Press "Enter" to skip to content

பைடனுக்கு தினசரி உளவுக்குறிப்பு அனுப்ப ஒரு பிரிவு ஆளும் எம்.பிக்கள் ஆதரவு – டிரம்பின் அடுத்த திட்டம் என்ன?

அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் ஜோ பைடனுக்கு, உளவுத்தகவல் பகிர்வு தொடர்பான குறிப்பு அனுப்பும் வழக்கத்துக்கு ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவு எம்.பி.க்கள் ஆதரவாக உள்ளனர்.

வழக்கமாக தேர்தல் முடிவில் வெற்றியாளராக அறியப்பட்டவருக்கு உளவுத்தகவல் குறிப்புகள் அனுப்பப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை நடந்த தேர்தலில் அசாதாரணமான வகையில் தேர்தல் முடிவுகளை ஏற்க தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், அதிபராக தகுதி பெற வேண்டிய 270க்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பெற்றுள்ளதால் அவரே அடுத்த அதிபராக அறியப்படுகிறார். எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ நடைமுறை டிசம்பர் மாத முதல் வாரத்தில் தொடங்கும். அதற்கு முன்னோட்டமாக, அடுத்த அதிபராக அடையாளம் காணப்படுபவருக்கு ரகசிய சேவை பாதுகாப்பு, அவரது வசிப்பிடம், உறவினர்களுக்கான பாதுகாப்பு, ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்வரை அவரது அலுவல் வசதிகள் போன்றவற்றை அமெரிக்க அரசே ஏற்கும்.

இந்த நடைமுறைகளின் தொடர்ச்சியாக புதிய அதிபருக்கு நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பான உள்குறிப்பை உளவுத்துறை தினமும் அனுப்பி வைக்கும். இதே நடைமுறை தற்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த நடவடிக்கையை ஆளும் கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் ஆட்சேபித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போதைய அதிபரின் நெருங்கிய நண்பரும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான லிண்ட்ஸே கிரஹாம், வழக்கமான நடைமுறைப்படி அதிபருக்கான உள்குறிப்பை பைடனுக்கு அனுப்புவதில் தவறில்லை என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், அதிபராக தேவைப்படும் 270க்கும் அதிகமான இடங்களைப் பெற்று முன்னிலை வகிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட்ட முறையை மோசடியான செயல்பாடு என்று அதிபர் டொனால்ட் டிரம்ப கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார். அனைத்து வாக்குகளும் அதிகாரப்பூர்வமாக எண்ணப்பட்டு முடிக்கப்படும்போது தானே வெற்றியாளர் என்றும் அவர் கோரி வருகிறார்.

லிண்ட்சே கிரஹாம்

ஆனால், முக்கிய மாகாணாங்களில் கிடைத்த தரவகளின்படி ஜோ பைடனே வெற்றியாளராவது உறுதியானதால் உலகின் பல நாடுகளில் உள்ள தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தோல்வியை ஒப்புக் கொள்ள அதிபர் டிரம்ப் மறுப்பதால் அவரது செயல்பாடு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி கூறும்போது, யதார்த்தத்தை டிரம்பும் குடியரசு கட்சியினரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மனம் மாறிய குடியரசு கட்சி தலைவர்கள்

இதற்கிடையே, சுமார் 10 முதல் 20 குடியரசு கட்சி எம்.பி.க்கள், பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மேலும், ஆட்சிப்பொறுப்புக்கு டிரம்ப் ஒத்துழைப்பே சரியானதாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

இதேபோல, சக் கிறாஸ்லே, ஜான் கோர்னின், ஜான் தூன் ஆகியோரும் ஜோ பைடனுக்கு உளவுத்துறை ரகசிய குறிப்பு அனுப்பப்படும் நடைமுறையில் தவறில்லை என்று கூறியுள்ளனர்.

ஆனால், அவையின் தலைவர் கெவின் மெக் கார்தி, தற்போதைய நிலையில் ஜோ பைடன் அதிபர் கிடையாது என்பதால் அவர் அதிகாரப்பூர்வ முடிவு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஓஹியோவில் குடியரசு கட்சி ஆளும் மாகாணத்தின் ஆளுநர் மைக் டெவைன், ஜோ பைடனை, அதிபர் பதவிக்கு தேர்வான ஜோ பைடன் என்றே குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கியிருக்கிறார்.

வாக்காளர்கள்

குடியரசு கட்சியில் பிளவு ஏன்?

ஜனநாயக கட்சியின் செனட் குழு தலைவர் சக் ஷூமர், வேண்டுமென்றே டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் தேர்தல் முறை தொடர்பான சந்தேகங்களை எழுப்புகிறார்கள் என்று கூறினார்.

அதிபர் பதவிக்கு தேர்வாவதில் டிரம்ப் தோல்வியுற்றாலும், இதற்கு முன்பு இல்லாத நிலையை போல மிக அதிகமான வாக்குகளை பெற்றவரபாக டிரம்ப் விளங்கி வருகிறார்.

அமெரிக்காவின் ஜோர்ஜாவில் உள்ள இரண்டு இடங்களில் வரும் ஜனவரி மாதம் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் வந்த பிறகே செனட் சபையில் தொடர்ந்து இம்முறையும் குடியரசு கட்சி கட்டுப்பாட்டைக் கொண்டிருக்குமா என்பது தெரிய வரும். அதனால்தான் அதிபர் டிரம்பின் தோல்வியை முன்கூட்டியே ஒப்புக் கொண்டால் அது அவரது தலைமை மற்றும் மக்கள் செல்வாக்கை பலவீனப்படுத்தலாம் என்று குடியரசு கட்சியினர் கருதுவதாக தோன்றுகிறது.

அமெரிக்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு இதுவரை பொது மேடைகளிலோ பொது நிகழ்ச்சிகளிலோ அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. ஆனால், தனது நிலைப்பாடுகளை ஆக்ரோஷமான ட்விட்டர் பதிவுகள் மூலம் அவர் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

மறுபுறம் பழமைவாத சார்பு கொண்டதாக கருதப்படும் ஃபாக்ஸ் நியூஸின் ஆதரவு தனக்கு இல்லாததை உணர்ந்துள்ள டிரம்ப், சொந்தமாக ஒரு கணினி மயமான ஊடக நிறுவனத்தை தொடங்க விரும்புவதாக அவரது நண்பர்களிடம் கூறி வருவதாகவும் ஒரு தகவல் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் உலா வருகிறது.

இதற்கிடையே, வெள்ளை மாளிகையில் தன்னுடன் பணியாற்றும் தலைமை அதிகாரியாக ரோன் கிளானை ஜோ பைடன் நியமித்துள்ளார். 1980களில் செனட் சபையில் இருந்தபோதும், துணை அதிபராக பதவி வகித்த காலத்திலும் பைடனின் முதன்மை செயலாளராக இருந்தவர் கிளான். அதிபரின் அன்றாட பணிகள், அப்பாயின்ட்கள் ஆகியவற்றை வெள்ளை மாளிகை ஊழியர் குழு தலைவர் கவனிப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »