Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: அமெரிக்க மக்கள் அஞ்சிய ஊழிக் காலம் வந்துவிட்டதா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இழுபறியாக அமையுமானால் எதிர்த் தரப்பான ஜனநாயகக் கட்சியினர் தேர்தல் முறைகேடு செய்ததாகவும், வெற்றியை தம்மிடம் இருந்து திருடிக்கொண்டதாகவும் குற்றம்சாட்டப்போவதை கடந்த சில வாரங்களாகவே குறிப்பால் உணர்த்திவந்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்.

புதன்கிழமை அதிகாலைப் பொழுதில் மிகச்சரியாக அதைத்தான் செய்தார் டிரம்ப்.

இன்னும் பல மில்லியன் வாக்குகள் எண்ணி முடிக்கப்படுவதற்கு முன்பே தாம் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக்கொண்டார் அவர்.

“இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறோம். வெளிப்படையாக சொன்னால், நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம்,” என்று தெரிவித்தார் டிரம்ப்.

எந்த வித ஆதரமும் காட்டாமல் தேர்தல் முறைகேடு நடந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

“நாட்டின்மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய மோசடி இது. சட்டம் முறைப்படியாக பயன்படுத்தப்படவேண்டும் என்று விரும்புகிறோம். எனவே நாங்கள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வோம். எல்லா வாக்களிப்பும் நிறுத்தப்படவேண்டும் என்று கோருவோம்” என்றும் கூறினார் டிரம்ப்.

பிழையானது, அடாவடித்தனமானது, முன்னெப்போதும் காணாதது

ஒவ்வொரு வாக்கையும் எண்ணி முடிக்கும் வரை தேர்தல் முடிவடையவில்லை என்று கூறினார் ஜோ பைடன்.

ஜனநாயக கட்சியினரும், அதிபர் டிரம்ப்பின் கூட்டாளிகள் சிலரும் உடனடியாக எதிர்வினையாற்றினார்கள்.

ஒவ்வொரு வாக்கையும் எண்ணி முடிக்கும் வரை தேர்தல் முடிவடையவில்லை என்று கூறினார் டிரம்ப்பின் போட்டியாளர், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்.

“வெற்றியின் பாதையில் நாங்கள் இருக்கிறோம்,” என்று அவர் அழுத்திக் கூறினார்.

‘டொனால்டு டிரம்பின் கூற்று அடாவடித்தனமானது, முன்னெப்போதும் காணாதது, பிழையானது’ என்று ‘பைடன் ஃபார் பிரசிடென்ட்’ பிரசாரத் திட்டத்தின் மேலாளர் ஜென் ஓ மல்லே தில்லான் கூறினார்.

“அமெரிக்க குடிமக்களின் ஜனநாயக உரிமையை பறித்துக்கொள்ள செய்யப்படும் பச்சையான முயற்சி என்பதால் இது அடாவடியானது,” என்றார் அவர்.

“இதற்கு முன் எந்த அமெரிக்க அதிபரும் தேசியத் தேர்தலில் அமெரிக்கர்களின் குரல் எதிரொலிக்காமல் தடுக்கக் கோரவில்லை என்பதால் இது முன்னெப்போதும் இல்லாதது” என்றார் அவர்.

டிரம்பின் கூற்று சட்டத்துக்குப் புறம்பானது, ஆபத்தானது, எதேச்சதிகாரமானது என்று நாடாளுமன்றத்துக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரியா ஒக்காஷியோ-கார்ட்டெஸ் கூறினார்.

“வாக்குகளை எண்ணுங்கள், முடிவை மதியுங்கள்,” என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

முன்னாள் பென்சில்வேனியா செனட்டரும், ட்ரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ரிக் சான்டோரம் கூட ட்ரம்பின் கூற்று பற்றி கவலை வெளியிட்டிருந்தார்.

டிரம்பின் விமர்சனத்தைக் கேட்டு ” மிகவும் வேதனைப் பட்டதாக” அவர் கூறினார். “மோசடி என்ற சொல்லைப் பயன்படுத்தியது தவறு,” என்று சி.என்.என்.னில் அவர் தெரிவித்தார்.

டிரம்பின் கருத்துகள் “மிகவும் பொறுப்பற்றவை” என்று பழமைவாதக் கருத்தாளரும், டிரம்பின் விமர்சகருமான பென் ஷாப்பிரோ ட்வீட் செய்திருந்தார்.

டிரம்ப் பேசிய பிறகு, அவரது கருத்துகளை மென்மையாகப் பேசி சரி செய்ய முயன்றார் துணை அதிபர் மைக் பென்ஸ். வெற்றி பெற்றுவிட்டதாக அறிவிக்க அவர் மறுத்துவிட்டதோடு, சட்டப்படி செலுத்தப்பட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்படும் என்று அவர் அழுத்திச் சொன்னார்.

சேதாரம் நடந்துவிட்டது

முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவில் ஏராளமான அஞ்சல் வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன.

டிரம்பின் கருத்தால் ஏற்கெனவே சேதாரம் நடந்துவிட்டதாக கூறுகிறார் பிபிசி வட அமெரிக்க செய்தியாளர் அந்தோனி சர்ச்சர்.

“கடைசியாக டிரம்ப் வெற்றி பெறலாம். அல்லது தோற்கலாம். அது எப்படி இருந்தாலும், அமெரிக்க ஜனநாயக இயந்திரத்தையே கேள்விக்குள்ளாக்கியதன் மூலம் இந்த தேர்தலின் மீது அவர் சேறு பூசிவிட்டார்,” என்று குறிப்பிட்டார் சர்ச்சர்.

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) சிக்கலால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க வாக்காளர்கள் அஞ்சல், அல்லது, முன்கூட்டிய வாக்களிப்பு முறையைத் தேர்வு செய்தனர். இதனால், வாக்குகளை எண்ணுவதற்கான நேரம் அதிகரித்தது. சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிய சில நாள்கள் ஆகலாம்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

பல அமெரிக்கர்கள் அஞ்சியபடி அமெரிக்கத் தேர்தல் ஊழிக் காலக் காட்சிக்குள் நுழைந்திருப்பதாக அந்தோனி சர்ச்சர் குறிப்பிடுகிறார். இந்தக் காட்சியில்தான் அமெரிக்க அதிபர், வெள்ளை மாளிகையில் அமர்ந்துகொண்டே வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் வேலையை செய்கிறார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

தேர்தலில் தோற்றால் தோல்வியை ஏற்றுக்கொள்வேன் என்று குறிப்பிட மறுத்தார் டிரம்ப்.

இது, கடந்த சில வாரங்களாக ஓர் அசாதாரண விவாதத்துக்கு வழி வகுத்தது.

ஒரு வேளை தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்தால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பாக உள்ள அமெரிக்க அதிபரை யாரைக் கொண்டு பலவந்தமாக வெளியேற்றுவார்கள்? ஆயுதப் படையினரையா, சீக்ரெட் சர்வீஸ் எனப்படும் ரகசியப் படையினரையா, போலீசையா? யாரை இதற்குப் பயன்படுத்துவார்கள் என்பதே அந்த விவாதம்.

பாதுகாப்பு வேலி

தேர்தலுக்கு முன்னதாக உயர் பாதுகாப்பு வேலி ஒன்று வெள்ளை மாளிகையைச் சுற்றி அமைக்கப்பட்டது.

அரிசோனா, விஸ்கான்சின், மிஷிகன், பென்சில்வேனியா, ஜார்ஜியா ஆகிய விரல்விட்டு எண்ணக்கூடிய மாநிலங்களின் முடிவுகளே இனி அதிபர் யார் என்பதை முடிவு செய்யப்போகின்றன.

சட்டப்படி தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குத் தொடரவேண்டுமானால், முதலில் மாநில நீதிமன்றங்களுக்குச் செல்லவேண்டும். பிறகுதான் உச்சநீதிமன்றம் செல்ல முடியும். எனவே, இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக பல நாள்கள் ஆகலாம்.

அதற்கு முன்னதாக இந்த நிச்சயமற்ற நிலையால் போராட்டம், மோதல் ஆகிய வடிவங்களில் கலவரங்கள் தோன்றலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

US election result 2020

தேர்தல் நாள் முடிவுக்கு வந்த நிலையிலேயே வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்பட நாட்டின் பல பகுதிகளில் நடந்த போராட்டங்களில் மோதல்கள், பதற்றமான காட்சிகள் நிகழ்ந்தன.

“வாக்காளர் மோசடி, தேர்தல் திருட்டு என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எடுத்து வீசுகிறார் டிரம்ப். வெற்றிக்கான பாதையில் இருப்பதாக சொல்கிறார் பைடன். ஒரு காலத்தில் கொடுங்கனவு என்று சொல்லத்தக்க காட்சிகள் உருப்பெருகின்றன,” என்கிறார் சர்ச்சர்.

“கசப்புணர்வும், நீண்ட சட்டப் போராட்டமும் நடந்து முடியும்போது தோற்றவர் தரப்பு ஆத்திரமும், ஏமாற்றப்பட்ட உணர்வையும் கொள்ளும்” என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »