Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல்: தமிழக கிராமத்தில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற சிறப்பு பூஜை

  • பிரமிளா கிருஷ்ணன்
  • பிபிசி தமிழ்

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவதற்காக, தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் உள்ள துளசேந்திரபுரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது.

கமலா ஹாரிஸின் தாய்வழி குலதெய்வமான தர்மசாஸ்தா கோயில் துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கமலாவின் உறவினர் மூலம் நன்கொடை வழங்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

கமலா துணை அதிபராக வெற்றிவாகை சூடவேண்டும் என்பதற்காக தேர்தல் நாளான நவம்பர் 3ம் தேதி அன்று பாலாபிஷேக பூஜை ஒன்றை கிராம மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கமலா வெற்றி பெற வாழ்த்துக்கள் என கூறி துளசேந்திரபுரத்தில் பதாகைகள் வைத்துள்ளனர்.

பதாகை

பிபிசி தமிழிடம் பேசிய கோயில் நிர்வாகி எஸ்.வி.ரமணன், ”கமலாவின் அத்தை சரளா கோபாலன் என்பவர் மூலம் 2014ல் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்தார். கமலாவின் பெயரும் கோயில் நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஐந்து வயது சிறுமியாக இருந்தபோது கமலா இந்த கோயிலுக்கு வந்திருக்கிறார். முதலில், ஊர்மக்கள் கேட்டுக்கொண்டதால், பூஜைக்கு ஒப்புக்கொண்டோம். பின்னர், ஒரு சில அரசியல்கட்சியை சேர்ந்தவர்களும் பூஜை செய்வ வேண்டும் என கோரினார்கள். மக்களின் உற்சாகத்தை கருத்தில் கொண்டு பூஜை நடத்த ஒப்புக்கொண்டோம்,” என்கிறார் ரமணன்.

பேனர்

அமெரிக்க தேர்தல் நிலவரத்தை அதிக கவனத்துடன் கிராம மக்கள் பார்த்துவருவதாக கூறுகிறார் கிராமவாசியும், பூஜை ஒருங்கிணைப்பாளருமான சுதாகர். ”எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவர் வெற்றி பெறவேண்டும் என நாங்கள் பூஜை செய்கிறோம். கமலாவின் பங்கேற்பு எங்கள் கிராமத்து இளம் தலைமுறையினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது,” என்கிறார் சுதாகர்.

கமலா ஹாரிஸ் – யார் இவர்?

அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் கறுப்பின பெண் மற்றும் முதல் ஆசிய அமெரிக்க பெண் கமலா ஹாரிஸ்.

இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர்; 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் ஃபெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் வெற்றி பெறவில்லை. எனவே கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சிறப்பை பெறுவார்.

கமலா ஹாரிஸுக்கு 55 வயதாகிறது. கமலா ஹாரிஸின் தாய் இந்தியாவை சேர்ந்தவர், தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

கமலா ஹாரிஸின் தாய் சென்னையை சேர்ந்தவர். கமலாவின் பெற்றோர் விவாகரத்து பெற்றப்பின், அவரின் தாய் ஷியாமலா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார் கமலா ஹாரிஸ்.

கமலாவின் தாயார் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.

கமலா ஹாரிஸ்

கமலாவின் தாயார் இந்தியாவிற்கு செல்லும்போதெல்லாம் அவருடன் இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளார் கமலா. மேலும் தனது இந்திய பாரம்பரியத்துடன் இணைந்தே வளர்ந்தார் கமலா.

இருப்பினும் தனது தாய் ஒக்லாந்தின் கறுப்பின கலாசாரத்திற்கு தன்னை மாற்றிக் கொண்டார் என்றும், தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்தார் என்றும் கமலா தெரிவித்துள்ளார்.

“எனது தாய் இரு கறுப்பின மகள்களை வளர்க்கிறோம் என்று புரிந்துகொண்டே எங்களை வளர்த்தார்.” என தனது சுயசரிதையான `தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்` புத்தகத்தில் கமலா குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை பொருத்தவரை, தற்போது கமலா ஹாரிஸின் இரு நெருங்கிய குடும்ப உறவுகள் மட்டுமே உள்ளனர். ஒன்று டெல்லியில் வாழும் அவரது தாய்வழி மாமா கோ. கோபாலன், மற்றொருவர் சென்னையில் வாழும் தாய்வழி சித்தி சரளா கோபாலன்.

கமலா ஹாரிஸ் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். பல்கலைக்கழக வாழ்க்கை தனது வாழ்க்கையை செதுக்குவதில் பெரிதும் உறுதுணையாக இருந்தது என ஹாரிஸ் குறிப்பிடுவார்.

இரு முறை அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வளரும் நட்சத்திரமாக அறியப்படுகிறார்.

துணை அதிபர் போட்டியில் கமலா வெற்றி பெற்றால் 2024ஆண்டு அதிபர் போட்டியில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »