Press "Enter" to skip to content

அமெரிக்கத் தேர்தல் குழப்பத்திலும் சில நன்மைகள்: பட்டியலிடும் அமெரிக்க தமிழர்கள்

வழக்கத்துக்கு மாறாக அமெரிக்க தேர்தல் முடிவு வெளியாவது, பல நாட்களுக்குத் தள்ளிப் போகும் சூழ்நிலையும், அதற்குப் பிறகும் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தில் முடியும் சூழ்நிலையும் உருவாகியிருக்கிறது.

அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஒருவரே கருத்து தெரிவித்திருப்பதாகவும், இது அந்நாட்டு ஜனநாயகத்தின் அடிப்படை உணர்வுக்கே எதிரானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆதாரமில்லாமல் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், வாக்குகள் எண்ணி முடிக்கப்படும் முன்பே தாம் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் ஒருவர் அறிவித்திருப்பதை அந்நாட்டில் பலரும் அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள். இது கலவரத்தில் போய் முடியுமோ என்ற அச்சமும் உள்ளது.

ஒருவேளை அதிபர் டிரம்ப் தேர்தலில் தோற்று, நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் அவர் வெளியேற மறுத்தால் என்ன ஆவது? இதுபோன்ற அசாதாரண விவாதங்கள் எழுந்துள்ளன.

இது அமெரிக்க தேர்தல் முறையின் பலவீனங்களை வெளிச்சம்போட்டுக் காட்டிவிட்டதாக பல கூற்றுகள் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் தமிழர் ராம் மகாலிங்கம் இந்த தேர்தலில் குழப்பங்களுக்கு மத்தியில் சில நல்ல விஷயங்களும் நடந்திருப்பதாகப் பட்டியலிடுகிறார்.

ராம் மகாலிங்கம்

தமது வெற்றியைத் திருடுகிறார்கள் என்று அதிபர் டிரம்ப் வைக்கும் குற்றச்சாட்டை “ஒரு சதிக்கோட்பாடு” என்று பார்க்கும் பேராசிரியர் மகாலிங்கம், சதிக் கோட்பாடு – இடதுசாரிகள், வலதுசாரிகள் என இரண்டு தரப்புக்குமே உரியது என்கிறார்.

இடதுசாரிகளைப் பொறுத்தவரை அரசு நிறுவனங்கள் அனைத்தையும் இப்படி சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வகையில், அந்த சதிக் கோட்பாடு அமைந்திருக்கும் என்று கூறும் அவர், “அவர்களின் கோட்பாட்டில் தர்க்கம் இருக்கும். அவர்கள் கூற்றுக்கு மாற்றாக, அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்பதை அவர்களிடம் விளக்க முடியும். அவர்களிடம் உரையாடல் சாத்தியம்,” என்கிறார் அவர்.

இது உளவியல் சிக்கல்

ஆனால், வலதுசாரிகளிடம் இத்தகைய ஒரு சதிக்கோட்பாடு ஒரு உளவியல் பிரச்சனையாகவே இருக்கும். தொடர்பற்ற பல விஷயங்களைத் தொடர்புபடுத்தி தமக்கு எதிராக சதி நடப்பதாகப் பார்ப்பார்கள். டிரம்பின் கூற்றும் இத்தகை ஒரு இருத்தலியல் சிக்கல் தொடர்பானதுதான் என்கிறார் அவர்.

அரிசோனா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக்குங்கள் என்ற பாதாகை ஏந்திப் போராடினார்கள்.

இதைத் தவிர்த்துவிட்டு, இந்த தேர்தலால் நடந்த நன்மையாக அவர் இடும் பட்டியலில் முதன்மையானது, தமது மிஷிகன் மாகாணத்தில் கிராமப்புறத்தில் இருந்து நிறைய பேர் வழக்கத்துக்கு மாறாக வாக்களிப்பில் பங்கேற்றார்கள் என்பதாகும்.

“அவர்கள் பெரும்பாலும் வலதுசாரிகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். ஆனால், அவர்களின் பங்கேற்பு முக்கியமானது” என்கிறார் மகாலிங்கம். இதைத் தவிர, வலதுசாரிகள், இடது சாரிகள், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்புமே அதிகமாக இந்தத் தேர்தலில் பங்கேற்றனர் என்கிறார் அவர்.

அடுத்த நன்மையாக அவர் கூறுவது அஞ்சல் வழியில் வாக்களிப்பது மிகச் சாதாரண ஒன்றாக இந்த தேர்தலில் மாறிவிட்டதைத்தான்.

அஞ்சல் வாக்கு பற்றிய மனத்தடை உடைந்தது

“இதற்கு முன்பும் அஞ்சல் வாக்குகள் இருந்தன. ஆனால், அதை எப்படிச் செய்வது என்பதில் மனத்தடை இருந்து வந்தது. கோவிட் காரணமாக இந்த தேர்தல் அந்த மனத்தடையை உடைத்துள்ளது. மக்கள் வாக்களிப்பதை எப்படியெல்லாம் தடுக்கலாமோ அப்படியெல்லாம் தடுப்பது இந்த நாடு. உலகின் எல்லா நாடுகளிலும் தேர்தல் வாக்களிப்பு நாளில் விடுமுறை உண்டு. ஆனால், அமெரிக்காவில் வாக்களிப்பு நாளில் விடுமுறை இல்லை.

வாக்களிப்பு வார நாளில் நடக்கும். எனவே, அஞ்சல் வழியில் வாக்களிக்கலாம் என்று மனநிலை மாறியிருப்பது முக்கியமானது” என்கிறார் ராம் மகாலிங்கம்.

வாக்கு எண்ணிக்கை.

“அடுத்தபடியாக, ஊடகங்களின் செய்தி தாகத்துக்காக அன்றே முடிவுகளை அறிவிக்க வேண்டும், பெற வேண்டும் என்ற அழுத்தம் இருக்கும். இப்போது நிலவும் சூழ்நிலையால் முடிவு வெளியாக சில நாட்களானாலும், கடைசி வாக்கும் எண்ணப்பட்ட பிறகே தேர்தல் முடிவை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. இதுவும் நல்லதுதான்,” என்கிறார் அவர்.

‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ போன்ற ஒரு இயக்கத்தால் சமூக மாற்றத்துக்கு தங்களால் பங்களிக்க முடியும் என்ற உத்வேகம் இளைஞர்களிடம் வந்ததும், இந்த தேர்தலில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பு அதிகரிக்க காரணம். நாம் வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்பது போன்ற ஒரு அசட்டை மனநிலை இதனால் மாறியிருக்கிறது. இது முக்கியமானது என்கிறார் அவர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் டிரம்ப் வெளியேறாமல் போனால் என்னவாகும் என்ற கேள்விக்கு, “கடைசியில் அவர் வெளியேறிவிடுவார்” என்று நம்பிக்கை தெரிவித்தார். இது முதலாளித்துவ நாடு. இங்கே அப்படி நடந்துகொண்டால், பங்குச் சந்தையை அது பாதிக்கும். எனவே, தொழில்துறையில் இருந்து அழுத்தம் வரும். வெளியே போகும் நேரத்தில் இப்படி ஒரு பிம்பக் கட்டமைப்பு செய்துவிட்டு சென்றால் அதை தொடர்ந்து தக்கவைக்கலாம் என்பதற்காக டிரம்ப் இப்படி செய்வார். ஆனால், மனதார ஏற்காவிட்டாலும், கடைசியில் பைடன் வெற்றி பெறும் நிலையில் கொஞ்சம் சத்தம் எழுப்பிவிட்டு விலகிவிடுவார் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘இந்த தேர்தலில் என்னவேண்டுமானாலும் நக்கும்’

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழரும் வழக்குரைஞருமான கவிதா பாபுவிடம், இந்த தேர்தல் சிக்கலின் சட்ட அம்சங்கள் குறித்து கேட்கப்பட்டது.

பைடன் வெற்றி பெற்றால், டிரம்ப் குறிப்பிடுவதைப் போல நேரடியாக உச்சநீதிமன்றத்துக்கு செல்ல முடியாது. மாநில நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்ப்பைப் பெற்ற பிறகே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும் என்று கூறினார் அவர்.

கவிதா பாபு

முன்பு ஒரு முறை டிரம்ப் பென்சில்வேனியா தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு சென்றபோதும் உச்சநீதிமன்றம் முதலில் மாநில நீதிமன்றத்துக்கு செல்லும்படி பணித்தது. இப்போதும் பென்சில்வேனியா தேர்தல் தொடர்பாகவே டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார். வாக்குகள் எண்ணி முடிக்கும் வரை அவர்கள் முடிவு ஏதும் எடுக்கமாட்டார்கள் என்றே தாம் நினைப்பதாக குறிப்பிட்டார் கவிதா.

ஒருவேளை மாநில நீதிமன்றங்களில் தாமதம் செய்து, ஜனவரி 20 காலக்கெடுவுக்குள் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தீர்க்கமுடியாத நிலை ஏற்படுமா என்று கேட்டபோது, இந்த காலக்கெடுவுக்குள் முடிவை எட்டும் வகையில் மாநில நீதிமன்றங்களுக்கு கெடு விதிக்கலாம். ஆனால், அந்த கெடுவை யார் விதிக்க முடியும் என்றுதான் தெரியவில்லை என்றார் அவர்.

ஒரு அமெரிக்கராக இத்தகைய நிலைமைகளைப் பார்க்க எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, “வருத்தமாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், முன்பு உலக முன்னோடியாக இருந்த இந்த நாட்டின் அதிபரைப் பற்றி குறிப்பிட்டால் மற்றவர்கள் சிரிக்கிறார்கள். உங்கள் நாட்டு மக்களை இப்படி நடத்தவேண்டும் என்று மற்ற நாடுகளைப் பார்த்து சொல்வதற்கு இனி அமெரிக்காவுக்குத் தகுதி இல்லை என்பது வருத்தம்தான்.

ஒருவேளை பைடன் வென்று உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை உறுதி செய்த பிறகும் ட்ரம்ப் வெளியேற மறுத்தால் அதற்கு என்ன தீர்வு என்று கேட்டபோது, இந்த ஆண்டு தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று குறிப்பிட்ட அவர், சட்டத்தில் அது தொடர்பாக ஏதும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

நம்பிக்கை அளிக்கிறார் கமலா ஹாரிஸ்

இங்கே இனவாதத்தை நான் நேரடியாக உணரவில்லை. ஆனால், டிரம்ப்பின் இனவாத பேச்சுகளுக்குப் பிறகும் சுமார் 75 மில்லியன் பேர் டிரம்புக்கு வாக்களித்துள்ளார்கள். ஆகவே இங்கே இனவாதம் இருக்கிறது என்பதுதான் பொருள்” என்றார் கவிதா.

ஆனால், தம்மைப் போலவே தமிழராகப் பிறந்து வழக்குரைஞராக இருந்த கமலா ஹாரிஸ் அடைந்திருக்கிற உயரம் பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இது இனி அமெரிக்க சட்டக்கல்லூரிகளில் படிக்கிற தமிழ் மாணவர்களுக்கு நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையை இது அளிக்கும் என்றார்.

‘தேர்தல் முறையின் குளறுபடிகள் களையப்படவேண்டும்’

அமெரிக்காவில் வசிக்கும் மாதவி சங்கர் என்ற மருத்துவக் கல்லூரி மாணவியிடம் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கேட்டபோது, பைடன் வெல்வதற்கே வாய்ப்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாதவி சங்கர்

தற்போது அஞ்சல் வாக்குகளைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். புள்ளிவிவரப்படி அஞ்சல் வாக்குகள் பெரும்பாலும் ஜனநாயக கட்சிக்கே சாதகமாக உள்ளன. அத்துடன் நகரப் பகுதி வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இவையும் பைடனுக்கு சாதகமாகவே இருக்கும் என்று குறிப்பிட்டார் மாதவி.

2016ஐப் போலவே இந்தமுறையும் தங்கள் நண்பர்கள் தேர்தல் முடிவு குறித்து பதற்றமாகவே விவாதிப்பதாகவும், ஆனால் நிச்சயமாக இந்த முறை பைடனே வெற்றி பெறுவார் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், பைடன் வெற்றி பெற்றால் மட்டுமே இனவெறி ஒழிந்துவிடாது. அதற்கு நீண்டகாலம் வேலை செய்யவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு வளர்ந்த நாடான அமெரிக்காவில் தேர்தல் முறையில் உள்ள குளறுபடிகள் தற்போது வெளிப்பட்டுள்ளதாகவும், அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்கள் இந்த குளறுபடிகளைக் களையவேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »