Press "Enter" to skip to content

வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் – என்ன நடந்தது?

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், “இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்” என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த நகரில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் முத்திரை வைக்கப்பட்டு மற்ற துப்பாக்கிதாரிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

வியன்னா நகர மேயர் சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், துப்பாக்கிதாரிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆஸ்திரியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மீண்டும் கடுமையானதையடுத்து, அங்கு தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2ஆம் தேதி அமலுக்கு வந்தன. இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நடந்த தாக்குதலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

தாக்குதல்

பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், “தீவிரவாதத்தின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வியன்னாவிலும் வெறுப்புணர்வுத் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. இது நமது ஐரோப்பா. நேற்று எங்களை தாக்கினர், இன்று எங்களுடைய நண்பரை தாக்கியுள்ளனர். இதை தொடர விடக்கூடாது” என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மிஷெல், “மக்களின் வாழ்க்கை மற்றும் மனித மாண்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது” என்று கூறினார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட், துப்பாக்கி சூடு சம்பவத்தை கொடூரமான தாக்குதல் என்றும் துயரமான இந்த தருணத்தில் வியன்னாவுக்கு ஆதரவாக தமது நாடு துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தீவிரவாத தாக்குதல்களால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பிரிட்டன் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »