மனி அரசின் தகவல் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தொடர்பும் வரவில்லை என்று ரஷ்ய அரசு கூறுவதாக அங்கிருந்து வெளிவரும் டாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

நவால்னியின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்பிடம் தெரிவிக்கப்படும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

“ரஷ்யா தெரிவிக்கும் பதில் அடிப்படையில் இந்த விவகாரத்தில் கூட்டாக எவ்வாறு எதிர்வினையாற்றுவது என ஜெர்மனி அரசு விவாதிக்கும்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய மருத்துவ தரவுகள் தொடர்பாக நவல்னியின் மனைவி யூலியாவிடமும், ஜெர்மனியில் உள்ள ரஷ்ய தூதரிடமும் தகவல் பகிர்ந்து கொள்ளப்படும் என்று ஜெர்மனி ஆட்சித்துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »