Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: டிரம்ப், பைடன் போட்டி குறித்து அமெரிக்க தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

  • சொர்ணம் சங்கரபாண்டி
  • வாஷிங்டன் டி.சி. , பிபிசி தமிழுக்காக

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக வழக்கமான நேரத்தைவிடக் கூடுதல் நேரம் ஆகியுள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நெருக்கடி காரணமாக அங்கு தபால் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது அதற்கு காரணம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முடிவுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் டிரம்பைவிட சற்று முன்னிலை பெற்றுள்ளார்.

பல இடங்களில் வாக்குப்பதிவை நிறுத்தக்கோரியும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறி டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகாத சூழலில், இது குறித்து அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் சிலரிடம் பேசியது பிபிசி தமிழ்.

டென்னிசி மாநிலத்தில் வசிக்கும் முனைவர் சுந்தரமூர்த்தி கருத்து:

டென்னிசி பொதுவாகவே குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் மாநிலம். 2000-ம் ஆண்டு தேர்தலில் மண்ணின் மைந்தர் என்று சொல்லப்பட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் அல் கோர் கூட தோற்றுள்ளார். அந்த அளவுக்கு இது சிகப்பு (டிரம்பின் குடியரசுக் கட்சியைக் குறிக்கும் நிறம்) மாநிலம். இங்கு எதிர்பார்த்தபடியே அதிபர் டொனால்டு டிரம்ப் அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மூன்று மாநிலங்களை விதியைத் தீர்மானிக்கும்

மாநில வாரியாகப் பார்த்தால் பொதுவாக 2016ல் டிரம்ப் வென்ற மாநிலங்களில் அவரே தற்போதும் வென்றுள்ளார். 2016ல் ஹிலாரி வெற்றி பெற்ற மாநிலங்களில் தற்போது (அவரது ஜனநாயக கட்சி வேட்பாளர்) ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.

ஒரே ஒரு மாற்றம், 2016ல் அரிசோனாவில் வெற்றி பெற்ற ட்ரம்ப் இந்த முறை அங்கே தோற்றுள்ளார். அங்கே பைடன் வென்றுள்ளார். இதைப் போலவே 2016ல் டிரம்ப் வென்ற விஸ்கான்சின், மிஷிகன் ஆகிய மாநிலங்களிலும் பைடன் வெற்றி பெற்றால் அவர் அதிபராக வாய்ப்புண்டு.

முனைவர் சுந்தரமூர்த்தி

இப்படி பைடன் வெற்றி பெற்றால், அதை எதிர்பார்த்தது போலவே டிரம்ப் ஏற்றுக்கொள்ளமாட்டார். தேர்தல் அதிகாரிகளிடம் மறு எண்ணிக்கை கோருவது, நீதிமன்றத்தில் முறையிடுவது என்று அவர் செல்வார். முன்கூட்டி செலுத்தப்பட்ட வாக்குகள், அஞ்சல் வாக்குகள் ஆகியவற்றை நிராகரிக்கும்படி கோருவார்.

ஜனவரி வரை இது இழுத்துக்கொண்டு போகலாம். தேர்தல் ஆண்டில் ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர் பதவியேற்க வேண்டும். எனவே அதற்கு முன்பாக இந்த வழக்குகளில் முடிவு வந்துவிடும். 2000-ம் ஆண்டு தேர்தல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் இப்படித்தான் உச்சநீதிமன்றம் முடிவெடுத்தது. இதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று கூறி ஜனவரி 20க்கு முன்னதாக தீர்ப்பளித்தது என்று கூறினார் முனைவர் சுந்தரமூர்த்தி.

மேரிலாந்து மாநிலத்தைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளரும், ஜோ பைடனுக்கு தன்னார்வலராகப் பணியாற்றியவருமான பச்சை நாயகியிடம், இரு கட்சிக்கும் தெளிவான வெற்றி தோல்வியைத் தராமல் ஊசலாடும் மாநிலங்கள் குறித்தும், டிரம்ப் வெளியிடும் கருத்துகள் குறித்தும் கேட்டது பிபிசி தமிழ்.

‘சிவப்பு மாநிலத்திலும் நேர்மையாகத்தான் எண்ணுகிறார்கள்’

வாக்கு எண்ணிக்கை குறித்து உள்ளூர் அதிகாரிகள்தான் முடிவு செய்யவேண்டும். ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படவேண்டும். இது டிசம்பர் 10ம் தேதி வரை செல்லலாம்.

வாக்கு எண்ணிக்கைகள் வர வர, அதைக் கொண்டு யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தொலைக்காட்சிகள் புரொஜக்ட் செய்யும். ஆனால், டிரம்ப் தேர்தல் நாள் இரவு 2.30 மணிக்கே தான் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துவிட்டுச் சென்றார் டிரம்ப். இது அவரது பக்குவமற்ற முடிவு. ஊசலாடும் மாநிலங்களில் தொடர்ந்து வாக்குகளை எண்ணுகிறார்கள். நவம்பர் 3-ம் தேதி, தேர்தல் நாளன்று, போட்ட வாக்குகளை முதலில் எண்ணுகிறார்கள். ஒரு வாரம் முன்னதாகவே அளித்த வாக்குகள், அஞ்சல் வாக்குகளை பிறகு எண்ணுகிறார்கள். அதிலும் சில சிட்டி வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில், முன்னதாகவே வெற்றி பெற்றதாக அறிவிப்பது சரியில்லை.

ஜனநாயகம் வெல்லவேண்டுமானால் ஒவ்வொரு வாக்கும் எண்ணப்படவேண்டும் என்றார் பச்சை நாயகி.

ஊசலாடும் மாநிலங்களில் ஒருவேளை பைடன் வெற்றி பெற்று, அதிகாரிகள் சான்றளித்த பிறகும், அதை நீதிமன்றம் மாற்றும் வாய்ப்பு உள்ளதா என்று பச்சை நாயகியிடம் கேட்கப்பட்டது.

“சிவப்பு மாநிலம் (டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான மாநிலம்) என்று சொல்லப்படும் இடங்களில்கூட மிக நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் சப்ரஷன் (சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை) இருந்தாலும், நிறைய இடத்தில் தில்லுமுல்லு நடந்தாலும், எல்லாம் சரியாக நடப்பதாக நம்பவேண்டிய தேவை இருக்கிறது.

பச்சை நாயகி

உயர் நீதிமன்றம் போய் அங்கே அப்படி (வெற்றிச் சான்றிதழையே மாற்றி அறிவிக்கும் நிலை) நடந்தால் இந்த நாடு தடம்புரண்டுவிட்டது என்றுதான் வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார் பச்சை நாயகி.

அமெரிக்காவில் தமிழரின் பிரசார அனுபவம்

பைடனுக்கு ஆதரவான பிரசாரப் பணியில் தன்னார்வலராகப் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும்படி அவரிடம் கேட்கப்பட்டது.

“முதலில் தன்னார்வலராகப் பணியாற்றும்படி கேட்டு ஒரு டெக்ஸ்ட் செய்தி வந்தது. கோவிட் காரணமாக வீட்டிலேயேதான் இருப்பதாலும், மாலைக்கு மேல்தான் பிரசாரப் பணி இருக்கும் என்பதாலும் ஒப்புக்கொண்டேன். ஜூம் மீட்டிங் மூலம் பயிற்சியெல்லாம் தந்தார்கள். ஒரு வாரத்தில் சுமார் 50 ஆயிரம் தன்னார்வலர்கள் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு மாலை தொடங்கி ஆயிரம் பேருக்கு டெக்ஸ்ட் தகவல்கள் அனுப்பி பிரசாரம் செய்வார்கள். இப்படி அனுப்பவேண்டிய எண்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்வு செய்திருந்தார்கள்.

நான் மொத்தம் சுமார் 50 ஆயிரம் பேருக்கு டெக்ஸ்ட் செய்தி அனுப்பினேன். ஒரு 300 பேருக்கு அனுப்பினால், 20 சதவீதம் பேர்தான் பதில் அனுப்புவார்கள். நிறைய வசவுகள் வரும். இது வெள்ளைக்கார நாடு நீங்கள் ஓடிப்போங்கள் என்று சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கு “இல்லை, இது குடியேறிகள் நாடு” என்று பதில் சொல்வேன்.

பெண்களைப் பொருத்தவரை ஒரே ஒரு பிரச்சனை அடிப்படையில்தான் அவர்கள் வாக்குகளை தீர்மானிக்கிறார்கள். அது கருக்கலைப்பு தொடர்பான பிரச்சனை. சில பெண்கள் ஜனநாயகக் கட்சியினர் என்றாலே கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள், சிசுக்கொலை செய்வோர் என்று பேசுவார்கள். அவர்களை மாற்றவே முடியாது.

இதுவரை நான் சிறிய வட்டத்தில் இருந்தேன். அமெரிக்கா என்ற பரந்த நாடு எப்படி இருக்கிறது என்பதை இந்த பிரசார அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். நிறைய பொறுமை வேண்டும். நெறியாளர்களை வைத்து நிறைய வழிகாட்டினார்கள்” என்று தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் பச்சை நாயகி.

மேரிலாந்தை சேர்ந்த ஞானவேல் – மைத்ரி தம்பதிகள் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொண்டார்கள். இவர்களில் ஞானவேல் குடியரசுக் கட்சி ஆதரவாளராக இருந்தாலும் ஜோ பைடனுக்கு வாக்களித்தவர். மைத்ரி ஜனநாயக கட்சி சாய்வு உள்ளவர்.

குடியரசுக் கட்சி ஆதரவு இருந்தாலும்கூட கடந்த தேர்தலிலும் தாம் ஜனநாயக கட்சிக்கே வாக்களித்ததாக குறிப்பிட்டார் ஞானவேல்.

எந்தக் கட்சி என்று பார்ப்பதைவிட வேட்பாளரின் தகுதி, கோட்பாட்டைப் பொருத்தே வாக்களிப்பது தமக்கு வழக்கம் என்றும் இந்த அடிப்படையிலேயே இந்த தேர்தலிலும் கடந்த தேர்தலிலும் வாக்களித்ததாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த நான்காண்டுகளில் அவரது நம்பிக்கையைப் பெரும் வகையில் டிரம்ப் ஏதும் நடந்துகொண்டாரா அல்லது ஏற்கெனவே இருந்த அவநம்பிக்கை மோசமாகும் வகையில் நடந்துகொண்டாரா என்று அவரிடம் கேட்கப்பட்டது.

முக்கிய மாகாணமான பென்சில்வேனியாவில் ஏராளமான அஞ்சல் வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளன.

சிலதில் நம்பிக்கை உண்டு என்றாலும், பண்பாடு, மற்றவர்களை மதிக்கும் திறன் ஆகியவற்றுக்கு தாம் முக்கியத்துவம் அளிப்பதால் அந்தப் பண்புகள் இல்லாத ஒருவர் குறிக்கோள், கோட்பாட்டை நல்லவிதமாக நடத்த முடியாது என்று தெரிவித்தார் அவர்.

சில குடியரசுக் கட்சியினர்கூட டிரம்ப் நடந்துகொள்ளும் விதம் பிடிக்கவில்லை என்றாலும் அவரது ஆட்சி நடத்தும் முறை, பொருளியல் கொள்கைகள் ஆகியவற்றுக்காக அவரை ஆதரிப்பதாக கூறுகிறார்களே என்று கேட்டபோது, அதற்கு மைத்ரி பதில் அளித்தார்.

சொல்வதெல்லாம் பொய்

டிரம்பை சுற்றியிருக்கும் ஆலோசகர்களை அவர் சரியாகத் தேர்வு செய்யவில்லை. அவர் சொல்லும் புள்ளிவிவரங்கள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. சில ஊடகம் நிறுவனங்கள் கூறுவதை மட்டுமே அவர் எடுத்துக்கொள்கிறார். பொருளாதார மீட்சி என்று வைத்துக்கொண்டால்கூட அதெல்லாம் ஒபாமா காலத்திலேயே தொடங்கிவிட்டது. இவரும் செய்தார். இந்த மீட்சியெல்லாம்கூட இவரால்தான் நடந்தது என்பதை ஏற்கமுடியவில்லை என்றார் மைத்ரி.

மைத்ரி - ஞானவேல்

அவர் சொல்கிற தவல்கள் எல்லாமே பொய்யாக இருக்கிறது என்றார் ஞானவேல்.

கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தது, தங்கள் வாக்குகளைத் தீர்மானிப்பதில் தாக்கம் செலுத்தியதா என்று கேட்டபோது, ஆம் என்று கூறினார் மைத்ரி.

“இரண்டாவது இடத்துக்கு ஒரு பெண் வருவார் என்பதாலும், அவரது ஆஃப்ரோ, இந்திய பின்புலத்தால் பிற்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு அது ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்பதாலும் அவர் வெல்லவேண்டும் என்று விரும்பினேன்” என்று கூறினார் மைத்ரி.

‘ஜனநாயக கட்சி வெல்லும் வரை எண்ணுவார்கள்’

டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்த முனைவர் சிதம்பர தாணுப்பிள்ளை தேர்தல் சர்ச்சைகள் குறித்து தமது கருத்தைத் தெரிவித்தார்.

“43 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருக்கிறேன். ஆனால், எந்தக் கட்சியிலும் இருந்தது இல்லை. 15 ஆண்டுகளுக்கு முன்புவரை ஜனநாயக கட்சியையே பெரும்பாலும் ஆதரித்து வந்தேன். ஜனநாயக கட்சி பெருமளவில் இடதுசாரிப் பாதைக்கு சென்ற பிறகு அதனை எதிர்த்தேன். புஷ் இராக்குக்கு சென்றதைக் கூட எதிர்த்தேன். ஒபாமாவை அதைவிட அதிகமாக எதிர்த்தேன். 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயக கட்சிக்கோ, குடியரசுக் கட்சிக்கோ ஆதரவாக அல்லாமல் டிரம்புக்கு என்று வாக்களித்தேன்” என்றார் அவர்.

முனைவர் சிதம்பர தாணுப்பிள்ளை

தற்போதைய தேர்தல் சர்ச்சை குறித்துப் பேசிய அவர், “கோவிட்டை காரணம் காட்டி, பல மாநிலங்கள், ஜனநாயக கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்கள், வாக்களிப்பு விதிகளை மாற்றிவிட்டன. கலிஃபோர்னியாவில் பேலட் ஹார்வஸ்ட்டிங் நடப்பதாக கேள்விப்பட்டேன். குடியரசுக் கட்சி முன்னிலையில் இருந்தாலும் எண்ணிக்கொண்டே இருப்பார்கள். வாக்குகள் வந்துகொண்டே இருக்கும். ஜனநாயக கட்சி முன்னிலை பெறும் வரை வாக்கு எண்ணுவார்கள். அந்த நிலை பல மாநிலங்களில் இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

நேற்றுகூட வட கரோலினாவில் 94 சதவீத வாக்குகள் எண்ணிய பிறகு நிறுத்திவிட்டார்கள். ஜோர்ஜா, அரிசோனாவிலும் அதே நிலைதான். இப்படிப் பல நாள்கள் நீடிக்கும்போது ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. நான் கேள்விப்பட்டது உண்மையா என்று தெரியாது. ஆனால், மிஷிகனில் 1.30 லட்சம் வாக்குகள் தனியாக இருந்ததாகவும், அவை அனைத்துமே பைடனுக்குப் போடப்பட்டவை என்றும் கூறினார்கள். ஃப்ளோரிடாவில்கூட முன்கூட்டியே வாக்குகள் போட்டார்கள். அஞ்சல் வாக்குகளும் இருந்தன. ஆனால், இவை அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பிற மாநிலங்களில் ஏன் இப்படிச் செய்ய முடியவில்லை?” என்றார் சிதம்பர தாணுப் பிள்ளை.

அஞ்சல் வாக்கு முறையை தாம் எதிர்க்கவில்லை என்றும், தாம்கூட அஞ்சல் வாக்கே செலுத்தியதாகவும் கூறிய அவர், அஞ்சல் வாக்குகள் வேண்டும் என்று பதிவு செய்யாதவர்களுக்கும் வாக்குகளை அனுப்பும்போது முறைகேடு நடப்பதாக கூறினார்.

இது இனவாத நாடா?

மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு படிக்கும் காவியாக குமரன், இளைஞர்களின் பிரதிநிதியாகப் பேசினார்.

மாணவி காவியா குமரன்

யாருக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு என்று கேட்டபோது, இப்போதைய சூழ்நிலையில் பைடனே வேற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று தாம் உறுதியாக நம்புவதாக அவர் கூறினார். ஆனால், நீல அலை அடிக்கும், பைடனுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனதை கவலையோடு அவர் பகிர்ந்துகொண்டார்.

இதனால் அமெரிக்கா உண்மையில் ஓர் இனவாத நாடோ என்று எண்ணத் தோன்றுவதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளையின மேன்மை, இனவாதம் எல்லாம் பேசிய டிரம்புக்கு இவ்வளவு வாக்குகள் வந்திருப்பதை வைத்து இப்படித் தோன்றுவதாக அவர் கூறினார்.

இளைஞர்கள் அதிகமாக இருப்பதால், அவர்களெல்லாம் ஜனநாயக கட்சியை ஆதரிப்பதால் பைடனுக்கு முன்னிலை என்ற கருத்தை அவர் மறுத்தார்.

தமது மாநிலம் ஒரு ஜனநாயக கட்சி ஆதரவு மாநிலம் என்றாலும், தம்முடைய நண்பர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் ஜனநாயக கட்சியை ஆதரிப்பார்கள் என்ற எண்ணம் தமக்கு இருந்ததாகவும் ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்பதை உணர்ந்துகொண்டதாகவும் அவர் கூறினார்.

இளைஞர்கள் மத்தியில் இரண்டு தரப்புக்கும் ஆதரவு பிரிந்தே இருப்பதாக கூறினார் காவியா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »