Press "Enter" to skip to content

பாம்பேய் தொல்பொருள் ஆய்வு: எரிமலைச் சாம்பலில் கிடைத்த ரோமப் பேரரசின் ஆண்டான் – அடிமை உடல்கள்

ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய ரோமப் பேரரசின் பாம்பேய் நகரத்தை அழித்த, எரிமலைச் சீற்றத்தில் இறந்த, இரண்டு மனிதர்களின் எச்சங்களை இத்தாலியிலுள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதில் ஒருவர், அநேகமாக உயர்ந்த அந்தஸ்த்தைக் கொண்டிருந்தவராக இருக்கலாம் என்றும் மற்றவர் அவரது அடிமையாக இருக்கலாம் என்றும் பாம்பேய் தொல்பொருள் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் எரிமலை வெடித்துச் சிதறியபோது தஞ்சமடைய இடம் தேடி இருக்கலாம். அப்போது, எரிமலைக் குழம்பால் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என பாம்பேய் தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா கூறுகிறார்.

கி.பி 79இல் வெசுவியஸ் என்ற எரிமலையின் சீற்றத்தால் மொத்த பாம்பேய் நகரமும் மூழ்கியது.

இந்த எரிமலைச் சீற்றம் பாம்பேய் நகரத்தையும் அங்கு குடியிருந்தவர்களையும் சாம்பலில் புதைத்துவிட்டது. தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இடம், ஆய்வு செய்வதற்கான ஒரு வளமான ஆதாரமாக மாறி இருக்கிறது.

இந்த மாதம், பண்டைய பாம்பேய் நகரத்தின் புறநகரில் ஒரு பெரிய மாளிகை போன்றதொரு வீட்டை அகழ்வாராய்ச்சி செய்த போதுதான், இந்த இரண்டு எச்சங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

புதைந்துபோன அந்தச் செல்வந்தர் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கழுத்துக்கு கீழே கம்பளி ஆடையின் தடயங்கள் காணப்பட்டன.

மற்றொரு மனிதரின் வயது 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டதாக இருக்கலாம் என்று தொல்பொருள் தள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்துபோன மனிதர்களின் உடல்கள் இறுக்கப்பட்ட சாம்பலின் மீது உண்டாக்கிய அச்சைப் பயன்படுத்தி, அவற்றின் வார்ப்புகள் செய்யப்பட்டன.

“இது வெப்ப அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம். அதை, இறுகி இருக்கும் அவர்களின் கால்களும், கைகளும் நிரூபிக்கின்றன” என ஒசன்னா செய்தியாளர்களிடம் கூறினார்.

எரிமலைச் சீற்றம் நடந்ததற்கான, மலைக்க வைக்கக்கூடிய மற்றும் அசாதாரணமான சாட்சியம் இது என இந்தக் கண்டுபிடிப்பை ஒசன்னா விவரிக்கிறார்.

நேபிள்ஸ் என்கிற இடத்துக்கு அருகில் உள்ள அகழ்வாராய்ச்சி தளத்தில், தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »