Press "Enter" to skip to content

டிரம்ப் Vs பைடன்: ‘அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மேம்படும்’

  • ஜூபைர் அகமது
  • பிபிசி செய்தியாளர்

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் மாளிகைக்கு திரும்பினாலும் சரி அல்லது ஜோ பைடன் புதிய அதிபராக நுழைந்தாலும் சரி – இந்தியாவுடனான அந்நாட்டு உறவுகளில் அதிக மாற்றம் இருக்காது. இதற்கு முக்கிய காரணம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஜனநாயக கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையே அதிக வேறுபாடு இல்லை.

இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் இடையிலான இணக்கமான உறவைப் பார்க்கும்போது, பைடன் அமெரிக்காவின் அதிபரானால், உறவுகள் அப்படியே இருக்குமா என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களுக்கும், அமெரிக்காவின் அடுத்த அதிபரைப் பற்றி அதிக உற்சாகமோ கவலையோ இல்லை.

இந்திய வெளியுறவு அமைச்சகம் நிச்சயமாக அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் அக்கறை கொண்டுள்ளது. ஆனால் அது ஆர்வத்தின் மட்டத்தில்தான் அதிகம் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது குறித்து இந்திய அரசு அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

'அமெரிக்க அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவுடனான உறவு மேம்படும் '

ஆட்சி மாற்றம், இந்த பகுதியின் நிலைமையை மாற்றாது. எனவே அமெரிக்கா அதன் முன்னுரிமைகளையும் மாற்றாது. டிரம்ப் மற்றும் பைடனின் வெளியுறவுக் கொள்கைகளை செயல்படுத்தும் முறைகள் வேறுபடுவது நிச்சயமாக சாத்தியம்தான். ஆனால் நோக்கம் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

பைடன் முக்கியமான சர்வதேச பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தைப் பெறுவதில் நம்பிக்கை கொண்டவர் என்று ஜனநாயகக் கட்சி மற்றும் ஜோ பைடன் பற்றிய வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் ஒருதரப்பான முடிவுகளை எடுப்பவர் என்று அவர் மீது குற்றம்சாட்டப்படுகிறது.

தற்போது, அமெரிக்காவின் மிகப்பெரிய கவலை சீனா. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் அனைத்து தலைவர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, டிரம்பாக இருந்தாலும், பைடனாக இருந்தாலும், சீனாவின் வளர்ந்து வரும் உலகளாவிய ஆதிக்கத்தை குறைப்பதும், தற்போது நடந்து கொண்டிருக்கும் ‘கட்டண போரை’ எதிர்த்துப் போராடுவதும் அவர்களது முன்னுரிமையாக இருக்கும்.

பைடன்

டிரம்பின் சகாப்தத்தில் சீனாவுடனான உறவுகள் மோசமடையத் தொடங்கியிருந்தாலும் கூட சீனா ஒருவேளை டிரம்ப் பக்கம் சாயக்கூடும். ஏனென்றால் சீனா டிரம்பை அதிகம் விரும்புகிறது என்று முன்னாள் இந்திய தூதர் பினாக் ரஞ்சன் சக்ரவர்த்தி, பிபிசியுடனான உரையாடலின்போது தெரிவித்தார்.

“அது (சீனா) டிரம்ப் பற்றி மகிழ்ச்சிப்பூர்வமாக இல்லை என்று சொல்லமுடியாது. அவர்களுக்கு இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் டிரம்ப் , ஒப்பந்தங்களை செய்து முடிப்பவர் என்பதை சீனா புரிந்துகொண்டுள்ளது. ஆகவே டிரம்புடன் தன்னால் ஒப்பந்தங்களை செய்துகொள்ளமுடியும் என்று அந்த நாடு கருதுகிறது,” என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்க-சீனா பதற்றம் மற்றும் இந்தியா

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் பதற்றம் பைடனின் வருகைக்குப் பிறகும் தொடரும் என்றும் இதை மனதில் வைத்துக் கொள்வது இந்தியாவுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவும் சீனா மீது கவனம் செலுத்துகிறது. கிழக்கு லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் இந்தியாவின் எல்லைக்குள் நிகழ்ந்ததாக சொல்லப்படும் அதன் சட்டவிரோத ஊடுருல் ஆகியவை இதற்கான காரணங்கள்.

சீனாவுக்கு எதிரான தனது நடவடிக்கையில் இணையுமாறு அதிபர் டிரம்ப் இந்தியாவையும் அழைத்திருக்கிறார். அமெரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் கூர்ந்து கவனித்தால், சீனாவை இந்தியா சமாளிக்கும் விதமானது, டிரம்ப் நிர்வாகத்திலிருந்து சற்று வித்தியாசமானது என்பதை நாம் உணரலாம்.

அமெரிக்க-சீனா பதற்றம் மற்றும் இந்தியா

“சீனாவைப் பற்றி இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உள்ளது. ஆனால் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சில காலம் முன்பு கூறியதை நினைவுபடுத்திப்பாருங்கள். அமெரிக்காவின் கண்களால் எங்களை பார்க்காதீர்கள் என்று அவர் சீனாவிடம் கூறினார்,” என்று முன்னாள் இந்திய தூதர் சுரேந்திர குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

“இந்த நேரத்தில், அமெரிக்காவின் இரு கட்சிகளும் சீனாவை வெறுக்கின்றன. அமெரிக்காவின் அடிப்படை நோக்கம் , கட்டண போரை எதிர்த்து சமாளிப்பது மட்டுமல்ல, சீனாவின் உலகளாவிய ஆதிக்கத்தைத் தடுப்பதும் ஆகும். தனது ‘மாபெரும் வல்லரசு ‘ அந்தஸ்தை சீனா தட்டிப்பறிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா நினைக்கிறது. நீங்கள் அதை நிறுத்த முடியாவிட்டாலும் அதை நிச்சயமாக தாமதப்படுத்தலாம். இது இந்தியாவின் நோக்கம் அல்லவே அல்ல. நமது எல்லையில் அமைதி நிலவுவதையும், நமது அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறுகிறார்.

பிரதமர் நரேந்திர மோதி எல்லையில் பதற்றம் பற்றி குறிப்பிட்ட போதெல்லாம், நேரடியாக அவர் சீனாவின் பெயரை குறிப்பிடாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம். இதற்காக அவர் விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிட்டது. மோதி அரசின் சிந்தனை என்னவென்றால், சீனா ஒரு அண்டை நாடு. அதனுடன் பதற்றத்தை தொடர்வது எந்த வகையிலும் இந்தியாவின் நலனுக்கு ஏற்றதாக இருக்காது என்பதுதான்.

அமெரிக்காவைப் போலவே, இந்தியாவும் பிற நாடுகளும், நாட்டின் நலனுக்காகவே வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கின்றன என்று முன்னாள் இந்திய தூதரும், மும்பையைச் சேர்ந்த ‘கேட்வே ஹவுஸ்’ சிந்தனைக் குழு உறுப்பினருமான நீலம் தேவ் கூறுகிறார்.

“சீனாவுடன் நெருக்கமாக இருப்பது தேசிய நலனுக்கு ஏற்றது என்று இந்திய அரசு கருதினால், அமெரிக்க அதிபராக யார் வந்தாலும் அதன் காரணமாக இந்தியாவுக்கு அதிக வித்தியாசம் ஏற்படாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

“அமெரிக்கத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், இந்தியா அமெரிக்காவுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அது சீன எதிர்ப்புடன் நடத்தப்படக்கூடாது,” என்று ஸ்வீடனின் உப்சாலா பல்கலைக்கழகத்தில் ‘அமைதி மற்றும் போராட்டம்’ என்ற பாடப்பிரிவில் கற்பிக்கும் பேராசிரியர் அஷோக் ஸ்வைன் கூறுகிறார்.

கடந்த ஆறு மாதங்களில் சீனா தொடர்பான அனைத்து விஷயங்களையும் பார்க்கும்போது, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெரிகிறது. இது இந்தியாவுக்கு நிம்மதி தரும் ஒரு விஷயம். சீனா மீது நெருக்குதல் கொடுக்க இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும் என்று விவேகானந்தா அறக்கட்டளை சிந்தனைக் குழுவின் ஜனநாயகம் குறித்த நிபுணர் ஏ.சூர்ய பிரகாஷ் கூறுகிறார்.

டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோதியும் அதிபர் டொனால்ட் டிரம்பும் தங்களுக்கிடையே நல்ல உறவைக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி, அதிபர் டிரம்ப் , குஜராத்தில் மாபெரும் பேரணி ஒன்றில் உரையாற்றினார். டொனால்ட் டிரம்பை சிறப்பிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோதி, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நேரத்தில் அதிபர் டிரம்ப், ” இது (இருதரப்பு உறவுகள்) இப்போது இருப்பதைப் போல, ஒருபோதும் சிறப்பாக இருந்ததில்லை” என்று கூறினார்.

நீலம் தேவின் பார்வையில், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு கடந்த 20 ஆண்டுகளாக சீராக முன்னேறி வருகிறது. “தற்போதைய அதிபர் உள்வரும் அதிபருக்காக, இந்தியாவுடன் சிறந்த உறவை ஏற்படுத்தி வருகிறார்,” என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, பனிப்போர் காலத்தில் இருந்து சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு வரை, அணிசேரா அடிப்படையில் அமைந்திருந்தது. ஆனால் 1996 ல் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000 வது ஆண்டில் இந்தியாவுக்கு ஒரு வரலாற்று பயணம் மேற்கொண்டார். இந்த நேரத்தில், அமெரிக்காவை நோக்கி இந்தியாவை ஈர்க்க அவர் மாபெரும் முயற்சியை மேற்கொண்டார்.

அவர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. ஒரு அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு மேற்கொண்ட மிக நீண்ட பயணம் இது (ஆறு நாட்கள்). இது இந்திய-அமெரிக்க உறவுகளில் ஒரு திருப்புமுனையாகக் காணப்படுகிறது.

முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய பயணத்தின் போது , அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான செயல் தந்திர உறவுக்கு ஆழத்தை சேர்த்தது. அவர் குடியரசுக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஆவார். இதேபோல், இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் அருகாமையை பிரதிபலிக்க்கும் விதமாக ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்தியாவுக்கு இரண்டு முறை பயணம் மேற்கொண்டார்.

காஷ்மீர் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சனை

ஜோ பைடனும் அவரது கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும் காஷ்மீர் மற்றும் மனித உரிமைப் மீறல் தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்கள், இந்திய அரசுக்கு ஏற்புடையதாக இல்லை.

ஹாரிஸ் சென்னையில் பிறந்த சியாமளா கோபாலனின் மகள். இவரது தந்தை ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான உறவுகளுக்கு ஹாரிஸ் பெயர் பெற்றவர். ஆனால் அவர் காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப்பட்டது மற்றும் அதன் பின்னர் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டு இந்திய அரசை விமர்சித்தார்.

2019 அக்டோபர் 29 ஆம் தேதியன்று ஹாரிஸ், “காஷ்மீர் மக்கள் உலகில் தனியாக இல்லை என்பதை நாம் நினைவுபடுத்த வேண்டும். நிலைமையை நாங்கள் கண்காணித்து வருகிறோம். நிலைமை மாறினால் தலையிட வேண்டிய அவசியம் இருக்கும்” என்றார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ப்ரமீளா ஜெய்பால் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஜெய்பாலுக்கு தனது ஆதரவை ஹாரிஸ் அளித்தார்.

ஹாரிஸ்

ஜெய்பால் முன்னதாக பிரதிநிதிகள் சபையில், காஷ்மீர் பிரச்சனை தொடர்பான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். ஜோ பைடனும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) விமர்சித்து வருகிறார்.

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஜனநாயகக் கட்சியில் நிச்சயமாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இவை ஜனநாயகக் கட்சியின் முந்தைய அதிபர்களின் ஆட்சிக்காலத்திலும் எழுப்பப்பட்டன. இருந்தபோதிலும் , இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் தொடர்ந்து வளர்ந்தன என்று நீலம் தேவ் கூறுகிறார்.

இந்திய-அமெரிக்க உறவுகள் கடந்த இரண்டு தசாப்தங்களில் வலுவடைந்துள்ளன. நீலம் தேவ் கருத்துப்படி, அமெரிக்காவில் அதிகார மாற்றம் ஏற்பட்டாலும் இந்தியா , அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பராமரிக்கவேண்டும்.

“அமெரிக்காவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் உறவில் வளர்ச்சி தொடரவும் , வேகம் அதிகரிக்கவும் நான் விரும்புகிறேன். சீனாவின் நிலைப்பாடு மிகவும் ஆக்ரோஷமாகிவிட்டதால், பாதுகாப்பு மற்றும் செயல்தந்திர விஷயங்களில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு மேலும் முன்னெற வேண்டும், வலுவாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் யாராக இருந்தாலும், முன்னோக்கி கொண்டு செல்லும் அளவிற்கு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார, ராணுவ, அரசியல் மற்றும் தூதாண்மை உறவுகள் மிகவும் ஆழமடைந்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்த 50 அலுவல்குழுக்கள் உள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த அலுவல் குழுக்களின் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பலமுறை இவற்றில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், அவற்றைக் கடக்கவும் ஒரு வழிமுறை உள்ளது.

உறவின் இந்த ஆழம் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் சாதகமானது. எனவே, அடுத்த அதிபர் யாராக இருந்தாலும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு தொடர்ந்து முன்னேறும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »