Press "Enter" to skip to content

பெலாரூஸ் போராட்டங்கள்: ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் மற்றும் பிற பிபிசி செய்திகள்

பெலாரூஸில் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க காவல்துறையினருக்கு ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அங்கு ஆளும் ஆட்சியாளர் லூகஷென்கோவுக்கு எதிரான குழுக்கள், அரசுக்கு எதிரான போராட்டங்களின்போது மிகவும் கடும்போக்குவாதத்துடனும் வன்முறையிலும் இறங்குவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த அதிகாரி கூறினார்.

இந்த நிலையில், பெலாரூஸில் அமைதியை கொண்டு வருவதற்காக, அதிபர் அலெக்சாண்டர் லூகஷென்கோவுக்கு எதிரான தடைகளை கொண்டு வர தயார் நிலையில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தேர்தலில் அதிபர் லூகஷென்கோ அடைந்த வெற்றி முறைகேடு மூலம் சாத்தியமானதாகக் கூறி அந்நாட்டில் எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவை விடுத்த அழைப்பின்பேரில் கடந்த இரு மாதங்களாக தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை கையாண்டு போராட்டக்குழுவினரை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை தலைநகர் மின்ஸ்கில் நடந்த போராட்டத்தை கலைப்பதாகக் கூறி, கையெறி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகளை காவல்துறையினர் பயன்படுத்தியதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். இந்த சம்பவத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலாரூஸ் உள்துறை அமைச்சக செய்த்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020: டிரம்ப், பைடனை தவிர்த்து களத்தில் உள்ள 1,214 போட்டியாளர்கள்

பிபிசி

கடந்த 230 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் அதிபர் ஆட்சிமுறை இருந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் மட்டும்தான் இதுவரை சுயேச்சை வேட்பாளராக இருந்து அந்த பதவியை அடைந்த ஒரே நபர்.

ஆம், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தை குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஆகிய இரு கட்சிகளே ஆக்கிரமித்து வருகின்றன. ஊடக செய்திகளில் முக்கிய இடம் பிடித்து மக்களை எளிதில் சென்றடைவது மற்றும் நாடு தழுவிய பிரசாரத்தை முன்னெடுக்க பெரியளவிலான நிதி திரட்டலை மேற்கொள்வது உள்ளிட்டவற்றின் மூலம் அந்த இரு கட்சிகளும் அமெரிக்காவின் அதிகார போட்டியில் இரு நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

அந்த வகையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக தற்போதைய அதிபரான டிரம்பும் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடனும் களம் காண்கின்றனர்.

இவர்கள் இருவரில் ஒருவர்தான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படப் போகிறார்கள் என்றாலும், நானும் களத்தில் இருக்கிறேன் என்று மேலும் 1,214 பேர் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Banner image reading 'more about coronavirus'
Banner

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): “செல்பேசி திரை, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது 28 நாட்களுக்கு உயிருடன் இருக்கும்”

பிபிசி

கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பணத்தாள்கள், செல்பேசி திரைகள் மற்றும் துருவுறா எஃகு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) போன்றவற்றின் பரப்புகளில் 28 நாட்கள் உயிர்ப்புடன் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் அமைப்பு மேற்கொண்டுள்ள இந்த ஆய்வின் மூலம், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாங்கள் நினைத்ததை விட நீண்ட காலம் தொற்றும் தன்மையுடன் இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இந்த ஆய்வானது இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புறஊதா கதிர்களை கொண்டு இந்த வைரஸை அழிக்க முடியுமென்பது ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.

சில வல்லுநர்கள், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற மேற்பரப்புகளில் காணப்படும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுவதால் ஏற்படும் உண்மையான அச்சுறுத்தல் குறித்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெரும்பாலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவரின் இருமல், தும்மல் அல்லது பேசும்போதே பரவுகிறது.

ஆனால், காற்றில் மிதக்கும் துகள்களாலும் இது பரவக்கூடும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) படர்ந்துள்ள உலோகம் அல்லது நெகிழி (பிளாஸ்டிக்) போன்றவற்றை தொடுவதன் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவக்கூடும் என்று அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேர் கைது

பிபிசி

நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு சிறுமிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் திங்கட்கிழமை மீட்டுள்ளனர்.

ராசிபுரம் பகுதியில் வசித்துவந்த இச்சிறுமிகள் எளிமையான கூலித்தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் தந்தை உயிரிழந்துவிட்டார். வாழ்வாதாரத்திற்காக தாய் கூலிவேலை செய்து வருகிறார்.

வறுமை மற்றும் பாதுகாப்பில்லாத சூழலில் வளர்ந்து வரும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது குறித்த தகவல் பெறப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராசிபுரம் காவல்துறையினர் இன்று அவர்களின் வசிப்பிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

இதில் 8 மற்றும் 9ம் வகுப்பு படித்துவரும் சகோதரிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

மேலும், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இச்சிறுமிகளை 10க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளதாக ஆய்வு செய்த அலுவலர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.

தற்போது வரை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர் ரஞ்சிதப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »