Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழர்களின் வாக்கை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன?

  • சொர்ணம் சங்கரபாண்டி, வாஷிங்டன் டி.சி.,
  • பிபிசி தமிழுக்காக

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

அமெரிக்கா மட்டுமின்றி உலக அரசியலில் தாக்கத்தை செலுத்தக்கூடிய இந்த பதவியை பிடிப்பதற்கு குடியரசு கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்புக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், இந்த தேர்தலில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு மற்றும் வரிவிதிப்புக் கொள்கை உள்ளிட்டவை மக்களின் வாக்குகளை பெறுவதில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பதை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் வாழும் தமிழர்களிடம் பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நோய்த்தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் முடங்கிப் போயுள்ளது. குறிப்பாக, கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பில் உலகளவில் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த பிரச்சனை தேர்தலில் முக்கிய விவாதப் பொருளாக உள்ளது.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அமெரிக்காவின் மேரிலாந்தில் வசிக்கும் மணி குமரன், “அமெரிக்க பொருளாதார சூழ்நிலை தற்போது நல்ல நிலையில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. வேலைவாய்ப்பை இழந்துள்ள லட்சக்கணக்கானோர், அதிலும் குறிப்பாக கருப்பின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கணினி, மருத்துவம் உள்ளிட்ட “வைட் காலர் ” என்றழைக்கப்படும் படித்த மக்கள் செய்யும் தொழில்களில் பொதுவாக தமிழக மற்றும் இந்திய வம்சாவளி மக்கள் ஈடுபடுவதால் அவர்கள் அதிகமாக பாதிப்படையவில்லை. ஆனாலும் பொருளாதாரம் குறித்த பதற்றம் பொதுவாக எல்லோரிடமும் நிலவுகிறது. அதை பிரதான பிரச்சனையாக கருதுவோர் டிரம்புக்கு வாக்களிக்க சாத்தியமுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

அதே சமயத்தில், கொரொனா பெருந்தொற்றை சரி செய்யாமல் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்று தன்னைப்போல் நினைக்கும் பலர், ஜோ பைடனுக்கு வாக்களிக்க வாய்ப்பு அதிகம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

அமெரிக்காவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின் காரணமாக அடிப்படையில் நாட்டின் பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தாலும், வட இந்தியாவை சேர்ந்த குடியேறிகளுடன் ஒப்பிடுகையில் அவர்களை விட பணிவாய்ப்பில் சிறப்பான நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு அதனால் பெரும்பாலும் பாதிப்பில்லை என்பதால் டொனால்ட் டிரம்புக்கு தமிழ் சமூகத்தின் மத்தியில் வரவேற்பு அதிகம் உள்ளதாக கலிஃபோர்னியாவில் வசிக்கும் இளங்கோ மெய்யப்பன் கூறுகிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்

“அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் பெருமளவில் கணினி, பொறியியல் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளிலேயே பணியாற்றுகின்றனர். அதாவது, பொருளாதாரத்தில் ஒப்பீட்டளவில் சிறந்த நிலையில் உள்ள தமிழர்கள் தங்களது ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்கள், குழந்தைகளின் கல்லூரி படிப்புக்கான சேமிப்புத் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் அதிகம் கவனம் செலுத்துபவர்களாக அறியப்படுகிறார்கள். இதுபோன்ற சேமிப்புத் திட்டங்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையுடன் தொடர்புள்ளவை. இந்த நிலையில், கடந்த 4-5 ஆண்டுகளில் அமெரிக்க பங்குச்சந்தைகள் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் முன்னெப்போதுமில்லாத உச்சத்தை அடைந்துள்ளன. எனவே, குடியரசு கட்சியின் பொருளாதார கொள்கையை ஆதரிக்கும் தமிழர்களின் தெரிவு டொனால்ட் டிரம்ப் ஆகவே இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

குடியேறிகளின் கனவு நாடான அமெரிக்காவில் வாழும் தமிழர்களில் தொழில்முனைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், தொழில் செய்வதற்கு உகந்த, குறைவான கட்டுப்பாடுகளை குடியரசு கட்சி விதிப்பதாக கருதும் தமிழர்களும் டிரம்பிற்கே ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளதாக இளங்கோ மேலும் கூறுகிறார்.

ஆனால், இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பார்வையை முன்வைக்கிறார் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் வசிக்கும் சம்பத் குமார், “உலகின் மற்ற நாடுகளை போலவே, கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலின் காரணமாக அமெரிக்க பொருளாதாரமும் தலைகீழான நிலையில் உள்ளது. ஆனால், எதிர்வரும் தேர்தலில் டிரம்ப், பைடன் என யார் வெற்றிபெற்றாலும் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. படிப்பறிவும், சமூக விழிப்புணர்வும் கொண்ட அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என்பதால் இதை முதலாக கொண்டு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கூறுகிறார்.

மருத்துவ காப்பீடு

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு என்பது அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுவதால் அது தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு அதிக சுமையை ஏற்படுத்தும் ஒன்றாக விளங்குவதால் அதை எளிமையாக்குவதாக கூறி ஒபாமா கொண்டுவந்த ’ஒபாமாகேர்’ திட்டம் குறித்தும், டிரம்ப் தான் 2017இல் அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே அதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்ததும் நினைவில் இருக்கலாம்.

இந்த தேர்தலிலும் மருத்துவக் காப்பீடு என்பது அமெரிக்காவில் வாக்குகளை தீர்மானிக்கும் காரணியாக விளங்குகிறது. குறிப்பாக, மருத்துவக் காப்பீட்டு திட்டமும், செலவுகளும் பொதுவாக எல்லோரையும் பாதித்தாலும், அது வேலை இல்லாதவரையும், ஒருவருடைய வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து இருக்கும் குடும்பங்களையும் அதிகம் பாதிக்கும் என்கிறார் மணி குமரன்.

“இந்த வகைப்பாட்டில் அமெரிக்கவாழ் தமிழர்களும் அடக்கம். குழந்தையை வளர்க்க ஒருவர் வீட்டிலேயே இருந்துவிட, பல தமிழ் மற்றும் இந்திய வம்சாவளி குடும்பங்களில் ஒருவர்தான் வேலைக்கு செல்கிறார்கள். எனவே, அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அந்த வகையில், மருத்துவக் காப்பீடு முக்கியம் என்று நினைப்பவர்கள் நிச்சயமாக ஜோ பைடனுக்குதான் வாக்களிப்பார்கள்” என்று அவர் கூறுகிறார்.

மேற்குலக கலாசாரத்துடன் ஒப்பிடுகையில், தமிழர்கள் குடும்பத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதை கடைபிடித்து வருபவர்களாக அறியப்படுகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது, அமெரிக்காவில் வாழும் தங்களை சந்திக்க பூர்விகத்திலிருந்து வரும் பெற்றோர் மற்றும் உறவினர்களை கொண்டவர்கள் ஜோ பைடனை ஆதரிப்பதற்கான வாய்ப்பை மருத்துவக் காப்பீடு என்ற காரணி உருவாக்குவதாக இளங்கோ மெய்யப்பன் கூறுகிறார்.

“அமெரிக்காவில் பணியாற்றும் தமிழர்களுக்கு அந்தந்த நிறுவனமே மருத்துவக் காப்பீடு அளித்தாலும், ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஒபாமாகேர் திட்டம் அவர்களின் வயதான பெற்றோர், மற்ற குடும்பத்தினரின் மருத்துவக் காப்பீட்டு தேவையை பூர்த்திசெய்வதில் பேருதவியாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் எதிரானவராக டிரம்ப் அறியப்படுவதால், மருத்துவக் காப்பீட்டு விவகாரத்தில் ஜோ பைடனே முன்னிலை பெறுகிறார்” என்று அவர் கூறுகிறார்.

வரிவிதிப்புக் கொள்கை

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு அந்த நாட்டின் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான டொனால்டு டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே நேருக்குநேர் இரண்டு விவாதங்கள் நடந்தன. அவை இரண்டிலுமே வரிவிதிப்புக் கொள்கை குறித்த விவகாரத்தில் ஒருவர் மீதொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், இதுகுறித்து பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த மணி குமரன், “பொதுவாக மிக அதிகம் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளி பணியாளர்களும், வணிகர்களும், மருத்துவர்களும், பொருளாதார பங்கு சந்தையில் வேலை செய்வோரும் வரிவிதிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்கள் டிரம்புக்கு வாக்களிக்க வாய்ப்பு அதிகம்” என்று கூறுகிறார்.

ஆனால், வரிவிதிப்பு பொருளாதாரத்தில் நேரடி பாதிப்புகளை செலுத்தாததால் அதை வாக்களிக்கும் காரணியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சம்பத் குமார் வாதிடுகிறார். “பில் கிளிண்டன் மற்றும் ஒபாமா ஆகிய ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர்களின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் நல்ல முன்னேற்றத்தை கண்டது. ஆனால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில், வரியை குறைத்தால்தான் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்று பலரும் கருதுகிறார்கள். அது தவறு. உதாரணமாக, ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் இரண்டு முறை விதிக்குறைப்பு செய்யப்பட்டபோதிலும், அது பொருளாதாரத்தை முன்னேற்றவில்லை” என்று அவர் கூறுகிறார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் அதிகரித்து வரும் இனவெறுப்பு அரசியலும், வன்முறைகளும் தமிழர்களுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக இளங்கோ மெய்யப்பன் கூறுகிறார். “வெள்ளையர்களுக்கு இடையே காணப்படும் இனவெறி அமெரிக்காவில் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தங்களது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் தமிழர்களிடத்தில் காணப்படுகிறது. இந்த கோணத்திலிருந்து பார்த்தால் தமிழர்களின் ஆதரவு நிச்சயம் ஜோ பைடனுக்குதான்” என்று அவர் கூறுகிறார்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

30 அக்டோபர், 2020, பிற்பகல் 2:00 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »