Press "Enter" to skip to content

கொரோனா தடுப்பூசி: வயதானவர்களுக்கு போடுவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

  • வில்லியம் பார்க்
  • பிபிசி ஃப்யூச்சர்

கோவிட்-19 நோய் பாதிப்புக்கு தடுப்பு மருந்து வந்துவிட்ட பிறகு, அனைத்து மக்களுக்கும் அதைப் போடுவதற்கான வாய்ப்புகளை உலக தலைவர்கள் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை அலுவலர்களுக்கு அடுத்தபடியாக யாருக்கு முன்னுரிமை தர வேண்டியிருக்கும் என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும்.

நேர்மையாக இந்தப் பிரச்சனையை அணுகுவதாக இருந்தால், இந்த நோயின் பாதிப்புக்கு எளிதில் ஆளாகும் ஆபத்து உள்ள முதியவர்களுக்கு, தடுப்பூசி போடுவது தான் சிரமமானதாக இருக்கும்.

“முதியவர்களுக்காக தனியாக சில தடுப்பூசிகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன” என்று கனடாவில் குயெல்ப் பல்கலைக்கழகத்தில் தடுப்பு மருந்தியல் துறை பேராசிரியராக உள்ள ஷயன் ஷெரீப் கூறியுள்ளார்.

“கடந்த நூற்றாண்டில் பெரும்பாலான தடுப்பூசிகள் குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நோய்களுக்காக உருவாக்கப்பட்டவை” என்று அவர் குறிப்பிடுகிறார்.

70 வயதைக் கடந்த நோயாளிகளுக்கு தரப்படும் Shingles நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தாக்குதலுக்கான மருந்து மட்டும் இதற்கு விதிவிலக்காக உள்ளது. மூளைக் காய்ச்சல் அல்லது பாப்பிலோமா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) போன்று, பெரியவர்களுக்கு ஏற்படும் ஓரிரு பாதிப்புகள் உள்ளன. மற்றபடி தடுப்பு மருந்து தருவது என்பது குழந்தைப் பருவம் சார்ந்ததாகவே உள்ளது.

“குழந்தைப் பருவத்தில் ஏற்படும் நோய்கள் பற்றி நமக்கு நிறைய விஷயங்கள் தெரியும்” என்கிறார் ஷெரீப். “இளம் வயதினர், நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களுக்கான தடுப்பு மருந்துகள் குறித்த விஷயத்தில் நமக்கு அதிக அனுபவம் கிடையாது” என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சிக்கலாக்கும் விஷயங்கள்

முதியவர்களுக்கான தடுப்பு மருந்துகள் குறித்த விஷயத்தில் நமக்கு அதிக அனுபவம் கிடையாது

முதியவர்களுக்கு தடுப்பூசி மருந்து அளிப்பது ஏன் சிரமமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்களின் நோய் எதிர்ப்பாற்றலில் உள்ள வித்தியாசத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தொற்றும் தன்மையுள்ள பல நோய்கள் இளம்வயது பருவத்தைவிட முதிய வயதில்தான் தீவிரமாகத் தாக்குகின்றன. முதியவர்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் பல காரணிகள் உள்ளன – புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள் அல்லது மற்ற தொற்று நோய்கள் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு வாழ்நாள் முழுக்க அவர்கள் ஆட்பட்டிருப்பார்கள். அதனால் புதிய நோய்த் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கும்.

அவர்களுக்கு வயது மூப்புக்கான நோய் எதிர்ப்பாற்றல் பாதிப்பும் ஏற்படுகிறது.

உடலில் மற்ற உறுப்புகளைப் போல, வயது மூப்புக்கு ஏற்ப நோய் எதிர்ப்பு சக்தியும் மாறுபடுகிறது. சில நோய் எதிர்ப்பு செல்கள் தங்கள் செயல்தன்மையை இழக்கின்றன.

மற்ற செல்களுடன் தொடர்பு கொள்ளும் மிகவும் சிக்கலான நெட்வொர்க் போல நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்படுகிறது. அந்த நெட்வொர்க் உள்ளே எங்காவது, ஏதாவது கோளாறு ஏற்பட்டால், நோய் எதிர்ப்பாற்றலில் அது தடங்கலை ஏற்படுத்துகிறது.

வயது மூப்பு நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம் எப்படி செயல்படுகிறது?

வயது மூப்பு நோய் எதிர்ப்பாற்றல் மண்டலம் எப்படி செயல்படுகிறது?

உங்களை ஒரு நோய்க்கிருமி தாக்கும்போது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முதலாவது லேயர், முதலில் செயல்பட்டு அந்த இடத்திலேயே கிருமியை எதிர்த்துப் போராடுகிறது. சுவாசம் தொடர்பான நோய்களாக இருந்தால், இந்த எதிர்ப்பாற்றல் அழிப்பு நுரையீரல்கள், மூச்சுக்குழாய் அல்லது மூக்கில் நடைபெறும்.

ரத்த வெள்ளை அணுக்கள் அல்லது பேருண்ணிகள், புதிய கிருமிகளை அழிப்பதற்கு முன்னதாக விழுங்கிவிடும்.

அந்தப் பேருண்ணிகள் உடைந்து பிரியும்போது, அவற்றுக்குள் இருக்கும் கிருமிகளும் சிதையும். அப்படிப் பிரிந்சு டி செல்களுக்கு (T cells) அடையாளம் காட்டும். இது நோய் எதிர்ப்பு சக்திக்கான விஷயங்களின் “நினைவகமாக” செயல்படும். நோய் ஏற்படுத்தும் கிருமிகளை டி செல்கள் நேரடியாகக் கண்டறிய முடியாது. நோய்க் கிருமிகளை அடையாளம் காட்டுவதற்கு சில பேருண்ணிகளின் உதவி அதற்குத் தேவைப்படுகிறது.

இதையடுத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் அடுத்த லேயர் செயல்படத் தொடங்குகிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சூழ்நிலைக்கேற்ப தகவமைப்பு செய்யும் லேயராக இருக்கிறது.

டி செல்களில் பல வகைகள் உள்ளன. கொல்லும் தன்மையுள்ள டி செல்கள் அல்லது சைட்டோ டாக்சின்கள், ஏற்கெனவே கிருமியின் பாதிப்புக்கு ஆளாகியுள்ள செல்களை அகற்றுவதற்கு நமது உடலின் செல்களையே அவை தாக்கும். அதனால் கிருமி பாதிப்பு பரவாமல் தடுக்கப்படும். ஹெல்ப்பர் டி செல்கள் என்பவை, தகவமைப்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மற்றொரு பகுதியான பி செல்களுக்கு உதவக் கூடியவையாக உள்ளன.

நோய்க் கிருமிகளை நேரடியாகவே கண்டறியக் கூடியவை இந்த பி செல்கள். ஆனால் அதன் செயல்திறனை அதிகபட்ச அளவுக்கு வெளிப்படுத்த ஹெல்ப்பர் டி செல்களின் உதவி தேவைப்படுகிறது. இந்த பி செல்கள், நோய் எதிர்ப்புக் கிருமிகளை உற்பத்தி செய்யும். செயல்திறன் மிகுந்த நோய் எதிர்ப்புக் கிருமிகளை உருவாக்குவதற்கு, டி செல்களுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் சிக்கலான நடைமுறை தேவைப்படுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுதல்

நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுதல்

ஒரு நோய்க் கிருமியின் தாக்குதலுக்கு ஆட்படுவதற்கு முன்னதாகவே, செயல்திறன் மிகுந்த நோய் எதிர்ப்புக் கிருமிகளை உருவாக்க நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி விடுவது தான் தடுப்பு மருந்து தருவதன் இலக்கு.

கோவிட்-19 பாதிப்பு உள்ளவர்களிடம் நோய் எதிர்ப்புக் கிருமி குறித்த பரிசோதனை செய்யப்படுவது குறித்து நிறைய செய்திகள் வந்துள்ளன. இருந்தாலும், எல்லா நோய் எதிர்ப்புக் கிருமிகளும் இதற்கு ஒரே மாதிரியாக செயல்படும் என்று சொல்ல முடியாது. சார்ஸ் சி.ஓ.வி.-2 பாதிப்பு உள்ள எல்லோருடைய உடலிலும் உள்ள நோய் எதிர்ப்புக் கிருமிகளுக்கு, குறைவான ஆயுள் மட்டுமே உள்ளது.

முதியவர்களின் உடலில் உள்ள இந்த செல்களின் சமன்பாடு பாதிப்பு சிக்கலானதாக இருக்கிறது என்பது தான் நோய் எதிர்ப்பு கிருமி ஆராய்ச்சியாளர்களின் பிரச்சினையாக உள்ளது. அப்படியானால், முதியவரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் என்ன நடக்கிறது?

“அடிப்படையில் அந்த செல் வகைகளின் செயல்பாட்டில் இடையூறு ஏற்படுகிறது” என்று இன்ஸ்பிரக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிர்ஜித் வெயின்பெர்கர் கூறுகிறார். இவர் முதியவர்களின் நோய் எதிர்ப்பாற்றல் மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

“நோய் எதிர்ப்பு செல்களுக்கு இடையில் தகவல் பரிமாற்றத்துக்கு உதவும் புரதங்களாகக் கூறப்படும், பல வகை சைட்டோகின்களை அவை உருவாக்குகின்றன. இதில் எந்த செல்களும் சுயமாக செயல்படுவதில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்வது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் அவர்.

முதிய வயதில் நோய் எதிர்ப்புக் கிருமிகளை பேருண்ணிகள் உருவாக்குவது தடைபட்டால், டி செல்களைத் தூண்டும் செயல்பாடு குறையும். அதனால் பி செல்களுக்கு உதவி கிடைப்பது குறைந்து, நோய் எதிர்ப்புக் கிருமி செயல்பாடும் குறையும். ஆனால் இது முதலாவது உள்ளார்ந்த செயல்பாட்டின் அடிப்படையில் நடக்கலாம்.

“நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வெவ்வேறு செயல்பாடுகள் எப்படி ஒன்று சேர்கின்றன என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்கிறார் வெயின்பெர்கர்.

நமது தகவமைப்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பி செல்கள் மற்றும் டி செல்கள் உள்ளன என்றும், காலப்போக்கில் அவை குறைகின்றன என்றும் ஷெரீப் கூறுகிறார். அதுதான் பிற்கால வாழ்வில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.

“புதிய ஒரு நோய்க்கிருமி நம்மைத் தாக்கும்போது, அதற்கு எதிர்வினையாற்றும் வீரியம் குறைந்து விடுகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

வயதுக்கு ஏற்ப சக்தியைப் பெருக்கிக் கொள்வது

வயதுக்கு ஏற்ப சக்தியைப் பெருக்கிக் கொள்வது

நோய் எதிர்ப்பு சக்திக் குறைபாடு எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரியாக நிகழ்வது கிடையாது. உடலின் மற்ற உறுப்புகளைப் போல, தங்கள் உடலில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொண்டு பராமரிக்கிறார்கள் என்பதைப் பொருத்தோ அல்லது தலைமுறை மரபணு சார்ந்ததாகவே வயது மூப்படைதல் அமைகிறது. ஆனால் இது ஒரு கெட்ட செய்தி என்று சொல்லிவிட முடியாது. நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சில அம்சங்கள், வயதாக வயதாக அதிகரிக்கவும் செய்கின்றன.

“நமக்கு வயதாகும் போது வீரியம் அதிகரிக்கக் கூடிய சில செல்கள் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருக்கின்றன. நிறைய நோய்க் கிருமிகளுக்கு நாம் ஆட்பட்டிருந்தால், அவற்றை எதிர்ப்பதற்கான நினைவாற்றல் நமது உடலுக்கு உள்ளது. எனவே புதிய கிருமிகளுக்கு எதிராக, நிறைய தாக்குதல் செல்கள் தேவைப்படாது” என்று ஷெரீப் கூறியுள்ளார்.

ஆனால் சார்ஸ் சி.ஓ.வி.-2 நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இதுவரை நாம் சந்தித்திராததாக உள்ளது. எனவே, அதை எதிர்ப்பதற்கான நினைவாற்றல் நம் உடலில் இல்லை. இதுதான் நமது நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு சிக்கலான விஷயமாக உள்ளது: முதியவர்கள் ஏற்கெனவே ஆட்பட்டிருக்கும் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் நினைவுகளைக் கொண்ட செல்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் புதிய நோய்களுக்கு எதிராகப் போரிடும் தன்மைகள் குறைவாகவே இருக்கும்.

சாதாரணமாக, இது நல்லது தான். ஆனால் விலங்குகளிடம் இருந்து அவ்வப்போது நோய்க் கிருமிகள் மனிதர்களைத் தாக்கும் நிலையில், புதிய நோய்களை எதிர்த்துப் போரிடும் தன்மை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

தடுப்பு மருந்துகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

தடுப்பு மருந்துகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

மனிதர்களிடம் தடுப்பூசி மருந்து பரிசோதனைகள் செய்யும்போது, அதில் மூன்று நிலைகள் உள்ளன.

முதலாவது நிலையில் அது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என ஆய்வு செய்கிறார்கள். (வழக்கமாக வெகு சில எண்ணிக்கையில் மட்டும் இந்தப் பரிசோதனை நடைபெறும்). இரண்டாவதாக மருந்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார்கள் (நீங்கள் விரும்பிய எதிர்வினையை அது ஆற்றுகிறதா என்ற பரிசோதனை). மூன்றாவதாக அதன் வீரியம் குறித்து ஆய்வு செய்கிறார்கள் (சரியான எதிர்வினையை ஆற்றுகிறதா, நோய்க்கு எதிராக உண்மையான பாதுகாப்பை அளிக்கிறதா என்ற பரிசோதனை).

தடுப்பூசி மருந்துகளில் சமரசங்கள் தேவைப்படும். சில மருந்துகள் ஒரு சிலருக்கு நன்றாக வேலை செய்யும், மற்றவர்களிடம் சரியாக வேலை செய்யாது. இப்போது கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்புக்கு நிறைய ஆய்வகப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவற்றைத் தயாரிப்பதற்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இது நல்ல விஷயம் என்று வெய்ன்பெர்கர் மற்றும் ஷெரிப் கூறுகின்றனர். நீங்கள் நம்பும் வகையில் நிறைய தடுப்பு மருந்துகள் இருந்தால், சூழ்நிலையின் தேவைக்கு ஏற்ற மருந்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மற்றவர்களைக் காட்டிலும், முதியவர்களுக்கு நல்ல பலனைத் தரும் ஏதாவது மருந்து இதில் இருக்கலாம்.

எந்த ஒரு தடுப்பு மருந்தும் முழுமையான பலன்கள் தருவதாக இருக்காது. “100 சதவீத செயல்திறன் கொண்ட தடுப்பு மருந்து எதுவும் இல்லை” என்று ஷெரீப் கூறுகிறார்.

அங்கீகாரம் பெறும் தடுப்பு மருந்துகள், குறிப்பிட்ட நோய்க்கு எதிரான பாதுகாப்பைத் தருவதாக நிரூபிக்க வேண்டும் என்றாலும், எல்லா தடுப்பு மருந்துகளும் நோயைத் தடுத்து, கிருமியை உடலில் இருந்து அகற்றிவிடும் என்று சொல்ல முடியாது. அதாவது நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)களின் மிச்சங்கள் உடலிலேயே தங்கிவிடக் கூடும். அதன் மூலம், மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பும் உள்ளது.

குறிப்பிட்ட வயதுப் பிரிவினருக்கு எந்த தடுப்பு மருந்தை தேர்வு செய்வது என்பதில் இது முக்கியமான அம்சமாக இருக்கிறது. யாருக்கு எந்த மருந்தை தரப் போகிறோம் என்று தேர்வு செய்யும்போது, நோய் பாதிப்பு வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

ஆனால், தங்களுடைய நோயாளிகளுக்கு முதலில் தடுப்பு மருந்து தராமல், மருத்துவர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை அலுவலர்களுக்குத் தந்தால், அவர்கள் பாதுகாக்கப் படுவார்கள். இருந்தாலும், எதிர்ப்பாற்றல் குறைந்த, எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களுக்கு நோயை அவர்கள் பரப்பும் வாய்ப்பு இருக்கும்.

“நோய் பரவலை தடுப்பு மருந்தால் தடங்கலை ஏற்படுத்த முடியும். ஆனால் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுதலை முற்றிலும் தடுக்கக் கூடிய ஒரு தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு குறைவு” என்கிறார் ஷெரீப்.

“இதற்கு இன்புளூயன்ஸா என்ற சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்துகள் நல்ல உதாரணமாக உள்ளன. அவை நோய் பரவலை அதிகம் குறைக்காது, ஆனால் நோயைக் குறைக்கும்” என்று அவர் குறிப்பிடுகிறார்.

தடுப்பு மருந்து எனும் புதிர்

தடுப்பு மருந்து எனும் புதிர்

சமூக, மருத்துவ, அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள் நிறைந்த சிக்கலான ஒரு புதிரைப் போன்றதாக, தடுப்பு மருந்து போடும் அணுகுமுறை இருக்கும் என்று வெயின்பெர்கர் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட ஒரு பிரிவினரிடம் மரண எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அந்தப் பிரிவினருக்கு தடுப்பு மருந்து அளிப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்பது தெளிவான விஷயம். மற்றவர்கள் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுதலை, வயது மூப்பு எப்படி பாதிக்கிறது என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குழந்தைகளுக்கு தொற்றும் தன்மை குறைவாக இருக்கிறது என்ற ஆரம்பகால ஆராய்ச்சி முடிவுகள் குறித்து வெயின்பெர்கர் சந்தேகம் எழுப்புகிறார்.

அந்த முடிவுக்கு வருவதற்கு ஏற்ற அளவில் பெரிய எண்ணிக்கையில் அதற்கான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. ஐரோப்பாவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத நாட்களில் அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. பள்ளியில் குழந்தைகளிடம் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவி, அவர்களை அழைத்துச் செல்வதற்கு வரும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகளுக்கு அதைப் பரப்புவதற்கு வாய்ப்பு இருக்காதா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எப்படி பரவுகிறது என்பதை நன்றாகப் புரிந்து கொண்டால் தான், மக்களுக்கு தடுப்பு மருந்து போடுவதற்கான நல்ல அணுகுமுறைகளை உருவாக்க முடியும்.

“தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் செயல்பாடுகளை நாங்கள் விரைவுபடுத்தி வருகிறோம். ஆனால் சில அம்சங்கள் குறித்து முடிவெடுக்க, அவை பற்றிய தகவல்கள் தேவைப்படுகின்றன” என்கிறார் வெயின்பெர்கர்.

கோவிட்-19 பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியதில் இருந்து, அதற்காகப் பயன்படுத்தும் மருந்துவ முறைகளில் கணிசமான மாற்றங்கள் நடந்துள்ளன. அவை செய்திகளாக வெளியே வரவில்லை என்பது ஷெரீபுக்கு ஆச்சர்யமாக உள்ளது.

சிலர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் குறித்து சிலர் மட்டுமே அறிந்துள்ளனர்.

ஒரு தடுப்பு மருந்து என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும். ஆனால் நோய்த் தடுப்பு சிகிச்சை முறை என்று கேட்டால், ஏதாவது சொல்ல முடியுமா?

“தடுப்பு மருந்துகள் தான் நம்மைக் காப்பாற்றும் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்கிறோம். ஆனால் விஷயம் அப்படியல்ல” என்கிறார் ஷெரீப்.

“தடுப்பு மருந்துகள் செயல்பட 14 முதல் 28 நாட்கள் அவகாசம் தேவை. அதற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் ஊசி போட வேண்டியிருக்கும். நோய் தடுப்பாற்றல் பயிற்சிகள் மூலம் சில நிமிடங்கள், சில மணி நேரத்தில் பயனை அறிய முடியும்” என்று அவர் விளக்குகிறார்.

“கோவிட்-19 பாதிப்புக்கு ஆளான முதியவர்கள் மருத்துவமனைகளில் வாரக்கணக்கில் சிகிச்சை பெறுவதைக் காட்டிலும், சில நாட்கள் மட்டும் சிகிச்சை பெற்றால் போதும் என்ற வாய்ப்பை, புதிய மருந்துகள் உருவாக்கும்” என்று ஷெரீப் கூறுகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் தேவையே கூட இல்லாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

கோவிட்-19 நோய்க்கான சிகிச்சைக்கு பல நூறு மருந்துகள் தற்போது ஆய்வகப் பரிசோதனையில் உள்ளன.

இப்போதைக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களின் மரண எண்ணிக்கையைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ள ஸ்டீராய்டாக இருக்கும் டெக்சாமீத்தாசோன் மருந்துக்கு பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. இந்த மாதத் தொடக்கத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு இந்த மருந்து தரப்பட்டது.

இப்போதைக்கு, அமெரிக்காவில் “அவசரப் பயன்பாட்டுக்கு” ஐந்து மருந்துகளுக்கு எப்.டி.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது. அதில் டெக்சாமீத்தாசோன் மருந்தும் அடங்கும். இவற்றில் எதுவுமே ஆய்வகப் பரிசோதனை முறைகளைப் பின்பற்றி எப்.டி.ஏ. ஒப்புதலைப் பெறவில்லை. அதனால் மிகவும் சிலருக்கு மட்டுமே இவை பயன்படுத்தப் படுகின்றன.

ஏற்கெனவே வேறு நோய்களுக்கான பயன்பாட்டில் உள்ள மருந்துகளில், இந்த சிகிச்சைக்கு எதையாவது பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வுகளும் நடந்து வருகின்றன. அவற்றுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. உரிய ஆய்வகப் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவற்றுக்கு ஒப்புதல் தருவது ஓரளவுக்கு விரைந்து பயன் தருவதாக இருக்கும். புதிய தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தருவதைவிட, இது வேகமாக நடைபெறும் செயல்பாடாக இருக்கும்.

கோவிட்-19 பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவர்கள், தடுப்பு மருந்து வருவதற்கு முன்னதாக இந்த சிகிச்சை ஆராய்ச்சி மூலம் பயன் பெறுவார்கள். எனவே, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது சற்று தாமதமானாலும், சில நல்ல விஷயங்களும் இருக்கின்றன.

இது BBC Future -ல் வெளியான கட்டுரை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »