Press "Enter" to skip to content

நியூஸிலாந்து அமைச்சரான சென்னை பெண் பிரியங்கா பாலகிருஷ்ணன் – யார் இவர்?

பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்! தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.

நியூஸிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டெர்ன் அமைச்சரவையில் சென்னையில் பிறந்தவரும் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவருமான பிரியங்கா ராதாகிருஷ்ணன் (41) அமைச்சராக நியமித்துள்ளார். அந்நாட்டில் அமைச்சர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

அமைச்சரான தகவலை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரியங்கா பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதில் அவர், “இன்று நம்பமுடியாத சிறப்பான நாளாக இருந்தது. நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கான சலுகை உணர்வு உட்பட, நான் பல விஷயங்களை உணர்கிறேன். எனக்காக வாழ்த்துச் செய்திகள் / செய்தி அனுப்ப / அழைப்பு / செய்தி அனுப்ப நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மிகவும் சிரம் தாழ்ந்து இந்த பணியை ஏற்றுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

தனது புதிய அமைச்சரவையில் ஐந்து பேருக்கு ஜெசின்டா ஆர்டெர்ன் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். பிரியங்கா ராதாகிருஷ்ணன், சென்னையி்ல் பிறந்தவர். ஆனால், இவரது குடும்ப பூர்விகம் கேரளா.. மாதவன் பரம்பு ராதாகிருஷ்ணனுக்கும் உஷாவுக்கும் பிறந்த இவர், சிங்கப்பூரில் பள்ளிக்கல்வியை முடித்தார்.

பிரியங்கா

பிறகு மேல் படிப்புக்காக நியூஸிலாந்துக்குச் சென்று அங்கேயே குடியேறினார். விக்டோரியா பல்கலைக்கழகத்தில் வளர்சித்துறை ஆய்வில் முதுகலை பட்டம் பெற்றார்.

நியூஸிலாந்து தொழிலாளர் கட்சியில் 2006ஆம் ஆண்டில் அவர் சேர்ந்தார். அங்கு பெண் உரிமைகள், குடும்ப வன்முறை, குடியேறி தொழிலாளர்கள் ஆகியோருக்காக குரல் கொடுத்த அவர் தீவிர அரசியலிலும் பங்கெடுத்தார்.

நியூஸிலாந்தில் இந்திய வம்சாவளியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் பிரியங்கா, தென்னிந்திய பாரம்பரித்தின் மீது பற்று கொண்டவராகவும் அறியப்படுகிறார்.

2017ஆம் ஆண்டில் தொழிலாளர் கட்சி சார்பில் மவுங்காகேக்கி தொகுதியில் நடந்த எம்.பி தேர்தலில் பிரியங்கா போட்டியிட்டு தோல்வியுற்றார். எனினும் கட்சி ரீதியிலான பிரதிநிதித்துவம் மூலம் அவர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினரானார். அப்போது அவர் இன விவகாரங்கள் துறையின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டு ஆளும் கட்சிக்கும் அரசுத்துறைக்கும் இடையிலான பாலம் போல விளங்கினார்.

சமீபத்தில் நடந்த எம்.பி தேர்தலிலும் அவர் வெற்றியைப் பெறவில்லை. இருந்தபோதும், கட்சி ரீதியிலான தேர்வு மூலம் அவர் எம்.பி ஆக தேர்வாகி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இம்முறை அவரை இன விவகாரங்கள் துறை, இளைஞர் நலன், சமூக நலன், வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

பிரியங்காவின் பெயரை அமைச்சரவையில் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டபோது, அரசின் நலனுக்காக கடுமையாக உழைத்தவர் பிரியங்கா என்று ஜெசின்டா ஆர்டெர்ன் புகழாராம் சூட்டினார்.

கேரளாவின் பரவூரை பூர்விகமாகக் கொண்டவர் என்ற வகையில், பிரியங்காவின் புதிய பொறுப்புக்கு கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி சஷி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நியூஸிலாந்து அமைச்சராகியிருப்பதற்கு வாழ்த்துகள். இது பெருமைக்குரிய தருணம் என்று கூறியுள்ளார்.

பிரியங்காவின் புதிய பொறுப்பு குறித்து கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா டீச்சர் மகிழ்ச்சி தெரிவித்து அவருக்கு வாழ்த்துகளை ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Presentational grey line

வியன்னா துப்பாக்கி சூடு: 6 இடங்களில் திடீர் தாக்குதல் – என்ன நடந்தது?

தாக்குதல்

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆயுததாரிகள் துப்பாக்கியுடன் வந்து தாக்குதல் நடத்தினார்கள். நடந்த சம்பவத்தில் தாக்குதலில் ஈடுபட்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியா ஆட்சித்துறைத் தலைவர் செபாஸ்டியன் குர்ஸ், “இந்த சம்பவத்தை வெறுப்பூட்டும் தீவிரவாத தாக்குதல்” என்று அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த நகரில் பெரும்பாலான பகுதிகள் காவல்துறையால் முத்திரை வைக்கப்பட்டு மற்ற துப்பாக்கிதாரிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

வியன்னா நகர மேயர் இந்த சம்பவம் பற்றி கூறும்போது, இதுவரை 15 பேர் காயம் அடைந்ததாகவும் அதில் ஏழு பேர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

நகரின் மையப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு அருகே தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், துப்பாக்கிதாரிகள் அந்த ஆலயத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த வந்தார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

ஆஸ்திரியாவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மீண்டும் கடுமையானதையடுத்து, அங்கு தேசிய அளவிலான கட்டுப்பாடுகள் நவம்பர் 2ஆம் தேதி அமலுக்கு வந்தன. இம்மாத இறுதிவரை அங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நடந்த தாக்குதலை ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். செக் குடியரசு நாட்டை இணைக்கும் ஆஸ்திரியா எல்லையிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

தாக்குதல்

பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், “தீவிரவாதத்தின் மிரட்டலுக்கு ஐரோப்பா பணிந்து விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸில் சமீபத்தில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு வியன்னாவிலும் வெறுப்புணர்வுத் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. இது நமது ஐரோப்பா. நேற்று எங்களை தாக்கினர், இன்று எங்களுடைய நண்பரை தாக்கியுள்ளனர். இதை தொடர விடக்கூடாது” என்று தெரிவித்தார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மிஷெல், “மக்களின் வாழ்க்கை மற்றும் மனித மாண்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது” என்று கூறினார்.

நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட், துப்பாக்கி சூடு சம்பவத்தை கொடூரமான தாக்குதல் என்றும் துயரமான இந்த தருணத்தில் வியன்னாவுக்கு ஆதரவாக தமது நாடு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தீவிரவாத தாக்குதல்களால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டதாக தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பிரிட்டன் துணை நிற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Presentational grey line

பிஹார் சட்டமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப்பதிவு

பிஹார்

பிஹார் மாநில சட்டமன்றத்துக்கு இரண்டாம் கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தல் 17 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறும்.

பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் மூன்று கட்டமாக நடக்கிறது. இதில் முதலாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28ஆம் தேதி 16 மாவட்டங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 17 மாவட்டங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நடக்கிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் 15 மாவட்டங்களில் உள்ள 78 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்படும்.

இரண்டாம் கட்ட தேர்தலில் 1,463 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் முன்னிறுத்திய முதல்வர் வேட்பாளர் தேஜாஸ்வி யாதவ், அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரபலங்களின் தலைவிதியை இந்த வாக்குப்பதிவே தீர்மானிக்கவுள்ளது.

2015ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ராஷ்ட்ரிய ஜனதா தளம், தனிப்பெரும்பான்மையுடன் தற்போது தேர்தல் நடக்கும் 94 இடங்களில் விளங்கியது. இந்த தொகுதிகளில் மட்டும் அந்த கட்சியின் வாக்குகள் சதவீதம் 45.3 ஆகும். இந்த தொகுதிகள் அனைத்தும் பின்தங்கியவை. 2015 தேர்தலில், ஆர்ஜேடி 33, ஜேடியு 30, பாஜக 20, காங்கிரஸ் 7, லோக் ஜன சக்தி 2, மற்றவர்கள் 2 என்ற வகையில் வெற்றி பெற்றனர்.

அந்த தேர்தலின்போது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்டு மகா கூட்டணி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது. ஆனால், 2017இல் அந்த கூட்டணியை முறித்த முதல்வர் நிதிஷ் குமார், 53 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை தக்க வைத்தார்.

இம்முறை நடக்கும் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அதற்கு எதிரான களத்தில் ஆர்ஜேடி மொத்தம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் 70 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 29 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

செவ்வாய்க்கிழமை நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் 2.86 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை செலுத்த தகுதி பெற்றுள்ளனர்.

பிஹாரைத் தவிர இந்தியாவின் 10 பிற மாநிலங்களில் 54 இடங்களுக்கான இடைத்தேர்தலும் இன்று நடந்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலாவதாக சட்டமன்ற தேர்தல் பிஹாரில்தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »