Press "Enter" to skip to content

ஜோ பைடனின் கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் தனது கோவிட் – 19 கட்டுப்பாட்டு குழுவின் தலைவர்களில் ஒருவராக அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்தியை நியமித்துள்ளார்.

ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் சர்ஜியன் ஜெனரலாக இருந்த விவேக் மூர்த்தி பின் டிரம்ப் அதிபராக பதவியேற்றபின் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

பைடனால் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு, கொரொனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவும், இன வேறுபாடுகளைக் களையவும், பள்ளிகள் மற்றும் வர்த்தகங்கள் மீண்டும் திறக்கவும் பணியாற்றும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச் சுகாதார நிபுணர்களின் கருத்துக்களுக்கு இந்த குழு முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் பைடன் தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்பின் கொரோனா குறித்த கூற்றுகள் அனைத்தும் இதுவரை விஞ்ஞானிகளின் கூற்றிலிருந்து மாறுபட்டதாகவே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனை தொடவுள்ளது. மேலும் இதுவரை அங்கு இரண்டு லட்சத்து 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் தான் பதவி ஏற்றால் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என ஜோ பைடன் தேர்தல் பிரசாரங்களில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தனது கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவை அறிவித்துள்ளார் ஜோ பைடன்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான் தனது முக்கிய போராட்டம் என தெரிவித்திருந்த ஜோ பைடன், பாதுகாப்பான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதுதான் தனது முக்கிய பணி எனவும் தெரிவித்திருந்தார்.

பைடன் வெற்றிப் பெற்றதாக சனிக்கிழமையன்று தெரிவிக்கப்பட்டாலும், இன்னும் பல மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால் அது கணிப்பு என்றுதான் கூற வேண்டும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை ஜோ பைடன் அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தற்போதைய அதிபர் டிரம்ப், பல முக்கிய மாகாணங்களில் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் இரு வேட்பாளர்களுக்கும் 4.5 மில்லியன் வாக்கு வித்தியாசம் உள்ளது.

விவேக் மூர்த்தி மற்றும் இருவர் தலைமையில் செயல்படும் இந்த குழுவின் 10 உறுப்பினர்களையும் ஜோ பைடன் அறிவித்திருந்தார் இந்த குழு கொரோனா கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபடும்.

யார் இந்த விவேக் மூர்த்தி?

விவேக் மூர்த்தி

விவேக் மூர்த்தியின் தந்தை இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றவர் என கூறப்படுகிறது.

விவேக் மூர்த்தி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வரை அமெரிக்காவின் 19ஆவது சர்ஜியன் ஜெனரலாக இருந்தார்.

விவேக் மூர்த்தி தனது இளநிலை பட்டப்படிப்பை ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். அதன்பின் யேல் பல்கலைக்கழகத்தில் எம்.டி மற்றும் எபிஏ பட்டங்களைப் பெற்றார்.

தற்போது வாஷிங்டன் டி.சியில் வசித்து வரும் விவேக் மூர்த்திக்கு அலைஸ் சென் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவர் 2017ஆம் ஆண்டில் `டுகெதர் – தி ஹீலிங் பவர் ஆஃப் ஹூமன் கனெக்‌ஷன் என் ய சம் டைம்ஸ் லோன்லி வேர்ல்ட்` என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தனிமையாக உணர்வது என்பது எப்படி ஒரு சமூக பிரச்சனையாக உருவெடுக்கிறது என்பதை விளக்கும் புத்தகம் இது.

தமிழகத்தை தனது தாய் வழி பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராகும் நிலையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி, ஜோ பைடனின் கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளது இந்திய ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் தனது கோவிட் – 19 கட்டுப்பாட்டு குழுவின் தலைவர்களில் ஒருவராக அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்தியை நியமித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »