Press "Enter" to skip to content

இந்தியா மியான்மருக்கு அளித்த நீர்மூழ்கி கப்பல்: சீனாவை இந்தியப் பெருங்கடலில் கட்டுப்படுத்தவா?

  • ஜுகல் ஆர் புரோஹித்
  • பிபிசி செய்தியாளர்

“ஒரு நீர்மூழ்கி கப்பல் கல்லறை போல அமைதியாக இருக்க முடியும்.”

ஓய்வுபெற்ற வைஸ் அட்மிரல் ஜி.எம்.ஹிரானந்தானி , ‘ட்ரான்ஸிஷன் டு கார்டியன்ஷிப் – தி இண்டியன் நேவி 1991-2000’ என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதினார். இது பாதுகாப்பு அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

சமீபத்தில் இந்தியா ஒரு நீர்மூழ்கிக் கப்பலை மியான்மருக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. ஆனால் இது குறித்து ஏன் குறைவாகவே பேசப்படுகிறது என்பதை விளக்க இந்த வார்த்தைகள் போதுமானதாக இருக்கலாம்.

இந்தியா ‘மியான்மருக்கு நீர்மூழ்கிக் கப்பலை பரிசளித்தது’ பற்றிய அறிக்கைகள் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவாவிடம், அக்டோபர் 15ஆம் தேதி, விளக்கம் கோரப்பட்டது.

“மியான்மர் கடற்படைக்கு இந்தியா, கிலோ க்ளாஸ் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் சிந்துவீரைக் கொடுக்கும். எங்கள் புரிதலின்படி இது மியான்மர் கடற்படைக்கான முதல் நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கும்,” என்று அதற்கு அவர் பதிலளித்தார்.

“இது சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ) அடிப்படையில் செய்யப்படுகிறது. அனைத்து அண்டை நாடுகளுக்கும் திறன் மற்றும் தன்னிறைவு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

அரசு இதை மட்டுமே சொன்னது. இது தொடர்பான எந்த செய்திக்குறிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்தியா ,உலங்கூர்திகள், ஆயுதம் தாங்கி கப்பல்கள் மற்றும் விமானங்களை ஏற்றுமதி செய்கிறது. ஆனால் நீர்மூழ்கிக் கப்பலை ஒப்படைப்பது வேறு கதை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தவிர, ஒருவரிடம் அதிகமாக உள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இந்திய கடற்படையின் நீருக்கடியிலான தளவாடங்கள் பற்றி இவ்வாறு சொல்ல முடியுமா?

நீர் மூழ்கி கப்பல்

ஐ.என்.எஸ் சிந்துவீர்

ஐ.என்.எஸ் சிந்துவீர் சோவியத் யூனியனால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. 1988 ஜூன் 11ஆம் தேதி இது இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

ரஷ்யர்கள் இதை 877 ஐ.கே.எம் க்ளாஸ் (நேட்டோ குறியீட்டு பெயர்: கிலோ க்ளாஸ்) என்று அழைக்கின்றனர். மேலும் அவை, டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் அணுசக்தி அல்லாத நீர்மூழ்கிக் கப்பல்கள்.

அது தண்ணீருக்கு அடியில் 300 மீட்டர் வரை மூழ்கும் திறன் கொண்டவை மற்றும் வெளிப்புற உதவி இல்லாமல் 45 நாட்கள் வரை பணி செய்யும். இதை இயக்க 53 பேர் கொண்ட குழு தேவை.

இவற்றின் திறன் காரணமாக, ஈ.கே.எம் நீர்மூழ்கிக் கப்பல்களை ‘கடலின் கருந்துளைகள்’ என்று கடற்படை அதிகாரிகள் அழைப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

ஓய்வுபெற்ற கேப்டன் கே.ஆர்.அஜ்ரேகர் , ரஷ்யாவில் பயிற்சி பெற்றவர். முதல் ஈ.கே.எம் நீர்மூழ்கிக் கப்பலான சிந்துகோஷின் கமாண்டிங் அதிகாரியாக அவர் இருந்தார்.

“நீருக்கடியில் இயங்கும் ஹைட்ரோ-டைனமிக் அடிப்படையில் செயல்படும் அதன் உள்ளமைவு சிறப்பாக இருந்தது. ஈ.கே.எம்-இன் நீருக்கு அடியிலான செயல்திறன் மிகவும் சிறந்தது. மேலும் (பகைவர்களை) வேட்டையாடுவதற்காக சோனாரைக் கொண்டுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,”என்று அவர் நினைவு கூர்ந்தார்.

இதுபோன்ற 10 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து வாங்கியதில் ஆச்சரியமில்லை.

நீர் மூழ்கி கப்பல்

ஒரு புதிய கையகப்படுத்தல் திட்டமும் தாமதமாகி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், நாம் நீருக்கு அடியில் பணிபுரியும் முழுத் திறனை அடைவதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம்.

இந்தியாவில் இருந்து மியான்மர் வரை

இந்த விஷயத்தைப் புரிந்து கொண்ட இரண்டு அதிகாரிகள், ஐ.என்.எஸ் சிந்துவீரை மியான்மருக்கு இந்தியாவின் ‘பரிசு’ என்று அழைப்பது தவறு என்று என்னிடம் கூறினார்கள். அவர்களில் ஒருவர் “விஷயம் மிகவும் ரகசியமானது” என்றார்.

“இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு சொல்ல முடியும். வருவாய் ஈட்ட இது செய்யப்படவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலும் மியான்மரிலும் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர், இந்த இரு நாடுகளை மட்டுமே பார்க்கக்கூடாது.

நான் பல அதிகாரிகளுடன் பேசினேன். ‘வங்கதேசத்துக்கு நடந்ததை இந்தியா தவிர்க்க விரும்புகிறது’ என்று ஒருவர் கூறினார். “2016-17ல் வங்கதேசம், சீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கியது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் சீன பணியாளர்கள் வங்காள விரிகுடாவிற்குள் நுழைவதற்கான வழி கிடைத்துவிட்டது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“இருப்பினும், அந்த நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்திய வங்கதேசத்தின் அனுபவம் எங்களுக்குத் தெரிந்த அளவுக்கு சிறப்பாக இல்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தனது நீருக்கு அடியிலான திறன்களை அதிகரிக்க விரும்பிய மியான்மர் கடற்படையுடன் விவாதிக்க இது எங்களுக்கு உதவியது. நாங்கள் அவர்களின் கடற்படை வீரர்களின் பயிற்சியைத் தொடங்கினோம். நாங்கள் இன்னும் அவர்களுடன் இணைந்திருக்கிறோம், உதவி வழங்குகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் மெளனத்திற்கு என்ன காரணம்?

“இரு நாடுகளுமே இது குறித்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. இது ஓர் ஆரம்பம். தவிர, மியான்மருக்கு சீனாவுடன் ஆழமான உறவு உள்ளது,” என்று ஓர் அதிகாரி கூறினார்.

இந்திய கடல்சார் அறக்கட்டளையின் துணைத் தலைவரான ஓய்வு பெற்ற கொமடோர் அனில் ஜெய் சிங், தனது மூன்று தசாப்த கால அனுபவத்தில் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு தலைமை பொறுப்பை வகித்திருக்கிறார்.

“ஒரு நீர்மூழ்கி கப்பல் ஒரு நாட்டால் மற்றொரு நாட்டிற்கு குத்தகைக்கு விடப்படுவது மிகவும் அரிதான செயல். இருப்பினும், விரிவான கண்ணோட்டத்தில் பார்த்தால், வங்காள விரிகுடாவை சீனாவிடம் நாம் இழக்க முடியாது. எனவே இது கடற்படைகளின் நட்புறவின் திசையில் ஆக்கபூர்வ நடவடிக்கையாகும்,” என்று அவர் கூறுகிறார்.

அவரைப் பொருத்தவரை, சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் அடிக்கடி நிறுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

“பாகிஸ்தான் சீனாவிடமிருந்து எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது நமக்கு (மேற்கு கரையிலும்) கவலை தரும் விஷயமாக உள்ளது, “என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் திறன் என்ன?

ஐ.என்.எஸ் சிந்துவீரைத் தவிர, இன்று இந்தியாவில் மொத்தம் எட்டு ஈ.கே.எம் நீர்மூழ்கிக் கப்பல்கள், ஜெர்மன் தயாரிப்பான நான்கு எச்.டி.டபிள்யூ நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிரான்ஸால் வடிவமைக்கப்பட்ட இரண்டு ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.

2013 ஆகஸ்ட் மாதத்தில் இருந்த அதே எண்ணிக்கையிலான நீர்மூழ்கிக் கப்பல்கள்தான் தற்போதும் இந்தியாவிடம் உள்ளது. அந்த நேரத்தில், ஈ.கே.எம் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் சிந்துரக்‌ஷக், மும்பை கடற்படை கப்பல்துறைக்குள் வெடித்தது மற்றும் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

மோதி மற்றும் குடியரசு தலைவர்

“மீதமுள்ள நான்கு ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல்களும் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் கடற்படையில் சேர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் ,” என்று கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள ஜெர்மன் எச்.டி.டபிள்யூ நீர்மூழ்கிக் கப்பல்கள் 26 முதல் 34 வருடங்கள் பழையவை. ஈ.கே.எம் க்ளாஸ், 20 முதல் 34 வயதானவை. முன்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் சராசரியாக 28 வருட பயன்பாட்டிற்குப் பிறகு ஓய்வு அளிக்கப்பட்டுவந்தன.

பிரிட்டனில் இந்தியாவின் கடற்படை ஆலோசகராக இருந்த சிங் கூறுகையில், “இது குறித்து நான் மிகவும் கவலை கொண்டுள்ளேன். (நீர்மூழ்கி கப்பல்) கையகப்படுத்தல் மெதுவான வேகத்தில் நடைபெறுகிறது. முன்னோக்கி செல்லும் பாதை தெளிவாக இல்லை” என்கிறார்.

நீர்மூழ்கிக் கப்பல்களின் விலை அதிகம். “பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் கடற்படையின் பங்கு 2012 ல் 18% ஆக இருந்தது, நடப்பு 2019-20 நிதியாண்டில் 13% ஆக குறைந்துள்ளது. அந்த நேரத்தில் கொரோனா நோய்தொற்று கூட இருக்கவில்லை,” என்று டிசம்பர் மாதம் கடற்படைத் தலைவர் அட்மிரல் கரம்பீர் சிங், கூறினார்.

பிராந்திய போட்டியாளர்கள்

மியான்மருக்கு உதவி வழங்குவது குறித்து இந்தியா சிந்தித்து முடிவு செய்துள்ளது.

வங்கதேசமும் தாய்லாந்தும் இந்தியாவின் பழைய பங்காளிகளாக இருந்தன. இந்திய கடற்படை 2013இல் மியான்மருடன் கடற்படைப் பயிற்சிகளைத் தொடங்கியது. வங்கதேசம் உடனான பயிற்சி 2019இல் தொடங்கியது.

மியான்மரின் தளபதி சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்லிங் ரஷ்யாவுக்கு பயணம் செய்தபோது ரஷ்ய ராணுவத்தின் துணைத் தலைவருடன் நவீன நீர்மூழ்கிக் கப்பலை வாங்குவது குறித்து விவாதித்ததாக, மியான்மரின் செய்தி வலைத்தளமான இர்வாடி, 2019 ஜூலை 16 அன்று செய்தி வெளியிட்டதாக பிபிசி மானிடரிங் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவின் நடவடிக்கைக்கு தாய்லாந்தின் எதிர்வினை எப்படி என்பதை 2019 டிசம்பர் 11 ஆம் தேதி, மியான்மர் டைம்ஸ் விவரித்தது.

“ராயல் தாய் கடற்படை, ஒரு ‘புதிய சூழ்நிலையை’ சமாளிக்க தயாராகி வருகிறது. மியான்மர் தனது நீர்மூழ்கிக் கப்பலை அந்தமான் கடலில் பாதுகாப்புப் பணிகளுக்காக அனுப்பப் போகிறது என்பதை அறிந்த பிறகு, சீனாவிலிருந்து மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் பணியில் தாய்லாந்து உள்ளது ,”என்று அந்த செய்திதாள் குறிப்பிட்டது.

“கடலானது, நீர்மூழ்கி கப்பலுக்கு ஒரு மின்காந்த முறையில் கவசத்தை வழங்குகிறது,” என்று வைஸ் அட்மிரல் ஹிரானந்தானி குறிப்பிடுகிறார்.

நீர்மூழ்கிக் கப்பலுக்கு மிகப்பெரிய சவாலும் கடல்தான். “நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெளிப்படும் ஒலியை, கடலின் இயற்கையான ஒலியை காட்டிலும் குறைத்தால், நீர்மூழ்கி கப்பல் தன்னை கடலில் மறைத்துக்கொள்ள முடியும்,” என்று அவர் எழுதுகிறார்.

கடலுக்கு அடியில் அமைதிக்கான கூட்டுறவை அதிகரிக்க விரும்பும் ஒருவர் இருந்தால், அது இந்தியாவும் மியான்மரும்தான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »