Press "Enter" to skip to content

துருக்கி, கிரீஸில் நிலநடுக்கம் – கடலோர நகரங்களில் வெள்ளம் – பலர் உயிரிழப்பு

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல வீடுகள் சேதம் அடைந்தன. ஏராளமான உயிரிழப்புகளும் கண்டறியப்பட்டுள்ளன.

துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம், 7.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 419 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது. சேமோஸ் தீவில் இரண்டு பதின்ம வயது நபர்கள் உயிரிழந்தனர்.

இரு இடங்களிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக கடல் பகுதியில் ஆழமான சுழல் உருவாகி சின்ன (மினி) சுனாமி போல கடல் அலைகள் மேலெழும்பின. இதனால் கடல் நீர் கடலோர நகருக்குள் புகுந்ததில் வெள்ளம் ஏற்பட்டது. இரு இடங்களிலும் உணரப்பட்ட நிலநடுக்கம் கிரீஸில் ஏதென்ஸ் நகரிலும் துருக்கியில் இஸ்தான்புல்லிலும் உணரப்பட்டது.

இந்த இரு நாடுகளிலும் நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு என்றாலும், தற்போதைய பாதிப்பு அதிகமானதாக அறிய முடிகிறது.

துருக்கியில் 30 லட்சம் பேர் வாழும் மூன்றாவது பெரிய நகர் இஸ்மிர். நிலநடுக்கம் ஏற்பட்டவுடனேயே அங்கு சுமார் 20 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் அங்குமிங்குமாக ஓடினர்.

துருக்கி

அத்தகைய ஓர் இடத்தில் கட்டடம் இடிந்து விழும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது. மற்றொரு காணொளியில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை தேடி மீட்கும் நடவடிக்கையில் பொதுமக்களும் மீட்பு ஊழியர்களும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கடல் சீற்றம் ஏற்பட்ட நேரத்தில், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் பலர் இன்னும் கரை திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என துருக்கி அதிபர் ரிசெப் தயீப் எர்துவான் உறுதியளித்தார்.

கிரீஸில் என்ன நிலை?

கிரீஸ் நாட்டின் சேமோஸ் தீவில் நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானது. அங்கும் கட்டடங்கள் சேதம் அடைந்தன. இதில் 2 பதின்ம வயது நபர்கள் உயிரிழந்தனர்.

கிரீஸ்

நிலநடுக்கத்துக்கு பிந்தைய தாக்கம் அங்கு தொடர்ந்து உணரப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் தாக்கம் சக்திவாய்ந்ததாக உணர முடிந்தது என்று உள்ளூர் செய்தியாளர் மனோஸ் ஸ்டெஃபானாகிஸ் பிபிசியிடம் தெரிவித்தார். 1904ஆம் ஆண்டில் கிரீஸ் நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கமாக தற்போதைய சம்பவம் கருதப்படுகிறது. சேமோஸ் தீவில் கடலோர பகுதியில் வாழும் சுமார் 45 ஆயிரம் பேரும் அந்த பகுதியில் இருந்து விலகியே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Presentational grey line

நீட் இட ஒதுக்கீடு: அரசாணை பிறப்பித்தது ஏன்? – முதல்வர் பழனிசாமி விளக்கம்

பழனிசாமி

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவக் கல்லூரிகளில் இடம் வழங்குவதில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை இந்த ஆண்டு முதலே பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அரசாணை வெளியிட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், இட ஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் செய்பவர்களின் செயல், பலன் அளிக்காது என்று தெரிவித்தார்.

”ஆளுநரிடம் இருந்து பதில் வருவதற்குத் தாமதம் ஏற்பட்டதால் அரசாணை வெளியிட்டுள்ளோம். ஏழை எளிய மாணவர்கள்தான் அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களின் மருத்துவ கனவை நினைவாக்க இந்த அரசாணை கொண்டுவந்துள்ளோம். இந்த நடப்பாண்டில் ஒதுக்கீடு தருவதற்காகத்தான் அரசாணை கொண்டுவந்துள்ளோம். இந்த இட ஒதுக்கீடு மூலமாக சமூக நீதி பாதுகாக்கப்படும்,” என்றார் முதல்வர்.

தமிழக அரசு கொண்டுவந்துள்ள அரசாணையை வரவேற்றுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இட ஒதுக்கீடு விவகாரத்தில் முடிவு செய்வதில் ஏன் இவ்வளவு நாட்கள் தாமதம் ஆனது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

”7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஒப்புதல்

இதற்கிடையே, 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் கருத்து கேட்டிருந்த நிலையில், அதற்கு இந்திய சொலிசிட்டர் ஜெனரல் பதில் அனுப்பியிருந்தார். அதில், தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதா, அரசியலமைப்புக்கு உட்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் தமிழக அரசு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரி லால் புரோகித் ஒப்புதல் வழங்கினார்.

Presentational grey line

பிரான்ஸ் நீஸ் தேவாலய தாக்குதல்: “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” – அதிபர் மக்ரோங்

பிரான்ஸ் தாக்குதல்

பிரான்ஸின் நீஸ் நகரில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆணை கத்தியால் குத்தி கொன்றவர் இரு தினங்களுக்கு முன் துனிஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போலீஸாரால் சுடப்பட்ட அந்த நபர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பிரான்ஸின் நீஸ் நகரில் நேற்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இது ஒரு “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” என பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தால் பள்ளிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கையை மூவாயிரத்திலிருந்து ஏழாயிரமாக அதிகரிப்பதாகத் தெரிவித்தார் மக்ரோங்.

மேலும் நாட்டின் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »