Press "Enter" to skip to content

அயோத்தி பாபர் மசூதி சம்பவம்: களத்தில் இறங்கிய “வலிமை பெண்கள்” – சர்சசைகளுடன் போராடிய கதை தெரியுமா?

  • திவ்யா ஆர்யா,
  • பிபிசி செய்தியாளர்

ராம ஜன்மபூமி இயக்கத்தின் போது, தீப்பொறி பறக்கும் உரைகளின் மூலம் திறமையான தலைவர்களாக உருவாகி, பாபர் மசூதி இடிப்பு மற்றும் அதற்குப்பிந்தைய கலவரங்களில் ஆண்களுக்கு நிகராக களத்தில் போராடிய பெண்களின் கதை இது.

வரலாற்றில் பெண்களுக்கு என ஒரு சிறப்பிடம் இருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. தியாகம், சகிப்புத்தன்மை, இல்லத்தின் லட்சுமி மற்றும் அன்னபூரணி போன்ற பாத்திரங்களை அவர்கள் ஏற்கின்றனர்.

ஆனால்,1990 களில் ராம ஜன்மபூமி இயக்கத்தில் இந்து பெண்கள் முன்வந்து பங்கேற்றபோது இந்தக்கட்டமைப்பின் புதிய வரையறையும் , புதிய கண்ணோட்டமும் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு மதிப்பீட்டின்படி, ராம ஜன்மபூமி கர சேவையில் 55 ஆயிரம் பெண் கர சேவகர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள், மத அரசியலின் ஒரு பகுதியாக மாறினார்கள், அந்த நேரத்தில், ஆண்களின் அதிகாரப்பகுதிகளாக கருதப்பட்ட அனைத்து வரம்புகளும் உடைக்கப்பட்டன.

சாத்வி ரிதம்பரா, உமா பாரதி, விஜயராஜே சிந்தியா ஆகிய மூன்று பெண்கள், இயக்கத்தின் முக்கிய முகங்களாகவும், குரல்களாகவும் ஆனார்கள்.

மேலும், கோயிலுக்கு செங்கல் சேகரிப்பது, ரத யாத்திரையில் சேருவது, பாபர் மசூதி இடிப்பு மற்றும் அடுத்து நிகழ்ந்த கலவரம் ஆகியவற்றில் இந்து பெண் வர்க்கம் முழு முச்சாக ஈடுபட்டது.

ஆறு பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களுடன், சாத்வி ரிதம்பரா மற்றும் உமா பாரதி மீது, மசூதி தகர்ப்புக்கு சதித்திட்டம் தீட்டியது, கலவரத்தைத் தூண்டியது தொடர்பான வழக்கு தொடரப்பட்டது. விஜயராஜே சிந்தியா 2001 இல் காலமானார்.

மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அரசியலில் ஒரு சிறிய பகுதியாக மட்டுமே பெண்கள் இருந்த ஒரு காலகட்டத்தில், இந்த மூவரும் ராமர் ஆலய இயக்கத்தில் பங்குகொண்டதன்மூலம், தங்களுக்கும் பிற இந்து பெண்களுக்குமான ஒரு புதிய அரசியல் மற்றும் அதனுடன் இணைந்த வன்முறைசூழல் கொண்ட ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கினார்கள்.

சாத்வி ரிதம்பரா (அத்தியாயம் -1)

இயக்கத்தின் ஓசை

ராம ஜன்மபூமி இயக்கத்தின் போது தெருக்கள், மூலைமுடுக்குகள், கோயில்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) கூட்டங்களில் எதிரொலித்த ஒரு குரல், சாத்வி ரிதம்பராவினுடையது.

இயக்கத்தின் செய்தியைத் தாங்கிய அவரது உரைகளின் ஒலி நாடாக்கள் தயாரிக்கப்பட்டு ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டன. பாஜக-ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்க (ஆர்எஸ்எஸ்) தொண்டர்களின் வீடுகளில் அவை விநியோகிக்கப்பட்டன.

“அயோத்தி பண்டிதர்கள் கோயில்களில் தங்கள் அன்றாட சடங்கு பிரார்த்தனைகளை ஒத்திவைத்து ஒலிநாடா கேசட் உரைகளை ஒலிக்கச்செய்தனர்,” என்று வரலாற்றாசிரியர் தனிகா சர்கார் தனது ‘ இந்து வைஃப் இந்து நேஷன் ‘ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

கீழ்ப்படிதல் மற்றும் அமைதியான குணம் என்ற ஹிந்து பெண்களின் பாரம்பரிய பிம்பத்தை உடைக்கும் உந்துதல், இந்த உரைகளில் இருந்தது.

சாத்வி ரிதம்பராவின் உரை பொதுவாக ‘ஜெய் மா சீதா’ என்ற முழக்கத்துடன் தொடங்கும். சீதாதேவி தனது குழந்தைகளான லவ-குசன் வளர்ந்த பிறகும், தன்னிடம் வந்துவிடுமாறு கணவர் ராம பிரான் கேட்டுக்கொண்டபோதிலும் அவரிடம் திரும்ப வேண்டாம் என்று முடிவு செய்து தனது உயிரை தியாகம் செய்தார் என்று தனது உரையில் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அதாவது கணவரின் கட்டளைக்கு அடிபணியாமல், தர்மத்திற்காக தனது மனம் சரியென்று சொன்னதை கேட்டு சீதை நடந்தார் . சாத்வியின் சித்தரிப்பில், சீதாதேவி , மனைவி மட்டுமல்ல, இந்து மதத்தின் பாதுகாவலராகவும் இருந்தார்.

“அயோத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வருமாறு சாத்வி விடுக்கும் அழைப்பை கேட்கும் பெண்கள், வெறும் பெண்களாக மட்டுமல்லாமல் வரலாற்று பாதுகாவலர்களாகவும் மாறிவிடுகிறார்கள்.”என்று மாயா அஜ்ரான் கொலம்பியா ஜர்னலுக்கான ‘ ‘சாஃப்ரன் வுமன் ‘ என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்.

பாபர் மசூதி

ரிதம்பராவில் இருந்து சாத்வி

சாத்வியின் உரைகளில், எல்லா ஹிந்துக்களும் சாதி பாகுபாட்டை மறந்து ஒன்றுபடுவதைப் பற்றி பேசப்பட்டது. ஏனென்றால் ராமர் எல்லா ஹிந்துக்களின் கடவுள் என்று அவர் கூறுவார்.

இது இந்து ஒற்றுமை குறித்த பாஜகவின் அட்டவணை மட்டுமல்ல, அது அவருடைய சொந்த வாழ்க்கையின் உண்மையும் கூட.

பஞ்சாபின் தெளராஹாவில், பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவர்களாக கருதப்பட்ட ஒரு ஏழை குடும்பத்தில் ரிதம்பரா பிறந்தார்.

“தனது 16 வது வயதில், ஹிந்து மத மறுமலர்ச்சிக்காக பணியாற்றும் பல ‘புனிதர்களின்’ தலைவரான சுவாமி பர்மானந்தின் சொற்பொழிவுகளைக் கேட்டு ரிதம்பராவுக்கு ஆன்மிக அனுபவம் கிடைத்தது” என்று மனநல ஆய்வாளர் சுதீர் கக்கர் ‘ தி கலர்ஸ் ஆஃப் வயலன்ஸ்’ என்ற தனது புத்தகத்தில் கூறுகிறார்.

அதன் பிறகுதான் ரிதம்பரா ஹரித்வாரில் உள்ள அவரது ஆசிரமத்திற்குச் சென்று அங்கு தனது பேச்சு திறமையை வளர்த்துக் கொண்டார்.

அவரது பேச்சுத்திறமையைக் கண்ட விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமை, ராமர் ஆலய இயக்கத்தின் போது அவரை அதன் செய்தித் தொடர்பாளராக்கியது.

1990 செப்டம்பரில், குஜராத்தின் சோம்நாத்தில் இருந்து ராமர் கோவில் வரை ரத யாத்திரை தொடங்கியது. இது ஒரு மாதத்தில் 10,000 கி.மீ தூரம் பயணித்து அயோத்தியை அடைய இருந்தது.

பாஜகவின் சொந்த மதிப்பீட்டின்படி, ரத யாத்திரையில் பல்வேறு பகுதிகளில் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.

இந்த நேரத்தில், ரிதம்பரா தனது பெயருடன் ‘சாத்வி’ என்ற அடைமொழியை சேர்த்துக்கொண்டார்.

பாபர் மசூதி

முஸ்லிம்களிடம் வெறுப்பு

பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தல் மற்றும் உலக இன்பங்களைத் துறந்ததையும் தொடர்ந்து, சாத்வியாக அவரது அந்தஸ்து உயர்ந்தது.

அரசியல் விளையாட்டைத் தாண்டி, வஞ்சகத்த்தை புறம்தள்ளி, நாடு முழுவதிலும் இந்து மதம் தொடர்பாக அவர் கவலைகொண்டார்.

இவரது உரைகள், இந்து மதத்தின் மீதான முஸ்லிம் படையெடுப்பையும் , முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்பையும் பிரதிபலித்தன.

உதாரணமாக, முஸ்லிம் மக்களின் தொகை வேகமாக வளர்ந்து இந்து மக்கள் தொகையை வேரறுக்கும் விஷயம், முஸ்லிம்களுக்கு சிறப்புச்சலுகைகளை வழங்குவதான விஷயம் மற்றும் இந்து சமூகம் தங்கள் மத விழாக்களை சுதந்திரமாக கொண்டாட அனுமதிக்கப்படாமல் போகும் அபாயம் போன்ற விஷயங்கள் அவரது உரையில் இடம்பெற்றன.

‘பாகிஸ்தான்’ போன்ற சொற்கள் இந்து பெண்களின் தொடையில் எழுதப்படுவது, பாரத மாதாவின் கைகள் துண்டிக்கப்பட்டுள்ளது போன்ற காட்சிகள் அவரது உரைகளில் இடம்பெற்றன.

ஒரு பெண்ணாக இருந்தபோதிலும் அத்தகைய மொழியையும் வன்முறைத் தொனியையும் ஒரு பொது மேடையில் அவர் பகிரங்கமாக வெளிப்படுத்துவது, அவரது வலுவை உணர்த்தக்கூடியதாக இருந்தது.

சொற்களைத் தேர்ந்தெக்கும் அவரது அணுகுமுறையில் ஆண்மைத்தனம் இருந்தது. ஆனால் பெண்களை கவர்ந்திழுப்பதற்காக, அவர்களது பங்குபணி வீட்டிலோ, சாலையிலோ, எதுவாக இருப்பினும் அதன் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்து மதம் மீதான ஆக்ரமிப்பை முறியடிக்க, தாயாக மாறி இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பெண்கள் ஆண்களுக்கு உதவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் வீடுகளை விட்டு வெளியே வரவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

1992 டிசம்பர் 6 ஆம் தேதி, கர சேவகர்கள் பாபர் மசூதி மீது ஏறியபோது, சாத்வி ரிதம்பரா, பாஜகவின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் பல சாதுக்களுடன் மேடையில் இருந்தார்.

மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் சர்மா தனது ‘வார் இன் அயோத்தியா’ புத்தகத்தில் தான் நேரில் பார்த்ததை எழுதியுள்ளார்.

சாத்வி ரிதம்பரா , கர சேவகர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். இந்தப் புனிதமான மற்றும் மங்களகரமான வேலையில் அவர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அவர் கூறினார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று மேடையில் மற்றொரு பெண்ணும் அவருடன் இருந்தார். மக்களவை தேர்தலில் மத்திய பிரதேசத்தின் கஜுராஹோ தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற 30 வயது மட்டுமே நிரம்பிய உமா பாரதிதான் அவர்.

உமா பாரதி

உமா பாரதி (அத்தியாயம் -2)

அனைவரையும் ஈர்க்கும் சன்னியாசினி

1992 டிசம்பர் 6 தேதி வெளியான , பெரும் விவாதத்திற்கு உள்ளான ஒரு புகைப்படத்தில், மசூதி இடிக்கப்பட்ட பின்னர், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷியின் முதுகில் ஏறிய நிலையில் உமா பாரதி சிரிப்பதைக் காணலாம்.

ராமர் ஆலய இயக்கத்தின் போது உமா பாரதி உரையாற்றும் படங்கள் நிறைய தேடிய பிறகும் காணப்படவில்லை, ஆனால் இந்த படம் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல.

அந்த நேரத்தில் வயதில் சிறியவரான உமா பாரதி மீது அரசியல் களங்கம் கற்பிக்கும் முயற்சிகள் குறித்த பல தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆண் தலைவர்களுடனான அவரது வெளிப்படைத்தன்மை மற்றும் உறவுகள் இருப்பதாக கூறப்படும் செய்திகள், அவரது பெயரைக்கெடுக்கவும், செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டன. இதேபோல சிலர் அவருக்கு ‘கவர்ச்சி சன்னியாசினி’ என்ற பட்டப்பெயரும் அளித்தனர்.

1989 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 523 இடங்களில் 23 தொகுதிகளில் மட்டுமே பெண்கள் வெற்றிபெற்றனர். அதாவது இது 4.4 சதவிகிதம் மட்டுமே. வெற்றிபெற்ற மகளிரில் உமா பாரதியும் ஒருவர்.

இந்திரா காந்தி நாட்டின் முதல் பிரதமரானார். ஆனால் அது அரசியலில் பெண்களின் அதிகரிக்கும் பிரதிநிதித்துவத்தை காட்டும் ஒரு குறியீடாக இருக்கவில்லை.

உமா பாரதிக்கும், பாஜக முன்னாள் தலைவர் கோவிந்தாச்சார்யாவுக்கும் இடையிலான உறவு பற்றிய செய்தி வேகம் பிடிக்கத்தொடங்கியது. தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று உமா பாரதி தாமே ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “பெண்கள் பற்றிய விஷயத்தில் மக்கள் மிகவும் கடின மனதுடனும், பழமைவாத சிந்தனைகளுடனும் இருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.

“ஒரு பெண் தனது சொந்த பலத்தில் கட்சியில் முன்னேறினால், ஊழல் தலைவர்கள் தங்கள் சொந்த கூட்டாளியை அவதூறு பேசுவதற்கும் பின்னால் இழுக்கவும் யோசிப்பதேயில்லை, “என்று மானுஷி இதழின் ஆசிரியர் மது கிஷ்வர், 1996 ஆம் ஆண்டில் உமா பாரதியின் தற்கொலை முயற்சி பற்றி எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உமா பாரதி

ஆண் துணை இல்லாத பெண்

உமா பாரதி தனது சொந்தக்காலில் நின்றவர். ஒரு தந்தையையோ, மகனையோ பணத்திற்காக சார்ந்து இருக்கவில்லை. ஒரு தாய் அல்லது மகள் என்ற அடையாளத்தை அவர் கொண்டிருக்கவில்லை.

அவர் ஒரு விழிப்புணர்வுள்ள, சக்திவாய்ந்த மற்றும் அரசியலில் லட்சியவாதியாக விளங்கிய பெண்.

உமா பாரதியின் 11 வது வயதில் அவரது தந்தை இறந்துவிட்டார். தனது உத்வேகத்தின் ஆதாரம் என்று உமாபாரதி விவரிக்கும் அவரது தாய், ஆறு குழந்தைகளை தனியாக வளர்த்தார்.

தந்தை விட்டுச்சென்ற நிலத்தை குடும்பத்தினர்கள் அபகரிக்க முயன்றபோது, அவரது தாயார் ஒரு மாதம் கால்நடையாக போபாலுக்கு சென்றதாகவும், அவரது புகாரைக் கேட்கச்செய்ய முதலமைச்சரின் இல்லத்திற்கு வெளியே படுத்துவிட்டதாகவும் ஒரு நேர்காணலில் உமா பாரதி கூறினார்.

அயோத்திக்குள் நுழைவதற்காக தனது தலையை மழித்துக் கொண்டபோது, அதே பிடிவாதத்தையும் வீரியத்தையும் உமா பாரதி வெளிப்படுத்தினார்.

1990-இல் ஜெய்பூரில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் பேசிய உமா பாரதி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய வளாகம் அக்டோபரில் பொது மக்களுக்காக மூடப்பட்டபோது, அங்கு செல்ல ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது என்று கூறினார்.

“நான் என் நீண்ட கூந்தலை நேசித்தேன். ஆனால் நான் ஒரு கோவிலுக்குச் சென்று முடிதிருத்துபவரிடம் என் தலைமுடி அனைத்தையும் எடுத்துவிடுமாறு சொன்னேன். அயோத்தியில் கடுமையான பாதுகாப்பு இருந்தபோதிலும் தலை மொட்டையாக இருந்ததால், ஒரு சிறுவனைப்போல மாறுவேடத்தில் நான் நுழைந்து விட்டேன், “என்று அவர் சொன்னார்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் களத்தில், காவி உடையணிந்து ,தலையை மழித்துக்கொண்ட, பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கும் ஒரு பெண்ணின் தோற்றம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கட்சியில் இடம் பெறுவது கடினமாக இருந்திருக்கலாம். ஆனால் ராம ஜன்மபூமி இயக்கத்தில், சாத்வி ரிதம்பரா போலவே ஆற்றல்மிக்க பேச்சாளராக அவர் உருவெடுத்தார். அவரது உரைகளின் ஒலி நாடாக்களும் அதிகமாக வெளியிடப்பட்டன.

மத உணர்வுகளைத் தூண்டும் அந்த உரைகள் குறித்து பாஜக ஒருபோதும் அவரை கண்டிக்கவில்லை.

உமா பாரதி

இடிப்பு சம்பவத்தில் பங்களிப்பு

ராம ஜென்ம பூமி இயக்கம் குறித்து பத்திரிக்கையாளர்கள் எழுதிய பல கட்டுரைகள், உமா பாரதியின் உரைகளைக் குறிப்பிடுகின்றன. அதில் அவரது மொழி, சாத்வி ரிதம்பராவிலிருந்து அவ்வளவாக வேறுபட்டதல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக, “ராமர் கோயிலைக் கட்ட சராயு நதியின் நீர் எங்கள் ரத்தத்தால் சிவந்தாலும் பின்வாங்கமாட்டோம், தேவையென்றால் கோயிலைக் கட்ட எங்கள் எலும்புகளை செங்கலாகவும், ரத்தத்தை கட்டிடம் கட்டும் கலவையாகவும் அளிப்போம்,” என்றும் அவர் கூறினார்.

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர், 1992 டிசம்பரில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி லிபர்ஹானை இது குறித்து விசாரிக்குமாறு மத்திய அரசு பணித்தது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு, லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் உமா பாரதி, சாத்வி ரிதம்பரா மற்றும் விஜயராஜே சிந்தியா உட்பட 68 பேர் வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டிய குற்றத்தை இழைத்தவர்கள் எனக் கூறப்பட்டது. இது தவறு என்று கூறிய உமா பாரதி, மசூதி இடிப்பில் “தார்மீக பொறுப்பை” மட்டுமே ஏற்றுக்கொள்வேன் என்று கூறியிருந்தார் . மேலும் அவர் “ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்,” என்றும் சொன்னார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில், உமா பாரதி இரண்டு கோஷங்களை எழுப்பினார்.

“ராம் நாம் சத்ய ஹை , பாபர் மஸ்ஜித் துவஸ்த் ஹை”( ராமர் பெயரே உண்மை , பாபர் மசூதி அழிந்தது) என்பது அதில் ஒன்று. “ஏக் தக்கா ஆர் தோ, பாப்ரி மஸ்ஜித் தோட்தோ ” ( இன்னும் ஒரு முறை தள்ளுங்கள், பாபர் மசூதியை உடையுங்கள் ) என்பது இரண்டாவது கோஷம்.

“வேலை இன்னும் முழுமை பெறவில்லை. முழுப் பகுதியும் சமதளமாகும்வரை வளாகத்தை விட்டு வெளியேற வேண்டாம்” என்று உமா பாரதி மேடையில் இருந்து மக்களிடம் கூறியதாக மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் ஷர்மா கூறுகிறார்.

அவர் ஒரு பெண்ணை மேடையில் அறிமுகப்படுத்தினார். மேலும் ‘ குவிமாடத்தில் ஏறிய முதல் பெண் இவர்” என்றும் கூறினார்.

ஹிந்து ஒற்றுமை மற்றும் ராமர் கோவிலுக்காக கர சேவகர்களை ஊக்குவிப்பதே உமா பாரதி மற்றும் சாத்வி ரிதம்பராவின் நோக்கம். அவர்களின் குறிக்கோள் ஒன்றே. அதில் ஆண்களுடன் பெண்களையும் அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

ஆனால் இருவருமே பெண்களின் பிரச்சனைகளை எழுப்புவதில், தங்கள் பெயரையும் புகழையும் பயன்படுத்தவில்லை. அவ்வாறு செய்வது ஒரு பலவீனமாகக் கருதப்படலாம், கூடவே அவை அவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்காது என்றும் அவர்கள் கருதியிருக்கக்கூடும்.

அரசியலில் உமா பாரதியை முன்னணிக்கு கொண்டு வருவதில் மிகமுக்கியமான பங்கு வகித்தவர் விஜயராஜே சிந்தியா. சிந்தியாவின் ஆதரவுடன் தான் மிகவும் குறைந்த வயதில் அரசியலில் முன்னேறியதாகவும், அந்த பலத்தின் அடிப்படையில் சங்கத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றதாகவும் பல நேர்காணல்களில் உமா பாரதி குறிப்பிட்டுள்ளார்.

விஜயராஜே

விஜயராஜே சிந்தியா (அத்தியாயம் -3)

ஹிந்து பாரம்பரியத்தின் சின்னம்

இளம் தலைவர்களான உமா பாரதி மற்றும் சாத்வி ரிதம்பராவை விட மிகவும் பெரியவரான 70 வயதைக் கடந்த மூத்த தலைவரான விஜயராஜே சிந்தியா, ராம ஜன்மபூமி இயக்கத்தின் மூன்றாவது முக்கிய பெண் முகமாவார்.

பொருளாதார ரீதியாக பலவீனமான மற்றும் பின்தங்கியதாகக் கருதப்படும் குடும்பங்களிலிருந்து வரும் பாரதி மற்றும் ரிதம்பராவின் பின்னணியில் இருந்து விஜயராஜேயின் பின்னணி மிகவும் வித்தியாசமானது.

செல்வந்த மற்றும் சாதாரண பிரிவு வர்க்கத்தினரிடையே மிகவும் பிரபலமான, உயர் சாதியை சேர்ந்த விஜயராஜே சிந்தியா, பணக்கார அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இருப்பினும், ரிதம்பரா மற்றும் பாரதியைப் போலவே, அவரும் ஒரு தனிமையில் இருக்கும் பெண். கணவரை இழந்த காரணத்தால் அவரும் பிரம்மச்சரிய வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆண் உறுப்பினர்களுக்கு பிரம்மச்சரியம் கட்டாயமாகும். இது சிந்தியாவுக்கு உயர் அந்தஸ்தைக் கொடுத்ததுடன், நாட்டின் கட்டுமானத்திலும் ஒரு நல்ல ஊழியராக்கியது.

காவி உடை மற்றும் பெரிய வெள்ளை அல்லது சிவப்பு பொட்டுகளை அணிந்த ரிதம்பரா மற்றும் பாரதியிலிருந்து வாழ்வியல் முறையில் முற்றிலும் மாறுபட்டவர் சிந்தியா. கணவரை இழந்த பிறகு பழைய பழக்கவழக்கங்களின்படி வெள்ளை புடவைகளை மட்டுமே அணிந்திருந்தார்.

பெண்ணின் பழமைவாத பங்கை ஆதரிக்கும் அவரது கருத்துக்கள் இந்து மதத்தினரிடையே பிரபலமாக இருந்தன.

பத்திரிகையாளர்களுடனான உரையாடலில், அவர் பலமுறை இவற்றை தெளிவுபடுத்தினார். அவரைப் பொருத்தவரை, பெண்களின் முக்கிய கடமை ஒரு மனைவி மற்றும் தாயாக இருப்பது என்றும் பெண்கள் உடன்கட்டை ஏறுவது ஒரு கெளரவம்மிக்க பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும் அவர் சொல்லியிருந்தார்.

அமிர்தா பாசுவுக்கு அளித்த பேட்டியில், தனது குழந்தை பருவத்திலேயே தனது தாயார் இறந்துவிட்டதாகவும், ‘இந்து நாடு’ தாயின் இடத்தை எடுத்துக்கோண்டதாகவும், அதற்காக தாம் பணிபுரிந்ததாகவும் சிந்தியா குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண குடும்பங்களைப் போலவே, குழந்தை பருவத்தில் தனது மகள்களை விட தனது மகனுக்கு முக்கியத்துவம் தந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால் குழந்தைகள் வளர்ந்த பிறகு, மகன் மாதவ் ராவ் சிந்தியா எதிர்க்கட்சியில் சேர முடிவு செய்தபோது அவர்களிடையே உறவு மோசமடைந்தது. மேலும் அவரது மகள் வசுந்தரா ராஜே சிந்தியா (விவாகரத்துக்குப் பிறகு தனது தாயிடம் திரும்பியவர்) அவரது அரசியல் வாரிசு. ஆனார்.

அரச குடும்பத்தின் ஆதிக்கம்

விஜயராஜே சிந்தியாவின் அரசியல் பயணம் பாஜகவுடன் தொடங்கவில்லை. கணவர் ஜிவாஜிராவ் சிந்தியா காரணமாகவும் அவர் அரசியலில் நுழையவில்லை.

‘தி லாஸ்ட் மஹாராணி ஆஃப் க்வாலியர் (குவாலியரின் கடைசி பேரரசி) என்ற தனது சுயசரிதையில், அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் அழைப்பின் பேரில், திடீரென அரசியலிலும் காங்கிரசிலும் சேர முடிவு செய்ததாக அவர் எழுதுகிறார்.

1957 இல் முதல் முறையாக அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது, அரச குடும்பத்தின் முழுமையான ஆதிக்கம் காரணமாக அவர் சுலபமாக வெற்றி பெற்றார்.

1961 இல் கணவர் இறந்த பிறகும், சிந்தியா அரசியலில் தீவிரமாக இருந்தார். ஆனால் காங்கிரசுக்குள் ஏற்பட்ட உள் பூசல்கள் காரணமாக, அவர் கட்சியை விட்டு வெளியேறி 1972 ல் ஜனசங்கத்தில் இணைந்தார்.

குவாலியர் , இந்து மகாசபையின் வலுக்கோட்டையாக இருந்தது. சித்தாந்தத்தில், சிந்தியா காங்கிரஸை விட இந்து மகாசபையின் சிந்தனைக்கு நெருக்கமாக இருந்தார். ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக இருப்பதைத் தவிர, அரச குடும்பத்தின் நிதி வலிமையும் அவருக்கு இருந்தது. இந்த கூட்டணி இருவரின் நலனுக்காகவும் இருந்தது.

நாட்டில் நெருக்கடி நிலை அமல்செய்யப்படிருந்தபோது, மற்ற அரசியல் கைதிகளைப் போலவே, விஜயராஜே சிந்தியாவும் சிறையில் அடைக்கப்பட்டார் . பின்னர் உருவான புதிய பாரதிய ஜனதா கட்சியில் துணைத் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

விஸ்வ இந்து பரிஷத்திலும் அவருக்கு உயர் பதவி கிடைத்தது. 1986 ஆம் ஆண்டில், விஸ்வ இந்து பரிஷத்தில், அவரது தலைமையில் ஒரு பசு பாதுகாப்புத் துறை உருவாக்கப்பட்டது.

விஜயராஜே

பாபர் மசூதி இடிப்பில் பங்கு

ஒரு தாயைப் போன்ற அவரது ஆளுமையையும் கூடவே எளிமையையும் கட்டுப்பாட்டையும் பிரதிபலிக்கும்விதமாக அவரது உரைகள் இருந்தன. ஆனால் அவரது பேச்சு வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதை போல இருக்கும்.

1993 ல் வெளியான ‘ சிட்டிசன்ஸ் ட்ரைப்யூனல் ஆன் அயோத்யா’ (அயோத்தி குறித்த குடிமக்கள் தீர்ப்பாயம்) வின், ‘தி கான்ஸ்பிரஸி ஆஃப் சங் கம்பைன்’ ஆகியவற்றின் அறிக்கைப்படி, விஜயராஜே சிந்தியா 1992 நவம்பரில் பாட்னாவில், “பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டும்” என்று கூறியதாகவும், டிசம்பரில் மசூதி இடிக்கப்பட்ட நாளில், அயோத்தியில் மேடையில் இருந்து, “உயரிய தியாகத்திற்கு” தயாராக இருக்குமாறு கர சேவகர்களை கேட்டுக்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘க்ரியேட்டிங் எ நேஷனாலிட்டி’ (ஒரு தேசியத்தை உருவாக்குதல்’) புத்தகத்தில், மசூதி இடிப்பு நாளின் சம்பவங்கள் குறித்து சொல்லப்பட்டுள்ளன. “எனது கனவு நனவானதை நான் பார்த்துவிட்டேன். ஆகவே இப்போது நான் எந்த வருத்தமும் இல்லாமல் இறக்க முடியும்” என்று விஜயராஜே சிந்தியா கூறியதாக அதில் தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

விஜயராஜேவைப் பொருத்தவரை, பாபர் மசூதி இடிப்பு அவரது அரசியல் வாழ்க்கையின் எந்த நேரத்தில் ஏற்பட்டது என்று பார்த்தால், அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே தனது உடல்நலக்குறைவை காரணம் காட்டி 1998 ல் அவர் தீவிர அரசியலை விட்டு விலகினார்.

இருப்பினும், அதுவரை அவரது உயர் அந்தஸ்து தொடர்ந்து இருந்தது. அவர் பாஜகவின் துணைத் தலைவராக இருந்த நிலையில் அரசியலில் இருந்து விலகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் காலமானார்.

ஆனால் உமா பாரதி மற்றும் சாத்வி ரிதம்பரா ஆகியோருக்கு இந்த இயக்கம் ஒரு தொடக்கமாக இருந்தது. இதிலிருந்து அவர்கள் பேரும் புகழும் பெற்றனர். செல்வாக்கு மிக்க பேச்சாளர்களாக உருவெடுத்தனர்.

இப்போது ‘திதி மா’ (அம்மா போன்ற அக்கா) என்று அழைக்கப்படும் சாத்வி ரிதம்பரா, தொலைக்காட்சி மூலம் சமய போதனைகளை வழங்குகிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மற்றும் பயணக் கப்பல்களிலும் கூட்டங்களை நடத்துகிறார்.

1992 ஆம் ஆண்டில், அவர் பரம சக்தி பீடம் என்ற ஒரு அரசு சாரா அமைப்பை உருவாக்கி, பின்னர் பிருந்தாவனுக்கு அருகில் 52 ஏக்கர் பரப்பில் “வாத்சல்ய கிராமம்’ என்ற பெயரில் ஒரு ஆசிரமத்தை , பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக கட்டினார். கடந்த தசாப்தங்களில், அவர் வெவ்வேறு மாநிலங்களில் பள்ளிகள், மாணவர்விடுதிகள் போன்றவற்றை திறந்து வருகிறார்.

ராமர் ஆலய இயக்கத்திற்குப் பிறகு, உமா பாரதியின் அரசியல் பயணம் தொடர்ந்தது. அவர் 1989 முதல் 2003 வரை மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார். மேலும் , சில காலம் மத்திய பிரதேச முதல்வராக ஆனார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மத்திய அமைச்சர் பதவியையும் பெற்றார்.

ஆனால் நடுவே, பாஜகவை விட்டு வெளியேறி தனது சொந்த கட்சியை உருவாக்க முடிவு செய்தார். பின்னர் அவர் பாஜகவுக்குத் மீண்டும் திரும்பினார். 2014 ல் மீண்டும் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரானார். 2019 ல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்தபோது, கட்சி அவரை துணைத் தலைவராக நியமித்தது.

இந்த தலைவர்களின் பாதை எதுவாக இருந்தாலும், மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அவர்கள் சாதாரண இந்து பெண்களுக்கு ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கினார்கள் என்பதே உண்மை. அவர்களது உரைகள் ஒரு தீப்பொறியாக செயல்பட்டன. முதல் முறையாக கர சேவகர்களாக பெண்கள் உருவானார்கள்.

அயோத்தி

கரசேவக பெண்கள் (அத்தியாயம் -4)

அரசியல் விழிப்புணர்வு

இயக்கத்தின் போது இந்து பெண்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்ததற்குப் பின்னால் ஒரு வரலாறு இருந்தது. அதன் அடித்தளம் சில தசாப்தங்களுக்கு முன்பு போடப்பட்டது.

1936 ஆம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ்ஸின் பெண்கள் பிரிவான ராஷ்ட்ரிய சேவிகா சமிதி, வேலை செய்யத் தொடங்கியது.

ஆர்.எஸ்.எஸ் கிளைகளில் ஆண்களுக்கு பூங்காக்களில் உடற்பயிற்சி மற்றும் இந்து மதத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரம் ஆகியவை கற்பிக்கப்படுகிறது. இப்போது இதேபோன்ற கிளைகள் பெண்களுக்காகவும் செயல்படுகின்றன.

சில தசாப்தங்களுக்குப் பின்னர், 1960 களில் பாரதிய ஜனசங் (இப்போதைய பாஜக) பசு வதை எதிர்ப்பை, ஒரு அரசியல் பிரச்சனையாக ஆக்கியபோது இந்த பெண்கள் வெளிச்சத்துக்கு வந்தனர்.

1980 ஆம் ஆண்டில், கட்சி தனது மகளிர் பிரிவான பாரதிய மஹிளா மோர்ச்சாவைத் தொடங்கியது.

இந்த பிரிவுகள் அனைத்தும் பெண் தொண்டர்களை உருவாக்கியதுடன், உயர் வர்க்கம், நடுத்தர வர்க்கம் மற்றும் வணிக வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களையும் இணைத்துக்கொண்டது.

இந்த அமைப்புகளில் இடம்பெற்றுள்ள பெண்கள் மற்றும் சங் பரிவாரில் உள்ள ஆண்களின் குடும்பங்களைச்சேர்ந்த பெண்கள், தங்கள் செய்தியை சாதாரண பெண்களிடம் பல்வேறு வழிகளில் எடுத்துச் சென்றனர்.

டியூக் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் சுசேதா மஜும்தாரின் கூற்றுப்படி, பெண்களை அமைப்புசாரா முறையில் ஒழுங்கமைப்பதற்கும் சித்தாந்தத்தை பரப்புவதற்கும் ஒரு வழி, ஒருவருக்கொருவர் உதவுவதாகும். அவர்கள் புதிய மருமகள்கள், புதிய தாய்மார்கள் அல்லது அக்கம் பக்கத்தைச் சேர்ந்த பெண்களாக இருக்கலாம். இதன் மூலம் சங்கத்தின் செய்தி பரவியது.

“இந்த பெண்கள் குழுக்களின் நோக்கம், தேர்தல்களில் வாக்குகளை சேகரிப்பதே. குறிப்பாக துர்கா வாகினி – அயோத்திக்கு தன்னார்வலர்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது” என்று ‘விமன் ஆன் தி மார்ச்’ என்ற தனது கட்டுரையில் அவர் எழுதியுள்ளார். இதன் விளைவாக அயோத்தியில் பேரணி நடக்கும்போது இருபதாயிரம் பெண்கள் வரை கூட்டப்பட்டனர்.

பஜ்ரங் தளத்தை போல பெண்களை ஒழுங்கமைக்கும் பொருட்டு, விஸ்வ இந்து பரிஷத்தின் மகளிர் பிரிவு துர்கா வாகினி , 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

பெண்கள், குறிப்பாக பொருளாதார ரீதியாக பலவீனமான மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினரைச் சேர்ந்த பெண்கள் இதில் சேர்க்கப்பட்டனர்.

பூ அல்ல தீப்பொறி

ராம ஜன்மபூமி இயக்கத்தில் வாகினியின் பெண்கள் மிகவும் சுறுசுறுப்பான பங்கைக் கொண்டிருந்தனர் என்று துர்கா வாகினியின் வலைத்தளம் தெரிவிக்கிறது.

“அயோத்தியில் இரத்தம் தோய்ந்த ஒரு சூழலில் அவர்கள் தங்களது சாதாரண மென்மையான தோற்றத்தை கைவிட்டு, ஒரு வலிமையான தோரணையை கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. பெண்களின் ஒரு பாதுகாப்புச்சுவரை அவர்கள் உருவாக்கினார்கள். பாதுகாப்புப் படையினர் தடிகளாலும், தோட்டாக்களால் தாக்கிய தங்கள் சகோதரர்களை காப்பாறும் பொருட்டு இத்தகைய சுவர் உருவாக்கப்பட்டது, ” என்று அதில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

துர்கா வாகினியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக சாத்வி ரிதம்பரா உள்ளார்.

சாத்வி

அமைப்பின் கூட்டம் அல்லது துர்கா வாகினி முகாமுக்கு வரும் பெண்கள் புடவைகள் உடுத்தாமல் சல்வார்-கமீஸ் அணிந்தனர். துர்கா வாகினியின் வலைத்தளத்தின்படி, சீருடையில், ‘வெள்ளை சல்வார், வெள்ளை குர்தா, குங்குமப்பூ நிற துப்பட்டா, வெள்ளை துணி காலணி, சாக்ஸ் மற்றும் துர்கா வாகினி என குறிக்கப்பட்ட பெல்ட்’ கட்டாயமாகும்.

இது ஆண் ஆதிக்க உலகில், அந்த பெண்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்தது.

வீட்டில் வசிக்கும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல் நுழைவதில் ,சாத்வி ரிதம்பரா மற்றும் உமா பாரதி ஆகியோரின் ஒலி நாடாக்கள் முக்கிய பங்கு வகித்தன.

அரசியல் மற்றும் பாலினம் குறித்த ஆராய்ச்சியாளரான அமிர்தா பாசு தனது ‘ஃபெமினிசம் இன்வெர்டெட்’ என்ற கட்டுரையில் “சுதேசி இயக்கத்தில் பெண்களை ராட்டை சுற்ற வைத்ததன் வாயிலாக மஹாத்மா காந்தி , பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிர்ப்பைக் காட்டியதை போலவே வீட்டில் இருக்கும் பெண்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக உணரும்படி செய்ய பல வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பைத் தூண்டும்விதமாக சில உரைகள் இருந்தன. உதாரணமாக, சாத்வி ரிதம்பரா தனது ஒரு உரையில், “ஒருபோதும் வகுப்புவாதத்தை கடைப்பிடிக்காத ஒரு இந்து இன்று வகுப்புவாதி என்று அழைக்கப்படுகிறார். அவர் (முஸ்லிம்) பயமின்றி கொலை செய்கிறார். மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்” என்று கூறினார்.

பாபர் மசூதி தகர்ப்புக்குப் பின்னர், நாடு முழுவதும் பரவிய கலவரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .

பல இந்து பெண்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், சூறையாடல், பெண்களிடம் முறைகேடு போன்றவை குறித்து எந்த வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் முஸ்லிம் சமூகம் ‘பாதிக்கப்பட்டவர்களாக’ இருக்க முடியாது என்று அவர்கள் கருதினார்கள் என்று பெண்ணிய எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா கூறுகிறார்.

போராட்டத்தின் போது, “நாங்கள் இந்தியாவின் பெண்கள், பூ அல்ல தீப்பொறி ” என்று பெண்கள் மத்தியில் ஒரு முழக்கம் எழுப்பப்பட்டது.

“பெண்கள் , கலகக்காரர்களின் குழுவை வழிநடத்தினார்கள். முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகள் வீதிக்கு இழுக்கப்பட்டனர். அவர்கள் மீது கூட்டு பாலியல் வல்லுறவை செய்யும்படி இந்தப்பெண்கள் தூண்டினார்கள் மற்றும் முஸ்லிம் பெண்கள் மீது கல்லெறிதல் மற்றும் தீயிடலில் ஆண்களுக்கு உதவினார்கள்,” என்று 1993 ல் மானுஷி இதழில் மது கிஷ்வார் எழுதியுள்ளார்.

வலுவடைந்து கொண்டிருந்த மகளிர் பிரிவுகளில், ஆண்களிடையே இருந்த அதே வெறுப்பு காலப்போக்கில் கலந்துவிட்டது.

மசூதி இடிப்புக்கு பிந்தைய கலவரங்களைப் பற்றி மது கிஷ்வார் இவ்வாறு எழுதுகிறார். “சிவசேனையின் வலதுசாரி அமைப்பின் பெண்கள் தெருக்களில் அமர்ந்திருப்பார்கள் . இதனால் பார வண்டிகளில் ஏற்றப்படும் நிவாரணப் பொருட்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பகுதிகளுக்கு எட்டாது. ஊரடங்கு உத்தரவின் போது சிவசேனை தலைவர் யாராவது காரில் செல்லும்போது ஆயுதத்துடன் பிடிபட்டால், காவல்துறை அவரை அழைத்துச்செல்ல முடியாதபடி இந்தப்பெண்கள் தெருக்களில் படுத்துவிடுவார்கள்.”

அந்த நேரத்தில், இந்து பெண்களின் அடையாளம் ஒரு பெண்ணாக மட்டுமல்ல, அவளுடைய விசுவாசம் மற்றும் மதத்தின் மீதான கடமை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தது.

“நெருக்கடி காலங்களில், பெண்கள் பழிவாங்கும் தேவதைகளின் வடிவத்தை எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த தருணங்கள் கடந்து சென்றபிறகு , அன்பு செலுத்தி பராமரிக்கும் தாய் மற்றும் கீழ்படியும் மனைவியின் பாத்திரத்திற்குத் அவர்கள் மீண்டும் திரும்பிவிடுகிறார்கள்,” என்று பேராசிரியர் மனிஷா சேத்தி தனது ‘அவென்ஜிங் ஏஞ்சல்ஸ் அண்ட் நர்சரிங் மதர்ஸ் ‘ என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »