Press "Enter" to skip to content

அமெரிக்க தேர்தல்: 71 சதவீத வாக்கு பெற்ற தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி – யார் இவர்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து, அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகும் நிலையில் இருக்கிறார். ராஜா கிருஷ்ணமூர்த்தி நின்ற தொகுதியில், சுமாராக 85 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. அதில் 1,54,094 (71.45 %) வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துவிட்டார்.

இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டியது தான் பாக்கி. கடந்த நவம்பர் 2016 தேர்தலிலும், இதே தொகுதியில் இருந்து தான் அமெரிக்க காங்கிரஸுக்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது நினைவுகூறத்தக்கது.

இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தைப் பெற்று இருக்கும் ராஜா கிருஷ்ணமூர்த்தி யார்? என்ன படித்து இருக்கிறார்? இவர் செய்த பணிகள் என்ன? வாருங்கள் பார்ப்போம்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி, 19 ஜூலை 1973- அன்று டெல்லியில் பிறந்தவர். தன் பெற்றோர் வழியாக அமெரிக்கா வந்தவர். இவரது பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது 47 வயதான இவர், பெயோரியாவில் இருக்கும் ரிச்வுட் பள்ளியில் தான் படித்தார்.

உதவித் தொகை மற்றும் மாணவர்களுக்கான கடன் மூலம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து,1995-ம் ஆண்டு, இயந்திரப் பொறியியலில் பட்டம் பெற்றார். அதன் பின், 2000-ம் ஆண்டில், ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் இருந்து ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

பட்டம் பெற்ற பின் ஃபெடரல் நீதிபதியிடம் ஒரு எழுத்தராக தன் வாழ்கையைத் தொடங்கினார். அதன் பிறகு தான், சிகாகோவில் வழக்கறிஞராக பணியாற்றத் தொடங்கினார்.

வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டு இருக்கும் போதே, மெல்ல பொது வாழ்கையில் ஈடுபடத் தொடங்கினார். இல்லினாய்ஸ் அட்டர்னி ஜெனரலாக இருந்த லிசா மடிகன், 2006 – 07 ஆண்டுகளில், ராஜாவை சிறப்புத் உதவி அட்டர்னி ஜெனரலாக நியமித்தார்.

இல்லினாய்ஸ் மாகாணத்தின் பொது நேர்மை யூனிட்டைத் தொடங்க உதவுவது தான் ராஜாவின் வேலையாக இருந்தது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஊழலை ஒழிப்பது தான் இந்த யூனிட்டின் நோக்கம்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின், 2004 மற்றும் 2008 பிரச்சாரங்களின் போது, பிரச்சார ஊழியராக பணியாற்றி இருக்கிறார்.

2005 – 2007 கால கட்டத்தில், இல்லினாய்ஸ் வீடுகள் மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றி இருக்கிறார். இங்கு பணியாற்றிய போது, தணிக்கைக் குழுவின் தலைவராக இருந்தார். ஆயிரக் கணக்கான ஏழை எளிய மக்களுக்கு, மலிவு விலையில் வீடு கிடைக்க உதவினார்.

இல்லினாய்ஸ் மாகாணத்தின் துணை பொருளாளராக 2008 – 09 காலத்தில் இருந்து இருக்கிறார். இந்த பதவியில் இருந்த போது, மாகாணத்தின் தொழில்நுட்ப வெஞ்சர் கேப்பிட்டல் நிதியை கவனித்துக் கொண்டார். இந்த பதவி காலத்தில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் உரிமை கோரப்படாத சொத்துக்கள் திட்டத்தை புதுப்பிக்க உதவினார். அரசு தரப்பைத் தவிர, ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு, தனியார் துறையிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

ராஜா, இல்லினாய்ஸ் மாகாணத்தின், புதிய கண்டு பிடிப்புகள் சபையின் துணைத் தலைவராக பதவி வகித்து இருக்கிறார். InSPIRE என்கிற லாப நோக்கற்ற அமைப்பை நிறுவி இருக்கிறார். இந்த அமைப்பின் வழியாக மாணவர்களுக்கு சோலார் தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி அளிக்கிறார்கள்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி

ராஜா கிருஷ்ணமூர்த்தி, தற்போது ஹவுஸ் இண்டெலிஜென்ஸ் குழுயிலும், மேற்பார்வை குழுயிலும் இருக்கிறார். பொருளாதாரம் மற்றும் நுகர்வோர் கொள்கை என்கிற துணை குழுயின் தலைவராகவும் இருக்கிறார். இது போல இன்னும் பல முக்கிய குழுகளில் இருக்கிறார்.

நடுத்தரக் குடும்பங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது, சிறு வியாபாரங்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை வலுப்படுத்துவது, அடிப்படை கட்டமைப்புகளை மறு கட்டுமானம் செய்வது, சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மெடிகேர் போன்றவைகளை பாதுகாப்பது தான் ராஜா கிருஷ்ணமூர்த்தியின் கொள்கைகள் என்கிறது மக்கள் பிரதிநிதிகள் சபை வலைதளம்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் எல்லோருக்குமான பொருளாதாரமாக இருந்தால், அது சிறப்பாக செயல்படும் என்பதை ராஜா அறிவார். எனவே, கல்லூரிக் கட்டணங்கள், எல்லோரும் பெறும் அளவில் இருக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். சம்பளத்துடன் கூடிய மருத்துவ மற்றும் பேறு கால விடுப்புகள் எல்லோருக்கும் கிடைக்க போராடுகிறார் என்கிறது மக்கள் பிரதிநிதிகள் சபை வலைதளம்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி, தன் மனைவி பிரியா, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன், இல்லினாய்ஸ் மாகாணத்தில், ஸ்கம்பர்க் என்னும் இடத்தில் வசிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »