Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): டிசம்பருக்குள் அமெரிக்காவில் கோவிட் 19 தடுப்பு மருந்தா?

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை டிசம்பர் 11, 2020 அன்று, முதல் முறையாக அமெரிக்கர்கள் பெறலாம் என அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்து திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்துக்கு அனுமதி

ஒரு கொரோனா தடுப்பு மருந்து அனுமதி வழங்கப்பட்டு, அடுத்த 24 மணி நேரத்துக்குள், நோய் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட இருப்பதாக மருத்துவர் மான்செஃப் சலூயி சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்து இருக்கிறார்.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணக்குப் படி, அமெரிக்காவில் 12 மில்லியன் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 2.55 லட்சம் பேர் கொரோனாவால் மரணித்து இருக்கிறார்கள்.

உலகிலேயே அமெரிக்காதான் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

மீண்டும் கொரோனா ஊரடங்கா? - கோவிட் 19 நிலவரம் குறித்து பிரதமர் மோதி ஆலோசனை

அமெரிக்க பார்மா நிறுவனம்களான பிஃபைசர் மற்றும் பயோஎன்டெக், கடந்த வெள்ளிக்கிழமை, தங்களின் கொரோனா தடுப்பு மருந்துக்கு, அவசர அனுமதி பெற விண்ணப்பித்து இருந்தது.

50 மில்லியன் டோஸ் மருந்துகள்

இரண்டு டோஸ் தேவைப்படும் இந்த தடுப்பு மருந்து, 95% பலனளிப்பதாக இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் பிஃபைசர் 50 மில்லியன் டோஸ் மருந்துகளைத் தயாரிக்க இருப்பதாக நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

பிஃபைசரின் கொரோனா தடுப்பு மருந்தை அனுமதிக்கலாமா என்பது குறித்து மருந்து & உணவு நிர்வாகம் (எஃப்.டி.ஏ) டிசம்பர் 10-ம் தேதி சந்தித்துப் பேச இருக்கிறது.

ஒவ்வொரு மாகாணத்தின் மக்கள் தொகை அடிப்படையில் மருந்து விநியோகிக்கப்படும். யாருக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது என்பதை தனிப்பட்ட மாகாணங்கள் முடிவு செய்யும் என மருத்துவர் மான்செஃப் சொல்கிறார். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்கள் போன்ற, அதிக ரிஸ்கில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம்.

மாடர்னாவும், தன் கொரோனா தடுப்பு மருந்து, 95% பயனளிப்பதாகச் சொல்லி இருக்கிறது. இந்த நிறுவனம், வரும் வாரங்களில், தன் மருந்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறது.

பழைய நிலைக்கு திரும்பும் முன்

அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டால், அடுத்த ஆண்டுக்குள், அமெரிக்கா, கொரோனா வைரஸுக்கு எதிராக உண்மையான ஹேர்ட் இம்மியூனிட்டி-யை அடைய முடியும் என அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் ஆண்டனி ஃபாசி, சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் சொல்லி இருக்கிறார்.

நாம் திரும்பவும் பழைய நிலைக்குச் செல்வதற்கு முன், பெரும்பாலான மக்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும் என்கிறார் மான்செஃப்.

கொரோனா தடுப்பு மருந்துகளில், எந்த பாதிப்பும் இல்லை என்கிறார்கள். ஆனால் இதுவரை சோதனை தொடர்பான முழு விவரங்களும் வெளி வரவில்லை.

கொரோனா தடுப்பு மருந்துகளால், கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவுவது கட்டுப்படுத்தப்பட்டால், எத்தனை காலத்துக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »