Press "Enter" to skip to content

இலங்கையில் தலைமறைவாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் 6 நாட்களுக்கு பிறகு கைது மற்றும் பிற செய்திகள்

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல் துறை மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொழும்பு புறநகர் பகுதியான தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையிலேயே, ரிஷாட் பதியூதீன் இன்று கைது செய்யப்பட்டார்.

ரிஷாட் பதியூதீனை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியிருந்தார்.

சுமார் 6 நாட்கள் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீனை, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், குற்றப் புலனாய்வு திணைக்கள தலைமையகத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

ரிஷாட் பதியூதீனை கைது செய்ய காரணம்?

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில், புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பஸ்களின் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச பேருந்துகளில் மக்களை அழைத்து சென்றதன் ஊடாக, பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு கடந்த 14ஆம் தேதி சட்ட மாஅதிபர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து, அன்றைய தினமே 6 காவல் துறை குழுக்கள் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்காக மன்னார் மற்றும் கொழும்பு பகுதிகளிலுள்ள அவரது வீடுகளில் சோதனைகளை நடத்தியிருந்தது.

எனினும், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல் துறையினர் அறிவித்திருந்தனர்.

ரிஷாட் பதியூதீனின் சகோதரரும் கைதாகி விடுவிப்பு

இலங்கையில் கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் தொடர்புகளை பேணினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.

ரியாஜ் பதியூதீன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாது, விடுதலை செய்யப்பட்டமை தவறானது என பல்வேறு தரப்பினரும் கோரி வந்திருந்த பின்னணியிலேயே, ரிஷாட் பதியூதீன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமர்: வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம்

ஜெசிண்டா

கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த ஜெசிந்தாவை பார்த்து, உங்களால் தாயாக இருந்துகொண்டு, பொது வாழ்விலும் வென்று காட்ட முடியுமா என்று கேட்கப்பட்டது. இப்போது அந்தக் கேள்வியே நகைப்புள்ளாகி இருக்கிறது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் 120 இடங்களில் 60க்கும் மேலான இடங்களைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இவர் மீண்டும் ஆட்சியமைக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »