Press "Enter" to skip to content

திருமூர்த்தியின் ஆவேச பேச்சு: “ஐ.நா சேதம் அடைந்த உறுப்பு” இந்தியாவின் திடீர் துணிச்சலுக்கு என்ன காரணம்?

  • பிரவீண் ஷர்மா
  • பிபிசி இந்திக்காக

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் (யுஎன்எஸ்சி) சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று இந்தியா சில காலமாகவே வேண்டுகோள் விடுத்து வருகிறது. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவியையும் இந்தியா கோரி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச மன்றங்களில், இந்தியா தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

உலகின் பல நாடுகளும் பாதுகாப்பு சபையில் இந்தியாவைச் சேர்ப்பதற்கு ஆதரவாக உள்ளன. ஆனால் இது தொடர்பாக இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஐக்கிய நாடுகள் சபை, தான் நிறுவப்பட்ட 75 ஆண்டுகளை இந்த ஆண்டு நிறைவு செய்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்கள் மற்றும் பாதுகாப்பு சபையின் விரிவாக்கம் குறித்த இந்தியாவின் அணுகுமுறை சற்று கடுமையாக காணப்படுகிறது.

சமீப காலங்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி உட்பட பல மூத்த தூதாண்மை தலைவர்களும் அமைச்சர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் பணி மற்றும் சீர்திருத்தங்களில் அந்த அமைப்பின் தோல்வி குறித்து கசப்பான கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி (பிஆர்), டி.எஸ். திருமூர்த்தி ஒரு வலுவான கருத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் ‘ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில், “ஒரு சேதமடைந்த உறுப்பு” போல ஆகிவிட்டது என்று கூறியுள்ளார்.

“யுஎன்எஸ்சி , பிரதிநிதித்துவ குறைபாடு காரணமாக, நம்பகமான முறையில் செயல்படத் தவறிவிட்டது” என்று அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது அமர்வில் ஆற்றிய உரையின் போது திருமூர்த்தி இந்தக் கருத்தை தெரிவித்தார்.

நரேந்திர மோதி

ஐ.ஜி.என் குறித்து கேள்வி

டெல்லியை தளமாகக் கொண்ட அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ORF) கேந்திர ஆய்வுகள் திட்டத்தின் இயக்குநர் பேராசிரியர் ஹர்ஷ் பந்த், இந்தியாவின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்கிறார்.

“ஒன்று, இந்தியா ஜனவரி முதல் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லாத உறுப்பினராக (Non Permanent Member) தனது பதவிக் காலத்தைத் தொடங்கும். இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா ஆற்றும் பங்கிற்கு அவ்வளவாக கவனம் தரப்படாவிட்டாலும், தனது பங்கை அது பொறுப்புடன் நிறைவேற்றுகிறது,” என்று அவர் கூறினார்.

“இரண்டாவது காரணம், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பிற அமைப்புகளை தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் இந்தியா போன்ற ஒரு நாட்டைப் புறக்கணிப்பது ஐ.நா.வின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்பதை இந்தியா சுட்டிக்காட்ட விரும்புகிறது.”

அந்த கூட்டத்தில் அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை கட்டமைப்பு (ஐஜிஎன்) குறித்தும் திருமூர்த்தி கேள்வி எழுப்பினார். ஐஜிஎன் இதுவரை குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்கத் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.

ஐ.ஜி.என் என்பது ஐ.நா.பாதுகாப்பு சபையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவதற்கான பணியைச்செய்யும் குழுவாகும்.

“சீர்திருத்தங்களின் தேவை குறித்த அறிக்கைகள் வெளியிடுவதைத்தவிர, கடந்த தசாப்தத்தில் ஐ.ஜி.என் இல் எந்தப்பணியும் செய்யப்படவில்லை” என்று திருமூர்த்தி கூறியுள்ளார்.

சீர்திருத்ததில் சிக்கல்கள்

‘சீர்திருத்தங்களின் திசையில் முடிவு அடிப்படையிலான செயல்முறைகள் தீவிரமாக தொடங்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது’ என்று திருமூர்த்தி கூறினார்.

சீர்திருத்தங்களின் பாதையில் இடையூறுகளை ஏறப்டுத்தும் சில நாடுகளையும் திருமூர்த்தி சாடினார்.

பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்த விஷயத்தை, நரேந்திர மோதி அரசு தீவிரமாக எழுப்புகிறது என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) பேராசிரியர் சிந்தாமணி மகாபாத்ரா கருதுகிறார்.

“இந்தியா ஒரு சிறந்த நாடு என்று வேறு ஏதேனும் ஒரு நாடு சொல்வதற்காக நாம் இப்போது வரை காத்திருந்தோம்,”என்று அவர் கூறுகிறார்.

‘இந்தியாவின் நிலைப்பாடு ஆக்கிரோஷமானது அல்ல, இந்தியா முன்கூட்டியே தூதாண்மை நடவடிக்கைகளை செய்திருக்க வேண்டும், அது நடக்கவில்லை என்று மகாபாத்ரா கூறுகிறார். இப்போது மோதி அரசு இந்த விஷயத்தில் சில உத்திகளுடன் முன்னேற முயற்சிக்கிறது.

இந்த விஷயத்தி்ல் “இந்தியா ஒரு நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டுள்ளது,” என்றும் மகாபாத்ரா கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத பிற்பகுதியில் இந்தியா, ஐ.நா பொதுச்சபையின் (யு.என்.ஜி.ஏ) தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி, பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்தங்களுக்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியது. ‘இந்த சீர்திருத்தங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தாமதமாகிவிட்டன’ என்றும் அதில் இந்தியா கூறியிருந்தது.

இந்தியாவின் இந்தக் கடிதத்தில் “பொதுவான ஆப்பிரிக்க நிலை” பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவுன்சில் விரிவாக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளின் விருப்பங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்தியா கடிதத்தில் வலியுறுத்தியிருக்கிறது.

இந்த சீர்திருத்தங்களை யார் விரும்பவில்லை என்று இந்த கடிதத்திலும் இந்தியா கடுமையான விதத்தில் கேட்டிருந்தது.

திருமூர்த்தி

இந்தியாவின் அதிருப்தி

செப்டம்பர் மாத பிற்பகுதியில் ஐ.நா.வின் 75 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஐநா பேரவையில் (யு.என்.ஜி.ஏ) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, “ஐ.நா.வின், முடிவுகள் மேற்கொள்ளும் அமைப்பின் ஒரு பகுதியாக ஆவதற்கு இந்தியா எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா சில காலமாக பேசி வருவதாக பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகிறார். ஆனால் பிரதமர் தனது உரையில் ஒரு நேரடி செய்தியை அளித்தார். சீர்திருத்தம் குறித்த பேச்சு நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஆனாலும் இந்த திசையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகவே இது குறித்த இந்தியாவின் அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வது ஒரு சிக்கலான செயல் என்று பேராசிரியர் மகாபாத்ரா கூறுகிறார். இதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டு, பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டு, அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதற்கு ஒப்புதல் வேண்டும்.

“இந்தியா, பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக மாறுவதற்கு மிகப்பெரிய தடையாக சீனா உள்ளது. இந்தியா பாதுகாப்பு சபையின் உறுப்பினராக இருப்பதை சீனா விரும்பவில்லை. பாகிஸ்தானும் சீனா மீது நெருக்குதல் கொடுக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

இந்தியா ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவக உறுப்பினர்களில் ஒன்று என்றும் அதில் தாம் பெருமை கொள்வதகவும் பிரதமர் கூறியிருந்தார்.

ஐ.நா நிறுவப்பட்ட 75 வது ஆண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் இந்த அமைப்பு பலதரப்பு அணுகுமுறையுடன் இருப்பது மிகவும் முக்கியம் என்று அக்டோபர் மாதம், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியிருந்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக, வளரும் நாடுகளின் நலன்களுக்காக இந்தியா பாடுபடும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.

ஐ.நாவின் உறுப்பினர்கள் விஷயத்தில், ஐநா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இரண்டு பிரிவுகளிலுமே விரிவாக்கம் செய்யப்படவேண்டும் என்று 122 நாடுகளில், 113 நாடுகள் ஒப்புதல் அளித்ததாக, 2019 ஆம் ஆண்டில், ஐ.நாவுக்கான இந்தியாவின் அப்போதைய நிரந்தர பிரதிநிதி சையத் அக்பரூத்தின் தெரிவித்தார்.

திருமூர்த்தி

இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம்

நடப்பு காலத்தின் உண்மைக்கு ஏற்ப ஐக்கிய நாடுகள் சபை தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை என்று இந்தியா கருதுகிறது.

ஐ.நா 1945ஆம் ஆண்டு உருவானது. அந்த நேரத்தில் பல மாற்றங்கள் வந்தன என்று பேராசிரியர் மகாபாத்ரா கூறுகிறார்.

” இந்த நேரத்திற்குள்ளாக உலகம் நிறையவே மாறிவிட்டது. ஆனால் அது போன்ற மாற்றங்கள் ஐ.நாவில் நடக்கவில்லை,” என்கிறார் அவர்.

தற்போதைய பெரும் தொற்றுநோய் காலகட்டத்தில், உலகம் ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது. உலகின் முக்கிய அமைப்புகள் தங்கள் பங்கை சரியாக வகிக்கின்றனவா இல்லையா என்பது இந்தியா உட்பட பல நாடுகளையும் கவலையடையச் செய்துள்ளது.

“கோவிட் -19 தொற்றுநோய் சர்வதேச அமைப்புகளின் பணியாற்றும் முறையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இந்த அமைப்புகள் தற்போதைய சவால்களை சமாளிக்க முடியாவிட்டால், வரவிருக்கும் நேரத்தில் ஒரு பெரிய நெருக்கடி ஏற்படுமானால் எவ்வாறு செயல்படும்,” என்று பேராசிரியர் மகாபாத்ரா கேள்வி எழுப்பினார்.

ஐ.நாவில் சீர்திருத்தத்தை இந்தியா கோருவதற்கு இதுவே காரணம் என்று அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு இந்தியா பல ஆண்டுகளாக தீவிரமாக முயற்சித்து வருகிறது. சீனாவைத் தவிர, பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகளும், இந்தியாவின் நிலைக்கு ஆதரவளித்துள்ளன.

பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை கொண்டுவர தற்போதுள்ள ஐ.ஜி.என்-ல் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக செப்டம்பர் மாதத்திலேயே வெளியுறவு இணையமைச்சர் வி. முரளிதரன் இந்திய மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார். ஒருமித்த கருத்து கொண்ட மற்ற நாடுகளுடன் இந்தியா, இந்த திசையில் செயல்படுகிறது என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றம் மிகவும் சுவாரசியமானது என்று பந்த் கூறுகிறார்.

“இந்தியா தன் மக்கள் தொகை, தன் ஜனநாயகம் போன்றவற்றை முன்வைத்து, நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று முன்பு சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தான் உறுப்பினராகாவிட்டால் அது ஐ.நா.வின் நம்பகத்தன்மையே சந்தேகத்துக்கு உள்படுத்தும் என்று இந்தியா புதிய முழக்கத்தை முன்வைத்திருப்பது கவனிக்கத்தக்கது,” என்று பேராசிரியர் ஹர்ஷ் பந்த் சுட்டிக்காட்டுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »