Press "Enter" to skip to content

ஜோ பைடனின் முதல் நடவடிக்கை எது? கொரோனா முதல் இனவெறி பிரச்சனைவரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவிருப்பதாக, அவரின் அணியினர் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகரிப்போம், அத்துடன் அமெரிக்கர்களை முக கவசம் அணியுமாறு அறிவுறுத்துவோம் என பைடனின் அணி கூறியிருக்கிறது.

இது தவிர, பொருளாதாரம், இனவாத பிரச்சனைகள் மற்றும் பருவநிலை, போன்றவற்றிலும் பைடன் கவனம் செலுத்துவார் என்கிறது அவரது அணி.

தோல்வியை ஏற்காத டிரம்ப்

இதுவரை டொனால்ட் டிரம்ப், தன் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. தனக்கு எதிராக தேர்தலில் மோசடி நடந்து இருக்கிறது எனச் சொன்னார். குடியரசுக் கட்சியினர்கள், பல மாகாணங்களில், தேர்தல் மோசடி தொடர்பாக, பல்வேறு வழக்குகளைத் தொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தேர்தல் அதிகாரிகளோ, டிரம்புக்கு எதிராக எந்த மோசடியும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என மறுத்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் ஜோ பைடனின் வெற்றியும் ஒரு கணிப்பாகவே இருக்கிறது. இன்னும் சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டு இருக்கின்றன. இருப்பினும் குடியரசு கட்சியைச் சேர்ந்த, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஜோ பைடனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க தேர்தல் நியாயமாகவே நடந்தது என அமெரிக்க மக்கள் நம்பிக்கையாக இருக்கலாம். இந்த தேர்தல் முடிவும் தெளிவாக இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார் புஷ். இறுதிவரை கடுமையாக போட்டியில் இருந்த டிரம்புக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து இருக்கிறார் புஷ்.

பல்வேறு அமெரிக்க பத்திரிகைகள் மற்றும்தொலைக்காட்சிசேனல்கள், அமெரிக்க அதிபர் தேர்தல், ஜோ பைடனுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லி இருப்பதால், ஜனநாயகக் கட்சியினர்கள், ஜனவரி 2021-ல் பைடனின் பதவி ஏற்புக்கு தங்களைத் தயார்படுத்தி வறார்கள். இதில் சில நிர்வாக ஆணைகளும் (Executive Orders) அடக்கம்.

பைடன் அப்படி என்ன செயல் ஆணைகளைப் பிறப்பிக்க திட்டம் வைத்திருக்கிறார்?

1. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து, கடந்த புதன்கிழமை தான், அமெரிக்கா அலுவல்பூர்வமாக வெளியேறியது. ஜோ பைடன் இந்த காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவார்.

2. உலக சுகாதார அமைப்பில் இருந்து, அமெரிக்கா வெளியேறும் என்கிற முடிவையும் திரும்பப் பெறுவார்.

3. ஏழு இஸ்லாமிய நாட்டு குடிமக்கள் மீதான, பயணத் தடையை ஜோ பைடன் நீக்குவார்.

4. சரியான ஆவணங்கள் கொடுக்கப்படாமல், அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த குழந்தைகளுக்கு, முன்பைப் போலவே, குடியேறிகள் (Immigrants) என்கிற அந்தஸ்து வழங்கப்படும் என பட்டியலிடுகின்றன அமெரிக்க ஊடகங்கள்.

அமெரிக்காவை ஒன்றிணைப்போம்

கடந்த சனிக்கிழமை, அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனுக்கான வெற்றி கிட்டத்தட்ட உறுதியான பின், முதல் முறையாக மக்களிடம் பேசினார். அப்போது “அமெரிக்காவை குணப்படுத்த வேண்டிய நேரமிது, அமெரிக்காவை பிரிக்காமல், ஒன்றிணைப்போம். நாம், நம் போட்டியாளர்களை, எதிரிகளைப் போல நடத்துவதை நிறுத்த வேண்டும்” என அவர் கூறினார்.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் இருவரும் இணைந்து அமெரிக்காவின் மாற்றத்துக்கு என பிரத்யேகமாக ஒரு வலைதளத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.

பைடனின் கொரோனா தடுப்புத் திட்டம் என்ன?

டிரம்ப் தொடர்ந்து கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிட்டார். இதுவரை, வெள்ளை மாளிகை, கொரோனா வைரஸைப் பார்த்த விதத்திலும், அதன் அணுகுமுறைகளிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் பைடன்.

அனைத்து அமெரிக்கர்களுக்கும் தொடர்ச்சியாக இலவச பரிசோதனை மற்றும் அலுவல்பூர்வ வழிமுறைகள் வழங்குவதை உறுதிப்படுத்துவோம் என்கிறது பைடனின் அணி.

அதே போல, அமெரிக்கா முழுவதும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் விதத்தில் விதிகளைக் கொண்டு வர விரும்புகிறார் பைடன். முகக்கவசம் அணிவதால் ஆயிரக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என்கிறார் பைடன். ஜோ பைடனும் பொது வெளியில் வரும் போதெல்லாம், முக கவசம் அணிந்தே வருகிறார்.

கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக 1.25 லட்சத்தைக் கடந்து இருக்கிறது. அதே போல கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை, கடந்த ஐந்து நாட்களாக ஆயிரத்தைத் தாண்டி வந்து கொண்டு இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் 2.37 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

அமெரிக்கா இதை விட மோசமான இடத்தில் இருக்க முடியாது. அமெரிக்காவில் குளிர் காலம் இருப்பதால், மக்கள் அறைகளுக்குள்ளேயே கூட்டமாக அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள் என அமெரிக்காவின் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நிபுணர் ஆன்டனி ஃபெளட்சி கூறியிருக்கிறார்.

பைடன்

பொருளாதார திட்டங்கள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதாரத்தை சரி செய்யவும் பைடன் திட்டங்களை அறிவித்து இருக்கிறார். உற்பத்தியைப் பெருக்கி, கட்டமைபுகளில் முதலீடு செய்து, குழந்தைகள் நலத் திட்டங்களை மலிவு விலைக்கு கொண்டு வருவது மற்றும் இனக் குழுக்களுக்கு இடையே இருக்கும் செல்வ வித்தியாசத்தைக் குறைப்பதன் மூலம் பொருளாதாரத்தை சரி செய்யலாம் என திட்டங்களை அறிவித்து இருக்கிறார்.

இனவாத பிரச்சனைகள்

அமெரிக்காவில் நிலவும் இனவாத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, தன் நிர்வாகத்தின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என பைடன் இலக்கு வைத்து இருக்கிறார்.

கருப்பினத்தவர்கள் மற்றும் சிறுபான்மை குழுவினர்களுக்கு மலிவு விலை வீடுகள் கிடைக்கச் செய்வது, சரியான முறையில் நடத்தப்படுவது மற்றும் பணியாளர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படுவது, இனக் குழுக்களுக்கிடையே இருக்கும் செல்வ வித்தியாசத்தை சரி செய்ய, அமெரிக்க மைய கட்டுப்பாட்டு வங்கிக்கு அதிகாரம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் வேண்டும் என்கிறார் பைடன்.

அத்துடன் பைடன், chokeholds எனப்படும் முறையை தடை செய்து, அமெரிக்க காவல் பணியை உருமாற்ற விரும்புகிறார். காவலர்களுக்கு போர் ஆயுதங்கள் கைமாற்றப்படுவதை நிறுத்தவும், தேசிய காவலர்கள் மேலான்மை ஆணையத்தை அமைக்கவும் விரும்புகிறார் பைடன்.

இவற்றுடன் அமெரிக்க சிறையில் இருக்கும், சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுகிறார். அமெரிக்க சிறைகளில், சமமற்ற விகிதத்தில் கருப்பினத்தவர்களும், சிறுபான்மை குழுவினர்களுமே இருக்கிறார்கள். இவர்களின் மீட்பு மற்றும் மறுவாழ்வில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறார்.

நம் அரசமைப்பில் இருக்கும் இன ரீதியான, பாலின ரீதியான, வருமான ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை களையும் வரை, நம் நீதி அமைப்பு சரியாகவும், நியாயமாகவும் இருக்காது என பைடனின் திட்டம் சொல்கிறது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரின் பொறுப்பில் இருந்த போது கொல்லப்பட்டது, அமெரிக்காவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தல் மேலாய்வுக்களில், அமெரிக்க மக்கள், பொருளாதாரத்துக்குப் பிறகு, இரண்டாவதாக இன ரீதியிலான பாகுபாடுகளை கருத்தில் கொண்டு வாக்களிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »