Press "Enter" to skip to content

இந்தியாவை விட்டு சீனாவிடம் நெருங்குகிறதா இலங்கை? யாருக்கு பாதிப்பு?

  • ரஞ்ஜன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு மீண்டும் வலுப் பெற ஆரம்பித்துள்ள நிலையில், அது தொடர்பில் சர்வதேச ரீதியிலான கவனம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.

சீன பிரதிநிதிகள் அடங்கிய உயர் மட்டகுழுவொன்று கடந்த 8ஆம் தேதி இலங்கை வந்தடைந்தது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீன அரசாங்கத்துடன் இலங்கை மிகவும் நெருங்கிய தொடர்புகளை பேணியிருந்த அதேவேளை, இலங்கையின் பெரும்பாலான அபிவிருத்தி பணிகள் சீன அரசாங்கத்தின் உதவியுடனேயே முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக இலங்கையில் கோவிட்-19 தொற்றின் 3ஆவது கொத்தணி மிக வேகமாக பரவி வரும் பின்னணியில், பி.சி.ஆர் பரிசோதனைகளை தவிர, வேறு எந்தவொரு தனிமைப்படுத்தல் சட்டமும் அமல்படுத்தப்படாத நிலையிலேயே இந்த உயர்மட்ட தூதுக்குழு நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாராட்ச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

உயிர் கொல்லி நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நாட்டை அதிர்வுக்கு உள்ளாக்கியுள்ள இந்த தருணத்தில், சீன உயர்மட்ட குழுவிற்கு மாத்திரம் எவ்வாறு இந்த அனுமதி வழங்கப்பட்டது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தலைமையிலான குழுவொன்றே இவ்வாறு நாட்டிற்கு வந்திருந்தது.

இந்த குழுவினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் மறுநாளான கடந்த 9ஆம் தேதியே பேச்சு வார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

இவ்வாறு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின் போது, சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கையொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கு பயணம் செய்த சீன குழு

இந்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கைக்கு சீனாவினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மதிப்பில் 16.5 பில்லியன் ரூபாய் நிதித் தொகை, உதவியாகவே வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கொரோனா தொற்றை எதிர்கொண்டுள்ள இந்த காலப் பகுதியில் கிராமிய பகுதிகளிலுள்ள மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும், கல்வி மற்றும் நீர்பாசன திட்டங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தவே இந்த நிதித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள பின்னணியில், வெளிநாடொன்றினால் வழங்கப்பட்ட அதிக்கூடிய தொகையாக இது அமைந்துள்ளது.

இதேவேளை, சீன உயர்மட்ட குழுவின் விஜயத்தை தொடர்ந்து, அமெரிக்க உயர்மட்ட குழுவொன்று இந்த மாத இறுதிப் பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் அண்மையில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

சீனாவின் தலையீடும் இலங்கை – இந்திய உறவும்

இவ்வாறான பின்னணியில், இலங்கை பொருளாதாரத்தின் மீதான சீனாவின் தலையீடானது இலங்கை மற்றும் இந்திய உறவுகளில் ஒரு விரிசல் நிலைமையை ஏற்படுத்தக்கூடும் என பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியரும், அரசியல் ஆய்வாளருமான சங்கரன் விஜயச்சந்திரன் பிபிசி தமிழுக்கு இதனைத் தெரிவிக்கின்றார்.

சங்கரன் விஜயச்சந்திரன்

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அரசியல் முரண்பாட்டை, சீனாவின் இந்த உதவித் திட்டம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் அச்சம் வெளியிடுகின்றார்.

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மூலம், 13ஆவது திருத்தத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், 13ஆவது திருத்தம் மேலும் வலுப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இவ்வாறான நிலையில், இந்தியாவினால் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு எதிராகவே, சீன உயர்மட்ட குழுவின் விஜயமும், சீன உதவித்திட்டமும் அமைந்துள்ளதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அதுமாத்திரமன்றி, பொருளாதார விடயங்களின் இந்தியாவை கைவிட்டு, சீனாவுடன் இலங்கை கைக்கோர்த்து முன்னோக்கி பயணிக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு இலங்கை சீனாவை நாடுமாக இருந்தால், பிராந்திய அரசியலில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் பாரிய அரசியல் முரண்பாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக பேராசிரியர் கூறுகின்றார்.

இதன்காரணமாக இலங்கைக்கு இந்தியாவினால் கிடைக்கின்ற பொருளாதார மற்றும் ஏனைய உதவிகளிலும் பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

பொருளாதாரம், வீழ்ச்சி கண்டுவரும் இந்த சூழ்நிலையில், சீனாவின் உதவித்திட்டம் இலங்கைக்கு நன்மைகளை ஏற்படுத்தும் அதேவேளை, பிராந்திய ரீதியில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாரிய நெருக்கடியை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுவதாக சங்கரன் விஜயச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

வெளிநாட்டு உதவித் திட்டம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்ன சொல்கிறார்?

இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பற்ற வெளிநாட்டுக் கொள்கையின் கீழ் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் தளத்தில் இந்த தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை தீவானது, மூலோபாய முக்கியத்துவம் மிக்க ஒரு பூகோளப் புள்ளியில் அமைந்துள்ளமையினால், நாடு பலதரப்பட்ட அனைத்துலகச் சக்திகளையும் பல்வேறுப்பட்ட ராஜதந்திர மற்றும் பொருளாதார காரணங்களையும் ஈர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சூழ்நிலையில், இலங்கை அரசாங்கமானது பக்கச்சார்பற்ற வெளிநாட்டு கொள்கையின் கீழ் செயற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு நாடாக இருப்பினும், அதனுடன் இருதரப்புக்கும் நன்மை பயக்கக்கூடிய அபிவிருத்தி ஒத்துழைப்புக்கு தமது அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடிப்படையில், இலங்கை, வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்தே உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகள் எங்கிருந்து வந்தாலும், அதனை தமது அரசாங்கம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து, அதன் தற்சார்பு நிலையை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »