Press "Enter" to skip to content

முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சை: திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?

  • சாய்ராம் ஜெயராமன்
  • பிபிசி தமிழ்

இஸ்லாமியர்கள் இறைத்தூதராக வணங்கும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கின் கருத்துகளும் தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகின்றன.

இதன் எதிரொலியாக, பல்வேறு நாடுகளிலும் முஸ்லிம்கள் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், இஸ்லாம் மதத்துக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததாக கூறி முஸ்லிம் மக்கள் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்குக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

சுருங்க சொல்வதென்றால், முகமது நபிகளின் கேலிச்சித்திரம் உள்பட எவ்வித உருவப்படத்தையும் பதிப்பிப்பது இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில், மதச்சார்பின்மையை நாட்டின் அடையாள மையமாக கொண்டுள்ளதாக கூறும் பிரான்ஸ் அரசு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாப்பதற்காக கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது, ஒற்றுமையைக் குறைத்து மதிப்பிடும் செயல் போன்றது என கூறுகிறது.

இந்த நிலையில், முகமது நபிகளின் உருவப்படத்தை வரையக் கூடாது என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதா? இந்த கருத்தில் அனைத்து முஸ்லிம்களும் உடன்படுகிறார்களா? வரலாறு என்ன சொல்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரை ஆராய்கிறது.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?

முகமது நபிகளின் உருவத்தை வரையக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?

உருவ வழிபாடு தடை செய்யப்பட்ட இஸ்லாம் மரபில், முகமது நபிகள் உள்ளிட்ட எந்த இறைத்தூதர் அல்லது மனிதரின் படத்தை வரைவதோ அல்லது அதைப் பிரசுரிப்பதோ இஸ்லாத்துக்கு மாறானது என்று இஸ்லாமிய மத தலைவர்கள் கூறுகிறார்கள்.

இருப்பினும், இஸ்லாத்தின் புனித நூலான திருக்குர்ஆனில் இதுபோன்ற தடை அல்லது கட்டுப்பாடுகள் ஏதும் தெளிவாக இல்லை. முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ஹதீத்துகள் அல்லது நபிகளின் பொன்மொழிகளில்தான் இதுபோன்ற உருவச் சித்தரிப்புகளுக்கு எதிரான விடயங்கள் கூறப்பட்டுள்ளதாகவும் வேறுசில இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இது குறித்த உண்மைத்தன்மையை அறிவதற்காக இஸ்லாமிய கற்கைகள் பிரிவில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட சென்னையை சேர்ந்த ஆசிரியரான இம்தியாஸ் முகமதிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “இஸ்லாமியர்களை பொறுத்தவரை, திருக்குர்ஆனும் அதன் விளக்க உரையாக கருதப்படும் ஹதீத்துகளும் ஒன்றுதான். அந்த வகையில் திருக்குர்ஆனில் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், அல்லாஹ்வுடன் வேறு யாரையும் இணைத்து/ இணையாக பேசக் கூடாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது” என்று கூறும் அவர் திருக்குர்ஆனில் எவற்றையெல்லாம் வணங்கக் கூடாது என்று கீழ்க்காணும் பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

கால் நடைகளைக் கடவுளாக்கக் கூடாது – 2:51, 2:54, 2:92, 7:148, 7:152

வானவர்களை வணங்கக் கூடாது – 3:80, 4:172, 13:13, 16:49, 21:26, 34:40, 43:19, 41:38, 66:6,

சிலைகளை வணங்கக் கூடாது – 6:74, 7:71, 7:138, 7:195, 12:40, 14:35, 21:52, 21:57, 21:58, 22:73, 26:71,72, 37:95, 43:18, 53:19,20, 53:23, 71:23

மகான்களை வணங்கக் கூடாது – 3:79, 4:172, 5:17, 5:72, 5:116, 7:194, 9:30, 18:102, 19:93, 21:26, 43:19, 43:59

மத குருமார்களை வணங்கக் கூடாது – 9:31

நபிமார்களை வணங்கக் கூடாது – 3:79, 3:80, 4:171, 4:172, 5:72, 5:73, 5:116, 5:117, 9:31, 18:110,

மனிதனை மனிதன் வணங்கக் கூடாது – 3:64

சூரியன் சந்திரனை வணங்கக் கூடாது – 41:37

முகமது நபிகளின் உருவத்தை வரையக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?

மேற்கூறிய உதாரணங்களில் எல்லாம் இஸ்லாத்தில் எவற்றையெல்லாம் வழிபடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளதாக இம்தியாஸ் கூறினாலும், தற்போது முகமது நபிகளின் கேலிச்சித்திரம் தொடர்பான சர்ச்சையின் மையமாக உள்ள உருவப்படம் வரைவது குறித்து திருக்குர்ஆனில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, “திருக்குர்ஆனும் ஹதீத்தும் இணைந்ததுதான் இஸ்லாம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இருவேறு பக்கங்களை போன்றவை. திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அதன் விளக்க உரையாக அறியப்படும் ஹதீத்தில் ஆயிரக்கணக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.”

“‘எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படிகிறாரோ, அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்படிகிறார்’ என்று திருக்குர்ஆனிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், ஸஹிஹ் புகாரி என்பவர் தொகுத்த ஹதீத் இஸ்லாமியர்களால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்ட நூலாக உள்ளது. அதில் உருவப்படங்கள் வரைவது எவ்வளவு இழிவான செயல் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் கூறுகிறார்.

ஸஹிஹ் புகாரி என்பவர் தொகுத்த ஹதீத்தின் வரிசை எண் 417 மற்றும் இமாம் முஸ்லிம் தொகுத்த ஹதீத்தின் வரிசை எண் 528 ஆகியவற்றில் நபிகள் கூறியதாக இவ்வாறாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இம்தியாஸ் கூறுகிறார். “நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரின் மீது (அடக்கம் செய்த இடம்) பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்வின் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!’ என்று கூறினார்கள்.”

அதாவது, இறந்தவர் ஒருவரின் சமாதியின் மீது கட்டடம் எழுப்பி அதில் உருவப்படங்களை வரைந்து வைப்பவர்களை மிகவும் மோசமானவர்கள் என்று நபிகள் கூறியுள்ளதாக இம்தியாஸ் கூறுகிறார்.

முகமது நபிகளின் உருவத்தை வரையக் கூடாது என்று திருக்குர்ஆன் கூறுகிறதா?

திருக்குர்ஆனிலும், ஹதீத்திலும் கூறப்பட்டுள்ள விடயங்களை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்கள் பலர் உருவப்படம் வரைவது, வழிபாடு செய்வது உள்ளிட்ட விடயங்கள் குறித்து தங்களது நூல்களில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் கூறுகிறார். “இமாம் ஹாஃபிஸ் இப்னு ஹஜர் என்ற அறிஞர், மேற்கண்ட இந்த ஹதீத்தின் மூலம் படம் வரைவது ஹராம் (தடுக்கப்பட்டுள்ளது) என்பதை தெளிவுபடுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதே போன்று, இமாம் நவவியும் ‘இந்த ஹதீத், உயிருள்ள படைப்புகளின் உருவங்களை வரைவதை முழுமையாக ஹராம் (தடை) ஆக்குகிறது. அதை செய்பவர் மாபெரும் பாவத்தை செய்கிறார்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், உருவப்படத்தை வரைவது இஸ்லாத்தில் அனைத்து விதத்திலும் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது” என்று இம்தியாஸ் அகமது கூறுகிறார்.

சுருங்க சொல்வதென்றால், இஸ்லாத்தை பொறுத்தவரை, திருக்குர்ஆனிலும், நபிகளின் பொன்மொழிகளாக கூறப்படும் ஹதீத்திலும் கூறப்பட்டுள்ளவற்றை பொருந்தி பார்ப்பதே சரியானது என்றும், அந்த வகையில் இஸ்லாத்தில் உருவப்படம் வரைவது, அதை வழிபடுவது உள்ளிட்டவை தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிடுகிறார்.

உருவப்பட விவகாரத்தில் வேறுபடும் ஷியா பிரிவு முஸ்லிம்கள்

2016ஆம் ஆண்டு நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மக்கள் தொகை பரவல்

மேற்கண்ட விளக்கங்கள் ஒருபுறமிருக்க, இஸ்லாத்திலேயே ஷியா மற்றும் சுன்னி பிரிவினரிடையே உருவப்படம் வரைவதில் மாறுபட்ட நடைமுறைகள் இருப்பதாகவும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

2015ஆம் ஆண்டு பிபிசிக்கு பேட்டியளித்த இரானை சேர்ந்தவரும், அப்போது ஜெர்மனியில் இருந்தவருமான யூசெஃபி எஷ்கவரி, தற்காலத்தில் கூட இரானிலுள்ள பல்வேறு வீடுகளில் முகமது நபிகளின் உருவப்படத்தை காண முடியுமென்று கூறினார். “மதரீதியிலான கண்ணோட்டத்தில் இந்த படங்களுக்கு எந்த தடையும் இல்லை. இந்த படங்கள் இரானிலுள்ள கடைகளிலும் வீடுகளிலும் உள்ளன. அவை மதரீதியிலோ அல்லது கலாசார ரீதியிலோ அவமானகரமானதாக கருதப்படவில்லை” என்று கூறியிருந்தார்.

முகமது நபிகளின் உருவப்பட சர்ச்சையில் ஷியா மற்றும் சுன்னி பிரிவு முஸ்லிம்களுக்கிடையே நிலவும் வேறுபட்ட நடைமுறை குறித்து இம்தியாஸிடம் கேட்டபோது, “திருக்குர்ஆன் மற்றும் ஹத்தீஸை முழுமையாக ஏற்றுக்கொண்டவர்களே இஸ்லாத்தை பின்பற்றுவதாக அர்த்தம். அந்த வகையில், முகமது நபிகளின் உருவப்படத்தை வரைவது தடுக்கப்பட்ட ஒன்று” என்று கூறினார்.

அப்போது, இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் முஸ்லிம்களே இல்லையா? என்று அவரிடம் கேட்டபோது, “எந்தவொரு தனிப்பட்ட நபரும், யார் முஸ்லிம், யார் முஸ்லிம் இல்லையென்று கூற முடியாது. அல்லாஹ்வை முழுவதும் ஏற்றுக்கொண்ட அனைவரும் முஸ்லிம்களே” என்று கூறினார்.

2016ஆம் ஆண்டு நிலவரப்படி, மத்திய கிழக்கு நாடுகளில் சுன்னி பிரிவு முஸ்லிம்களின் மக்கள் தொகை பரவல்

எனினும், இரானில் வாழும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இதில் வேறுபட்ட நடைமுறை இருப்பதற்கான காரணம் குறித்து வினவியபோது, “முகமது நபிகள் வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்களில் ஷியா என்ற பிரிவே இல்லை என்பதுதான் உண்மை. அது பிற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. எனவே, அவர்களது கண்ணோட்டம் வேறுமாதிரியாக இருக்கலாம்” என்று இம்தியாஸ் கூறினார்.

“பிரான்ஸ் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது”

முகமது நபிகள் உருவப்பட சர்ச்சை தொடர்பான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் கருத்துக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டம்

மதசார்பின்மையை நாட்டின் அடையாளத்தின் மையமாக கொண்டுள்ளதாக கூறும் பிரான்ஸ் அரசு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் பாதுகாக்க கருத்துச் சுதந்திரத்தைத் தடுப்பது, ஒற்றுமையைக் குறைத்து மதிப்பிடும் செயல் போன்றது என கூறுகிறது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த இம்தியாஸ், “முஸ்லிம்கள் தங்கள் இறைவன் கட்டளைப்படி தங்கள் உயிரைவிட மேலாக கருதிக்கொண்டிருக்கும் தங்கள் இறைத்தூதரை, யாராவது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கேலி செய்வது, அவர் குறித்து தவறான பிரசாரத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தங்கள் மீது இழைக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்க உதவுவதே கருத்து சுதந்திரமே தவிர, மற்ற மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவது அல்ல” என்று அவர் கூறினார்.

பிரான்ஸ் அரசு முஸ்லிம்களை குறிவைத்து ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறும் அவர், “பிரான்சில் ஹோலோகாஸ்ட் (யூத இனப்படுகொலை) குறித்து மறுப்புத் தெரிவித்து கருத்தை வெளியிட்டால் சிறைத்தண்டனை விதிக்க அங்குள்ள சட்டம் வழிவகை செய்கிறது. ஆனால், இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்டால் அதை கருத்துத் சுதந்திரத்துடன் தொடர்புபடுத்துகிறது. இது பிரான்ஸ் அரசின் ஒருதலைப்பட்சமான செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது” என்கிறார்.

மேலும், முகமது நபிகள் உருவப்பட சர்ச்சை விவகாரத்தை பொறுத்தவரை, பிரான்ஸ் அரசும், இஸ்லாமிய மதத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கருத்துச் சுதந்திரத்திற்கான எல்லைகளை நிர்ணயிப்பதே சரியான முடிவாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

சர்ச்சையின் பின்னணி என்ன?

ஷார்லீ எப்டோ

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை பதிப்பித்ததற்காக 2015ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான பிரெஞ்சு கேலிப் பத்திரிகையான “ஷார்லீ எப்டோ” அந்தக் கேலிச் சித்திரங்களை கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் பதிப்பித்தது.

இதைத்தொடர்ந்து, முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக பிரான்ஸில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி ஆசிரியர் ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்டார்.

பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அப்போது பேசிய அந்த நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், “இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது” என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, துருக்கி மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மக்ரோங், முஸ்லிம்களின் மத அல்லது “நம்பிக்கை சுதந்திரத்தை” மதிக்கவில்லை என்றும் இதன் மூலம் பிரான்சில் உள்ள லட்சக்கணக்கான முஸ்லிம்களை ஓரங்கட்டியதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 29ஆம் தேதி, பிரான்ஸின் நீஸ் நகரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்தனர். நீஸ் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் காவல்துறையினரால் சுடப்படும் முன் “அல்லாஹு அக்பர்” எனக் கத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் ஒரு “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” என பிரான்ஸ் அதிபர் மக்ரோங் தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸுக்கு எதிரான இஸ்லாமிய நாடுகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

இந்த நிலையில், நீஸ் நகரில் தேவாலயம் ஒன்றில் நடந்த மேற்குறிப்பிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது அக்டோபர் 31ஆம் தேதி பிரான்சின் லியான் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தேவாலய பாதிரியார் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். குற்றவாளியை காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »