Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப், பைடனை தவிர்த்து களத்தில் உள்ள 1,214 போட்டியாளர்கள்

  • ரெபேக்கா சீல்ஸ்
  • பிபிசி

கடந்த 230 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் அதிபர் ஆட்சிமுறை இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் மட்டுந்தான் இதுவரை சுயேச்சை வேட்பாளராக இருந்து அந்த பதவியை அடைந்த ஒரே நபர்.

ஆம், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளே ஆக்கிரமித்து வருகின்றன. ஊடக செய்திகளில் முக்கிய இடம் பிடித்து மக்களை எளிதில் சென்றடைவது மற்றும் நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுக்க பெரியளவிலான நிதி திரட்டலை மேற்கொள்வது உள்ளிட்டவற்றின் மூலம் அந்த இரு கட்சிகளும் அமெரிக்காவின் அதிகார போட்டியில் இரு நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக தற்போதைய அதிபரான டிரம்பும் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடனும் களம் காண்கின்றனர்.

இவர்கள் இருவரில் ஒருவர்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்றாலும், நானும் களத்தில் இருக்கிறேன் என்று மேலும் 1,214 பேர் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், பிரதான போட்டியாளர்களை தவிர்த்து அமெரிக்க அதிபர் தேர்தல் களத்திலுள்ள மூன்று வேட்பாளர்களிடம் பிபிசி பேசியது.

“இரண்டு தெரிவுகள் போதாதென அமெரிக்கர்கள் உணருவார்கள்”

ஜேட் சிம்மன்ஸ் பல்துறைகளில் சிறந்து விளங்கும் பெண்மணியாக திகழ்கிறார். மாடலாக, இசைக்கலைஞராக, பாடகியாக, தாயாக அவர் விளங்குகிறார்.

அவர் சொல்வது போல், அவர் ஒரு வழக்கத்திற்கு மாறான வேட்பாளர், “ஆனால் வழக்கத்திற்கு மாறான காலத்தில்…”.

“என் தந்தை ஒரு மனித உரிமை ஆர்வலர். ‘எங்காவது குற்றம் நடந்தாலோ, யாருக்காவது அநீதி நடந்தாலோ அதை தட்டிக் கேட்டும் முதல் நபராக நீதான் இருக்க வேண்டும்’ என்று கூறிதான் என் தந்தை என்னை வளர்த்தெடுத்தார்.”

நாட்டில் பொருளாதார, கல்வி மற்றும் நீதித்துறை சீர்திருத்தத்தின் மூலம் சமமான வாய்ப்புகளை உருவாக்குவதே தனது குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். மேலும், அந்த வகையில், “நாட்டின் வரலாற்றில் மிகக் குறைந்த செலவு கொண்ட பிரசாரத்தை” நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

“அமெரிக்காவில் பிறந்து, இங்கு குறைந்தது 14 ஆண்டுகள் வாழ்ந்து, 35 வயதானவராக இருக்கும் எவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்றிருக்கும்போது, தற்போது அதிபராக போட்டியிட கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் செலவாகும் என்பது அருவருப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று சிம்மன்ஸ் கூறுகிறார்.

“நாங்கள் அந்த பணத்தை மக்களுக்கு உதவுவதற்காக செலவிட விரும்புகிறோம்” என்று அவர் கூறுகிறார்.

குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களின் பெயர்கள் அனைத்து மாகாணங்களின் வாக்குச்சீட்டுகளிலும் இருக்கும்போது, சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் அனைத்து மாகாணங்களிலும் இடம்பெறுவது என்பது சவாலான காரியமாக உள்ளது.

ஓக்லஹோமா மற்றும் லூசியானாவில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் விநியோகிக்கப்படும் வாக்குச்சீட்டுகளில் சிம்மன்ஸின் பெயர் இருக்கும். ஆனால், மற்ற 31 மாகாணங்களில் அவரது பெயரை வாக்காளர் கைப்பட எழுதியே வாக்களிக்க முடியும். இவ்வளவு சவால்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து, இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் வெள்ளை மாளிகையை அடைவேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

‘மக்களுக்கு சேவை ஆற்றுவதற்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டேன்’

ப்ரோக் பியர்ஸ்

ப்ரோக் பியர்ஸ் ஒரு முன்னாள் குழந்தை நட்சத்திரம். அவர் 1996ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமான முதல் கிட் என்னும் படத்தில் அதிபரின் மகனாக நடித்தார். ஆனால், பிற்காலத்தில் தொழில்நுட்ப தொழில்முனைவோராக உருவெடுத்த அவர், கிரிப்டோகரன்சி பில்லியனராகவும் அறியப்படுகிறார்.

அமெரிக்காவின் தற்போதைய சூழ்நிலை தனக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியதே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணமென அவர் கூறுகிறார்.

“எதிர்காலத்திற்கான உண்மையான தொலைநோக்கு பார்வை நம்மிடம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதாவது, 2030ஆம் ஆண்டில், நாம் எந்த வகையான உலகில் வாழ விரும்புகிறோம்? அதற்கு என்ன திட்டம் உள்ளது? இவற்றையெல்லாம் அடைய இலக்கு வைக்க வேண்டியது அவசியம். மேலும், நமக்கு முன்னுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கான யோசனைகளை வெகு சிலரே முன்வைக்கின்றனர். இது எனக்கு அச்சமூட்டுகிறது. ஆனால், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டம் என்னிடம் உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, பியர்ஸ் புவேர்ட்டோ ரிக்கோவில் மனிதநேயப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, அந்த பகுதியில் கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வாங்குவதற்காக பியர்ஸின் அறக்கட்டளை பத்து லட்சம் டாலர்கள் நிதியை திரட்டியுள்ளது.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் முன்னுரிமைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு, “பெயரளவுக்கு வளர்ச்சியை முன்னிறுத்துவதை” நிறுத்த வேண்டுமென்று அவர் அறிவுறுத்துகிறார். குடிமக்களின் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டே வளர்ச்சியின் வெற்றி அளவிடப்படுவதாக அவர் கூறுகிறார்.

ப்ரோக் பியர்ஸ் தனது பிரசாரத்திற்கு 3.7 மில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளதாக அமெரிக்க தேர்தல் ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

“நவம்பரில் எனக்கு 40 வயதாகிறது. அதாவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற எனக்கு இன்னமும் நிறைய வாய்ப்புகள் எஞ்சியிருக்கின்றன. எனவே, ஒரு சுயேச்சை வேட்பாளராக நான் மட்டுமல்ல என்னை போன்று களத்தில் உள்ள பலரும் சேர்ந்து எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறோம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பியர்ஸ்.

‘நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டியுள்ளது’

மார்க் சார்லஸ்

ஒரு கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை என்ற ஒற்றை காரணியே சுயேச்சை வேட்பாளர்களை ஒன்றிணைப்பதாக உள்ளது. இவர்கள் தங்களுக்கு முக்கியமானதாக தோன்றும் விடயத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

அதற்கு, மார்க் சார்லஸ் ஒரு பிரதான உதாரணம்.

தொழில்முறையில் மென்பொருள் பொறியாளரான இவர், பூர்விக அமெரிக்கர்கள் மற்றும் நிற அடிப்படையில் வேறுபட்ட இன குழுக்களின் சமூக நீதிக்காக போராடி வருகிறார்.

டிரம்ப் அல்லது பைடனை சரியான தெரிவாக உணராத வாக்காளர்களுக்கு மாற்று வேட்பாளராக இருப்பதே அவரது குறிக்கோள்.

நவாஜோ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் சார்லஸ். இது தேர்தலில் போட்டியிடுவதற்கான அவரது நோக்கம் மற்றும் அமெரிக்கா என்னவாக இருக்க வேண்டும் என்ற அவரது பார்வையை ஆழமாக முன்வைக்கிறது.

வாஷிங்டன் டி.சி நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலம் பிஸ்கட்வே என்னும் பூர்விக மக்களுக்கு சொந்தமானது. “கொலம்பஸின் வருகைக்கு முன்பே இவை பிஸ்கட்வே மக்களுக்கு சொந்தமான நிலங்களாக இருந்தன. இன்னும் இங்கேயே வாழ்ந்து வரும் அந்த மக்களை கௌரவிக்க நான் விரும்புகிறேன்” என்று அவர் கூறுகிறார்.

மார்க் சார்லஸ்

2000களின் முற்பகுதியில், சார்லஸ் தனது குடும்பத்தினருடன் நவாஜோ என்னும் பூர்விக மக்கள் வசிக்கும் தொலைதூர பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு இடம்பெயர்ந்தார். ஏனெனில், “நான் மிகவும் பாரம்பரியமான வாழ்க்கையை வாழ விரும்பினேன்” என்று அவர் கூறுகிறார்.

“நான் பல அதிபர் தேர்தல்களை அந்த நிலையிலிருந்து பார்த்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

“நாங்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து முறைப்படி சாலை அமைக்கப்பட்ட இடத்தை அடைய 10 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். நாங்கள் நவஜோ மக்களின் பாரம்பரிய ஓரறை வீட்டில் வசித்தோம். எங்களது குடியிருப்பு பகுதியில், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லை. எங்களது பக்கத்து வீட்டுக்காரர்கள் இன்னமும் கம்பளி நெசவாளர்களாகவும், மேய்ப்பர்களாகவுமே இருந்து வருகின்றனர்” என்று அவர் கூறுகிறார்.

“நாங்கள் அங்கு வாழ்ந்த காலத்தில், புகைப்படம் எடுக்க வந்தவர்களும், ஆதரவுக்கரம் நீட்ட வந்தவர்கள் மட்டுமே பூர்விக அமெரிக்கர்கள் அல்லாதவர்கள். வேறு யாரும் எங்களுடன் எவ்வித உறவையும் ஏற்படுத்த முயலவில்லை. இது அந்த சமுதாயம் எந்தளவுக்கு தனித்துவிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. நான் மென்மேலும் பாதுகாப்பற்றும், கோபமாகவும் உணரத் தொடங்கினேன்” என்று அவர் பூர்விக அமெரிக்கர்களின் அவலங்களை பட்டியலிடுகிறார்.

இந்த அநீதி குறித்து மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், பூர்விக அமெரிக்கர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அவர் உறுதிப் பூண்டுள்ளார். மேலும், சமத்துவமின்மையை நிராகரிக்கும் உள்ளடக்கிய நவீன அமெரிக்காவிற்காக தான் போராடுவதாக அவர் கூறுகிறார்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

7 அக்டோபர், 2020, பிற்பகல் 1:32 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »